வெள்ளி, 19 மார்ச், 2010

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத 17 கவுன்சிலர்கள்

  சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் 17 வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை.
 
கடந்த 4 நிதி ஆண்டுகளில் வார்டு  மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியில் சராசரியாக 67 சதவீதம் மட்டுமே செலவிடப்படுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மாநகராட்சி அதிகாரிகள் இத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டு ஆண்டுதோறும் இதற்காக குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
 
மாநகராட்சியின் பல்வேறு துறைகள் மூலம் சுகாதாரம், பள்ளிக் கல்வி, சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குறிப்பிட்ட பகுதிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பகுதி வார்டு உறுப்பினர்கள் நேரடியாக நிதி ஒதுக்கி திட்டங்களைச் செயல்படுத்த இந்த மேம்பாட்டு நிதி அளிக்கப்படுகிறது.
 
இதற்கான வழிகாட்டி நெறி முறைகள் வகுக்கப்பட்டு மன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கடந்த 2005}06, 2006}07, 2007}08, 2008}09 ஆகிய நிதி ஆண்டுகளில் வார்டு மேம்பாட்டுக்காக உறுப்பினர்களுக்கு ஒதுப்பட்ட நிதி, அதில் செலவழிக்கப்பட்ட தொகை, செலவழிக்கப்படாத தொகை குறித்த விவரங்களை போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவ், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரியிருந்தார். 
 
மாநகராட்சி பதில்: 
 
இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிதி ஆலோசகர் மற்றும் பொதுத் தகவல் அதிகாரி அளித்துள்ள பதில் விவரம்:
 
மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்துக்காக, 2005}06 நிதி ஆண்டில் ரூ. 1,085 லட்சம் ஒதுக்கப்பட்டதில் ரூ. 967.8 லட்சம் (89.2 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2006}07 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 5.31 கோடி (48.97 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2007}08 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 7.60 கோடி (70.07 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2008}09 நிதி ஆண்டில், ரூ. 23.25 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 14.76 கோடி (63.5 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2009}2010 நிதி ஆண்டில் ரூ. 38.75 கோடி ஒதுக்கப்பட்டதில் டிசம்பர் மாதம் வரை ரூ. 9.74 கோடி (25.14 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது.5 நிதி ஆண்டுகளில் மொத்தம் ரூ. 94.55 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 47.09 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆண்டு சராசரியாக 67 சதவீத நிதி மட்டுமே செலவிடபட்டுள்ளது.
 
 மேயர்: 
 
இதேபோல மேயருக்கான சிறப்பு மேம்பாட்டு நிதிக்காக 2005}06 முதல் 2009}2010 வரையிலான 5 நிதி ஆண்டுகளில் ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 44.99 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
 
ஒரு பைசா கூட பயன்படுத்தாதவர்கள்: 
 
சென்னை மாநகராட்சியில் உள்ள 10 மண்டலங்களில் 1, 4, 6, 7, 8 ஆகிய மண்டலங்களில் 2005}06 முதல் 2008}09 நிதி ஆண்டு வரை வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை.
 
 
இதேபோல, நடப்பு நிதி ஆண்டில் 97, 98, 99, 100, 101, 102, 103, 106, 108, 111, 113, 114, 116, 117, 118, 121, 128 ஆகிய வார்டுகளில் கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தங்களது பதிலில் குறிப்பிட்டுள்ளனர்.
 
 
இதுவரை வார்டு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 25 லட்சமாக இருந்த மேம்பாட்டு நிதி, வரும் நிதி ஆண்டில் இருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது.

தகவல் அளிக்க கட்டணம் வசூலிப்பதில் குழப்பம்


  கவல் கோரும் மனுதாரர்களுக்கு ஆவணங்களின் நகல்களை அளிக்க கட்டணம் வசூலிப்பதில் அரசு அதிகாரிகளிடம் குழப்பம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிந்க்கின்றனர்.
 
2005ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள, "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்'படி அரசின் நிர்வாக நடைமுறை குறித்த தகவல்களை மக்கள் மனுச் செய்து எழுத்துப்பூர்வமாக பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இவ்வாறு தகவல்களைப் பெற மாநில அரசுத் துறை அலுவலகமானால் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லையை ஒட்டி அனுப்ப வேண்டும். மத்திய அரசுத்துறைகளில் தகவல் கோரும்போது, ரூ.10-க்கான வங்கி வரைவோலை அல்லது அஞ்சல் ஆணையை இணைத்து அனுப்ப வேண்டும்.மனுதாரர் கோரும் தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களின் நகல்களை ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் பெற்றுக் கொண்டு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இவ்வாறு மனுச் செய்யும்போதும், நகல்களைப் பெறும்போதும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு, கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த விலக்கு வரம்பில் வரத் தகுதி இல்லாத மற்ற அனைவரும் உரிய கட்டணங்களை அவசியம் செலுத்தியாக வேண்டும்.இவ்வாறு தகவல்கள் தொடர்பான ஆவணங்களின் நகல்களைப் பெற செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து, தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
 
தகவல் கோரும் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும். தகவல் தொடர்புக்கான நகல்களைப் பெற ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்தக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 0075 அல்லது, 00800 உள்ளிட்ட சில குறிப்பிட்ட கணக்குகளில் செலுத்தி அதற்கான ஒப்புகைச் சீட்டை உரிய பொதுத் தகவல் அதிகாரியிடம் செலுத்தி நகல்களைப் பெறலாம்.
 
நகல்களுக்கான கட்டணங்களை ரொக்கமாகவோ, அஞ்சல் பணவிடை மூலமாகவோ செலுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தமிழக அரசின் பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள பொது தகவல் அதிகாரிகளிடம் இது குறித்த முழுமையான விவரங்கள் இன்னமும் சென்றடையாத நிலை உள்ளது.
 
குறிப்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை தொடர்பான சில ஆவண நகல்களை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரவி கோரியிருந்தாராம்.குறிப்பிட்ட ஒரு சலானைப் பயன்படுத்தி பாரத ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டும் என அங்குள்ள பொதுத் தகவல் அதிகாரி தெரிவித்தாராம்.
 
ஆனால், முன்னாள் ராணுவத்தினர் நல வாரிய அலுவலகத்தில் வங்கி வரைவோலை, அல்லது வங்கி காசோலை, அஞ்சல் பணவிடை மூலம் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என மனுதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் அவர்களது அலுவலகத்திலேயே கட்டணத்தை ரொக்கமாகவோ, அல்லது காசோலை மூலமாகவும் பெற்றுக் கொள்கின்றனர்.
 
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகங்களில் தகவல் தொடர்பான ஆவணங்களை அளிப்பதற்கான கட்டணங்களை காசோலை மூலமாகவே பெற்றுக் கொள்கின்றனர்.கட்டணங்களைப் பெறுவதற்கு அரசு தெளிவாக ஒரு நடைமுறையை அறிவித்துள்ள நிலையிலும், ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் வெவ்வேறு விதங்களில் கட்டணங்கள் பெறப்படுகின்றன. இது மனுதாரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 
 
அரசின் அறிவுறுத்தல்கள் அனைத்து நிலைகளுக்கும் முழுமையாகச் சென்றடையாததே இந்தக் குழப்பத்துக்குக் காரணம் எனத் தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
 
இவ்வாறு வெவ்வேறு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் மனுதாரர்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனைத் தடுத்து அனைத்து அலுவலகங்களிலும் ஒரே சீரான நடைமுறை அமலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

திங்கள், 8 மார்ச், 2010

முதல்வரின் முன்னாள் செயலர் டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம்

  முதல்வர் கருணாநிதியின் முன்னாள் செயலரும், மாநில தகவல் ஆணையருமான டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் அளித்துள்ளது தமிழக அரசு.
 
தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.ஆர். ராமசாமி. முதல்வர் கருணாநிதியின் செயலராக 3 முறை இருந்தவர்.வயது மூப்பு காரணமாக கடந்த 2008}ம் ஆண்டு ஏப்ரல் 5}ம் தேதி டி.ஆர். ராமசாமி ஓய்வு பெற்றார். பின்னர் 2008 மே 7}ம் தேதி இவர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையின் போது டி.ஆர். ராமசாமிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக சில உயர்ரக ஊசி மருந்துகளுடன் கதிரியக்க சிகிச்சையும் அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
 
இந்த சிகிச்சையில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான "ஐஆர்இஎஸ்எஸ்ஏ}250' ரக மாத்திரைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட பரிசோதனை மற்றும் மாத்திரைகள் வாங்கிய வகையில் டி.ஆர். ராமசாமிக்கு ரூ. 5.91 லட்சம் செலவாகியுள்ளது.
 
மேலும், தொடர் சிகிச்சைக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் தனது நிலை குறித்து விளக்கி, மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அளிக்குமாறு அரசிடம் டி.ஆர். ராமசாமி கோரியிருந்தார்.
 
இது தொடர்பாக பொள்ளாச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் "தாயகம்' அமைப்பைச் சேர்ந்த நா. பாஸ்கரன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரியிருந்தார்.
 
இதற்கு தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை பொது தகவல் அலுவலர் ச.ராமலிங்கம் கடந்த 2}ம் தேதி அளித்த பதில் விவரம்:
 
தகவல் ஆணையர் டி.ஆர். ராமசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.12.54 லட்சத்தை அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை (எண்: 22) பிப்ரவரி 5}ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி டி.ஆர். ராமசாமியின் மருத்துவ செலவுகளுக்காக முதல்கட்டமாக ரூ. 5.91 லட்சத்தை அளிக்கவும், மற்ற சிகிச்சைகள் முடிவடைந்தவுடன் மீதித் தொகையை அளிக்கவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசின் உயர் பதவியில், அதுவும் முதல்வரின் செயலராக பணிபுரிந்த அதிகாரி ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி வழங்குவது அரசின் சுய விருப்பத்தை பொருத்தது.எனினும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரியும்போதும், ஓய்வு பெற்ற சமயத்திலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய வசதிகளை செய்ய முறைப்படியான காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இத்தகைய சலுகைகள் மூலம் கிடைக்கும் உதவிகளுக்கு மாற்றாக, தகவல் ஆணையர் டி.ஆர்.ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அரசே நேரடியாக வழங்கியுள்ளது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வியாழன், 4 மார்ச், 2010

சிமென்ட் விலை: மூட்டைக்கு ரூ.25 உயர்வு?

  மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி வரி உயர்வை அடுத்து சில்லறை விற்பனையில் சிமென்ட்டின் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.25 வரை அதிகரிக்க உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த விலை உயர்வை இறுதி செய்வது குறித்து முடிவெடுப்பதற்காக உற்பத்தியாளர்களின் ரகசிய கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் 2006 முதல் சிமென்ட் விலையை முறையான காரணங்கள் எதுவும் இன்றி உற்பத்தியாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.÷அரசின் நடவடிக்கையை அடுத்து தவிர்க்க முடியாத நிலையில் சிமென்ட் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த சில மாதங்களுக்குள் விலை உயருவது தொடர்கதையாகிவிட்டது.
 
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூட்டை ரூ.260 ஆக உயர்ந்த சிமென்ட் விலை அக்டோபரில் ரூ.245 ஆக குறைந்தது. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் சிமென்ட் அளவு படிப்படியாக அதிகரித்தது. 
 
இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த டிசம்பரில் சில்லறை விற்பனையில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.200 ஆக குறைந்தது.இருப்பினும் இந்த விலை குறைப்பு குறுகிய காலமே நீடித்தது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து சிமென்ட் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வார நிலவரப்படி ஒரு மூட்டை சிமென்ட் ரூ.240 வரை விற்கப்பட்டது.
 
 
உற்பத்தி வரி உயர்வு: 
 
கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சிமென்ட் உள்ளிட்ட பொருள்கள் மீதான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு மூட்டை விலை ரூ.8 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், ஒரு மூட்டை விலையை ரூ.25 வரை உயர்த்த தமிழகத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.÷டீசல் விலை உயர்வு, மூலப்பொருள்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்த விலை உயர்வை உற்பத்தியாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
 
விலை உயர்வு சாத்தியமா? 
 
உற்பத்தியாளர்கள் அறிவிக்கும் விலை உயர்வு அமலாவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக விற்பனையாளர்களும், கட்டுமானத் துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
மேலும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் குறைந்த விலையில் சிமென்ட் கிடைப்பதால் மொத்தமாக கொள்முதல் செய்வோர் தமிழக உற்பத்தியாளர்களை தவிர்த்து வெளிமாநிலங்களில் வாங்க முன்வந்துள்ளனர்.
 
மேலும், இப்போது எல்லா நிறுவனங்களின் உற்பத்தியும் வெகுவாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் சிமென்ட் விற்பனை அதிகரிக்கவில்லை.இதனால், உற்பத்தியாளர்கள் முன்பு போல் தங்கள் விருப்பப்படி சிமென்ட் விலையை உயர்த்துவது அவ்வளவு எளிதானதல்ல என கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 1 மார்ச், 2010

தகவல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: 16 தன்னார்வ அமைப்புகள் அரசிடம் வலியுறுத்தல்

  தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.
 
தமிழகத்தில் மாநில தகவல் ஆணையம் 2006}ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ராமகிருஷ்ணனை தலைமை தகவல் ஆணையராகவும்,  ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜி. ராமகிருஷ்ணன், ஆர். ரத்தினசாமி ஆகியோரை தகவல் ஆணையர்களாகவும் நியமித்து தமிழக அரசு 12-1-2006-ல் அரசாணை வெளியிட்டது.
 
இதன் பின்னர், டி.ஆர். ராமசாமி, ஆர். பெருமாள்சாமி, டி. ஸ்ரீநிவாசன், பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் ஆகியோரை தகவல் ஆணையர்களாக நியமித்து 7-5-2008-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
 
பதவிக்காலம்: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நிர்வாக விதிகளின்படி தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் அவர்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது அவர்களின் 65 வயது வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த விதியின்படி, வயது மூப்பு காரணமாக தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து இப்போது தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், ஜி. ராமகிருஷ்ணன் அக்டோபர் மாதத்திலும் ஓய்வு பெறுகின்றனர்.
 
இதனால், 3 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்ப வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 
 
தகுதி என்ன?  
 
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 15 (5)-ன்படி சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இதழியல், வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை தகவல் ஆணையர்களாக நியமிக்கலாம்.
 
தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் அரசால் நியமிக்கப்பட்ட 7 ஆணையர்களில் 6 பேர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஒருவர் கல்லூரி பேராசிரியர்.பணியில் உள்ள அரசு அதிகாரிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி சரியாக செயல்பட வில்லை என்ற மேல்முறையீட்டு மனுக்களே தகவல் ஆணையத்துக்கு வருகிறது. 
 
இத்தகைய மனுக்களை விசாரிப்பவர்கள் முன்னாள் அதிகாரிகளாக இருக்கும் நிலையில் அவர்களின் விசாரணை மக்களுக்கு எத்தகைய திருப்தியை தரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதனால், மாநிலத் தகவல் ஆணையத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் திருப்தியின்மையே நிலவுகிறது. 
 
வெளிப்படையான நியமனம்:  
 
எனவே, அடுத்த சில மாதங்களில் 3 தகவல் ஆணையர்களை நியமிக்கும் போது, அதற்கான நடவடிக்கைகளை அரசு வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
 
நாளேடுகளில் விளம்பரம் செய்து, சட்டத்தில் குறிப்பிட்டுள்ள துறைகளை சேர்ந்தவர்களில் தகுதி வாய்ந்த நபர்களை அரசு சாரா அமைப்புகள் மூலம் ஆய்வு செய்து, அதில் இருந்து உரிய நபர்களை தேர்ந்தெடுத்து தகவல் ஆணையர்களாக நியமிக்கலாம் என பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
 
இது தொடர்பாக, பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த வி. மாதவ், அஜீத் மேனன், அருண் கோபாலன், அரவிந்த் கெஜ்ரிவால், எம். விஜயபாஸ்கர், பத்திரிகையாளர் நித்யானந்த் ஜெயராமன், வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், வி. கிருஷ்ணகாந்த், பேராசிரியர் வி. வசந்திதேவி, விஜயானந்த் உள்ளிட்ட 16 பேர் கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
 
தமிழக அரசின் தலைமைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஆகியோருக்கு இது தொடர்பான மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

குரல் மூலமே புகார்களை பதிவு செய்யலாம்: டிஜிபி அலுவலகத்தில் புதிய வசதி


  குற்ற நிகழ்வுகள் மற்றும் காவல்துறை சேவைகளில் ஏற்படும் குறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்ய சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குரல் மூலமே புகார்களை பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
கொலை, கொள்ளை, வழிப்பறி, மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோர் தங்கள் புகார்களை போலீஸôருக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக தங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.
 
