வெள்ளி, 30 அக்டோபர், 2009

வெள்ளிவிழா காணும் அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா


மன்னார்காடு (கேரளம்), அக். 29: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் வெள்ளிவிழா நவம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது.






மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரிக்கு தென்மேற்கு ஓரத்தில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு. இந்த வனப்பகுதிக்கும் மகாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்களுக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் இப்பகுதியை சைரேந்திரி வனம் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.






பூச்சி இனத்தில் மிக மெல்லிய ஒலி எழுப்பும் சிக்காடா வகை பூச்சிகளின் ஒலியை கேட்கும் அளவுக்கு இந்தப் பகுதி அமைதியாக இருப்பதாலும் இந்தப் அமைதி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.






கண்டுபிடிப்பு:


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்காடு நகருக்கு 42 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமைதி பள்ளத்தாக்கு அரிய வனப்பகுதியாக 1847-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.






சிங்கவால் குரங்குகளின் பிரதான வாழிடமான இந்த பள்ளத்தாக்கு யானைகளின் வழித்தடத்தின் இறுதி பகுதியாகும். 22 வகை விலங்கினங்கள், அழிவின் விளிம்பில் உள்ள 15 வகைகள் உள்பட 211 வகை பறவையினங்கள், 75 வகை அட்டைப் பூச்சியினங்கள் உள்பட 1,000 வகை உயிரினங்களின் வாழிடமாக இந்த அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






இங்குள்ள 89.52 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பை 1914-ம் ஆண்டு காப்புக்காடாக வனத்துறை அறிவித்தது.






சைரேந்திரி வனத்தில் உள்ள குந்திபுழா பகுதியில், நீர் மின் நிலையம் அமைக்க அணை கட்டுவதற்கான திட்டம் கேரள மாநில மின் வாரியம் மூலம் உருவாக்கப்பட்டது. 1973-ம் ஆண்டு ரூ. 24.88 கோடியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்டக்குழு அனுமதியை கேரள அரசு பெற்றது.






மக்கள் எதிர்ப்பு:


இந்த நிலையில், அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் அணை கட்டும் திட்டத்துக்கு பொது மக்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் எதிர்ப்பு வலுத்தது.






இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, கேரள மாநில மின் வாரியம், அமைதி பள்ளத்தாக்கில் அணை கட்டும் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ததே தவிர கைவிட முன்வரவில்லை.






அடுத்தடுத்து அமைக்கப்பட்ட பல்வேறு ஆய்வுக் குழுக்களும் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றே பரிந்துரைத்தது. மேலும் இந்த பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.






இந்த சமயத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அமைதி பள்ளத்தாக்கில் அணை கட்டுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள தடை விதித்து 1980-ம் ஆண்டு உத்தரவிட்டது.






மேலும், அணை கட்டுவதால் இங்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் தலைமையிலான உயர் நிலைக் குழு தனது விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் 1983-ம் ஆண்டு சமர்பித்தது.






இத்தகைய சூழலில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலையிட்டு அமைதி பள்ளத்தாக்கில் நீர் மின் நிலையத்துக்காக அணை கட்டும் திட்டத்தை கைவிடுமாறு கேரள அரசை வலியுறுத்தினார். இதனை கேரள அரசு ஏற்றுக் கொண்டது.






இதன் பின் அமைதி பள்ளத்தாக்கை தேசிய பூங்காவாக அறிவிக்க மத்திய அரசு 1984-ம் ஆண்டு முடிவு செய்தது. அதன்படி, 1984-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.






1986-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அமைதி பள்ளத்தாக்கு நீலகிரி உயிர்சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முக்கிய பகுதி மநற்றும் சார்பு வனப்பகுதிகள் சேர்த்து அமைதி பள்ளத்தாக்கின் மொத்தப் பரப்பு 237.52 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்தது.






வெள்ளி விழா:


அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.






இதன் பின்னரே மத்திய அரசிலும், பல மாநில அரசுகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உருவாயின என்பதும், பெரிய அளவிலான திட்டங்கள் குறித்து சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை கட்டாயமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






வெள்ளி விழா நிகழ்ச்சிகள் குறித்து கேரள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் டி.என். மனோகரன் மன்னார்காடு பகுதியை அடுத்த முக்காலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியது:







வெள்ளி விழாவின் தொடக்கமாக நவம்பர் 15-ம் தேதி பாலக்காடில் தேசிய கருத்தரங்கு நடைபெறும். மேலும், வெள்ளி விழா கொண்டாட்டங்களை குறிப்பிடும் வகையில் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்படும்.






