சனி, 27 ஜூன், 2009

ஊதிய உயர்வு நிறுத்திவைப்பு: மாநில தேர்தல் ஆணைய ஊழியர்கள் புகார்

சென்னை, ஜூன் 26: தமிழக அரசின் உத்தரவுப்படி 6-வது ஊதியக்குழு பரிந்துரையின் ஊதிய உயர்வு வழங்குவது தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

6-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி 2009 ஜூன் 1-ம் தேதி முதல் என்ற புதிய விகிதத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துறைத் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, அனைத்துத் துறைகளிலும் பணிகள் தொடங்கி உள்ளன.


இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இங்குள்ள ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு விகிதங்கள் குறித்த பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் அண்மையில் தொடங்கின.

நிறுத்தி வைப்பு:

ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன், ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகள் அமலாக்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இங்குள்ள ஊழியர்களுக்கு ஜூன் மாதத்துக்கான ஊதியம் பழையபடியே குறிப்பிடப்பட்டு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஊதிய உயர்வு அமலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளை ஜூலை மாதம் மேற்கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அனைத்துத் துறை ஊழியர்களும் ஜூன் மாத ஊதியத்திலிருந்தே புதிய விகிதத்தில் ஊதியம் பெறும் நிலையில் நாங்கள் மட்டும் பழையபடியே ஊதியம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

தணிக்கை இல்லை:

அரசின் அனைத்துத் துறையின் நிர்வாக செலவு கணக்குகளும் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும் நிலையில் மாநிலத் தேர்தல் ஆணைய நிர்வாக செலவு கணக்குகள் மட்டும் தணிக்கை செய்யப்படாமல் உள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் ஆணைய புதிய கட்டட திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், "மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதுடன் நின்றுவிடாமல் அரசு ஊழியர்களின் பிரச்னைகளையும் தீர்க்கும் அரசாக இந்த அரசு உள்ளது' என குறிப்பிட்டார்.


ஆனால், எங்களது பிரச்னைகள் மட்டும் தீர்க்கப்படாமல் உள்ளது என்கின்றனர் தேர்தல் ஆணைய ஊழியர்கள்.

வியாழன், 7 மே, 2009

ஓசையின்றி உயருகிறது சிமென்ட் விலை

கடந்த சில மாதங்களாக நிலையாக இருந்த சிமென்ட் விலை இப்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அடுத்த சில வாரங்களில் சிமென்ட் விலையை ஒரு மூட்டை ரூ. 300-ஆக அதிகரிப்பது என உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 2007 ஜனவரியில் ஒரு மூட்டை (50 கிலோ) சிமென்ட் விலை ரூ. 185-ஆக இருந்தது. இது அடுத்த 2 மாதங்களில் ரூ. 225 ஆனது.

சிமென்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. 2007 இறுதியில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 300 வரை அதிகரித்தது.

சிமென்ட் விலை உயர்வு மேலும் தொடர்ந்ததால் நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சில தனியார் கட்டுமான நிறுவனங்களும், கட்டுமான வல்லுநர் சங்கங்களும் சேர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்யத் தொடங்கின.

மத்திய அரசின் எம்.எம்.டி.சி. நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக சிமென்ட் இறக்குமதி செய்து, தேவைப்படுவோருக்குக் குறைந்த விலையில் அளிக்கத் தொடங்கியது. இந்த நிறுவனம் இறக்குமதி செய்யும் சிமென்டை தமிழ்நாடு சிமென்ட் கழகம் மூலம் வாங்கி நுகர் பொருள் வழங்கல் துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 300-ல் இருந்து ரூ. 230 வரை குறைந்தது. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 190-க்குள்ளேயே இருந்தது.

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று சிமென்ட் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு நீக்கியது.

கடந்த நவம்பரில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் பொருளாதார உறவுகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து உள்நாட்டில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை மீண்டும் உயர்த்தத் தொடங்கினர். கடந்த ஆண்டு மத்தியில் ரூ. 240-ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்டின் விலை இப்போது ரூ. 260-ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் விலை உயர்வு:

மக்களவைத் தேர்தல் பரபரப்பில், அரசியல் கட்சிகள் மூழ்கியிருக்கும் வேளையில், சிமென்ட் உற்பத்தியாளர்கள், விற்பனை முகவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிமென்ட் உற்பத்தியை இப்போதுள்ள அளவில் இருந்து 20 சதவீதம் குறைப்பது என்றும், விற்பனை விலையை படிப்படியாக ஒரு மூட்டைக்கு ரூ. 35 வரை அதிகரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 300-ஆக அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின் புதிதாக அமையும் மத்திய அரசிடம் தங்கள் துறைக்கு பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் ரூ. 260 ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்ட் விலை தற்போது ரூ. 268-ஆக அதிகரித்துள்ளது.

தேர்தலுக்குப் பின் விலை குறையுமா?

"ரூ. 90 செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 268-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, ஒரு மூட்டை சிமென்ட் விலையை ரூ. 160-க்குள் இருக்குமாறு கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் தமிழகப் பிரிவுத் தலைவர் எல். மூர்த்தி வலியுறுத்தினார்.

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பின் மத்திய, மாநில அரசுகளிடம் இது குறித்து முறையிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திங்கள், 20 ஏப்ரல், 2009

இலங்கை பிரச்னை: பாராமுகத்துடன் அரசியல் கட்சிகள்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் பெண்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் அரசும், அரசியல் கட்சிகளும் பாராமுகமாக உள்ளன.

இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளோ அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. ஆனால், உண்ணாவிரதம் இருக்கும் பெண்களின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

கோரிக்கை என்ன?

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி "ஈழத் தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள்' அமைப்பு சார்பில் பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்த 20 பெண்கள் கடந்த 13-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்த முத்துக்குமாரின் கொளத்தூர் இல்லம் அருகே கடந்த 13-ம் தேதி இந்த உண்ணாவிரதம் தொடங்கியது.

மாலை 5 மணிக்கு மேல் போராட்டம் தொடர்ந்தால் கைது செய்வோம் என போலீஸôர் தெரிவித்ததால், உண்ணாவிரதப் போராட்ட இடம் மதிமுக தலைமையகமான தாயகத்துக்கு மாற்றப்பட்டது.

போர் நிறுத்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு ஆகியோர் உறுதி அளிக்காதவரை போராட்டத்தை தொடர்வது என "ஈழத்தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள்' அமைப்பினர் முடிவு செய்தனர்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் இந்த அமைப்பினர் முயற்சித்தனர். இது குறித்து பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்ற தமிழக பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 60 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

தங்கபாலு பதில்:

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியது: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிமுக அலுவலகத்துக்கு நான் சென்று சந்திப்பது எப்படி சாத்தியம்? எனவே, அவர்களை காங்கிரஸ் தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.

மேலும், அவர்களுக்காக எனது பிரசாரப் பணிகளை விட்டுவிட்டு சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கட்சி அலுவலகத்திலேயே காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை.

மதிமுக அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதில் இருந்தே இவர்களின் அரசியல் நோக்கம் வெளிப்படுகிறது'' என்றார் தங்கபாலு.

முன்னதாக இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாயகம் சென்றார். அப்போது அவரது பேச்சுக்கள் காங்கிரஸின் நிலையை எடுத்துரைப்பதாக இருந்ததால், உண்ணாவிரதப் பந்தலில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

உடல் நிலை பாதிப்பு:

உண்ணாவிரதப் போராட்டம் 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த ஜெயமணியின் உடல் நிலை ஞாயிற்றுக்கிழமை மோசமடைந்தது.

இதையடுத்து அவர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் 5-க்கும் மேற்பட்ட பெண்களின் உடல் நிலையும் மோசமடைந்து வருகிறது.

பொது இடத்தில்...:

போராட்டம் நடைபெறும் இடம் மதிமுக தலைமையகம் என்பதால் அரசுத் தரப்பில் இவர்களை நேரில் சந்திக்க அமைச்சர்கள் தயாராக இல்லை.

""உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோரில் சிலரை தலைமைச் செயலகத்துக்கு வருமாறு அரசுத் தரப்பில் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால், இந்த அழைப்பை நாங்கள் ஏற்கவில்லை'' என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக பெண்கள் இணைப்பு மையத்தின் மாநில தலைவர் ஷீலு தெரிவித்தார்.

""உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வரக்கூடாது என்று விரும்புவதால்தான், அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தலைமைச் செயலகத்தில் சந்திக்கத் தயாராக இருந்தும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. வீ. தங்கபாலு சத்தியமூர்த்தி பவனில் சந்திக்கத் தயாராக இருந்தும் இவர்கள் சந்திக்க மறுத்து விட்டனர்.

தனியார் இடத்துக்குள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்தால் மதிமுக பொறுப்பேற்குமா? அரசோ, காவல் துறையோ உள்ளே நுழைந்தால் அல்லது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் அதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.