குறிப்பிட்ட சில நிகழ்வுகள் தவிர்த்து பெரும்பாலான குற்ற நிகழ்வுகளில் இத்தகைய நடைமுறையிலேயே போலீஸôரின் நடவடிக்கைகள் தொடங்கும்.இவ்வாறு புகார்களை அளிக்க பொதுமக்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களையே நாட வேண்டியுள்ளது. 
 
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளூரில் அரசியல் செல்வாக்கு மிக்கவராகவோ அல்லது செல்வாக்கு மிக்கவரின் நெருக்கமானவராகவோ இருந்தால் போலீஸôரிடம் புகார் தெரிவிப்பது என்பதே பொது மக்களுக்கு எளிதானதாக இருப்பதில்லை.
 
இத்தகைய சூழலில் விவரம் தெரிந்தவர்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையத்தை தாண்டி உயர் அதிகாரிகளை நேரில் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை அளிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
 
குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பகுதி காவல் நிலையத்தை தொடர்புக் கொள்வதில் பிரச்னை ஏதும் இருந்தாலோ அல்லது, போலீஸôரின் சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலோ அது பற்றி காவல் துறை தலைமைக்கு தெரிவிக்க முடியாமல் போகிறது.
 
சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடைபெற்றால் அது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என்பது பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
 
இத்தகைய பிரச்னைகளை தீர்க்க சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக புகார்கள் பெறப்படுகின்றன.இருந்தாலும், குற்ற நிகழ்வுகள் மற்றும் போலீஸôரின் பணிகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து காவல் துறை தலைமையிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க முடியாத சூழல் நிலவியது.
 
இதற்கு தீர்வாக சென்னையில் உள்ள காவல் துறை தலைமையகமான டிஜிபி அலுவலகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு அதன் மூலம் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இதில் மேலும் ஒரு வசதியாக பொது மக்கள் தங்கள் குரலிலேயே புகார்களை பதிவு செய்ய புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள், 044-28447200- என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அதில் ஆங்கிலம், தமிழ் மொழி அறிவிப்புகளைத் தொடர்ந்து "பீப்' என்ற சப்தம் ஒலிக்கும். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் தங்கள் புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.
 
இவ்வாறு, தானியங்கி தொலைபேசி எண்ணுக்கு வரும் புகார்கள் குரல் பதிவையே அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்படும்.இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமையகத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். 
 
 
மேலும், புகார் அளித்தவரின் அடையாளமும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.சில ஆண்டுகள் முன்பே திட்டமிடப்பட்டாலும் அண்மையில் தான் இந்த சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பகட்டத்திலேயே பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்!



  கவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களில் தங்கள் துறை சாராத கேள்விகள் இருந்தால்,​​ அவற்றை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல்,​​ மனுதாரருக்கே சில பொது தகவல் அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாகப் புகார் எழுந்துள்ளது.
 
இவ்வாறு திருப்பி அனுப்புவது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மீறுவதாகும்.​ எனவே,​​ இத்தகைய அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
 
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள்,​​ நீர் வரத்துக் கால்வாய்கள்,​​ சாலைகள்,​​ பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும்,​​ அவற்றை அகற்ற பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள்,​​ அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிக்க தகவல்களை அளிக்குமாறு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பி.கல்யாணசுந்தரம் என்பவர் வருவாய் துறையிடம் கோரி இருந்தார்.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் விண்ணப்பித்து தகவல்களை பெறலாம்.இதன்படி,​​ வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர் என்பதற்கான அரசின் சான்றிதழின் நகலுடன் கல்யாணசுந்தரம் தனது மனுவை வருவாய்த் துறைக்கு கடந்த மாதம் 4}ம் தேதி அனுப்பினார்.
 
வருவாய் துறை பதில்:​​ 
 
இது தொடர்பாக வருவாய்த் துறையின் சார்பு செயலரும் பொது தகவல் அதிகாரியுமான முஹமத் இலியாஸ் பாஷா,​​ ஜனவரி 27-ம் தேதி மனுதாரருக்கு கடிதம் ​(எண்:​ 1008/நி.மு.​ 6 ​(2)10}1) ஒன்றை அனுப்பினார்.
 
அதில்,​​ "தங்கள் மனுவில்,​​ தகவல்களை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது.இருப்பினும் அதற்கான ரூ.​ 10-க்கான கட்டண வில்லை ஒட்டப்படவில்லை.​ எனவே,​​ தங்கள் மனு அசலாக தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.​
 
மேலும்,​​ ஏரி,​​ குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால்,​​ இது குறித்து பொதுப் பணித் துறையினை அணுகுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்' என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சட்டம் சொல்வது என்ன?​ 
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6 ​(3 ​(2))-ன் படி,​​ தகவல் கோரி வரும் மனுக்களில் உள்ள கேள்விகள் வேறு ஒரு அதிகார அமைப்பின் செயற்பணிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக இருந்தால்,​​ சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்கு ​(துறைக்கு)​ மாற்றம் செய்து,​​ அது குறித்து விண்ணப்பதாரருக்கு தெரிவித்தல் வேண்டும்.
 
சட்டத்தில் இப்படி இருக்க,​​ தங்கள் துறைக்கு சாராத கேள்விகள் அடங்கிய மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல் வருவாய்த் துறையினர் ​ விண்ணப்பதாரருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
மேலும், ​​ வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட்ட சலுகையான கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்பதையும் ஏற்க மறுத்துள்ளனர்.
 
வருவாய்த் துறை மட்டுமல்ல,​​ ஆதிதிராவிடர் நலத் துறை,​​ பணியாளர் நலத் துறை,​​ சென்னை மாநகராட்சி ​ உள்ளிட்ட துறைகளின் பொது தகவல் அதிகாரிகளும் இதேபோல மனுக்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் இத்தகைய பொது தகவல் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு விண்ணப்பதாரர்களும்,​​ சமூக ஆர்வலர்களும் ​ வலியுறுத்தியுள்ளனர்.

சனி, 6 பிப்ரவரி, 2010

கொடைக்கானல் வனப்பகுதியில் நக்ஸலைட் ஊடுருவல்?​​: மர்ம நபர்களால் மலைக்கிராமங்களில் பதற்றம்



   கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் மலைக்கிராமங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றித் திரிவதாக அங்குள்ள கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை அதிரடிப்படை போலீஸôர் தீவிரப்படுத்தியுள்ளனர்."மர்ம நபர்கள் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்' என்று போலீஸ் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் பின்தங்கிய மற்றும் எல்லையோர கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பது உறுதியானது.​ இத்தகைய இயக்கங்களை ஒடுக்கும் வகையில் போலீஸôர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 
போலீஸôரின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் கொடைக்கானலை அடுத்துள்ள பழனி மேல்மலைப் பகுதிகள்,​​ ​ காடுகளில் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊடுருவினர்.இது குறித்த ரகசிய தகவலின்பேரில் அதிரடிப்படை போலீஸôர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நவீன் பிரசாந்த் கொல்லப்பட்டார்.​ 
 
இதையடுத்து கொடைக்கானல் மற்றும் பழனி மலைப் பகுதிகள்,​​ அதையொட்டியுள்ள காடுகள்,​​ மலைக் கிராமங்களில் அதிரடிப்படை போலீஸôர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
 
மர்ம நபர்கள்...:​​ 
 
இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூக்கால்,​​ மன்னவனூர்,​​ கவுஞ்சி,​​ பூண்டி,​​ போளூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் சந்தேகத்திற்குரிய வகையில் மர்ம நபர்கள் நடமாடுவதாக அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் இந்த நபர்கள் இரவு நேரங்களில் தனியாக வரும் கிராம வாசிகளிடம் வழிப்பறி செய்வதாகவும் அவர்கள் கூறினர்.பணம், ​​ துணிகள்,​​ மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் மிரட்டி வாங்கிக் கொள்வதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவித்தனர்.​ 
 
மன்னவனூர் கிராமத்தில் கைகாட்டி என்னுமிடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனியாகச் சென்ற கிராமவாசி ஒருவரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ய முயற்சித்ததாக மன்னவனூர் கிராம மக்கள் போலீஸôரிடம் புகார் தெரிவித்தனர்.
 
கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் பனிப் பொழிவு காரணமாக இரவு நேரங்களில் போலீஸôர் கிராமங்களில் இருப்பதில்லை.​ இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.​ 
 
மேலும்,​​ இந்த கிராமங்களுக்கு வரும் வெளியாட்களும்,​​ அவர்களது வாகனங்களும் எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் 24 மணி நேரமும் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.இதையடுத்து மன்னவனூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை அதிரடிப்படை போலீஸôர் தீவிரப்படுத்தியுள்ளனர்.​
 
இந்த கிராமங்களுக்கு செல்லும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக போலீஸôர் தெரிவித்தனர்.
 
நக்ஸலைட்களா?​​
 
"கிராம மக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் பார்த்தால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் மர்ம நபர்கள் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்' என அதிரடிப்படை போலீஸôருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
30 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைத் தொடங்கி தீவிரமாக நடத்தி வந்த முதல் தலைமுறை தலைவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு விட்டனர்.ஆனால், ​​ அவர்களைப் பின்பற்றி வந்த இரண்டாம் தலைமுறையினர் பலர் இப்போதும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.​ 
 
அவர்களது வழிகாட்டுதலில் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட அவ்வப்போது முயற்சித்து வருவதாக போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.​ 
 
இதனையடுத்து,​​ கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை முழுவீச்சில் முடுக்கிவிடுவது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

செவ்வாய், 29 டிசம்பர், 2009

கம்பி விலை:​ டன்​னுக்கு ரூ.​ 10 ஆயி​ரம் உயர்வு

   மி​ழ​கத்​தில் கட்​டு​மா​னப் பணி​க​ளுக்கு பயன்​ப​டுத்​தப்​ப​டும் இரும்பு கம்​பி​க​ளின் விலை ஒரே வாரத்​தில் டன்​னுக்கு ரூ.​ 10 ஆயி​ரம் வரை உயர்ந்​துள்​ளது.​திடீ​ரென ஏற்​பட்ட இந்த விலை உயர்வு அதிர்ச்சி அளிப்​ப​தாக விற்​ப​னை​யா​ளர்​கள் மற்​றும் கட்​டு​மா​னத் துறை​யி​னர் தெரி​வித்​த​னர்.​
 
செயில் ​(எஸ்.ஏ.ஐ.எல்.)​,​​ விசாக்,​​ டாடா உள்​ளிட்ட நிறு​வ​னங்​கள் மூலம் நாட்​டின் பல்​வேறு பகு​தி​க​ளுக்கு இரும்பு கம்​பி​கள் வார்க்​கப்​பட்டு கட்​டு​மா​னப் பணி​க​ளுக்கு அனுப்​பப்​ப​டு​கின்​றன.​ அண்​மைக்​கா​ல​மாக சிறிய வார்ப்​பா​லை​க​ளின் எண்​ணிக்​கை​யும் அதி​க​ரித்​துள்​ளது.​​
 
 
விலை உயர்வு:​​ 
 
 
கடந்த 2007}ம் ஆண்​டின் இறு​தி​யில் ஒரு டன் ரூ.​ 25 ஆயி​ர​மாக இருந்த கம்​பி​க​ளின் விலை 2008}ம் ஆண்​டின் தொடக்​கத்​தில் ஒரு டன் ரூ.​ 40 ஆயி​ரம் வரை அதி​க​ரித்​தது.​ இத​னால்,​​ நாட்​டின் பல்​வேறு பகு​தி​க​ளில் கட்​டு​மா​னப்​ப​ணி​கள் முடங்​கும் நிலை ஏற்​பட்​டது.
 
 
​2008}ம் ஆண்​டின் மத்​தி​யில் அதி​க​பட்​ச​மாக ஒரு டன் ரூ.​ 48 ஆயி​ரம் வரை உயர்ந்​தது.​ பல்​வேறு தரப்​பி​ன​ரின் வற்​பு​றுத்​தலை ஏற்று இரும்பு இறக்​கு​ம​திக்​கான வரி விகி​தங்​க​ளில் மத்​திய அரசு சில மாற்​றங்​களை செய்​தது.​ இருப்​பி​னும் இந்த முயற்​சி​கள் உரிய பலனை அளிக்​க​வில்லை.​ஏற் ​று​மதி தொடர்​பா​க​வும் மத்​திய அரசு சில கட்​டுப்​பா​டு​களை விதித்​தது.
 
 
​ இத​னை​ய​டுத்து கம்பி விலை படிப்​ப​டி​யாக குறை​யத் தொடங்​கி​யது.​படிப்​ப​டி​யாக குறைந்த கம்பி விலை கடந்த வாரம் டன்​னுக்கு ரூ.​ 25 ஆயி​ரம் முதல் ரூ.​ 28 ஆயி​ரம் வரை இருந்​தது.​இந்த நிலை​யில்,​​ தற்​போது ஒரு டன் கம்பி விலை ரூ.​ 38 ஆயி​ர​மாக அதி​க​ரித்​தது.​ 
 
 
பெரிய நிறு​வ​னங்​கள் தங்​க​ளது கம்​பி​க​ளின் விலை​யில் ரூ.​ 2 ஆயி​ரம் முதல் ரூ.​ 3 ஆயி​ரம் வரை அதி​க​ரித்​துள்​ளன.​
 
 
கார​ ணம் என்ன?​​ 
 
தமி​ழ​கத்​தில் தற்​போ​தைய நிலை​யில் சுமார் 80 தனி​யார் வார்ப்​பா​லை​கள் செயல்​ப​டு​கின்​றன.​ தமி​ழ​கத்​தின் கம்பி தேவை​யில் 70 சத​வீ​தம் இந்த ஆலை​கள் மூலம் பூர்த்தி செய்​யப்​ப​டு​கின்​றன.​
 
கச்சா இரும்பு தாதுவை நிலக்​க​ரி​யு​டன் சேர்த்து உருக்கி கம்​பி​க​ளாக வார்க்​கும் வசதி பெரிய ஆலை​க​ளில் மட்​டும் உள்​ளது.​ இத்​த​கைய வசதி இல்​லாத சிறிய ஆலை​கள் கச்சா இரும்பை நிலக்​க​ரி​யு​டன் சேர்த்து உருக்​கும் பணியை எளி​தாக்க "ஸ்பான்ச் அயன்' என்ற பொருளை பயன்​ப​டுத்த வேண்​டும்.​
 
 
ஆந்​தி​ரம்}​ கர்​நா​டக எல்​லை​யில் உள்ள ரெய்ச்​சூர்,​​ சத்​தீஸ்​கர் ஆகிய இடங்​க​ளில் மட்​டுமே ஸ்பான்ச் அயன் கிடைக்​கி​றது.​தெலங் ​கானா பிரச்னை கார​ண​மாக ஸ்பான்ச் அயன் வரத்​தில் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால்,​​ விலை உயர்த்​தப்​பட்​டுள்​ள​தாக சிறிய வார்ப்​பா​லை​கள் தரப்​பில் கூறப்​ப​டு​கி​றது.​
 
 
அரசு தலை​யி​டுமா?​​ 
 
 
""கம்பி விலை​யேற்​றத்​துக்கு ஆலை​கள் தரப்​பில் உறு​தி​யான கார​ணங்​கள் எது​வும் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை என்​ப​தால் நுகர்​வோ​ரி​டம் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது'' என திருச்சி டிரே​டிங் நிறு​வ​னத்​தின் நிர்​வாகி வி.​ முரு​கன் தெரி​வித்​தார்.​
 
 
பெரிய ஆலை​க​ளின் விலை உயர்வை கார​ணம் காட்டி சிறிய ஆலை​கள் செய்​தி​ருக்​கும் இந்த திடீர் விலை உயர்வு செயற்​கை​யா​ன​தாக உள்​ளது.​ இந்த விவ​கா​ரத்​தில் அரசு தலை​யிட்டு விலை உயர்வை கட்​டுப்​ப​டுத்த வேண்​டும் என கட்​டு​மா​னத் துறை​யி​னர் வலி​யு​றுத்​தி​யுள்​ள​னர்.

