வியாழன், 26 ஜனவரி, 2012

விதிமீறல் கட்டடங்கள்: தமிழக அரசின் மவுனம் கலையுமா?

விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில், ஐகோர்ட் உத்தரவு காரணமாக, தன் மவுனத்தை கலைக்க வேண்டிய கட்டாய சூழல், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில், அரசு வெளிப்படுத்தும் நிலைப்பாடு தான், சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கைக்கு அடிப்படையாக அமையும். சென்னை தி.நகரில், விதிமீறல் புகார் காரணமாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 25 வணிக வளாகங்களுக்கு வைக்கப்பட்ட சீல், கடந்த 10ம் தேதி, தற்காலிகமாக அகற்றப்பட்டது. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு, சென்னை ஐகோர்ட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு, கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை, தமிழக அரசும், சி.எம்.டி.ஏ.,வும், வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசின் நிலை என்ன? விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில், கடந்த ஓராண்டு காலமாக, தன் நிலைப்பாடு குறித்து தமிழக அரசு சார்பில், எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யபடவில்லை என்பது, விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில், 2006ல், ஐகோர்ட் தீர்ப்பளித்தபோது, ஆட்சிப் பொறுப்பில் தி.மு.க., இருந்தது. இதனால், விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவான நிலையை, தமிழக அரசு எடுத்தது. இதற்காக, முதலில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின், 2007ல், அவசர சட்டம் கொண்டு வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு, இந்த சட்டத்தை நீட்டிப்பும் செய்தது. இவ்வாறு, கடந்த ஐந்தாண்டு காலமாக, விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை, முந்தைய தி.மு.க., அரசு தடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம், அ.தி.மு.க., அரசு பதவியேற்றது. இதன்பின், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகள், கண்காணிப்புக்குழு பிறப்பித்த உத்தரவுகளை தடுக்கும் வகையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இதில் தங்களது நிலைப்பாடு குறித்து, கோர்ட்டில் எவ்வித பதில் மனுவையும், தமிழக அரசு தாக்கல் செய்யாமல் உள்ளது. இந்நிலையில், ஐகோர்ட் அண்மையில் பிறப்பித்த உத்தரவின் மூலம், இந்த வழக்கில், தன் மவுனத்தை கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
என்ன நடக்கும்? இப்போதைய சூழலில், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவுக்கான குறிப்புகளை இறுதி செய்வதற்கான பணிகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ஐகோர்ட் மற்றும் கண்காணிப்புக்குழு உத்தரவுகளை நிறைவேற்ற, அரசின் சார்பு நிறுவனங்களான, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி ஆகியவை எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகவே, அரசின் பதில் மனு இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும், விதிமீறல் கட்டடங்களை கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அதில் தெரிய வந்த விவரங்கள், பதில் மனுவில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
சி.எம்.டி.ஏ., என்ன செய்யும்? கோர்ட் உத்தரவுப்படி, சி.எம்.டி.ஏ., சார்பில், வரும் 30ம் தேதி, தாக்கல் செய்வதற்கான பதில் மனுவை இறுதி செய்யும் பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தி.நகரில், கண்காணிப்புக்குழு உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையில், குறிப்பிடப்பட்ட, 64 வணிக வளாகங்களில் உள்ள விதிமீறல்கள் குறித்த விவர அறிக்கை, அதன் அடிப்படையில் கட்டடங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள், அதன்பின் சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த விவரங்கள், இந்த பதில் மனுவில் சேர்க்கப்படுகின்றன. விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக, ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவுக்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறினர்.
"அதிகாரிகள் தான் பொறுப்பு': தி.நகரில், விதிமீறல் கட்டடங்கள் குறித்த ஆய்வறிக்கையில், கட்டடங்களின் எண், நிலத்தின் பரப்பளவு, கட்டடத்தின் பரப்பளவு போன்ற தகவல்களில் பிழைகள் இருப்பதாக, வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் மேலும் கூறுகையில், ""இதன் காரணமாக, சில கட்டடங்கள், மாற்றி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட சில கட்டடங்களுக்கு, ஏற்கனவே ஆறு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், அந்த கட்டடத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளே, இத்தவறுகளுக்கு காரணம்'' என்றார்.