அதைப் புரிந்து கொள்ளாமல் இந்தப் பெண்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க முடியாத அவஸ்தையில் இருக்கிறார்கள்'' என்று வருத்தப்படுகிறார்கள் தி.மு.க. தரப்பினர்.

"போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெண்கள் என்பதால் அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதில் நேரடியாக தலையிட்டு போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் தலைவர் நிர்மலா வலியுறுத்தினார்.

""தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது கவலைப்படப் போகிறதா? இந்தப் பெண்களுக்கு விபரீதம் ஏற்பட்டால் யாருக்கு லாபம்? இதில் எல்லாமா அரசியல் ஆதாயம் தேடுவது?'' என வருத்தப்படுகின்றனர் அந்தப் பெண்களின் உறவினர்கள்.

புதன், 11 மார்ச், 2009

வெளிப்படைத் தன்மை எங்கே?

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப் பட்டு மூன்றôண்டுகள் ஆகும் நிலையில் ஒருமுறை கூட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படவி ல்லை.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு
அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- ஐ நிறை வேற்றியது.

இந்தச் சட்டத்தின் கீழ் அரசு நிர்வாக நடை முறை தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் பெறுகின்றனர்.


இந்தச் சட்டத்தின் அமலாக்க மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ள து.

தொடக்கம்:

இதன்படி தமிழக அரசால் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் 2006
ஜனவரி 12- ம் தேதி தொடங்கப் பட்டு 28- 1- 2006- முதல் செயல்பட்டு
வருகிறது. 3 ஆணையர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஆணையத்தில்
பின்னர் மேலும் 4 ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.


மூன்ற ôண்டுகளில்...:

கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 1.50 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இவற்றின் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில் மக்களுக்கு தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.

உரிய தகவல்களை மனுதாரர்களுக்கு அளிக்க மறுத்தது தொடர்பாக
விளக்கம் கேட்டு 300 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என மாநிலத் தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி அண்மையில் தெரிவித்தார்.


தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக் கப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரு சிலரைத்தவிர
மற்றவர்கள் யாரும் அபராதத்தைச் செலுத்தவில்லை.

அந்தந்த துறை உயர் அதிகாரிகள் மற்றும் தகவல் ஆணையத்தின்
அலட்சியப் போக்கு காரணமாக ஏராளமான அதிகாரிகள் அபராதம் செலுத்தாமல் தப்பித்து வருவதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


ஆண்டறிக்கை:

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 25 ( 4) பிரிவின்படி மாநிலத் தகவல் ஆணையம் தனது பணிகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டின்
இறுதியிலும் ஆண்டறிக்கையாக தொகுத்து சட்டப்பேரவையில் அளிக்க வேண்டும்.


ஆனôல், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு
மூன்றôண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை ஒருமுறை கூட
ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது என பொள்ளôச்சியில் இருந்து செயல்படும் தாயகம் அமைப்பின் நா. பாஸ்கரன் தெரிவித்தார்.


இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு, " ஆண்டறிக்கை இது வரை சமர்பிக்கப்படவில்லை' என
சட்டப்பேரவை செயலக துணைச் செயலர் 10- 10- 2007- லும், பணியாளர்
நிர்வாகச் சீர்திருத்தத் துறை இணைச் செயலர் 19- 10- 2007- லும் பதில்
அளித்துள்ளனர்.


கடைசியாக சட்டப்பேரவைச் செயலக இணைச் செயலர் 29- 01- 2009- ல்
அளித்த ( எண்: 1822/ 2009- 1) கடிதத்திலும், தகவல் ஆணையத்தின்
ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை எங்கே?

இந்தநிலையில், 2006- ம் ஆண்டு முதல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவை செயலகம் உள்பட ஒவ்வொருத்துறையும் அளித்த தகவல்கள் குறித்த விவரங்கள் ஆண்டறிக்கைக்காக பெறப்பட்டு வருகிறது என மாநிலத் தகவல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

" அரசுத் துறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு சட்டத்தை அமலாக்க வேண்டிய ஆணையமே, தனது பணிகளில்
வெளிப்படைத் தன்மையை பராமரிக்காமல் உள்ளதற்கு உதாரணமாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது' என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏன் இந்த முரண்பாடு?

சென்னை, மார்ச் 7: லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு அத் துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.


அரசாணை எண் 158- ன் படி தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிவந்த லஞ்சஒழிப்புத்துறை அதி காரிகள், தற்போது பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- ன் கீழ் அரசுத் துறைகளின் நடவடி க்கைகள் தொடர்பான விவரங்களை மக்களுக்கு கிடைக்க வகை செய்யப்பட்டது.

நாட்டின்பாதுகாப்பு , உளவு, விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்த
விவரங்களைத்தவிர மற்ற அனைத்து தகவல்களையும் இந்த சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.


ஆன ôல், கடந்த ஆகஸ்ட் 26- ம் தேதி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்தி ருத்தத்துறை வெளியிட்ட அரசாணை எண் 158- ன் படி லஞ்ச ஒழிப்புத் துறை க்கும், மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள நபர்கள் மீது லஞ்சப்பு கார்கள் அதிகரித்துள்ள நிலையில், பொது மக்களுக்கு தகவல் அளிப்பதை
தவிர்ப்பதற்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இதனை மறுக்கும் வகையில், விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான தகவல்களை வழக்கில் தொடர்புள்ளவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், விசாரணைக்குத் தொடர்பில்லாத மற்ற தகவல்களை பெறுவதை இது தடுக்காது என அரசு தரப்பில்பதில் கூறப்பட்டது.

ஆன ôல், இதற்கு மாற ôக வழக்கு விசாரணைக்கு தொடர்பில்லாத வகையி ல் லஞ்ச ஒழிப்புத்துறையின் இரு வாகனங்களின் ( டி என் 22 ஜி 5000, டி என் 22 ஜி 2000) பயன்பாடு குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள் விகள் ஓரிரு மாதங்கள் முன்னர் கேட்கப்பட்டது.

பொது தகவல் அதிகாரி ஏன்?

அரசாணை எண் 158- ன் படி தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளி க்க இயலாது என லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரியான மத்தியசரக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


இது இந்த விவகாரத்தில் அரசு தெரிவிதத விளக்கத்துக்கு முரண்பட்ட வகை யில் இருப்பதாக " தினமணியில்' செய்தி வெளியானது.

மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்று கூறும் அலுவலகத்தில் பொதுதகவல் அதிகாரிபதவி இருப்பது குறித்தும் அந்த செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டது.

ரகசிய உத்தரவு:

இதன் எதிரொலியாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு வரும்கடிதங்களுக்கு பதில் ( பதில் அளிக்க இயலாது என்று குறிப்பி ட்டு) கடிதம் அனுப்பும் போது அதில் பொது தகவல் அதிகாரி என குறிப்பி டக்கூடாது என அதிகாரி களுக்கு ரகசிய உத்தர விட்டு கடந்த ஜனவரி 21- ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

பதில் கிடைத்தது:

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் சட்ட ஆலோசகராகப்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வி. வி. சோமசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்
சில கேள்விகள் கேட்டு கடந்த ஜனவரி 12- ம் தேதி கடிதம் அனுப்பியுள்ள ôர்.


இதற்கு உரிய பதில்களை, பொது தகவல் அதிகாரியான மத்தியசரக காவல் கண்காணிப்பாளர் பிப்ரவரி 20- ம் தேதியிட்ட தனது கடிதத்தின் ( கழ். தஸ்ரீ. சர். எ1/ 21446/ 07) மூலம் அளித்துள்ள ôர்.


முரண்பாடு ஏன்?

இதுவரை தங்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக அரசாணை எண் 158- ஐ சுட்டிக்காட்டி பதில் அளிக்க இயலாது என்றுக் கூறி வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இப்போது
பதில் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

எனினும், வழக்கு விசாரணையில் தொடர்பில்லாத தகவல்களை கேட்டு வரும் குறிப்பிட்ட ஒருவரின் கடிதத்துக்கு பதில் அளிப்பதும், மற்றெ ôருவரி ன் கடிதத்துக்கு பதில் அளிக்க மறுப்பதும் என்ன நியாயம் என்பதே தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களின் கேள்வி.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

மாநகராட்சி வழங்கும்குப்பைத் தொட்டிகள் தரமற்றவை!

சென்னை, பிப்.12: சென்னையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக வீடுகளுக்கு வழங்கப்படும் குப்பைத் தொட்டிகள் தரமானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து அளிக்கும் பணிகளுக்காக குடிசைப்பகுதி வீடுகளுக்கு தலா 2 வீதம் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் குப்பைத் தொட்டிகள் டிசம்பர் 26-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு குப்பைத் தொட்டி ரூ11.80 விலையில் மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத் திடம் இருந்து இதற்காக ரூ. 51 லட்சம் செலவில் 4.31 லட்சம் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

பல்லாவரத்தில்...:

ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை பல்லாவரம் நகராட்சி செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பல்லாவரம் நகராட்சியில் 26 வார்டுகளில் உள்ள 16 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க ஒவ்வொன்றும் ரூ.69 விலையில் 16 ஆயிரம் குப்பைத் தொட்டிகளை வாங்க பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் வழங்கப்படும் குப்பைத் தொட்டிகள் விலைக்கும் பல்லாவரத்தில் வழங்கப்பட உள்ள குப்பைத் தொட்டிகளின் விலைக்கும் ரூ.50 க்கு மேல் வேறுபாடு இருப்பது குறித்து "தினமணியில்' கடந்த 10-ம் தேதி செய்தி வெளியானது.