புதன், 9 டிசம்பர், 2009

தக​வல் ஆணை​யத்​தின் 37 உத்​த​ர​வு​க​ளுக்​குத் தடை!

    தமிழ்​நாடு மாநில தக​வல் ஆணை​யத்​தின் 37 உத்​த​ர​வு​க​ளுக்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது.​ 2005}ம் ஆண்டு நிறை​வேற்​றப்​பட்ட சட்​டத்​தின் அம​லாக்​கத்​துக்​காக மத்​திய தக​வல் ஆணை​ய​மும்,​ மாநில அள​வி​லான தக​வல் ஆணை​யங்​க​ளும் அமைக்​கப்​பட்​டன.
 

      
இந்​தச் சட்​டத்​தின் அடிப்​ப​டை​யில் பொது மக்​கள் எழுத்து மூல​மாக கோரும் தக​வல்​களை சம்​பந்​தப்​பட்ட துறை​யின் பொது தக​வல் அதி​காரி அளிக்​கா​விட்​டால்,​ அந்​தந்​தத் துறை​யின் தலைமை பொது தக​வல் அதி​கா​ரி​யி​டம் முத​லா​வது மேல்​மு​றை​யீட்டு மனுவை தாக்​கல் செய்ய வேண்​டும்.​

இதி​லும் தக​வல் கிடைக்​கப்​பெ​றா​த​வர்​கள் மாநில தக​வல் ஆணை​யத்​தி​லும்,​ மத்​திய தக​வல் ஆணை​யத்​தி​லும் 2}வது மேல்​மு​றை​யீடு செய்​ய​லாம்.இவ் ​வாறு பெறப்​ப​டும் 2}வது மேல்​மு​றை​யீட்டு மனுக்​களை விசா​ரித்து பதில் அளிக்க மறுத்த பொது தக​வல் அதி​கா​ரிக்கு ரூ. 25 ஆயி​ரம் வரை அப​ரா​த​மும்,​ துறை ரீதி​யான நட​வ​டிக்கை எடுக்க பரிந்​து​ரைக்​க​வும்,​ சம்​பந்​தப்​பட்ட மனு​தா​ர​ருக்கு உரிய பதில் கிடைக்க உத்​த​ர​வி​ட​வும் மாநில தக​வல் ஆணை​யத்​துக்கு அதி​கா​ரம் உள்​ளது.

தமி​ழ​கத்​தில்...:

தமி​ழ​கத்​தில் மாநில தக​வல் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு முதல் மூன்று ஆண்​டு​க​ளில் சுமார் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மேல்​மு​றை​யீட்டு மனுக்​கள் வந்​தன.இதில் சுமார் 40 மனுக்​க​ளின் மீதான விசா​ர​ணை​யில் பதில் அளிக்க மறுத்த பொது தக​வல் அதி​கா​ரி​க​ளுக்கு அப​ரா​தம் விதித்து மாநில ஆணை​யம் உத்​த​ர​விட்​டது. 


மேலும் பல வழக்​கு​க​ளில் உண்மை நிலை குறித்து விசா​ரித்து அறிக்கை அளிக்​க​வும்,​ மனு​தா​ரர்​கள் கோரிய தக​வல்​கள் அளிக்​க​வும் மாநில தக​வல் ஆணை​யம் உத்​த​ர​விட்​டது.


ஆனால்,​ இது​வரை ஒரு சில நபர்​க​ளி​டம் இருந்து மட்​டுமே அப​ரா​தம் வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது.நீதி ​மன்​றத் தடை:​ சட்​டப்​படி பதில் அளிக்​கா​த​தால் அப​ரா​தம் விதிக்​கப்​பட்ட பொது தக​வல் அதி​கா​ரி​க​ளில் பெரும்​பா​லா​னோர் நீதி​மன்​றத்தை அணுகி ஆணை​யத்​தின் உத்​த​ர​வுக்கு தடை ஆணை பெற்​றுள்​ள​னர்.​


இப்​போ​தைய நில​வ​ரப்​படி மாநில தக​வல் ஆணை​யத்​தின் 37 உத்​த​ர​வு​க​ளுக்கு,​ நீதி​மன்​றத்​தால் தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக ஆணைய அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​ சென்னை உயர் நீதி​மன்​றத்​தி​லும்,​ உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யி​லும் இந்த தடை உத்​த​ர​வு​கள் பெறப்​பட்​டுள்​ளன.

இவை தொடர்​பான வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளன.​ இதன் கார​ண​மாக தக​வல் பெறும் உரி​மைச் சட்​டத்​தின் அம​லாக்​கம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது என சமூக ஆர்​வ​லர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ள​னர்.

அர​சின் சட்ட உதவி ஏன்?​ மாநில தக​வல் ஆணை​யத்​தின் உத்​த​ர​வு​களை அம​லாக்க மறுக்​கும்​போது ​ தக​வல் அதி​கா​ரி​க​ளில் பெரும்​பா​லா​னோர் அந்​தந்​தத் துறை மூலம் நீதி​மன்​றத்​தில் மனு செய்து தடை ஆணை பெற்​றுள்​ள​னர்.​

இவர்​கள் தங்​கள் மனுக்​களை அரசு வழக்​க​றி​ஞர்​கள் மூலமே நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்து அர​சின் சட்ட உத​வியை பயன்​ப​டுத்​தி​யுள்​ள​னர். இந்த மனுக்​கள் தொடர்​பான வழக்​கு​க​ளில் ஆணை​யம் சார்​பில் அர​சின் பணி​யா​ளர் மற்​றும் நிர்​வாக சீர்​தி​ருத்​தத் துறைக்​கான அரசு வழக்​க​றி​ஞரே ஆஜ​ராகி வரு​கி​றார்.


இதன் மூலம் மனு​தா​ரர் ​(பொது தக​வல் அதி​காரி)​ சார்​பில் ஒரு அரசு வழக்​க​றி​ஞ​ரும்,​ எதிர் தரப்பு ​(ஆணை​யம்)​ சார்​பில் வேறு ஒரு அரசு வழக்​க​றி​ஞ​ரும் ஆஜ​ரா​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.சட்​டப்​படி செயல்​ப​டாத பொது தக​வல் அதி​கா​ரி​க​ளுக்கு அர​சின் சட்ட உதவி அளிக்​கப்​ப​டு​வது தக​வல் பெறும் உரி​மைச் சட்ட அம​லாக்​கத்தை அரசே தடுப்​ப​தற்கு வழி​வ​குக்​கும் என பல்​வேறு தரப்​பி​ன​ரும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ள​னர்.

சி.எம்.டி.ஏ. தெரி​விக்​கும் மதிப்பை ஏற்க பதி​வுத்​துறை முடிவு!

  சென்​னைப் பெரு​ந​கர் வளர்ச்​சிக் குழு​மம் ​(சி.எம்.டி.ஏ.) சார்​பில் எழு​திக் கொடுக்​கப்​ப​டும் ஆவ​ணங்​க​ளில் குறிப்​பிட்ட மதிப்பை ஏற்று அதன்​படி முத்​தி​ரைத் தீர்வை வசூ​லிக்க பதி​வுத்​துறை முடிவு செய்​துள்​ளது.
 
