சனி, 26 செப்டம்பர், 2009

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்துக்காக சென்னை பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசு தமிழைச் செம்மொழியாக 2004 செப்டம்பர் 17-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, தமிழில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் மூலம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008 மே 19-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.


சென்னை காமராஜர் சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. மைசூரில் உள்ள இந்திய
செம்மொழிகள் நடுவண் நிறுவனத்தின் ஒரு திட்டமாக இருந்த செம்மொழித் தமிழாய்வுத் திட்டம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக 21-1-2009-ல் பதிவு செய்யப்பட்டது.



முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் தமிழறிஞர்கள் அடங்கிய ஐம்பெருங்குழு, கவிஞர்கள் அடங்கிய எண்பேராயம் ஆகிய குழுக்களின் வழிகாட்டுதல்கள்படி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.



தமிழில் செவ்வியல் காலம் எனப்படும் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையிலான அனைத்து ஓலைச்சுவடிகளையும் இந்த நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு ஆய்வுகளையும் தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மூலம் மேற்கொண்டுள்ளது.



தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகியவை தொடர்பாக 41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புகளை வெளியிடும் பணிகளை இந்த ஆய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.



புதிய வளாகம்: பாலாறு இல்ல வளாகத்தில் உள்ள இந்த அலுவலகம் நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. நிறுவனத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற ஆய்வு மற்றும் நூலகப் பிரிவுகள் அமைக்க இந்த வளாகம் போதுமானதாக இல்லை.



எனவே இந்த நிறுவனத்துக்கு வேறு ஒரு வளாகம் அமைக்க நிலம் தேவை என்ற கருத்து அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.



இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்க மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.



இந்த நிலத்தில் புதிய ஆய்வு மற்றும் நூலக வளாக கட்டுமானப் பணிகளுக்கு ரூ.9 கோடியும், பிற செலவுகளுக்காக ரூ.3 கோடியும் என மொத்தம் ரூ. 12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என இதன் பொறுப்பு அலுவலர் க. இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

ஏரியைப் பராமரிப்பவரின் காலடியை தலையில் வைத்துக் கொள்வேன்: 1,000 ஆண்டுகளுக்கு முன் கல்வெட்டு

ஏரியைப் பராமரிப்பவர்களின் காலடியை தலையில் வைத்துக் கொள்வேன் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்வெட்டில் பதிவு செய்துள்ளார் ஒரு குறுநில மன்னர்.

விழுப்புரம் அருகே கண்டுபிடித்த கல்வெட்டு பொறித்த உரலில் இந்த செய்தி உள்ளது என தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர் தெரிவித்தார்.


கல்வெட்டுகளை படியெடுக்கும் முனைப்புத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இந்த உரலை கண்டறிந்த கல்வெட்டாய்வாளர் இரா. சிவானந்தம் இது குறித்து கூறியது:



விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலுர் வட்டத்தில் திருக்கோயிலூர்- திருவண்ணாமலை வழித்தடத்தில் மணலூர்பேட்டையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஜம்பை என்ற சிற்றூர் அமைந்துள்ளது.
இவ்வூரின் கிழக்கில் உள்ள குன்றில் அதியமான் பற்றிய குறிப்புகள் அடங்கிய தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது.



இந்த குன்றின் மேற்கில் உள்ள ஏரியில், கல் உரல் ஒன்று கண்டறியப்பட்டது. ஐந்தடி உயரமும், மூன்றடி விட்டமும் உள்ள இந்த உரலில் நடுப்பகுதி குழி ஓரடி ஆழமும் கொண்டுள்ளது.


உரலின் மேல் விளிம்பில் 10 செ.மீ. அகலம் உள்ள பகுதியில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகள் கரடுமுரடாக இருப்பதால் இது ஏதாவது ஒரு இடத்தில் நிலையாக புதைத்து வைத்திருக்க வேண்டும்.


இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் உருவ அமைப்பைக் கொண்டு இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.


கல்வெட்டு கூறும் செய்தி...