அமைதி பள்ளத்தாக்கு வெள்ளி விழாவை முன்னிட்டு, முக்காலி பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து போரடியவர்கள் கெüரவிக்கப்பட உள்ளனர் என்றார் மனோகரன்.

சனி, 24 அக்டோபர், 2009

சிமென்ட் விலை குறைகிறது; ஒரு மூட்டை ரூ. 245

 கடந்த மாதம் முன்பு வரை ஒரு மூட்டை ரூ. 260-ஆக இருந்த சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ. 245-ஆக குறைந்துள்ளது.



தேவை குறைந்த நிலையில் உற்பத்தி அதிகரித்ததால் சிமென்ட் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.




2006-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது. இதன் காரணமாக கட்டுமானத் துறையின் வளர்ச்சியும் வெகுவாகவும் வேகமாகவும் அதிகரித்தது. இதனால், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிமென்ட் தேவையும் அபரிமிதமாக அதிகரித்தது.






ஆனால், இந்தத் தேவையை பற்றாக்குறை இன்றி பூர்த்தி செய்யும் அளவுக்கு நாட்டில் சிமென்ட் உற்பத்தி இருந்தபோதும், உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை முன்பு எப்போதும் இல்லாத வகையில் உயர்த்தினர்.



விலை உயர்வு:


இதனால், 2007-ம் ஆண்டு ஜனவரியில் ஒரு மூட்டை ரூ. 190-ஆக இருந்த சிமென்ட் விலை அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ. 200 ஆகவும் உயர்ந்தது. இது படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாதவகையில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 290-ஆக அதிகரித்தது.


இத்தகைய சூழலில் கட்டுமானத் துறையினர் உள்பட அனைத்துத் தரப்பினரின் வற்புறுத்தலை அடுத்து மத்திய அரசு இதில் தலையிட்டு வெளிநாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியது.



இதனால் கடந்த ஆண்டு மத்தியில் சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ. 240 வரை குறைந்தது.

இதே சமயத்தில் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக சிமென்ட் விலை மேலும் உயராமல் தொடர்ந்து ஒரு மூட்டை ரூ. 240- ஆகவே இருந்து வந்தது.



தேக்க நிலை: இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கட்டுமானத் துறையில் தேக்க நிலை மறைந்து புதிய குடியிருப்புத் திட்டங்களுக்கான பணிகள் தொடங்கிய நிலையில் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை மீண்டும் உயர்த்தினர். இதனால், ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 240-ல் இருந்து ரூ. 260-ஆக அதிகரித்தது.



உற்பத்தி அதிகரிப்பு: இத்தகைய சூழலில், ஆந்திரம், குஜராத் மாநிலங்களில் புதிதாக சில பெரிய சிமென்ட் ஆலைகள் தங்கள் உற்பத்தியை அண்மையில் தொடங்கின.


இது தவிர ஏற்கெனவே இருந்த சிமென்ட் ஆலைகள் தங்கள் உற்பத்தித் திறனை பல மடங்கு அதிகரித்தன. இதே வேளையில் தமிழகத்தில் உள்ள சில சிமென்ட் ஆலைகளும் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளன.



ஆலை நிர்வாகங்களின் இந்த நடவடிக்கைகளால் சந்தைக்கு வரும் சிமென்ட்டின் அளவு கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்தது. இவ்வாறு உற்பத்தி அதிகரித்த அளவுக்கு தேவை அதிகரிக்காததால், சந்தையில் சிமென்ட் விலையை குறைத்துக் கொள்ள உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர்.



ஆந்திரம், குஜராத் மாநில உற்பத்தியாளர்கள் கடந்த மாதமே இதற்கான நடவடிக்கைகளை தொடங்கினர். ஆனால், தமிழகத்தை சேர்ந்த சில நிறுவனங்கள் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இறுதியில் தவிர்க்க முடியாத சூழலில் தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்களும் சிமென்ட் விலையை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளன.



வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பது, கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்காதது, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சிமென்ட் அளவு அதிகரித்தது, உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை ஆகிய காரணங்களால் சிமென்ட் விலையை குறைக்க வேண்டிய கட்டாய சூழலால் உற்பத்தியாளர்கள் விலை குறைப்புக்கு முன்வந்துள்ளனர்.



விலை சரிவு:


இதனால், கடந்த மாதம் முன்பு ஒரு மூட்டை ரூ. 260-ஆக உயர்ந்த சிமென்ட் விலை இப்போது ரூ. 245-ஆக குறைந்துள்ளது. ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு மூட்டை விலை ரூ. 170-ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள விலை சரிவு மேலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு கட்டுமானத் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.