நகராட்சி பதில்:

இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பல்லாவரம் நகராட்சித் தலைவர் இ. கருணாநிதி அளித்துள்ள விளக்க அறிக்கை விவரம்:

பல்லாவரம் நகராட்சி மூலம் வாங்கி வழங்கப்படவுள்ள குப்பைத் தொட்டிகள் நீண்டநாள் உழைக்கக் கூடிய, அதிக தாங்கும் திறனும், கலப்பில்லாத தூய் மையான பாலித்திலின் மூலப்பொருள் மூலம் அடிக்கடி கழுவிப் பயன்படுத்தும் வகையில் மூடியுடன் கூடிய தலா 600 கிராம் எடையுள்ள பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் தயாரிக்கப்படும் தரமுள்ள தனியார் நிறுவனமான சின்டெக்ஸ் தயாரிக்கும் குப்பைத் தொட்டிகள் ஆகும். இதன் விலை தலா ரூ.69.

சென்னையில்...:

சென்னை மாநகராட்சி வாங்கிய குப்பைத் தொட்டிகள் கிண்டியில் இயங்கிவரும் மத்திய அரசின் சிப்பெட் நிறுவனத்தின் மூலம் மறு சுழற்சி செய்யப்பட்ட சாதாரண பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட 8 லிட்டர் கொள்ளளவும் 225 கிராம் எடையும் கொண்ட குப்பைத் தொட்டிகள்.

இதன் விலை தலா ரூ.11.80எனவே, பல்லாவரம் நகராட்சி வழங்கவுள்ள குப் பைத் தொட்டிகளை சென்னை மாநகராட்சி வழங்கும் குப்பைத் தொட்டிகளுடன் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல என இ. கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

பல்லாவரம் நகராட்சித் தலைவரின் இந்த விளக்க அறிக்கை அடிப்படையில், சென்னை மாநகராட்சி வழங்கிய குப்பைத் தொட்டிகள் தரம் குறைந்தவையா என்ற கேள்வி அடுத்து எழுகிறது.

அது மட்டுமல்ல, ஒரு நகராட்சியே, மத்திய அரசு நிறுவனத்தின் தயாரிப்பு தரமானது அல்ல என்று கூறி தனியார் நிறுவனத்திடம் குப்பைத் தொட்டிகளை வாங்குவது எந்த வகையில் லாபம் என்ற கேள்வியும் எழுகிறது.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

செலவு கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம்

சென்னை, பிப். 9: மாநகராட்சி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வதில் வேட்பாளர்கள் தாமதம் காட்டி வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை கணக்கு தாக்கல் தொடர்பான நடைமுறைகள் முடியவில்லை என மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் தெரிவித்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட்டவர்களில் உரிய காலத்துக்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 1,112 பேரும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் கணக்குகளை தாக்கல் செய்யாத 2,106 பேரும் என மொத்தம் 3,618 பேர் தேர்த லில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதில் சென்னை மாநகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் தங்களது கணக்குகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தாக்கல் செய்யாவிட்டால்...

சென்னை மாந கராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கு 1,112 பேர் போட்டியிட்டனர். இவர்களிடம் தேர்தல் செலவு கணக்கு விவரங்களைப் பெற்று அவற்றை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டியது மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையரின் பொறுப்பு.

தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த 30 நாள் களுக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலமாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பிக்காத வர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப்படும். இதற்குப் பிறகும் அவர்கள் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களை அடுத்த தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதி.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட வர்களும் தங்கள் கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்இருப்பினும், தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் சென்னை மாநகராட்சி வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்கள் இதுவரை முழுமையாக தாக்கல் செய்யப்படாமல் உள்ளது.

இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் டிசந்திரசேகரன் வெள்ளிக்கிழமை கூறியது:

சென்னை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற்றபோது மாநகராட்சி ஆணையராகவும் மாவட்டத் தேர்தல் அதிகாரியுமாக இருந்தவர் ம.ப. விஜயகுமார்.

இவர் வேறு துறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டு தற்போது ஓய்வும் பெற்று விட்டார்.

இந்த நிலையில் மாநகராட்சி வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்களைச் சேகரித்து ஆணையத்திடம் அளிப்பதாக இப்போது ஆணையராக உள்ள ராஜேஷ் லக்கானி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் மண்டல வாரியாக வேட்பாளர்களிடம் இருந்து செலவு கணக்கு விவரங்களைப் பெற்று அனுப்பி வருகிறார். இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த கணக்குகள் முழுமையாக கிடைத்து அவற்றை ஆய்வு செய்த பின்னரே தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ரகசிய உத்தரவு!

சென்னை, பிப். 9: தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் தகவல் கோரி பொது மக்கள் அனுப்பும் கடிதங்களுக்குப் பதில் அளிக்கும்போது "பொதுத் தகவல் அதிகாரி' என குறிப்பிடக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகா ரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத் துறையில், பொதுத் தகவல் அதிகாரி பதவி இருப்பது ஏன் என்று "தினமணியில்' ஜனவரி 15-ல் வெளியான செய்தியின் எதிரொலியாக இந்த ரகசிய உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரும் விவரங்களை அளிப்பதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விலக்கு அளித்து கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

அரசின் இந்த நடவடிக்கை தகவல்பெறும் பொது மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக தன்னார்வ அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அரசாணை எண்: 158-படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படவில்லை என்றும், விசாரணையில் இருக்கும் வழக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை தொடர்பில்லாத சில தக வல்களைக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. அரசாணை எண்: 158-ஐ சுட்டிக்காட்டி தங்கள் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களைத் தரஇயலாது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட் டது.

இது தொடர்பான பதில் கடிதத்தில் அதனை அனுப்பியவர் தன்னை, ""பொதுத் தகவல் அதிகாரி' என குறிப்பிட்டிருந்தார். தகவல் பெறும் உரிமைச்சட் டத்தில் இருந்து தங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிக்கொள்ளும் அந்தத் துறையில் பொதுத் தகவல் அதிகாரி பதவி இருப்பது எப்படி என கடந்த ஜனவரி 15-ல் "தின மணி' கேள்வி எழுப்பியது.

ரகசிய சுற்றறிக்கை:

இதை யடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் அனைத்துப்பிரிவு மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனவரி 21-ம் தேதியிட்ட ஒரு ரகசிய சுற்றறிக்கை (எண்: 32679/வி.ஏசி.-4/2005) அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கடிதங்களுக்கு (தகவல் அளிக்க இயலாது என்று கூறி) பதில் கடிதம் அனுப்பும் அதிகாரிகள் அதில் தங்களை பொது தகவல் அதிகாரி என குறிப்பிடக் கூடாது.

அதற்குப் பதிலாக ""காவல் கண் காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத் துறை மத்திய சரகம், சென்னை- 28'' என்று குறிப்பிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரகசிய சுற்றறிக்கை மூலம், தங்கள் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை அத் துறை அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

இது அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் பதிலுக்கு எதிரானதாகவே உள் ளதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

குப்பைத் தொட்டியில் ஏன் இந்த முரண்பாடு?

சென்னை, பிப். 9: சென்னை பல்லாவரம் நகராட்சியில் தலா ரூ.69 விலையில் 16 ஆயிரம் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியில் இதேபோல வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளின் விலையை விட இது பல மடங்கு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளுக்கு சேர்த்து வேங்கடமங்கலத்தில் குப்பைகளைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் ரூ.44.21 கோடி மதிப்பீட்டில் இத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு பல்லாவரம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியான நிறுவனங்களை தேர்வுச் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை கோரும் நட வடிக்கைகளை பல்லாவரம் நகராட்சி மேற்கொண்டது.

இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படும் 26 வார்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 16 ஆயிரம் குடும்பங்களுக்கு குப்பைத் தொட்டிகளை வழங்க நகராட்சி முடிவு செய்தது.

இதற்காக, ஒவ்வொன்றும் 10 லிட்டர் கொள்ளளவுள்ள 16 ஆயிரம் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

இதில் "கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' ரூ.77-க்கும், "சின்டெக்ஸ் நிறுவனம்' ரூ.80-க்கும் குப்பைத் தொட்டிகளை வழங்க முன் வந்தன"கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' குறிப் பிட்டுள்ள ரூ.77 மற்ற நிறுவனங்களின் விலை யைவிட குறைவாக இருந்தாலும், இது தங்களது மதிப்பீட்டுத் தொகையைவிட அதிகமாக இருப்பதாக 2008 டிசம்பர் 23-ல் நடைபெற்ற நகராட்சி மன்றக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப் பட்டது.