இது குறித்த சுற்​ற​றிக்கை அண்​மை​யில் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.​ சென்​னை​யி​லும்,​ புற​ந​கர்ப் பகு​தி​க​ளில் குறிப்​பிட்ட சில இடங்​க​ளில் வீட்டு மனை​கள்,​ வணிக மனை​கள் உள்​ளிட்​ட​வற்றை சி.எம்.டிஏ. தனி​யாக உரு​வாக்கி விற்​பனை செய்து வரு​கி​றது. 
 
மறை​மலை நகர்,​ மணலி புது நகர்,​ கோயம்​பேடு,​ சாத்​தாங்​காடு உள்​ளிட்ட இடங்​க​ளில் இவ்​வாறு மனை​களை உரு​வாக்கி உரி​ய​வர்​க​ளுக்கு சி.எம்.டி.ஏ. விற்​பனை செய்து வரு​கி​றது.​ இவ்​வாறு சொத்​துக்​களை உரு​வாக்கி விற்​பனை செய்​யும் போது இதற்​கான விற்​ப​னையை பதிவு செய்​தல் வேண்​டும்.
 
அதற்​கான நடை​மு​றை​க​ளில் சொத்​தின் மதிப்பை நிர்​ண​யிப்​ப​தில் பல்​வேறு குழப்​பங்​கள் இருந்து வந்​தன. இதன் கார​ண​மாக சி.எம். டி.ஏ. விடம் மனை​களை வாங்​கிய பலர் அதனை பதிவு செய்ய முடி​யாத நிலை தொடர்​கி​றது.
 
ஏரா​ள​மான மனை உரி​மை​யா​ளர்​க​ளுக்கு முழுத் தொகையை செலுத்​திய பிற​கும் விற்​பனை பத்​தி​ரத்தை பெற முடி​யாத சூழல் நில​வு​கி​றது.​ குறிப்​பாக மணலி புது நக​ரில் சி.எம்.டி.ஏ. உரு​வாக்​கிய மனை​க​ளின் விற்​ப​னை​யில் அதன் மதிப்பை நிர்​ண​யிப்​ப​தில் சி.எம்.டி.ஏ., வீட்​டு​வ​சதி வாரி​யம்,​ பதி​வுத்​துறை ஆகி​ய​வற்​றுக்​கி​டையே குழப்​பம் ஏற்​பட்​டது. 
 
 
இது தொடர்​பாக மனை ஒதுக்​கீடு பெற்​ற​வர்​கள் சார்​பில் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொட​ரப்​பட்​டது. இதில் மனை​க​ளின் மதிப்பை மாற்றி நிர்​ண​யித்​த​தில் சி.எம்.டி.ஏ.வுக்கு ஏற்​பட்ட இழப்​பு​கள் குறித்து தணிக்​கைத் துறை ஆட்​சே​பம் தெரி​வித்​துள்​ளது.
 
இத்​த​கைய குழப்​பங்​களை தீர்க்​கும் வகை​யில்,​ நீதி​மன்ற உத்​த​ர​வுக்கு இணங்​கும் வித​மாக பதி​வுத்​துறை தலை​வர் இரா. சிவ​கு​மார் புதிய சுற்​ற​றிக்கை ஒன்றை ​(எண்:​ 47/2009/பி2. நாள்:​ 17}11}2009) பிறப்​பித்​துள்​ளார்.
 
அதன் விவ​ரம்:​ 
 
சென்​னைப் பெரு​ந​கர் வளர்ச்​சிக் குழு​மத்​தால் எழு​திக் கொடுக்​கப்​ப​டும் ஆவ​ணங்​க​ளைப் பொறுத்து அந்த குழு​மம் நிர்​ண​யிக்​கும் மதிப்​பினை ஏற்று முத்​திரை தீர்வை வசூ​லிக்​கப்​பட வேண்​டும் என நீதி​மன்ற உத்​த​ர​வு​க​ளின் அடிப்​ப​டை​யில் ஆணை​யி​டப்​ப​டு​கி​றது. 
 
இது தொடர்​பாக நீதி​மன்ற தீர்ப்பை பதி​வுத்​து​றை​யி​னர் செயல்​ப​டுத்த வேண்​டும். எனவே,​ இனி வருங்​கா​லங்​க​ளில் சி.எம். டி.ஏ. நிர்​ண​யிக்​கும் மதிப்​பினை ஏற்று முத்​தி​ரைத் தீர்வை வசூ​லிக்​கப்​பட வேண்​டும் என இதன் மூலம் அறி​விக்​கப்​ப​டு​கி​றது என அந்த சுற்​ற​றிக்​கை​யில் குறிப்​பி​டப்​பட்​டுள்​ளது. 
 
வழி​காட்டி மதிப்பு என்ன ஆனது?​ ​
 
பதி​வுத்​துறை தலை​வ​ரின் இந்த சுற்​ற​றிக்கை பல்​வேறு குழப்​பங்​க​ளுக்கு தீர்​வாக அமை​யும் என கரு​தப்​ப​டு​கி​றது. ஆனால்,​ இந்த சுற்​ற​ரிக்கை அரசு அதி​கா​ரப்​பூர்​வ​மாக அறி​வித்த வழி​காட்டி மதிப்​பின் நிலையை கேள்​விக்​கு​றி​யாக்​கி​யுள்​ளது. 
 
இத​னால் ஒரு பகு​தி​யில் சி.எம்.டி.ஏ. விற்​பனை செய்​யும் சொத்​துக்கு ஒரு மதிப்​பும்,​ அதே பகு​தி​யில் தனி​யார் ஒரு​வர் விற்​பனை செய்​யும் சொத்​திற்கு வழி​காட்டி மதிப்​பின் அடிப்​ப​டை​யி​லும் இரு​வேறு வித​மாக முத்​தி​ரைத் தீர்வை வசூ​லிக்​கப்​ப​டும் சூழல் உரு​வா​கி​யுள்​ளது.

புதன், 2 டிசம்பர், 2009

திருவண்ணாமலை கோயில் நிலத்தை அபகரிக்க முயற்சி


தகவல் ஆணையப் பதிவாளர் நியமனத்தில் குளறுபடி



செயின்ட் ஹெலினா வானொலியில் ஒலித்த தமிழ்!

""தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்...' என்றர் மகாகவி பாரதி. இந்த வரிகளை நனவாக்கும் வகையில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவின் சிற்றலை வானொலியில் முதன் முறையாக தமிழில் அறிவிப்புகள் ஒலிபரப்பாகின. 


இப்படி ஒரு தீவு இருப்பதே நம்மில் பலருக்கும் தெரியாத நிலையில் நமது தாய்மொழியில் அங்கு அறிவிப்புகள் ஒலிபரப்பான விதத்தை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்...

உலக வரைபடத்தில் ஆப்பிரிக்காவுக்கும் - தென் அமெரிக்காவுக்கும் நடுவில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் புள்ளிகளில் ஒன்றாக செயின்ட் ஹெலினா தீவு அடையாளம் காணப்படுகிறது. பூகோள ரீதியாக பார்த்தால் நிலநடு கோட்டுக்கு 15 டிகிரி தெற்கில் ஆப்பிரிக்க நாடானஅங்கோலாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது இந்தத்தீவு.


தெற்கு அட்லாண்டிக் கடலில் இருந்த எரிமலை ஒன்றில் இருந்து வெளியான லாவா உள்ளிட்டபொருள்களால் உருவான தீவுகளில் ஒன்றாக பூர்வீகத்தைக் கொண்டது செயின்ட் ஹெலினா தீவு.ஐரோப்பிய நாடுகளின் நிலபரப்பில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் நீண்ட தூர கப்பல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், இளைப்பாறும் இடமாகவும் இத்தீவு முக்கியத்துவம் பெற்றது.


இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷார் கி.பி. 1,500-ம் ஆண்டுகளிலேயே இதனை தங்களது காலனி நாடாக்கிக் கொண்டனர். ஆனால் மற்ற காலனி நாடுகளைவிட இது இங்கிலாந்து அரசுக்கு செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்தது. 

