புதன், 19 நவம்பர், 2008

பத்திரப் பதிவுத்துறை, மக்களை வஞ்சிப்பது ஏன்?

சென்னை, நவ. 18: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை கடைப்பிடிக்காமல், முந்தைய உயர் மதிப்பு அடிப்படையில் சொத்து விற்பனையைப் பதிவு செய்துள்ளனர் பதிவுத்துறையினர்.

தமிழகத்தில் நில விற்பனையைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டி மதிப்புகள் பல ஆண்டுகளாகத் திருத்தப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் நில விற்பனைக்கான வழி காட்டி மதிப்புகளைத் திருத்தி அமைக்க தமிழக அரசு 2005 ஜூன் 8-ம் தேதி (அரசாணை எண்: எம்.எஸ். 69 வ.வ. ஜே1) உத்தரவிட்டது.

இதன்படி மைய மதிப்பீட்டுக் குழு, மாவட்டக் குழு, வட்டக் குழுக்கள் அமைக் கப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்புகள் வெளியிடப்பட்டு அதன் மீது பொது மக்களின் கருத்துகளும் பெறப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த இறுதி அறிக்கை சில மாற்றங்களுடன் 2007 ஆகஸ்ட் 1 முதல் திருத்தி அமைக்கப்பட்டு, புதிய வழிகாட்டி மதிப்புகள் நடை முறைக்கு வந்தன.

2007 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வந்த வழிகாட்டி மதிப்பே இறுதியானது என்றும் பதிவுத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

முரண்பாடு:

ஆனால், பதிவுத் துறைத் தலைவர் தலைமையில் அனைத்து துணைப் பதிவுத் துறைத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் 7-9-2007-ல் நடைபெற்றது.

திருத்தி அமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புக ளைக் கடைபிடித்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் குறித்து 11-9-2007-ல் நடைபெற்ற மைய மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்பட்டது.

2007 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்பு தற்போ தைய வழிகாட்டி மதிப்பைவிட உயர் மதிப் பில் பதிவாகியுள்ள சர்வே எண். தெரு. நகர் மதிப்புகளை அந்த சர்வே எண். தெரு. நகருக்கு மட்டும் சார்பதிவாளர்கள் கடைப்பிடிக்கலாம் என்ற கருத்து ஏற்கப்பட்டது.

இந்த முடிவு 2005, 2006-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் உயர் மதிப்பை முன்தேதியிட்டு கடைப்பிடிக்க பதிவுத்துறை அலுவலர்களை நிர்பந்திக்கிறது.

நிதி சார்ந்த புதிய முடிவுகளை முன்தேதி யிட்டு அமல்படுத்தக் கூடாது என்ற நீதி மன்ற தீர்ப்புகளுக்கு இது எதிராக உள்ளது.

மையக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் "கடித எண்: 34000/ எல்.1.2007, நாள் 12.9.2007' என்று குறிப் பிட்டு ஒரு சுற்றறிக்கை நிலையில் பதிவுத்து றைத் தலைவர் அலுவலக அனைத்து உயர் அதிகாரிகள், அனைத்து மாவட்டப் பதிவாளர்கள், அனைத்து சார்பதிவாளர்கள், அனைத்துப் பிரிவு கண்காணிப்பாளர்கள்- பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், பதிவுத் துறை பயிற்சி அலுவலகம் என அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பாதிப்பு என்ன?

2007 செப்டம்பர் 11-ம் தேதி தீர்மானத்தின்படி 2007 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முந்தைய உயர் மதிப்பை கடைபி டிக்க வேண்டும் என தணிக்கை மாவட்டப் பதிவாளர்களால் குறிப்புரை எழுதப்பட்டு, அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு அறிவிப்புகள் அனுப்பி அதிகாரப்பூர்வ அறி விப்பின்படி பதிவு செய்யப்பட்ட தொகைக்கும் அதற்கு முந்தைய உயர் மதிப்புக்கும் இடையிலான வேறுபடும் தொகை வசூலிக் கப்படுகிறது.

உதாரணமாக, சென்னை நங்கநல்லூரில் அரசு அறிவித்த அதிகாரப் பூர்வ மதிப்பின் அடிப்படையில் (ஆவண எண்: 472/08) ஒரு சொத்தின் மதிப்பு ரூ. 6,40,800 என நிர்ணயித்து பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பதிவுத்துறையின் 11-9-2007-ம் தேதி திடீர் முடிவு அடிப்படையில் முந்தைய உயர் மதிப்புகளை கருத்தில் கொண்டால் அந்த சொத்தின் மதிப்பு ரூ. 6,67,500 என பதி வுத்துறை தணிக்கை அதிகாரி குறிப்பு அனுப் பியுள்ளார்.