எனவே, அந்த நிறுவனம் மதிப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப விலையை குறைத்துக் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஒப்பந்த நிறுவனத்திடம் பேரம்:

நகராட்சி நிர்வாகம் மூலம் இது குறித்து நகராட்சி பொறியாளர் மேற்குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்இதையடுத்து, அந்த நிறுவனம் தலா ரூ.69 விலையில் குப்பைத் தொட்டிகளை வழங்க முன்வந்தது.

இதற்கு 2009 ஜனவரி 27-ல் நகராட்சிக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டதுஇதே நிறுவனத்திடம், இதே விலைக்கு தங்கள் நகராட்சிப் பகுதிகளுக்கு தேவைப்படும் எண்ணிக்கையில் குப்பைத் தொட்டிகளை வாங்குவது குறித்து ஆலந்தூர், தாம்பரம் நகராட்சிகள் தனித்தனியாக முடிவு செய்துக் கொள்ளலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில்...:

சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வீட்டில் இருந்து சேகரிப்பதற்காக குடிசைப்பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகள் தலா ரூ.12-க்கு மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத்திடமி ருந்து வாங்கப்பட்டுள்ளது.

அங்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு, அதில் மற்ற நிறுவனங்கள் தெரிவித்த விலைகள் ஆய்வு செய்யப்பட்டு, மிகக் குறைவான விலை சிப் பெட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனத்திடம் இருந்து குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

முரண்பாடு:

8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டி ரூ.12-க்கு கிடைக்கும் போது, வெறும் 2 லிட்டர் கூடுதலாக அதாவது 10 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகளை ரூ.69 விலைக்கு பல்லாவரம் நகராட்சி வாங்க முடிவு செய்துள்ளது.

குப்பைத் தொட்டியின் அளவில் 8 லிட்டருக்கும், 10 லிட்டருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், அதற்கான விலையில் ஏன் இந்த வித்தியாசம் என்பதே மக்களிடம் தற்போது எழுந்துள்ள கேள்வி.

நகராட்சி பதில்:

கொள்ளளவு அதிகம் என்பது மட்டுமல்ல, நாங்கள் வாங்கும் குறைந்த எண்ணிக்கையும் இந்த அதிக விலைக்கு காரணம் என்று நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், இது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை விசாரித்து மக்களின் வரி பணம் வீணாகாமல் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

புதன், 28 ஜனவரி, 2009

அகதிகள் முகாமில் இந்தியர்!

சென்னை பூந்தமல்லியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் இந்தியக் குடிமகனான மகேந்திரன் (எ) கண்ணன் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் வட்டாம்வலசை கிராமத்தைச் சேர்ந்த சேதுவும் அவரது மனைவியும் 70-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இலங்கை சென்றனர். அங்கு அவர்களுக்கு கண்ணன் பிறந்தார்.


1984-ம் ஆண்டு ராணுவத் தாக்குதலில் மன்னார் அருகில் இவர்கள் குடும்பம் தங்கி இருந்த பேசாலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேது தனது மகன் கண்ணன் மற்றும் மனைவியுடன் அகதிகளுடன் தமிழகம் வந்தார்.


அகதிகளுடன் வந்ததால் இவர்களைப் போலீஸôர் மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். பின்னர் சிவகாசி முகாமுக்கு மாற்றினர்.


தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து சொந்த ஊரான வட்டாம்வலசைக்குச் சென்றார் கண்ணன். அங்கு காளீஸ்வரியுடன் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகள் சரோஜினி (13), மகன்கள் சுதாகர் (9), சுரேஷ் (8) உள்ளனர்.


கூலி வேலை செய்து வந்த கண்ணன் பற்றி 7-3-2007-ல் விசாரித்த ராமநாதபுரம் "கியூ' பிரிவு போலீஸôர், 9-3-2007-ல் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்று அலுவலகத்திலேயே 5 நாள்கள் தங்க வைத்து பின்னர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதையறிந்த இவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி விடுவித்தனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த கண்ணனை வழிமறித்த "கியூ' பிரிவு போலீஸôர் வலுகட்டாயமாக ஒரு வேனில் ஏற்றி செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அடைத்தனர். பின்னர் டிசம்பர் மாதம் பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமுக்கு மாற்றினர்.


தன்னை விடுவிவிக்க வேண்டும், "கியூ' பிரிவு போலீஸôரின் தவறான தகவல்கள் அடிப்படையில் வெளிநாட்டவர் என தன்னைத் தவறாகக் குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்ணன் கோரியுள்ளார்.

சனி, 17 ஜனவரி, 2009

யார் சொல்வது சரி?

சென்னை, ஜன. 15: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், லஞ்ச ஊழலை ஒழிக்கவும் ""தகவல் பெறும் உரிமைச் சட்டம்'' 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

அரசின் நிர்வாக நடைமுறையை மக்கள் தெரிந்து கொள்வதைத் தடுத்த இரும்புத்திரையை விலக்கும் வகையில் இந்தச் சட்டம் அமைந்திருந்தது.

தகவல்பெறும் உரிமைச் சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி உளவு மற்றும் தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய துறைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும்.

இவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் துறைகளிலும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படுவதற்கு இந்த விலக்கு பொருந்தாது.

உளவு, தேசப் பாதுகாப்பு தொடர்பானவை மற்றும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 8 (1) (எச்) பிரிவின் கீழ் ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் 24 (4) பிரிவின் படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியத் துறைகளுக்கு முதலில் விலக்கு அளித்தது.

தொடர்ந்து, இந்தப் பிரிவைப் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பில்லாத லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு விலக்கு அளித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விலக்கு அளித்து அரசாணை:

இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை (எண்: 158) கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் நடைபெற்ற சில முறைகேடுகள் குறித்தும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினரும் கேட்க முயற்சித்ததால் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாகப் புகார் எழுந்தது.


தேசப் பாதுகாப்பு தொடர்பான உளவுப் பணிகளில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான சி.பி.ஐ. உள்பட பெரும்பாலான மாநிலங்களில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் கூட இத்தகைய விலக்கு அளிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக "தினமணி'யில் கடந்த செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் செய்திகள் வெளியாயின.

முதல்வர் பதில்:

இதையடுத்து, இந்த செய்திகளை மறுக்கும் விதமாக, கேள்வி-பதில் அறிக்கை மூலம் பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, ""விசாரணையில் இருக்கும் வழக்குகளின் விவரங்களை அதில் தொடர்புடையவர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றால் அது விசாரணையை பாதிக்கும் என்பதால் அந்த குறிப்பிட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிப்பதாக ஆகாது. மேலும், இது குறித்து சில விஷமிகள் பொய்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்'' என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.

முதல்வர் கூறியபடி எந்த வழக்கு தொடர்பாகவும் இல்லாமல், லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசு வாகனம் (டி.என்.-22-ஜி-5000) பயன்படுத்தப்படும் விதம் குறித்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கப்பட்டது.

தகவல் அளிக்க மறுப்பு:

ஆனால், அரசாணை எண்: 158-ன் படி லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, மேற்கூறிய கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பொதுத் தகவல் அதிகாரியாக தன்னை குறிப்பிட்டுக் கொண்டுள்ள மத்திய சரக கண்காணிப்பாளர், ஜனவரி 6-ம் தேதியிட்ட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


தகவல் பெறும் உரிமைச் சட்டமே தங்களுக்குப் பொருந்தாது என்று கூறுவதற்கு அந்தத் துறைக்கு தகவல் பெறும் சட்டப்படியான பொதுத் தகவல் அதிகாரியாக ஒருவர் இருப்பது ஏன்?


மேலும், வழக்குகளின் விசாரணை நிலவரம் குறித்த தகவல்களின் ரகசியத் தன்மையை பாதுகாக்கவே அரசாணை எண்: 158 பிறப்பிக்கப்பட்டதாக முதல்வர் கூறுகிறார்.

ஆனால், அந்தத் துறைக்கே இந்தச் சட்டம் பொருந்தாது என அதன் பொதுத் தகவல் அதிகாரி தெரிவிக்கிறார். இதில் யார் சொல்வது சரி என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

புதன், 14 ஜனவரி, 2009

நியமனத்தில் முறைகேடு!

சென்னை, ஜன. 11: தமிழ்நாடு அரசுப்பணியா ளர் தேர்வாணையம் மூலம் 4 டி.எஸ்.பி.க்கள் உள்பட 10 உயர் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

24 துணை ஆட்சியர்கள், 20 டி.எஸ்.பி.க்கள், 10 வணிக வரி அதிகாரிகள், 33 கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் என 91 பதவிகளுக்கான, காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்ப தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 27-12-2000-ல் வெளியிட்டது.