இப்போதைய சூழலில் அடுத்த நிதி ஆண்டு தொடக்கம் வரை சிமென்ட் விலை உயர்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அடுத்த சில மாதங்களில் சிமென்ட் விலை மேலும் குறையும் என கட்டுமானத் துறையினரும், விற்பனையாளர்களும் கருத்து தெரிவித்தனர்

தமிழகம்லஞ்ச ஒழிப்புத் துறையில் உயர் அதிகாரிகளுக்குள் பணி ஒதுக்கீடு முடிவு

சென்னை, அக். 21: அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்கள் மீது முடிவு செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் உயர் அதிகாரிகளுக்குள் பணிகள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.




லஞ்ச ஒழிப்புத் துறையில் டிஜிபி பதவி உருவாக்கப்பட்டதை அடுத்து உயர் அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்கும் விதமாக கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டது.



டிஜிபி போலாநாத் இயக்குநர் பதவியையும், ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநர் பதவியையும், சுனில்குமார் இணை இயக்குநர் பதவியையும் வகிப்பார்கள் என அரசு விளக்கம் அளித்தது குழப்பத்தைத் தீர்த்தது.


அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை பல்வேறு நிலையில் உள்ளவர்கள் மீதான லஞ்சப் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இதுவரை இயக்குநரே முடிவெடுத்து வந்தார்.



இப்போது கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு முடிவெடுக்கும் அதிகாரத்தை நிர்வாக வசதிக்காகவும், பணிகளை விரைந்து முடிக்கவும் வசதியாகப் பகிர்ந்து கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்தனர். அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு பணிகள் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டன.



இணை இயக்குநர்:

இதன்படி, "டி', "சி' பிரிவுகளுக்கு உட்பட்ட கடை நிலை ஊழியர்கள், காவலாளிகள் நிலையில் உள்ளவர்கள், அலுவலக இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், எழுத்தர்கள் நிலையில் உள்ளவர்கள் மீதான லஞ்சப் புகார்களில் நடவடிக்கை எடுப்பது குறித்து இணை இயக்குநர் முடிவெடுப்பார்.



கூடுதல் இயக்குநர்:

"பி' பிரிவுக்கு உட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள், தாசில்தார்கள், துறை கண்காணிப்பாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மீதான லஞ்சப் புகார்களில் நடவடிக்கை எடுப்பது குறித்து கூடுதல் இயக்குநர் முடிவெடுப்பார்.



இயக்குநர்:
 
 "ஏ' பிரிவுக்கு உட்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், துறை தலைவர்கள் மீதான லஞ்சப் புகார்களில் நடவடிக்கை எடுப்பது குறித்து இயக்குநர் முடிவெடுப்பார்.
 
 
 ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணியைச் சேர்ந்த அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்கள் குறித்து உயர் நிலைக் குழுவின் பரிந்துரை மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் முடிவெடுப்பார்.
 
 
லஞ்ச ஒழிப்புத் துறையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இப்போது அதிகாரிகளின் நிலைகளுக்கு ஏற்ப பணி ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

லஞ்ச ஒழிப்புத் துறையில் மீண்டும் கூடுதல் இயக்குநர் பதவி

டிஜிபி போலாநாத் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து இத் துறையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.


லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக ஐஜி மற்றும் ஏடிஜிபி நிலையிலான அதிகாரிகளே கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தனர்.


இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புதிதாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த டிஜிபி போலாநாத் கடந்த 6-ம் தேதி நியமிக்கப்பட்டார்.


லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை பதவி, இயக்குநர் பதவியாகும். ஏடிஜிபி ராமானுஜம் இயக்குநராக உள்ள நிலையில், டிஜிபி போலாநாத் நிர்வாக ரீதியாக எந்த பதவி வகிப்பார் என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவியது.

இந்தத் துறையில் இப்போது ஒரு இயக்குநர், 2 இணை இயக்குநர்கள் பதவிகள் உள்ளன.


இதையடுத்து டிஜிபி போலாநாத் இயக்குநர் பதவியையும், ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநர் பதவியையும் வகிப்பார்கள் என அரசு துறைரீதியான விளக்கம் அளித்துள்ளது.