இந்த கல்வெட்டில், "வ த ஸ்ரீ கள்ளையன் செய்த தருமம் கழத்துவப்பட்டியும் பனைப் பெரிக்கட்டின இவை என்முடி மெலன' என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த ஏரியை கள்ளையன் என்பவர் உருவாக்கி இருக்கலாம். களத்துமேடு மூலமாகப் பெறப்படும் வருவாயிலிருந்தும், பனை மர குத்தகை மூலமாகவும் பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த பொறுப்பை தொடர்ந்து நிலைநாட்டி வருபவர்களின் காலடியை என் தலைமேல் வைத்துக்கொள்வேன்' என்று கள்ளையன் கூறுவதாக இதில் காணப்படும் வாசகங்களுக்கு கல்வெட்டாய்வாளர்கள் பொருள் கூறுவதாக சிவானந்தம் தெரிவித்தார்.


பாசனத்துக்காக ஏரிகளை உருவாக்கி அதனால் பயனடையும் விவசாயிகளிடம் இருந்து களத்துமேட்டு பயன்படுத்தியதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஏரியின் அருகில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டும் அவற்றை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் கிடைத்த வருவாயையும் பயன்படுத்தி ஏரியை பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளதை இந்த கல்வெட்டுச் செய்தி உறுதி செய்கிறது.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழமையான செக்கு மற்றும் உரல்கள் கிடைக்கின்றன. ஆனால், இப்போதுதான் எழுத்துகள் பொறிக்கப்பட்ட உரல் கிடைத்துள்ளது என தொல்லியல் துறை முதுநிலை கல்வெட்டு ஆய்வாளர் கி.சு. சம்பத் தெரிவித்தார்.


கி.பி. 900-ம் ஆண்டு பல்லவர்கள் ஆட்சி முடிந்து சோழர்கள் ஆட்சிக்காலம் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படும் செய்திகளின் அடிப்படையில், ஜம்பை ஏரியில் கிடைத்த உரலில் குறிப்பிடப்படும் கள்ளையன் இப் பகுதியின் குறுநில ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிய "பாப்பாபட்டிகள்'!

மிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் யாரும் போட்டியிடாததால் 10 பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கு 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை.


59 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டு உறுப்பினர்கள், 5 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களிலும் தேர்தல் நடைபெறவில்லை.

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தன.


ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிவிக்கப்பட்டும், பிற சாதியினரின் ஆதிக்கம் காரணமாக எழுந்த பிரச்னைகளால் ஆதிதிராவிடர் பிரிவு மக்கள் போட்டியிடாமல் இருந்ததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.


2006-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதற்கு சுமூகத்தீர்வு காணப்பட்டது. தேர்தல் நடைபெற்று ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அரசின் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.


மீண்டும் மீண்டும்...:

ஆனால், பாப்பாபட்டி உள்ளிட்ட 4 பஞ்சாயத்துக்களில் தீர்ந்த பிரச்னை மற்ற இடங்களில் தொடர்வது இப்போது தெரிய வந்துள்ளது.


அரியலூர் மாவட்டம் டி.பாலூர் ஒன்றியத்தில் நடுவாளூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் கொளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே புலிப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியத்தில் புதூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் பேரயாம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ராமாபுரம், வேலூர் மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் செய்யாத்துவண்ணம், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் அத்தியுர்திருக்கை, வல்லம் ஒன்றியத்தில் கடுகுபட்டு ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் 2006-ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை.


இதில் நடுவாளூர், கொளப்பாக்கம், புதூர், கடுகுப்பட்டு ஆகியவை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டவை. புலிப்பாக்கம், பேரயாம்பட்டு, ராமாபுரம், செய்யாத்துவண்ணம், அத்தியுர்திருக்கை ஆகியவை பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவை.

பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் கொப்பனாப்பட்டி பஞ்சாயத்தில் 2008- செப்டம்பர் முதல் தேர்தல் நடைபெறவில்லை.


59 பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிடங்கள்:

இதேபோல 59 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.


மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெறாத பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் விவரம்:


அரியலூர்: 3 (எஸ்.சி. 1, பொது-2), கடலூர்: 5 (எஸ்.சி.), காஞ்சிபுரம்: 7 (எஸ்.டி. 1, பொது 4, பெண்கள் 2), கிருஷ்ணகிரி: 1, மதுரை: 2, புதுக்கோட்டை: 9 (பொது 5, பெண்கள் 3, எஸ்.சி. 1), ராமநாதபுரம்: 1, திருவண்ணாமலை: 11 (பொது 4, எஸ்.சி. 4, எஸ்.டி. 2, பெண்கள் 1), திருச்சி: 1 (எஸ்.டி.), திருவள்ளூர்: 1 (எஸ்.டி.), தூத்துக்குடி: 1 (எஸ்.சி.), வேலூர்: 8 (எஸ்.டி), விழுப்புரம்: 9 (பொது 3, பெண்கள் 1, எஸ்.சி. 3, எஸ்.டி. 2).