சில ஆயிரம் மக்களே வசிக்கும் இந்தத் தீவு உலகின் இப்போதைய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சுமார் 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்றால் அது மிகையல்ல. வெளிஉலகத் தொடர்புக்கு கப்பல் போக்குவரத்தை மட்டுமே இத்தீவு மக்கள் நம்பியுள்ளனர். 

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டால் அது இந்தத் தீவை சென்றடைய 6 மாதம் ஆகும் என்பதே இவர்களின் தகவல் தொடர்பின் தற்போதைய நிலை.வளர்ந்த பல நாடுகள் விண்வெளிக்கு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும் சூழலில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான பூர்வாங்கப்  பணிகளே இப்போதுதான் செயின்ட் ஹெலினா தீவில் தொடங்கியுள்ளது என்பதன் மூலம் இதன் வளர்ச்சி வேகத்தை நாம் உணர முடியும். 


உலக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஆட்சியாளர்களில் ஒருவரான நெப்போலியன் போனபார்ட் இங்கிலாந்து அரசால் 1815-ம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, அவர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டார். 1821 மே மாதம் 5-ம் தேதி இந்தத் தீவிலேயே அவர் உயிரிழந்தார்.இதனை குறிக்கும் விதத்தில் அவரது நினைவிடமும் இங்கு அமைந்துள்ளது. இதன் காரணமாக உலக வரலாற்றில் தன க்குறிய முக்கியத்துவத்தை பெறுகிறது செயின்ட் ஹெலினா தீவு. 


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடந்து 1967-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் இங்கு வானொலி லிபரப்பு தொடங்கப்பட்டது. 1548 கிலோஹெட்ஸ், 194 மீட்டர் மத்திய அலை ஒலிபரப்பாக இந்த வானொலி நிலையம் தொடக்கம்முதல் செயல்படுகிறது. 


இருப்பினும், 11092.5 கிலோஹெட்ஸில் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிற்றலை ஒலிபரப்பும் செயின் ஹெலினா வானொலியில் தொடங்கப்பட்-டது.இங்கிலாந்து அரசு மத்திய அலை ஒலிபரப்புக்கு மட்டுமே நிதி உதவி அளித்ததால், எப்போதாவது சில சமயங்களில் மட்டுமே நடைபெற்று வந்த சிற்றலை வானொலி ஒலிபரப்பு 80-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. 


இருப்பினும், இங்கு ஒலிபரப்பு பணியில் இருந்த சிலர் உலகின் மற்ற பகுதிகளை சேர்ந்த சிற்றலை வானொலி நேயர்களின் உதவியுடன் ஒலிபரப்பை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். 

1993-ம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த முயற்சிகளின் பலனாக, 2000-ம் ஆண்டு முதல் செயின்ட் ஹெலினா வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு மீண்டும் தொடங்கியது. சிற்றலை வானொலி நேயர் குழுக்களின் நிதி உதவியை பெற்று மிகக்குறைந்த அளவான ஒரு கிலோவாட் திறனில் இதன் ஒலிபரப்பு தொடங்கியது. 


இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக ஆண்டு ஒரு நாள் அதாவது நவம்பர் 14 அல்லது 15-ம் தேதியில் மட்டும் கண்டத்துக்கு ஒரு மணி நேரம்  தம் 4 மணி நேரம் இதில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.


இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஒரு மணி நேரம், ஜப்பான் மற்றும் எஞ்சிய ஆசிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், அமெரிக்கா, கரிபியன் நாடுகளுக்கு ஒரு மணி நேரம் என இதன் ஒலிபரப்பு அமைந்துள்ளது. 

இந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி 15-ம் தேதி அதிகாலை 1.30மணிக்கு) இந்த ஒலிபரப்பு நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அந்தந்த பிராந்தியத்தில்உள்ள முக்கியமான 2 மொழிகளில் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு ஒலிபரப்பாகும்.

இந்த முறை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கானஒலிபரப்பில் அறிவிப்புகள் தமிழில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.சென்னையை சேர்ந்த, சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் தங்க. ஜெயசக்திவேல் குரலில் தமிழ் அறிவிப்புகள் ஒலிபரப்பானது. 

""இது செயின்ட் ஹெலினா வானொலி. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் இருந்து நாங்கள் ஒலிபரப்பு கிறோம்...'' என அந்த அறிவிப்பை நினைவுக் கூர்கிறார் தங்க. ஜெயசக்திவேல்.

இந்த வானொலியில் முதன்முதலாக ஒலிபரப்பான தமிழ் அறிவிப்புக்கு குரல் கொடுத்த பெருமை அவருக்கு இருந்தாலும், தமிழர்கள் அனை வருக்குமே  இது பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழின் அருமை பெருமைகளை கெüரவப்படுத்தும் விதத்தில் தமிழ் அறிவிப்பு வழி வகுத்ததில் செயின்ட் ஹெலினா வானொலி நிலையத்தின் மேலாளர் கேரிவால்டர்ஸ் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாராட்டுக்குரியவராகிற ôர். 

ஜப்பானில் உள்ள சிற்றலை வானொலி நேயர் குழுவின் நிதி உதவியின் பேரில் இந்த ஆண்டு ஒலிபரப்பு நடைபெற்றது.சிற்றலை வானொலி ஒலிபரப்பு மட்டுமல்லாது செயின்ட் ஹெலினா தீவின் அஞ்சல் தலையை பெறுவது என்பதும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்களிடம் பிரபலமானதாகும்.

பல்வேறு காரணங்களால் சிற்றலை வானொலி ஒலிபரப்பின் வீச்சு குறைந்து வரும் வேளையில் சிற்ற லை நேயர்களை ஊக்குவித்து ஒருங்கிணைக்கும்வகையில் அமைந்ததால் இதன் ஒலிபரப்பு உலகம் முழுவதும் முக்கியத்துவம் பெறுகிறது. 


உலக வரைப்படத்தில் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும் தனது சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் உலகின் பார்வையை செயின் ஹெலினா தீவு தன்பக்கம் திருப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 27 நவம்பர், 2009

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் மத்திய அமைச்சர்

  மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பிரபுஃல் படேல் மாத ஊதியமாக ஒரு ரூபாய்  மட்டும்  பெற்று வருகிறார்.   
 
மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கு ரூ. 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அடிப்படை ஊதியமும், தினசரி படியாக நாளொன்றுக்கு ரூ. 1000, தொகுதிப் படியாக மாதம்தோறும் ரூ. 20 ஆயிரமும் இதர படிகளாக மாதத்துக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. 
 
  இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான ஊதிய விவரங்கள் குறித்து பொள்ளாச்சியில் இயங்கிவரும் "தாயகம்' தன்னார்வ அமைப்பின் நா. பாஸ்கரன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில மாதங்கள் முன்னர் கேட்டிருந்தார். 
 
  இதற்கு நாடாளுமன்ற செயலகம் உள்பட பல்வேறு துறைகள் தனித்தனியாக பதில் அளித்துள்ளன.   உள்துறை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் பொது தகவல் அதிகாரி எஸ். கெüரிசங்கர் அளித்துள்ள பதில் விவரம்:  
 
இணை அமைச்சர் பிரபுஃல் படேல் தனிபட்ட முறையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டபடி அவருக்கான மாத ஊதிய ரூ. 501-ஆக கணக்கிடப்படுகிறது.   ஆனால், இதில் ரூ. 500 மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ திட்டத்தில் அவரது பங்களிப்பாக வரவு வைக்கப்பட்டு எஞ்சிய ரூ. 1 மட்டும் அவருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. 
 
தினப்படியில் குழப்பம்: 
 
மத்திய அமைச்சர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் தினப் படியாக ரூ. 1000 அளிக்கப்படுகிறது. இது மாத ஊதியத்துடன் சேர்த்து மொத்தமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 31 நாள்களுக்கான படியாக ரூ. 31,000 வழங்கப்பட்டுள்ளது. 
 