புதன், 25 ஜனவரி, 2012

நடத்தை விதிமீறல்: ஸ்ரீபதி மீதான புகார் குறித்து ஆய்வு துவக்கம்: நெற்குன்றம் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றதால் சிக்கல்

நடத்தை விதிகளுக்கு மாறாக வீடு ஒதுக்கீடு பெற்றது தொடர்பாக, தமிழக தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி மீது அளிக்கப்பட்ட புகார்கள் குறித்த முதல்கட்ட ஆய்வை, தமிழக கவர்னர் அலுவலக அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

வீடு ஒதுக்கீடு:அரசு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட நெற்குன்றம் வீட்டுவசதி திட்டத்தில், ஐ.ஏ.எஸ்., போன்ற பதவியில் உள்ளவர்களுக்கு வீடு ஒதுக்க, 2011 ஏப்ரல் மாதம் குலுக்கல் நடந்தது.இதுகுறித்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள பதிலில், "ஸ்ரீபதிக்கு, "எச்' பிளாக்கில் 16 (ஏ) அடுக்கில், முதலாவது வீடு ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்காக, டோக்கன் எண் மூன்று ஒதுக்கப் பட்டுள்ளது,' என, குறிப்பிடப் பட்டுள்ளது.

கவர்னரிடம் புகார்:இதுதொடர்பாக, செல்வராஜ், சங்கர் ஆகியோர், தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு, கடந்த வாரம், தனித்தனியாக புகார் மனுக்களை அனுப்பினர்:
தலைமைச் செயலர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீபதி, தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தன் தகுதி குறித்த தவறான தகவல்களை அளித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான பிரிவில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
இது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின், 17வது பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ள, மாநில தலைமை தகவல் ஆணையருக்கான நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, தலைமை தகவல் ஆணையர் பதவியில் இருந்து ஸ்ரீபதியை நீக்கம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகார்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பதவியில் நீடிக்க எதிர்ப்பு:இதுகுறித்து, பொள்ளாச்சியை சேர்ந்த, தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர், பாஸ்கரன் மற்றும் மதுரையை சேர்ந்த ஆர்வலர், சம்பத் ஆகியோர் கூறியதாவது:அரசு அலுவலகங்களில் தகவல் கிடைக்காத பொதுமக்கள், அரசு நிர்வாகத்துக்கு எதிராக அளிக்கும் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் நிலையில் உள்ள அதிகாரியான ஸ்ரீபதி, அரசிடம் இருந்து வீடு ஒதுக்கீடு பெறுவது, முற்றிலும் நியாயமற்றது. தகவல் பெறும் உரிமை சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள நடத்தை விதிகளுக்கு எதிரானது. அவர் மீது, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

"இது பழய செய்தி':இதுகுறித்து, தமிழக தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதியிடம் கருத்து கேட்டபோது, "நெற்குன்றம் வீட்டுவசதி வாரிய திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றது பழைய செய்தி. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 17வது பிரிவுக்கு எப்படி எதிரானதாகும்? இப்படிப்பட்ட புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு என்ன செய்வது?' என்றார்.ஆய்வு துவக்கம்:ஸ்ரீபதி மீதான புகார்கள் குறித்து, கவர்னர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:இந்த புகார்களில் குறிப்பிடப் பட்டுள்ள விவரங்களின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கான முதல்கட்ட ஆய்வு துவங்கப் பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற புகார்கள் வரும்போது, அதன் உண்மை தன்மை, முதலில் ஆய்வு செய்யப்படும். அதன்பின், இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்களின் கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையிலேயே, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடத்தை விதி என்ன?தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இயல் நான்கு, பிரிவு 17ல், மாநில தலைமை தகவல் ஆணையருக்கான நடத்தை விதிகள் விரிவாக நீக்கம் செய்ய, பல்வேறு காரணங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