நேர்முகத் தேர்வு:

இதன்படி நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் இருந்து 182 பேர் நான்கு ஆண்டுக ளுக்கு பின்னர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

2004 ஜூன் மாதம் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில், தகுதி அடிப்ப டையில் அந்தந்த பதவிகளுக்கு 91 பேர் தேர்வு செய்யப்பட்டனர்மேலும் 30 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர மற்ற அனைவ ரும் "தேர்வு பெறாதவர்கள்'' என அறிவிக்கப்பட்டனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 25-8-2004-ல் வெளியிடப்பட்டது. இருப்பினும், இவர்களுக்கு 4 ஆண்டு தாமதத்துக்கு பிறகு 15-4-2008-ல் தேர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.

"தேர்வு பெற்றவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள் ளவர்கள் தவிர மற்ற அனைவரும் தேர்வு பெறாதவர்கள் என அறி விக்கப்படுகிறது. மேலும் இவ்வாறு தேர்வு பெறாதவர்களுடன் தேர்வாணையம் எவ்வித கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளாது' என தேர்வாணயம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டது.

முரண்பாடு:

ஆனால், இதற்கு மாறாக, தேர்வானவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறாத எஸ்.பி. முத்தமிழ்ச்செல்வி (509612), நடுகாட்டுராஜா (509882), கே. ஸ்டா லின் (517019), கே. சண்முகம் (515870) ஆகியோர் டி.எஸ்.பி. பதவிகளுக்கும், ஜி.பி. அருளரசு (574748), வி. துரைசாமி (537475), எஸ். மருது பாண்டியன் (548127), பி.எம். முருகேசன் (509658) , எம். ராஜா (512039) ஆகியோர் கூட்டுறவுச் சங் கங்களின் துணைப் பதிவாளர் பதவிக்கும், என்ஸ்ரீநிவாசன் (540819) வணிக வரி அலுவலர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி தேர்வாணைகளை (எண்: 719/ஓ.எஸ்.டி.-சி1.2000) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 15-4- 2008-ல் வெளியிட்டது.

அவரவர்களுக்குக் கடிதங்களையும் தேர்வாணையம் அனுப்பியது.

தவறு என்ன?

தமிழ்நாடு அரசின் விதிகளின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகள் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதவிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்யும்போது, மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பேரை தகுதி அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கலாம்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அந்தப்பதவிகளில் சேர விரும்பவில்லை என்று எழுத்து பூர்வமாக தெரிவித்தால் அந்தப் பதவிகளுக்கு தனியாகத் தேர்வு நடத்தாமல் அடுத்த நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபருக்கே அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

விதிகள் இப்படி இருக்க, பணியாளர் தேர்வாணையமோ காத்திருப்போர் பட் டியலில் உள்ள தகுதிவாய்ந்த நபர்களைப் புறக்கணித்துவிட்டு தேர்வு பெறாதவர்கள் என அறி விக்கப்பட்டவர்களில் சிலருக்கு தேர்வாணைகளை அளித்திருப் பது புதிராக உள்ளது.

சில ஆண்டுகள் சேவைக்கு பின்னர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ள இந்தப் பணியிடங்களுக் கான தேர்வில் தேர்வாணையம் இப்படி நடந்து கொண்டுள்ளது ஆணையத்தில் பெறும் முறை கேடு நடந்துள்ளதைக் காட்டுவ தாக ""காத்திருப்போர் பட்டியலில்'' உள்ளவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

விசாரணை தேவை:

இவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இல்லாத நபர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் ஆணையத்தின் முழு கூட்டம் நடத்தப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அரசின் ஒப்புதலுடன் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

ஆனால், மேற்கூறிய 10 பேருக்கும் தேர்வாணைகள் அனுப்பியதில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதால் அது விஷயத்தில் தேர் வாணைய உறுப்பினர்கள் சிலரே அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

பதில் இல்லை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் காசிவிஸ்வநாதன் வெளியூர் பயணத்தில் இருப்பதால், இது குறித்துத் தேர்வாணையம் தரப்பில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.

புதன், 24 டிசம்பர், 2008

அங்கீகாரம் இல்லாத மனைகள்: அரசு புது முடிவு?

சென்னைப் பெருநகர் பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் உருவாகும் மனைப் பிரிவுகளின் (லே-அவுட்) எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதுசென்னையில் நாளுக்குநாள் மக்கள் நெரிசல் அதிகரித்து வருகிறது.

வெளிமாவட்டங்களில் இருந்து குடிபெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் புறநகர் பகுதிகளில் குடியேற மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவர்களின் தேவைகளைப் பயன்படுத்தி பணம் பார்க்க நினைத்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் புறநகர்பகுதிகளில் விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மனைப் பிரிவுகளாக மாற்றி தனித்தனி மனைக ளாக விற்று வருகிறார்கள்.

"சி.எம்.ஏ.' பகுதி என அழைக்கப்படும் சென்னை பெருநகர் பகுதியில் இவ்வாறு உருவாகும் புதிய மனைப் பிரிவுகள் அனைத்தும் இதற்காக சி.எம்.டி.ஏ. வகுத்துள்ள விதி முறைகளின்படியே இருக்க வேண்டும்.

சி.எம்.ஏ. பகுதிக்கு வெளியே புதிய மனைப் பிரிவு களை உருவாக்க நகர மற்றும் ஊரமைப்பு துறை அனுமதியைப் பெற வேண்டும்.

விதிகள் அவசியம்:

சி.எம்.டி.ஏ. விதிகளின்படி விளை யாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பொதுப் பயன்களுக்கு தேவையான நிலத்தை ஒதுக்க வேண்டும்வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலைகளுக்கு இடம் விடவேண்டும்.

இவை உள்ளிட்ட விதிகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டுள்ள மனைப் பிரிவுகளுக்கு மட்டுமே சி.எம்.டி.ஏ. அங்கீ காரம் வழங்கும்.

பட்டா உள்ள விவசாய நிலத்தில் அங்கீகாரம் இன்றி உருவாகும் மனைப் பிரிவுகள் தொடர்பான பிரச்னைக ளைவிட நத்தம் புறம்போக்கு நிலத்தில் உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதில் பல்வேறு பிரச் னைகள் ஏற்படுகின்றன.

சி.எம்.டி.ஏ. நிலை என்ன?

சென்னைப் பெருநகர் பகுதியில் 1976-க்கு பின்னர் உருவான அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகளை ஒழுங்குபடுத்த சி.எம்.டி.ஏ. 1990 ஏப்ரலில் நடவடிக்கை எடுத்தது.

1989-க்கு முன்னர் உருவான வீட்டுமனைகளை சில நிபந்தனைகளுடன் ஒழுங்குபடுத்த சில நடவடிக்கை களை சி.எம்.டி.ஏ. 1992-ல் அறிவித்தது இதையடுத்து, அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்த இவற்றுக்கான வரன்முறைத் திட்டத்தை சி.எம்.டி.ஏ. 1999-ல் அறிவித்தது.

இவ்வாறு வரன்முறைப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டம் 2000, 2001, 2002-ம் ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டதுஇத்திட்டங்கள் மூலம் அங்கீகாரம் பெறாமல் உருவாக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளுக்கு வரன்முறைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.

அரசு புதிய முடிவு?

1999-ம் ஆண்டு வரன்முறைத் திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட் டது. விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவாக இந்த நடவ டிக்கை இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக இந்த திட்டம் தடைப்பட்டது.

அங்கீகாரம் இன்றி உருவாக்கப்பட்டதால் இந்த மனைகளில் வீடு கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டனவிதிகளை மீறி உருவான மனைப் பிரிவுகளை உருவாக்கியவர்கள் எவ்வித பிரச்னையையும் எதிர்கொள்வ தில்லை.

மாறாக, இவற்றை வாங்கியவர்களே பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்இந்த மனைகளை வரன்முறைப்படுத்த அரசு தனி யான கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

ஆனால், பல ஆண்டுகளாக அரசு இதில் மெüனமாகவே இருந்து வந் ததுஇந்த நிலையில் 2-வது மாஸ்டர் பிளான் நடைமு றைக்கு வந்துள்ள நிலையில் அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை உரு வாகியுள்ளது.

இதையடுத்து 2000-ம் ஆண்டு முதல் 2005- ம் ஆண்டு வரை சென்னைப் பெருநகர் பகுதியில் அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுக்க அரசு முன்வந்துள்ளது.

இதற்காக, அங்கீகாரம் இன்றி உருவான மனைப்பிரிவுகள் குறித்த பட்டியல் அடங்கிய கோப்பு சி.எம்.டி.ஏ.விடம் இருந்து வீட்டுவசதித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கோப்பு தொடர்பாக முடிவு எடுக்க வேண்டிய வீட்டுவசதித் துறை 2007-ம் ஆண்டு வரையிலான பட்டியலுடன் சேர்த்து புதிய பட்டியலை அளிக் குமாறு கேட்டுள்ளது.

இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை
வரன்முறைப்படுத்துவது குறித்து அரசின் முடிவு விரைவில் வெளியாகும் என பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதன், 19 நவம்பர், 2008

பத்திரப் பதிவுத்துறை, மக்களை வஞ்சிப்பது ஏன்?

சென்னை, நவ. 18: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை கடைப்பிடிக்காமல், முந்தைய உயர் மதிப்பு அடிப்படையில் சொத்து விற்பனையைப் பதிவு செய்துள்ளனர் பதிவுத்துறையினர்.

தமிழகத்தில் நில விற்பனையைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டி மதிப்புகள் பல ஆண்டுகளாகத் திருத்தப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் நில விற்பனைக்கான வழி காட்டி மதிப்புகளைத் திருத்தி அமைக்க தமிழக அரசு 2005 ஜூன் 8-ம் தேதி (அரசாணை எண்: எம்.எஸ். 69 வ.வ. ஜே1) உத்தரவிட்டது.

இதன்படி மைய மதிப்பீட்டுக் குழு, மாவட்டக் குழு, வட்டக் குழுக்கள் அமைக் கப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்புகள் வெளியிடப்பட்டு அதன் மீது பொது மக்களின் கருத்துகளும் பெறப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த இறுதி அறிக்கை சில மாற்றங்களுடன் 2007 ஆகஸ்ட் 1 முதல் திருத்தி அமைக்கப்பட்டு, புதிய வழிகாட்டி மதிப்புகள் நடை முறைக்கு வந்தன.

2007 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வந்த வழிகாட்டி மதிப்பே இறுதியானது என்றும் பதிவுத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

முரண்பாடு:

ஆனால், பதிவுத் துறைத் தலைவர் தலைமையில் அனைத்து துணைப் பதிவுத் துறைத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் 7-9-2007-ல் நடைபெற்றது.

திருத்தி அமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புக ளைக் கடைபிடித்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் குறித்து 11-9-2007-ல் நடைபெற்ற மைய மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்பட்டது.

2007 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்பு தற்போ தைய வழிகாட்டி மதிப்பைவிட உயர் மதிப் பில் பதிவாகியுள்ள சர்வே எண். தெரு. நகர் மதிப்புகளை அந்த சர்வே எண். தெரு. நகருக்கு மட்டும் சார்பதிவாளர்கள் கடைப்பிடிக்கலாம் என்ற கருத்து ஏற்கப்பட்டது.

இந்த முடிவு 2005, 2006-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் உயர் மதிப்பை முன்தேதியிட்டு கடைப்பிடிக்க பதிவுத்துறை அலுவலர்களை நிர்பந்திக்கிறது.

நிதி சார்ந்த புதிய முடிவுகளை முன்தேதி யிட்டு அமல்படுத்தக் கூடாது என்ற நீதி மன்ற தீர்ப்புகளுக்கு இது எதிராக உள்ளது.

மையக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் "கடித எண்: 34000/ எல்.1.2007, நாள் 12.9.2007' என்று குறிப் பிட்டு ஒரு சுற்றறிக்கை நிலையில் பதிவுத்து றைத் தலைவர் அலுவலக அனைத்து உயர் அதிகாரிகள், அனைத்து மாவட்டப் பதிவாளர்கள், அனைத்து சார்பதிவாளர்கள், அனைத்துப் பிரிவு கண்காணிப்பாளர்கள்- பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், பதிவுத் துறை பயிற்சி அலுவலகம் என அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பாதிப்பு என்ன?

2007 செப்டம்பர் 11-ம் தேதி தீர்மானத்தின்படி 2007 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முந்தைய உயர் மதிப்பை கடைபி டிக்க வேண்டும் என தணிக்கை மாவட்டப் பதிவாளர்களால் குறிப்புரை எழுதப்பட்டு, அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு அறிவிப்புகள் அனுப்பி அதிகாரப்பூர்வ அறி விப்பின்படி பதிவு செய்யப்பட்ட தொகைக்கும் அதற்கு முந்தைய உயர் மதிப்புக்கும் இடையிலான வேறுபடும் தொகை வசூலிக் கப்படுகிறது.

உதாரணமாக, சென்னை நங்கநல்லூரில் அரசு அறிவித்த அதிகாரப் பூர்வ மதிப்பின் அடிப்படையில் (ஆவண எண்: 472/08) ஒரு சொத்தின் மதிப்பு ரூ. 6,40,800 என நிர்ணயித்து பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பதிவுத்துறையின் 11-9-2007-ம் தேதி திடீர் முடிவு அடிப்படையில் முந்தைய உயர் மதிப்புகளை கருத்தில் கொண்டால் அந்த சொத்தின் மதிப்பு ரூ. 6,67,500 என பதி வுத்துறை தணிக்கை அதிகாரி குறிப்பு அனுப் பியுள்ளார்.

இதன்படி அந்த சொத்தை வாங்குபவரிடம் கூடுதல் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை செலுத்தாதவர்கள் மீதும், வசூலிக்க நடவடிக்கை எடுக்காத சார்பதிவாளர்கள் மீதும் தணிக்கைத் துறை ஆட்சேபணைகள் அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதுபதவி ஓய்வு பெறும் நிலையில் உள்ள சார் பதிவாளர்களிடம் இத்தகைய ஆட்சேபனைகள் அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கூடு தலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் தொகையைச் செலுத்தாதவர்கள் மீது இந்திய முத்திரைச் சட்டத்தின் 47 (ஏ) பிரிவின்படி வருவாய்த்துறை மூலம் வசூலிப்பு நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிவுத்துறையினர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஏராளமானோர் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்க பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 4 நவம்பர், 2008

ஒதுக்கீடு பெற்றவர்கள் உரியவர்கள் தானா?

சென்னை, நவ. 1: சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டுவசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட 170 அடுக்குமாடி குடியிருப்புகள் பல் வேறு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்தந்த பிரிவுகளின்படி தகுதியானவர்கள் தானா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

வீட்டுவசதி வாரியம் ஒரு பொது நிறுவனம் என்பதால், இதன் மூலம் வீடுகள், மனைகளை ஒதுக்கும் போது அனைத்து தரப்பினரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதன்படி பொதுப்பிரிவில் தொடங்கி சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் அவரவர் மக்கள் தொகை அடிப்படையில் வீடுகளின் எண்ணிக்கை பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவின்கீழும் தகுதி உடையவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு ஒதுக்கீடு பெறுவதற்கு விண்ணப்பிப்போர் அதற்கான தங்களது தகுதியை உறுதிப்படுத்த உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது அவசியம். இதுவே பொதுவான நடைமுறையாகவும் இருந்து வருகிறது.

வீட்டுவசதி வாரியம் முகப்பேர் ஏரி திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்காக பொதுப் பிரிவு மொத்த கொள்முதல், பொதுப் பிரிவு தவணை முறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர் கள், முன்னாள் ராணுவத்தினர், பத் திரிகையாளர்கள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள், சலவை, சவரத் தொழிலாளர்கள், வீட்டுவசதி வாரிய ஊழியர்கள் என மொத் தம் 18 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.

விண்ணப்பத்தில் இந்த பிரிவுகளை குறிப்பிட்டால் மட்டும் போதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 18 பிரிவுகள் மட்டுமல்லாது பாதுகாப்புத் துறையினரா என்றும், சிறப்பு பிரிவினரா என்பதை மட்டும் தனியாக குறிப்பிட வேண்டும் என வாரியம் அறிவு றுத்தி இருந்தது.

இவ்வாறு விண்ணப்பத்தில் அவரவர் குறிப்பிட்டிருந்த தகவல் அடிப்படையிலேயே சனிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பெறும் போது தங்க ளது தகுதியை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்ப நடைமுறைகளை எளிமைப்படுத்துவதாக கூறி வீட்டுவசதி வாரியம் எவ்வித சான்றும் இல்லாமல் முதல் தகவலின் அடிப் படையிலேயே ஒருவரின் பெய ருக்கு வீடுகளை ஒதுக்குவது மறைமுக பேரங்கள் மற்றும் முறைகேடுகளுக்கே வழிவகுக்கும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரி வித்துள்ளனர்.

அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு பொது அமைப்புகள் விண்ணப்பிக்கும் போதே அந்த ஒதுக்கீட்டின் கீழ் வருவதற்கான தகுதியை நிரூபிக்கும் ஆவணங்களின் நகல்களை பெறும் நடைமுறைகளை வீட்டுவ சதி வாரியமும் ஏன் பின்பற்றுவது இல்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அப்படி செய்தால் மட்டும்தான் தகுதி உள்ள நபர்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு வீடு, மனை ஒதுக்கீடு பெற முடியும் என்று பரவலாக விமர்சனம் எழுந் துள்ளது.