நகர்ப்புற உள்ளாட்சிகளில்...: வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டுகளில் யாரும் போட்டியிடாததால், 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை. தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருவதாக மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


அரியலூர் மாவட்டம் வரதராஜன்பட்டி, கோவை மாவட்டம் சிறுமுகை, வீரபாண்டி, கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளம், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் யாரும் போட்டியிடாததால் 2006-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேர்தல் நடைபெறவில்லை.


மாநிலத் தேர்தல் ஆணையர் பதில்:

இது குறித்து கேட்டபோது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் கூறியது:


சாதிப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு நடைபெறும் பகுதிகளில் அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்ளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

சனி, 12 செப்டம்பர், 2009

ஒற்றை இலக்கத்தில் நன்னடத்தை கைதிகள் எண்ணிக்கை

சிறையில், தொடர்ந்து 7 ஆண்டுகளைக் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான தகுதியானவர்களின் எண்ணிக்கை தற்போது ஒற்றை இலக்கமாகக் குறைந்துள்ளது.


இதே அடிப்படையில் கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு 1,405 பேர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சிறையில் 10 ஆண்டுகளை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அவர்களது நன்னடத்தை காரணமாக, அண்ணா பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களின்போது விடுதலை செய்யப்படுவது வழக்கம்.


அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, இதில் 10 ஆண்டுகள் என்று இருந்ததை 7 ஆண்டுகளாகக் குறைத்து தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு 1,405 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்த லீலாவதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கருமலையான், முத்துராமலிங்கம், முருகன், நல்லமுத்து, சொங்கன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.


இவர்களில் ஒரு சிலர் திமுக உள்ளூர் நிர்வாகிகள் என்பதாலேயே ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்வதற்கான கால அளவு 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.


இவ்வாறு தண்டனைக் காலத்தை குறைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


இந்த நிலையில், வரும் 15-ம் தேதி அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எத்தனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.


முன்விடுதலை செய்வதற்கான கால அவகாசம் 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதால் கடந்த ஆண்டு விடுதலை ஆக அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தகுதி பெற்றனர்.


ஆனால், இப்போதைய நிலையில் இவ்வாறு விடுதலை செய்வதற்கான தகுதியுடைய கைதிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது என சிறைத்துறை தலைமை இயக்குநர் ஏடிஜிபி ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.


எனினும், தகுதியுடைய கைதிகளின் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.


கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி, கைதிகள் முன் விடுதலைக் காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக குறைத்தது போன்று இப்போது, ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டுமல்லாது மற்ற வழக்குகளில் கைதாகி 7 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுவரை, குறிப்பிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சிறைப்பட்டோர் உரிமைக்கான தன்னார்வ அமைப்பு மட்டுமே கைதிகள் விடுதலை குறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்போது தமிழக பாஜக தரப்பில் இருந்தும் இது தொடர்பான கோரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக எவ்வித முடிவையும் எடுக்க மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தி நன்னடத்தை உள்ள கைதிகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.


இத்தகைய நிலையில் கைதிகள் முன் விடுதலை குறித்து அரசு எவ்வித முடிவை எடுக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காப்பீடு திட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் முடக்கம்?

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் காரணமாக சென்னையில் சில வட்டாட்சியர் அலுவலகங்களில் வழக்கமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கப்பட்டது.


இந்தத் திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 26 தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறலாம்.


மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள்.
இதில் உறுப்பினர்களாக சேர்வதன் மூலம் ஒரு குடும்பம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் வரை இலவசமாக உயிர் காக்கும் உயர் சிகிச்சையை பெறலாம்.



அடையாள அட்டைகள்...

இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களைக் கண்டறிந்து சிறப்பு அடையாள அட்டை வழங்க 750 குழுக்களை காப்பீட்டு நிறுவனம் அமைத்துள்ளதாகவும், இந்தக் குழுக்கள் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்குச் சென்று உறுப்பினர்களைக் கண்டறிந்து, சிறப்பு அடையாள அட்டையை வழங்கும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.


வருவாய்த்துறை ஊழியர்கள்:

ஆனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள குடும்பத்தினரைக் கண்டுபிடித்து காப்பீடு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் பொறுப்பு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


சென்னை மாவட்டத்தில் முதல்கட்டமாக மயிலாப்பூர்- திருவல்லிக்கேணி தாலுகாவில் காப்பீடு திட்ட பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு புகைப்படம் மற்றும் கைரேகை அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் கடந்த 22-ம் தேதி தொடங்கப்பட்டன.


வழக்கமான பணிகள் பாதிப்பு:

வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காப்பீடு திட்டம் தொடர்பான பணிகள் காரணமாக கணக்கெடுப்பு செய்ய வெளியில் சென்று விடுகின்றனர்.


இதன் காரணமாக பட்டா பெறுவது, பட்டா பதிவில் பெயர் மாற்றம் செய்வது, சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


சென்னையில் உள்ள 5 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இதே நிலை தொடர்வதாக அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பொது மக்கள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.


காப்பீடு திட்ட பணிகள் காரணமாக ஊழியர்கள் வெளியில் சென்றுள்ளனர். வழக்கமான பணிகள் நிமித்தம் வருவோர் அடுத்த வாரம் வரலாம் என மாம்பலம்- கிண்டி தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்படுவதாக அங்கு சென்று வந்தவர்கள் தெரிவித்தனர்.


தேர்தல், வெள்ள நிவாரணம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து இப்போது காப்பீடு திட்டப் பணிகளும் வருவாய்த் துறையினரின் வழக்கமான பணிகளை முடக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதன், 2 செப்டம்பர், 2009

அதிக கேள்விகள் கேட்கக் கூடாது: தகவல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு?

கவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மேல்முறையீட்டு மனுக்களை, அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகக் கூறி மாநில தகவல் ஆணையம் தள்ளுபடி செய்து வருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத விதத்தில் தகவல் ஆணையம் தங்கள் மனுக்களை தள்ளுபடி செய்வது அதிர்ச்சி அளிப்பதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை அந்தந்த அரசு அலுவலகங்களில் உள்ள பொது தகவல் அதிகாரிகளை தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.


ஆனால், கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகக் கூறி ஏராளமான மனுக்களை மாநில தகவல் ஆணையம் நிராகரித்து வருவதாக தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

குறிப்பாக, தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளித்துள்ள சொத்து விவரங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் தலைமைச் செயலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவுக்கு தலைமைச் செயலரின் அலுவலகத்தில் இருந்து பதில் கிடைக்காத நிலையில் மாநில தகவல் ஆணையத்தில் 2-வது மேல்முறையீட்டு மனுவை கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

மனுவில் அதிக எண்ணிக்கையில் கேள்விகள் இருப்பதாகவும் தேவையான தகவலை மட்டும் கேளுங்கள் என்றுக் கூறி மாநில தகவல் ஆணையம் இந்த மனுவை நிராகரித்துள்ளது.

இந்த மனு மட்டுமல்ல, இதேபோல ஏராளமான மனுக்கள் கடந்த சில மாதங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய பதிலை பொது தகவல் அதிகாரிகள் அளிக்க வேண்டும்.

ஒரு வேளை மனுதாரர் கேட்கும் வடிவத்தில் அவருக்கு பதில் அளிப்பதில் நடைமுறை பிரச்னைகள் இருந்தால் அந்த குறிப்பிட்ட கேள்வியை மட்டும் நிராகரிக்க தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 7(9) பிரிவில் வழிவகை உள்ளது.

ஆனால், பொது தகவல் அதிகாரியும், மேல்முறையீட்டை விசாரிக்கும் அதிகாரியும் நிராகரிக்காத நிலையில் 2-வது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் மாநில தகவல் ஆணையர்கள் நிராகரிப்பது எந்த விதத்தில் நியாயம் என மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எந்த பிரிவிலும் இல்லாத வகையில் தங்கள் மனுக்களை தகவல் ஆணையம் நிராகரித்து வருவது சட்டத்துக்கு எதிரானது என்றும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.