இதன்படி அந்த சொத்தை வாங்குபவரிடம் கூடுதல் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை செலுத்தாதவர்கள் மீதும், வசூலிக்க நடவடிக்கை எடுக்காத சார்பதிவாளர்கள் மீதும் தணிக்கைத் துறை ஆட்சேபணைகள் அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதுபதவி ஓய்வு பெறும் நிலையில் உள்ள சார் பதிவாளர்களிடம் இத்தகைய ஆட்சேபனைகள் அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கூடு தலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் தொகையைச் செலுத்தாதவர்கள் மீது இந்திய முத்திரைச் சட்டத்தின் 47 (ஏ) பிரிவின்படி வருவாய்த்துறை மூலம் வசூலிப்பு நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிவுத்துறையினர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஏராளமானோர் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்க பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 4 நவம்பர், 2008

ஒதுக்கீடு பெற்றவர்கள் உரியவர்கள் தானா?

சென்னை, நவ. 1: சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டுவசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட 170 அடுக்குமாடி குடியிருப்புகள் பல் வேறு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்தந்த பிரிவுகளின்படி தகுதியானவர்கள் தானா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

வீட்டுவசதி வாரியம் ஒரு பொது நிறுவனம் என்பதால், இதன் மூலம் வீடுகள், மனைகளை ஒதுக்கும் போது அனைத்து தரப்பினரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதன்படி பொதுப்பிரிவில் தொடங்கி சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் அவரவர் மக்கள் தொகை அடிப்படையில் வீடுகளின் எண்ணிக்கை பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவின்கீழும் தகுதி உடையவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு ஒதுக்கீடு பெறுவதற்கு விண்ணப்பிப்போர் அதற்கான தங்களது தகுதியை உறுதிப்படுத்த உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது அவசியம். இதுவே பொதுவான நடைமுறையாகவும் இருந்து வருகிறது.

வீட்டுவசதி வாரியம் முகப்பேர் ஏரி திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்காக பொதுப் பிரிவு மொத்த கொள்முதல், பொதுப் பிரிவு தவணை முறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர் கள், முன்னாள் ராணுவத்தினர், பத் திரிகையாளர்கள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள், சலவை, சவரத் தொழிலாளர்கள், வீட்டுவசதி வாரிய ஊழியர்கள் என மொத் தம் 18 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.

விண்ணப்பத்தில் இந்த பிரிவுகளை குறிப்பிட்டால் மட்டும் போதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 18 பிரிவுகள் மட்டுமல்லாது பாதுகாப்புத் துறையினரா என்றும், சிறப்பு பிரிவினரா என்பதை மட்டும் தனியாக குறிப்பிட வேண்டும் என வாரியம் அறிவு றுத்தி இருந்தது.

இவ்வாறு விண்ணப்பத்தில் அவரவர் குறிப்பிட்டிருந்த தகவல் அடிப்படையிலேயே சனிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பெறும் போது தங்க ளது தகுதியை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்ப நடைமுறைகளை எளிமைப்படுத்துவதாக கூறி வீட்டுவசதி வாரியம் எவ்வித சான்றும் இல்லாமல் முதல் தகவலின் அடிப் படையிலேயே ஒருவரின் பெய ருக்கு வீடுகளை ஒதுக்குவது மறைமுக பேரங்கள் மற்றும் முறைகேடுகளுக்கே வழிவகுக்கும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரி வித்துள்ளனர்.

அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு பொது அமைப்புகள் விண்ணப்பிக்கும் போதே அந்த ஒதுக்கீட்டின் கீழ் வருவதற்கான தகுதியை நிரூபிக்கும் ஆவணங்களின் நகல்களை பெறும் நடைமுறைகளை வீட்டுவ சதி வாரியமும் ஏன் பின்பற்றுவது இல்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அப்படி செய்தால் மட்டும்தான் தகுதி உள்ள நபர்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு வீடு, மனை ஒதுக்கீடு பெற முடியும் என்று பரவலாக விமர்சனம் எழுந் துள்ளது.