திங்கள், 20 அக்டோபர், 2008

ஏரிகளை தூர்வாரும் திட்டம் நடைமுறையில் இல்லை

சென்னை, அக். 19: காஞ்சிபுரம் மாவட் டத்தில் ஏரிகளை தூர்வாரும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை என பொதுப் பணித்துறையின் கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் சிவபெருமான் தெரிவித் தார்.

இது தொடர்பாக தகவல் பெறும் உரி மைச் சட்டம் - 2005-ன் கீழ் "ஐந்தாவது தூண்' அமைப்பின் பொதுச் செயலாளர் ரத்தின பாண்டியனுக்கு பொதுப்ப ணித்துறை அளித்துள்ள பதில்கள் விவரம்:

""காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம் பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களால் பரா மரிக்கப்படும் ஏரிகள் நீங்கலாக 84 தாங் கல்கள் உள்பட 917 ஏரிகள் கீழ்ப்பா லாறு வடிநிலக் கோட்டம் மூலம் பராம ரிக்கப்படுகின்றன.

ஏரிகளை தூர்வாரும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இல்லைஏரிக்கரைகளை பலப்படுத்தும் போது தேவைப்படும் மண் ஏரியுனுள் இருந்து எடுக்கப்படுகிறது.

இதேபோல வணிக நோக்கத்துக்காக கனிமத் துறையிடம் அனுமதி பெற்றவர் களால், பொதுப்பணித்துறை அதிகாரிகளால் காண்பிக்கப்படும் இடங்களில் இருந்து மண் எடுக்கப்படுகிறதுஇந்த இரு நோக்கங்களுக்காக தவிர, ஏரியுனுள் முழுவதும் மண்ணை வெட்டி எடுத்து தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை.

ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்து சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கனிமவளத் துறை அனுமதி பெற்று நீர் நிலைகளில் மண் எடுப்பது குறித்து பொதுப் பணித்துறைக்கு என அரசின் தனியான வழிகாட்டுதல்களோ, உத்தரவுகளோ இல்லை.

ஏரிகள் உடைப்பு:

கடந்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் 117 இடங்களிலும் ஆறுகளில் 11 இடங்களிலும், வாய்க்கால்களில் 40 இடங்களிலும், ஏரிகளில் 66 இடங்களி லும் கரைகள் உடைந்தன.

இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் ஏதும் இல்லைஎந்த காலங்களில் நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்வது என்பது குறித்தும், அது தொடர்பான கோப் புகளை ஆய்வு செய்து முடிவு எடுப்பது குறித்தும் அரசு விதிகள், வழிகாட்டுதல் கள் ஏதும் இல்லை'' என அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் பாழாக்கப்பட்டு வரும் நிலையில், ஏரி களை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய துறை இந்த பணிகளுக்கு 25 ஆண்டுக ளாக அனுமதி அளிக்காமல் உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக சுற் றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

ஏரிகளின் தேவை என்ன?

பொதுவாக தரைப் பரப்பில் ஒரு தடுப்பை செயற்கையாக உருவாக்கி நீரை தேக்கும் வழிமுறையின் அடிப்படையில் உருவாக் கப்பட்டவை ஏரிகள். எனவே, ஏரிகளில் தரை பரப்பில் அதிகமாக படியும் மண்ணை உரிய கால இடைவெளியில் அகற்றுவது அவசியம் ஏரிகளைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகள் குடியிருப்புகளாக மாறியுள்ளன.

இதனால் ஏரிகள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டன என்று கூறி, இவற்றை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என ஒரு பிரி வினர் கோஷமிட்டு வருகின்றனர்.

ஆனால், ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதி களில் சாகுபடி பணிகளுக்கு தேவைப் பட்டதைவிட தற்போது மக்களின் தண் ணீர் தேவை பலமடங்கு அதிகரித்துள் ளது.

எனவே, ஏரிகளை முன்பிருந்த தரைப்பரப்பைவிட ஆழப்படுத்தி அதிக அளவில் நீரை சேமிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது என் கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஏரிகளின் பராமரிப்பு பொறுப்பு பொதுப்பணித்துறையிடமும், அதில் மண் எடுப்பது தொடர்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் கனிமவள துறையிடமும் உள்ளது.

இந்த முரண்பாடுகள் காரணமாக ஏரிகளில் மண் எடுப்பதில் ஊழல் அதிகரித் துள்ளது. இது தொடர்பான நடைமுறைகளும் தெளிவாக இல்லை.

தீர்வு என்ன?

எனவே, ஆற்றுப்படுகை களில் மணல் எடுப்பது முறைப்படுத்தப் பட்டு அரசின் மூலமே மணல் விற்பனை நடைபெறுவது போல, ஏரிகள் உள் ளிட்ட நீர் நிலைகளில் மண் எடுப்பதும் முறைப்படுத்தப்பட்டு அரசின் மூலமே நடைபெற வேண்டும்.

அப்போது தான் ஏரிகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு மக்களின் தண்ணீர் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படும்.

நீர் நிலைகள் பாதுகாக்கப்படுவதோடு மண் எடுப்பதில் நிலவும் ஊழலும் கட்டுப்படுத்தப்படும் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சனி, 18 அக்டோபர், 2008

கட்சி மாறியதற்கு கைமாறு!

சென்னை, அக். 15: ம.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எல்கணேசனுக்கு "விருப் புரிமை' திட்டத்தின் கீழ் சென்னை முகப் பேர் ஏரி திட்டத்தில் மனை ஒதுக்கி தமி ழக அரசு உத்தரவிட் டுள்ளதும.

தி.மு.க.வில்...:

கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க., தி.மு.க. அணியில் இருந்து விலகி அதிமுகவு டன் கூட்டணி சேர்ந்தது. தேர்தல் முடிந்து சில மாதங்கள் கழித்து 2006 டிசம்பர் மாதம் கட்சி யின் அவைத் தலைவராக இருந்த எல். கணே சன், துணை பொதுச் செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நடவடிக்கைகளை எடுத்தனர்.

தி.மு.க. ஆதரவு...:

தாங்கள்தான் உண்மை யான ம.தி.மு.க.வினர் என்று கூறி திமுக தலை வரும் முதல்வருமான கருணாநிதியை எல்கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் சந்தித்தனர்.

இதன் பின்னர் திமுக சார்பில் நடத்தப்ப டும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் ம.தி.மு.க.வினராக இவர்கள் இருவரும்தான் அழைக்கப்பட்டனர்ம.தி.மு.க.வில் உள்ள சிலரை தங்கள் பக்கம் இழுத்து, குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற் சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி வந்தார்.

மேலும், இவர்கள் இருவ ரும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்தும் நீக் கப்பட்டனர்இந்த விவகாரத்தில், வைகோ தலைமையி லான கட்சியே மதிமுக என்றும், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்ப டுத்த மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், மதிமுக உறுப்பினர் கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என வைகோ அறிவித்திருந்தார்.

ஆனால், கட்சியின் கொறடா உத்தரவை மீறி எல். கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்இதையடுத்து இவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும்
நீக்கப்பட்டனர்.

மனை ஒதுக்கீடு:

இத்தகைய சூழலில் மதிமுக வின் மக்களவை உறுப்பினராக உள்ள எல்கணேசனுக்கு சென்னை முகப்பேர் ஏரித் திட் டத்தில் உயர் வருவாய்ப் பிரிவில் மனை (எண்: 1052) ஒதுக்கப்பட்டுள்ளதுஅரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஒதுக்கீடு செய்யப்படுவதாக மார்ச் 8-ம் தேதி யிட்ட வீட்டுவசதித் துறை அரசாணையில் (2 டி எம்.எஸ். எண்: 157) குறிப்பிடப்பட்டுள்ளது".

முகப்பேர் ஏரி திட்டப்பகுதியில் உள்ள உயர் வருவாய்ப் பிரிவு மனை எண்: 1052-ஐ சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ், அரசு விருப்புரிமை யில் எல். கணேசன் என்பவருக்கு தவணை முறையில் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்படுகி றது' என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட் டுள்ளது.

மனை ஒதுக்கீடு தொடர்பான எந்த ஆவணத் திலும் எல். கணேசன் மக்களவை உறுப்பினர் என்பதைக் குறிப்பிடாமல், சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை உறுப்பினராக உள்ள ஒருவருக்கு அனைத்துச் சலுகைகளும் இருக்கும்போது அவர் தன்னை மக்களவை உறுப்பினராக அடையாளம் காட்டாமல், ஒரு சமூக சேவகர் என்று கூறி அரசின் மனை ஒதுக்கீட்டுச் சலுகை யைப் பெறுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சி மாறியதற்காகவா...:

அரசியல் மற்றும் பொது வாழ்வில் நீண்ட நாள் அனுபவம் கொண்டவர் என்ற முறையில் அரசின் விருப்பு ரிமையின் கீழ் மனை ஒதுக்கீடு பெற எல். கணே சன் தகுதியுடையவர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், அவர் தற்போது மதிமுகவில் இருந்து திமுகவில் சேர்வது என்ற நிலைப் பாட்டை எடுத்த பின்னர், அரசியல் காரணங்க ளுக்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

தியாகராய நகரில் ஒரு கிரவுண்ட் நில மதிப்பு ரூ. 5.57 லட்சம்?