இது தொடர்பான கடிதம் உள்துறையிடம் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


8 ஆண்டுகளுக்கு பிறகு...:

கடந்த 2001-ம் ஆண்டு இறுதியில் டிஜிபி வி.கே. ராஜகோபாலன் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அப்போது இயக்குநராக இருந்த ஏடிஜிபி மாத்தூர், கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டார்.


8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் டிஜிபி போலாநாத் வருகையை அடுத்து ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விற்பனைக்கு காத்திருக்கும் 5,500 வீட்டுமனைகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட மனைகளில் சுமார் 5,500 வீட்டு மனைகளும், சுமார் 1,100 வீடுகளும் விற்பனைக்குக் காத்திருக்கின்றன.


பொது மக்களுக்கு நியாயமான விலையில் குடியிருப்பு வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பல்வேறு மாவட்டங்களில் வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி வருகிறது.


இவ்வாறு உருவாக்கப்படும் மனைகள் மற்றும் கட்டப்படும் வீடுகளில் திட்டம் ஒன்றில் 15 சதவீதம் அரசின் விருப்புரிமையின் கீழும், 85 சதவீதம் பொது ஏலம் மூலமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


சந்தை விலையைவிடக் குறைவாக இருப்பதாலும், அரசுத்துறையிடம் வாங்குவதால் வில்லங்கம் இருக்காது என்ற நம்பிக்கையாலும் வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகளைப் பெறுவதில் மக்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.


ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியவர்கள் அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகப் புகார் கூறுகின்றனர். தவணைகள் கணக்கீட்டிலும் பத்திரங்களைப் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.


இத்தகைய புகார்கள் உள்ள போதும், வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகளை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் குறையாமல் உள்ளது.


சென்னையில் அண்ணா நகர், முகப்பேர், கே.கே. நகர், பெசன்ட் நகர் ஆகிய கோட்டங்களிலும், பிற மாவட்டங்களில் மதுரை, நெல்லை, ராமநாதபுரம், சேலம், ஈரோடு, கோவை, வேலூர், ஓசூர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய ஊர்களிலும் வீட்டுவசதி வாரியப் பிரிவுகள் செயல்படுகின்றன.


இந்தப் பிரிவுகளின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு வருகின்றன.


இதில் ஏராளமான மனைகள், வீடுகள், குடியிருப்புகள் விற்பனையாகாமல் உள்ளதாக கூறப்படுகிறது.


மனைகள்...


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 5,500 வீட்டு மனைகள் விற்பனைக்குக் காத்திருப்பது தெரியவந்துள்ளது.


இதில் 2,500 மனைகள் அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டிலும், 3 ஆயிரம் வீட்டுமனைகள் வாரியத்தின் ஒதுக்கீட்டிலும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 112.70 கோடி.


சென்னையில் அண்ணா நகர் கோட்டத்தில் 34 மனைகளும், முகப்பேர் கோட்டத்தில் 2 மனைகளும், கே.கே. நகர் கோட்டத்தில் 52 மனைகளும், பெசன்ட் நகர் கோட்டத்தில் ஒரு மனையும் உள்ளன.


தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரைப் பிரிவில் 1,400 வீட்டுமனைகள் விற்பனையாகாமல் உள்ளன.


வீடுகள்...


தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட 1,119 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 33.70 கோடி.


அதிகபட்சமாக கோவையில் 359 வீடுகளும், சேலத்தில் 213 வீடுகளும், மதுரையில் 152 வீடுகளும் விற்பனையாகாமல் உள்ளன.


அடுக்குமாடி குடியிருப்புகள்...


சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 734 அடுக்குமாடி குடியிருப்புகள் உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன.


இவை அனைத்தும் அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் வருவதால் இது விஷயத்தில் அரசுதான், யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


விற்பனை எப்போது?


இவ்வாறு விற்பனையாகாமல் உள்ள மனைகளை ஒதுக்க விலை நிர்ணயம் செய்து பொது ஏலம் அறிவிக்கப்பட்டு அதன் மூலம் உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


நிர்வாக ரீதியாக இதற்கான பணிகள் அந்தந்த கோட்ட மற்றும் பிரிவு அலுவலகங்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளன என்று வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சனி, 10 அக்டோபர், 2009

சொந்த வாகனங்களில் "போலீஸ்' என எழுதாதீர்: காவல்துறை உத்தரவு

போலீஸ்காரர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களின் எண் பலகைகளில் "போலீஸ்' என குறிப்பிடக்கூடாது என மாநகரப் போலீஸôருக்கு துறைரீதியாக உத்தரவிடப்பட்டுள்ளது.