வழக்கமாக ஏப்ரல் மாதத்துக்கு 30 நாள்கள் மட்டுமே என்பதால் 31 நாள்களுக்கான தினபடி வழங்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக பொள்ளாச்சி நா. பாஸ்கரன் அந்தந்த அமைச்சகத்தின் மேல் முறையீட்டு அதிகாரிகளுக்கு தனித்தனியாக மனு செய்தார்.  
 
இதற்கு பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தனித்தனியாக பதில் அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு துறையின் துணைச் செயலரும், தலைமை பொதுத் தகவல் அதிகாரியுமான எஸ்.டி. பிள்ளை கடந்த 6-ம் தேதி அளித்த பதில் விவரம்:  
 
இந்தத் துறையில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர், இணை அமைச்சர்களுக்கு 30 நாள்கள் கொண்ட மாதத்தில் 31 நாள்களுக்கான தினபடி வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தத் தவறு வருத்தத்திற்குறியது. இருப்பினும், அமைச்சர்களிடம் இருந்து கூடுதல் தொகை திரும்ப பெற இயலாது.
 
வருங்காலங்களில் இத்தகைய தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.  
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியதன் விளைவாக இந்தத் தவறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

அட்டைப் பள்ளத்தாக்கின் அதிசயம்!



"அந்நியன்' திரைப்படத்தில் பேராசைக்காரனை அட்டையைவிட்டு  ரத்தம் உறிய வைத்துக் கொலை செய்வார் கதாநாயகன். ஆனால், ஒரு பாவமும் அறியாமல் அடர் காட்டில் அட்டைகளோடு பயணம் செய்துவிட்டுத் திரும்பினோம். எங்கே? ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு அடுத்தடுத்த பாராவில் விடை.
 
 
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்காடு நகரில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா. சிங்கவால் குரங்குகளின் பிரதான வாழிடம், யானைகளின் வழித்தடத்தின் இறுதி பகுதி ஆகிய சிறப்பம்சங்கள் இதற்கு உண்டு.
 
22 வகை விலங் கினங்கள், 211 வகை பறவையினங்கள், அட்டைப் பூச்சியினங்கள், ஏராளமான தாவர வகைகள் உள்பட 1000-க்கும் மேற் பட்ட உயிரினங்களின் வாழிடமாக இந்த அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. 
 
நீர்மின் நிலையம் அமைக்க அணை கட்டும் திட்டத்துக்காக அழிக்கப்பட இருந்த நிலையில் மக்களின் போராட்டம் மற்றும் மத்திய அரசு வற்புறுத்தல் காரணமாக அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக புதுவாழ்வு பெற்றுள்ளது. 
 
இதன் வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கேரள வனத்துறையினர் அனுமதியுடன், பயணம் செய்தபோதுதான் இந்த அட்டை உலா. மன்னார்காடு நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்காலி பகுதியில் இருந்து நமது பயணம் தொடங்குகிறது. 
 
சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை மினி வேனில் பயணித்துவிட்டு, பந்தன்தோடு ஓடையை கடக் கிறோம். அதன் பிறகு சில கிலோமீட்டர் தூரத்தில் பவானியின் கிளை ஆறு ஒன்று குறுக்கிடுகிறது. 
 
ஆற்றைக் கடக்கும் முன்னர் ஓரிருவரின் காலை மட்டுமே பதம்பார்த்த அட்டைகள் இப்போது அனைவரது கால்களிலும் சடசடவென ஏறத் தொடங்கின. மரங்களில் இருந்து உதிரும் இலைகள், அட்டை பூச்சிகளால் அங்கேயே இருக்க வைக்கப்படுகின்றன. இதனால் இலைகளும், தழைகளும் உரமாகி செடிகளும் மரங்களும் செழித்து வளர்கின்றன.
 
விவசாய நிலத்தில் மண் புழுக்கள் ஆற்றும் அரும்பணிக்கு நிகராக மழைக்காடுகளில் மரங்களும், புதர்களும் நிறைந்த பகுதிகளில் தரைபரப்பில் ஈரப்பதத்தை அப்படியே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வதே அட்டைப் பூச்சிகளின் தலையாயப் பணி என நம்முடன் பயணித்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் சதீஷ் சந்திரன் நாயர் குறிப்பிட்டார். 
 
அமைதி பள்ளத்தாக்கின் மற்றொரு சிறப்பு, இங்கு ஆண்டுக்கு 4,500 மி.மீ. முதல் அதிகபட்சமாக 7,500 மி.மீ. வரை மழை பெய்கிறது. இந்தியாவில் வேறு எந்த வனப்பகுதிக்கும் இல்லாத சிறப்பு இது. நடைபயணத்தின் நடுநடுவே சதீஷ் சந்திரன் நாயரின் ஆராய்ச்சி கருத்து பரிமாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அட்டைகள் அசராமல் ரத்தம் உறிஞ்சும் பணியில் கர்மசிரத்தையாக ஈடுபட்டிருந்தன. 
 
இந்த இடத்தில் அட்டைகள் குறித்து சில விஷயங்களை சொல்லியாக வேண்டும், மனிதர்களிடம் இருந்து ரத்தம் உறிஞ்சுபவை என்ற அளவில் மட்டுமே அட்டைகள் குறித்த பரிச்சயம் நமக்கு இருக்கும். 
 
ஆனால், அதைத் தாண்டி அட்டைகள் ஆற்றும் அரும்பணி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் லீச்சஸ் என அழைக்கப்படும் இந்த அட்டை பூச்சிகள் சராசரியாக ஒரு அங்குலம் நீளத்தில் கறுப்பும் காப்பி கலரும் கலந்த வண்ணத்தில் காட்சியளிக்கும். 
 
பொதுவாக இவை மனிதர்களைக் கடிக்கும் முன் ஹருடின் என்ற சுரப்பை முதலில் செலுத்தும். அதன் பின்னர் அது ரத்தத்தை உறிஞ்சும்போது, நமக்கு எந்த வலியும் ஏற்படாது. தனது உடலில் இடம் உள்ள அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சிய பிறகு அட்டைகள் தானாக விழுந்துவிடும்.
 
ஆனால், அது உறிஞ்சிய இடத்தில் ரத்தம் வடிவது நிற்க 5, 10 நிமிடங்கள் ஆகும். இந்தக் கருத்து பரிமாற்றங்களுடன் நடந்ததில் 4 கிலோ மீட்டர் தொலைவை கடந்ததே தெரியவில்லை. 
 
வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்த நாம் அங்கிருந்து, சைரேந்திரி வனம் அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதியை அடைந்தோம். 
 
அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து, அமைதி பள்ளத்தாக்கில் உள்ள குந்திபுழாவில் அணை கட்ட உத்தேசிக்கப்பட்ட இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சாரை சாரையாக அட்டைகள் அதன் மீது ஊர்ந்து கொண்டு, இலைகளைக் காய்ந்து போகவிடாமல் ஈரப்பதத்துடன் அங்கேயே இருக்கச் செய்வதால் மழைக்காடுகளின் பாதுகாப்பில் அட்டைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 
 
வனத்துக்கு உதவும் அட்டைகள் மனிதர்களுக்கும் உதவுவது ஆச்சர்யமளிக்கும். மனிதர்களுக்கும் ரத்தம் கட்டிவிட்டால் அதைச் சரி செய்வதில் அட்டைகள் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் இதனை பயன்படுத்தியிருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 
 
 
பிளாஸ்டிக் சர்ஜரி என்று கூறப்படும் குறிப்பிட்ட சில அறுவைச் சிகிச்சைகளிலும், குற்ற வழக்கு புலனாய்வில் ரத்த அடையாளங்கள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கும் அட்டைகளே பயன்படுகின்றன. மேலும், பல நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் அட்டைகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
 
 
இந்தப் பகுதி இன்னமும் மழைக்காடு வகை வனமாக இருப்பதற்கு காவலாக அட்டைப் பூச்சிகள் செயல்படுகின்றன என்றால் அது மிகையல்ல.
 
 
சிலரைச் சாடும்போது அட்டை போல உறிஞ்சுகிறான் என்பார்கள்... அட்டைபோல அவன் இவ்வளவு சேவைகள் செய்திருப்பானா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். 
 
                                                                                                                   வி. கிருஷ்ணமூர்த்தி