சென்னை, செப். 27: சென்னையில் தியாக ராய நகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு ரூ. 5.57 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கிரையம் பெற்றவர்களுக்கு வரன்முறைப்படுத்தி அளிப்பது குறித்து தமிழக அரசு வெளி யிட்ட அரசாணையில் நிலத்தின் மதிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட் டத்தின் கீழ் உச்சவரம்புக்கு மேல் மிகை நிலம் வைத்திருந்த நில உரிமையாளர்களிடம் இருந்து ஏராளமான நிலங்கள் அர சால் கையகப்படுத்தியது.

ஆனால், இந்த நிலங்களை அவை உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டவை என்பது தெரியாமல் பலரும் வாங்கியுள்ளனர்இவ்வாறு, கிரயம் பெறப்பட்ட நிலங் களை பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட மண்டல மதிப்பின் அடிப்படையில் நிலமதிப்புத் தொகை யினை பெற்றுக் கொண்டு வரன்முறைப்படுத்தலாம் என கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் வரு வாய்த்துறை முதன்மைச் செயலர் அம்புஜ் சர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அர சாணை (எண்: 565) விவரம்:

உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்ப டுத்தப்பட்டவை என்று அறியாமல் கிரயம் பெற்றவர்களது நிலத்தை வரன்முறைப்ப டுத்த 29-7-1998 தேதியிட்ட அரசாணை யின் (எண்: 649) கீழ் நிர்ணயிக்கப்பட்ட நில மதிப்புத் தொகையை செலுத்த வேண்டும்.

இதன்படி, சென்னை நகரக் கூட்டுப்பகுதி யில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நில மதிப்பு விவரங்கள் (ஒரு கிரவுண்ட்): தியாகராய நகர், எழும்பூர், தண்டையார் பேட்டை: ரூ.5,57,500அம்பத்தூர்: ரூ. 22,300; குன்றத்தூர், பூந்த மல்லி, தாம்பரம், ஆலந்தூர், மாதவரம்: ரூ55,750.

மற்ற நகரக்கூட்டுப் பகுதிகளில் நிர்ணயிக் கப்பட்ட விலை விவரம்: திருச்சிராப்பள்ளி: ரூ. 47,388; சேலம்: ரூ1,42,162; கோவை: ரூ. 30.105; திரு நெல்வேலி: ரூ. 12,544.

அரசாணை வெளியிடப்படும் நாளில் நிலத் தின் தற்போதைய உரிமையாளர்கள் இந்த ஆணையின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். குடியிருப்பு நோக்கத்திற்காக பயன்படுத் தப்படும் நிலம் மட்டுமே வரன்முறைப்படுத் தப்படும் என்ற முந்தைய விதிகள், 31.12.1994- க்குள் வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் தளர்த்தப்படுகின்றன.

குழப்பம்:

உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்திய பின்னர் அந்த நிலம் மோசடியாக கிரயம் செய்யப்பட்டதை தடுக்கத் தவறிவிட்டு, தற்போது நடுத்தரப் பிரிவு மக்களுக்காக என்று கூறி வரன்மு றைப்படுத்துவதாக அரசு முடிவெடுத்ததே பல்வேறு தரப்பினருக்கும் சந்தேகத்துக்குரி யதாக உள்ளது.

நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காக என்று கூறி 3 கிரவுண்ட் மற்றும் அதற்கு மேலும் வைத்துள்ளவர்களின் நலனுக்காகவே அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக பரவலாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழ கத்தின் நிலத்தின் விலை கடந்த சில ஆண்டு களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை கோடிகளில் மதிப்பிடப்படும் தற்போதைய சூழலில் தமிழக அரசோ, 1998-ம் ஆண்டு நிர்ணயிக் கப்பட்ட நிலமதிப்புத் தொகையை வசூலிக்கப் போவதாக அரசாணை வெளியிட்டிருப்பது முதலில் ஏற்பட்ட சந்தேகங்களை உறு திப்படுத்துவதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொந்த வீட்டிலும் தொடரும் சிக்கல்...

சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் ராமன். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியேறிய லட்சக்கணக்கானோரில் இவரும் ஒருவர்.

தனது நிதி நிலை, விலைவாசி உள்ளிட்ட காரணங்களால் ராமன் தனது குடும்பத்தினருடன் புறநகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.

கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும் வீட்டு வாடகை, கூடுதல் மின் கட்டணம், அபரிமிதமான முன்பணம் என வருமானத்தில் பெரும் பகுதியை வீட்டின் உரி மையாளருக்கே கொடுக்க வேண்டிய நிலை, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ராமனுக்கும் வந்தது.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலத் தின் விலையை கருத்தில் கொண்டு புறநக ரில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 1000 சதுர அடி பரப் பளவில் 2 படுக்கை அறை வீடு ஒன்றை ரூ20 லட்சத்துக்கு ராமன் வாங்கினார்.

நிலத்தின் உரிமையாளரிடம் அதிகாரம் பெற்ற கட்டுமான ஒப்பந்ததாரரிடம் இருந்து, முறைப்படி ஒப்பந்தம் போட்டு விற்பனையை பதிவு செய்து வாங்கிய அவ ருக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தன.

காரணம், இவர் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 8 வீடுகள் கட்டப்பட்டதில் 3 வீடு களை அந்த நிலத்தின் உரிமையாளர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்ராமன் உள்பட 6 பேர் இங்கு வீடுகளை வாங்கியுள்ளனர்.

ஆனால், அந்த குடியி ருப்பில் காலியாக உள்ள இடங்கள், மொட்டை மாடி உள்ளிட்ட பொது உப யோக பகுதிகள் தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி அதிகாரம் செய்ய ஆரம் பித்தார் உரிமையாளர்.

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய வீட்டில் வாகன நிறுத்தும் இடம் உள்பட எந்த இடத்தையும் வீடு வாங்கியவர்கள் முறை யாக பயன்படுத்த அனுமதிக்காமல் உரி மையாளர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்இவர் மட்டுமல்ல இவரைப் போல பலரும் சொந்த வீடு வாங்கியும் வாடகை வீட் டில் இருப்பது போன்ற உணர்விலேயே செய்வதறியாது நிற்கின்றனர்.

சில இடங்களில் உரிமையாளர்கள் வீடு வாங்கியவரின் அனுமதியை பெறாம லேயே அவரது தளத்துக்கு மேல் கூடுதலாக கட்டடம் கட்ட முயற்சிப்பது உள்ளிட்ட பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்த எண்ணிக்கை வீடுகள் உள்ள குடியிருப்புகள் மட்டுமின்றி 20 மற்றும் 30 வீடுகள் உள்ள குடியிருப்புகளிலும் இத்த கைய அத்துமீறல்கள் நடைபெறுகின்றன.

சொந்த வீடு வாங்கும் போது இது போன்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

நீங்கள் வாங்கும் நிலத்தின் மொத்த பரப் பளவு. அதில் எத்தனை வீடுகள் என் னென்ன அளவுகளில் கட்டப்படுகின்றனஅந்த குடியிருப்பு அமைந்துள்ள நிலத் தில் உங்களுக்கான பங்கு எவ்வளவு என் பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மொத்த நிலத்தில் பங்கிடப்படாத பகுதி களின் அளவு, நிலத்தின் உரிமையாளருக்கு சிறப்பு ஒதுக்கீடு உள்ளதா என்பது குறித்த விவரங்கள் கட்டுமான ஒப்பந்ததாரருட னான ஒப்பந்த ஆவணத்தில் உள்ளதா என் பதை சரிபார்க்க வேண்டும்.

அவ்வாறு ஆவணத்தில் குறிப்பிடப்பட் டுள்ளபடி பொது பயன்பாட்டு இடங்கள் உள்ளனவா என்பதையும் நேரில் பார்த்து உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும்.

அந்த வளாகத்தில் உங்களுக்குள்ள உரிமைகளை முழுமையாக தெரிந்து கொள்வது அவசி யம்.

4-க்கும் அதிகமான வீடுகள் இருக்கும் பட்சத்தில் வீடு வாங்கியவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற் படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் உரிமையாளரின் தொல்லைகளை ஒற் றுமையுடன் சமாளிக்கலாம்.

இது போன்ற பிரச்னைகளில் சிக்கி அவ திப்படுபவர்கள் அந்த வீட்டை தங்களுக்கு விற்ற கட்டுமான ஒப்பந்ததாரரிடம் போட்ட ஒப்பந்த விதிகளின் அடிப்படை யில் நீதிமன்றத்தை அணுகி பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

சங்கம் இல்லாவிட்டா லும், வீடு வாங்கிய அனைவரும் இத்த கைய பிரச்னைகளுக்காக தனித்தனியாக வும் நீதிமன்றத்தை அணுகலாம்.