போக்குவரத்து விதி மீறல்களைத் தடுக்க வேண்டிய போலீஸôரே தங்களுடைய வாகனங்களின் எண் பலகைகளில் தங்களுடைய துறைப்பெயரை எழுதுவது முறையான செயல் அல்ல என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.



கே. ராதாகிருஷ்ணன் மாநகரப் போலீஸ் ஆணையராக இருந்தபோது, சாலை விதிகளை முழுமையாக அமல்படுத்தும் பணி தீவிரம் பெற்றது. அவர் உள்பட பல மூத்த அதிகாரிகள் மாற்றப்பட்டதால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.



இது மாநகரப் போலீஸ் கமிஷனர், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆகியோர் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.

சராசரியாக நாளொன்றுக்கு 600 வழக்குகள் பதிவாகும் இடங்களில் இப்போது நாளொன்றுக்கு 100 வழக்குகளே பதிவாகின்றன.



விதிமீறல்கள் குறையாமல், அது தொடர்பாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்தது போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.



இதன் அடிப்படையில், மாநகரப் போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், போக்குவரத்த போலீஸ் கூடுதல் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து போக்குவரத்து போலீஸ் அமலாக்கப் பிரிவினருக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.



அனைத்து முக்கிய சாலை சந்திப்புகளிலும் போக்குவரத்துப் போலீஸôர் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். சிக்னல்களில் விதிகளை மீறுபவர்களில் ஒருவரைக் கூட விட்டுவிடாமல் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாகனங்களில் அதிக வேகமாகச் செல்வோர், உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர் என விதிகளை மீறும் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.



வாகன எண் பலகைகளில், எண்கள் மட்டும் இருக்க வேண்டும். அதுவும் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எண் பலகைகளில் வாகன எண்களைத் தவிர பெயர் உள்ளிட்ட வேறு எந்த விவரங்களும் இருக்கக் கூடாது.



இவ்வாறு விதிகளை மீறி எண் பலகைகளில் தங்கள் துறைகளின் பெயர்கள், தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுதி இருந்தால் அந்த வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸôரும் தங்கள் வாகனங்களின் எண் பலகைகளில் "போலீஸ்' என குறிப்பிடக்கூடாது. அவ்வாறு குறிப்பிட்டால் அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படியும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி முதல் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என போக்குவரத்து போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன், 7 அக்டோபர், 2009

தகவல் பெறும் உரிமை விழிப்புணர்வு வாரம் அதிகாரிகள் குழப்பம்: ஆர்வலர்கள் அச்சம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு வாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து அரசு அதிகாரிகளிடையே குழப்பம் நிலவுகிறது.



அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்த விவரங்களை பொது மக்கள் எழுத்து மூலம் கேட்டுப் பெற வகை செய்யும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.



அரசு நிர்வாகம் தொடர்புடையது என்றுக் கூறி மறுக்கப்பட்டு வந்த பல்வேறு தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்க இந்தச் சட்டம் உதவுகிறது.



இருப்பினும், இந்தச் சட்டத்தின் பயன்பாடு முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை. அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழியர்கள் பலருக்கே இது தொடர்பான முழு விவரங்கள் தெரியாமல் உள்ளது.



இதனால், தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் முழுமை அடையாமல் உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், இச் சட்டம் குறித்து பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 6-ம் தேதி (நாளை) முதல் 12-ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.



"தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம், அந்த வாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சிகள் நடத்துவது' உள்ளிட்ட விவரங்கள் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.



மத்திய அரசின் இந்த சுற்றறிக்கை செப்டம்பர் 10-ம் தேதி தமிழக தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வந்துள்ளது.



தில்லியில்...

விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தில்லியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த தேசிய மாநாடு இம்மாதம் 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளது.
முதல் நாளில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலும், நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் பங்கேற்கின்றனர்.



இதே போல, மத்திய அரசின் சுற்றறிக்கைப் பெற்ற ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



தமிழகத்தில்...

ஆனால், தமிழகத்தில் விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பது குறித்த சுற்றறிக்கை இப்போதுதான் துறைத் தலைவர்களுக்கே அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், எத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால் அதிகாரிகளிடம் இது விஷயத்தில் குழப்பம் நிலவுகிறது.


இந்த குழப்பம் காரணமாக, தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கம் போல, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் பின்தங்கிவிடுமோ என சமூக ஆர்வலர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.


எனவே மற்ற துறைகள் எதுவானாலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதில் முன்னிலை வகிக்கும் தமிழக அரசு இதிலும் தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும் என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.