இதன் உட்பிரிவு நான்கில் குறிப்பிட்டுள்ள விதிமுறை விவரம்:* மாநில தகவல் ஆணையர், இந்திய அரசில் அல்லது அதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், உடன்படிக்கையில், எந்த வழியிலேனும் தொடர்புள்ளவராக அல்லது கூட்டுருவாக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் உறுப்பினராகவும், உறுப்பினர் அல்லாமலும், அதிலிருந்து எழும் பயன், ஆதாயம் எதிலும் பங்கு பெற்றவராக இருப்பின், இச்சட்டத்தின் உட்பிரிவு ஒன்றின்படி, தவறான நடத்தைக் குற்றம் புரிந்தவராக அவர் கருதப்படுவார்.
* தவறான நடத்தை உறுதி செய்யப்படும் நிலையில், தலைமை தகவல் ஆணையரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக, கவர்னர், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை கேட்டு, நடவடிக்கை எடுக்கலாம்.
* சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை பெறுவதற்கான இடைப்பட்ட காலத்தில், தலைமை தகவல் ஆணையரை, தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்; ஆணையத்திற்கு அவர் வருவதை, தடை செய்யலாம்.
* இதே பிரிவில், உட்பிரிவு மூன்று (உ)ன் படி, மாநிலத் தலைமை தகவல் ஆணையர், தன் பணிகளில் குந்தகம் விளைவிக்கும் வகையில், நிதி அல்லது பிற நலனை அடைந்திருப்பின், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

திங்கள், 23 ஜனவரி, 2012

தி. நகரில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு உரிமையாளர்களே முன்வந்து நடவடிக்கை

சி.எம்.டி.ஏ.,வின் அதிரடியை அடுத்து, சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்தை அதன் உரிமையாளர்களே இடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை சென்னை ஐகோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக, தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் உள்ள 64 அடுக்குமாடி கட்டடங்களில் அதிகளவில் விதிமீறல் இருப்பதாக கண்டறியப்பட்டன. இதில் ஆறு கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், 19 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர். ஐகோர்ட்டின் கிடுக்கிப்பிடியால் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக கடைகளை திறக்க இடைக்கால நிவாரணம் பெற்றனர். இதனால், 71 நாள்கள் மூடப்பட்டிருந்த பிரபல வணிக வளாகங்கள் கடந்த 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.
எதிரொலி: இந்நிலையில், உஸ்மான் சாலையில், பனகல் பூங்கா எதிரில், சரவணா செல்வ ரத்தினம் நிறுவனத்தில் இரு பெரிய வளாகங்கள் உள்ளன. இவற்றை அடுத்துள்ள நிலத்தில், இதே நிறுவனம் சார்பில் மேலும் ஒரு வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக திட்ட அனுமதி கோரும் வரைபடம் தயாரிக்கப்பட்டு, சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்ட வரைபடத்தில், வளர்ச்சி விதிகளின்படி, போதிய அளவுக்கு வாகன நிறுத்துமிடம், பக்கவாட்டு காலியிடம் ஆகியவற்றுக்கான வசதிகள் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதே சமயத்தில் அந்த குறிப்பிட்ட நிறுவனம், வணிக வளாகம் கட்டும் பணியை கடந்தாண்டு துவக்கியது. திட்ட அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதால், இதை யாரும் தடுக்கவில்லை. தொடர்ந்து மூன்று தளங்களை தாண்டி கட்டுமானப் பணிகள் நடந்துக்கொண்டிருந்தன. இந்நிலையில் திட்ட வரைபடம் விதிகளுடன் பொருந்திப் போகாததால், அதை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நிராகரித்தனர். இதன்பின், தன் நிலத்தில் அந்த நிறுவனம் கட்டுமானப் பணியை தொடர்ந்து நடத்தியதால், பணியை நிறுத்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன.
இடிப்பு துவக்கம்: இந்நிலையில், ஏற்கனவே விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களில், 25 வணிக வளாகங்கள் சி.எம்.டி.ஏ., அதிரடி நடவடிக்கையால் தொடர்ந்து 71 நாள்கள் செயல்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டன. இதை கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்ட நிறுவனத்தினர் விதிகளுக்குட்பட்டு புதிய திட்ட  வரைபடத்தை தயாரித்து சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதற்காக, அங்கு ஏற்கனவே மூன்று தளங்கள் வரை கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கட்டட இடிப்பு பணியை வணிக வளாக உரிமையாளர்களே துவக்கியுள்ளனர். இது குறித்து இடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியபோது,""பெரிய ஜே.சி.பி., இயந்திரத்தின்துணையுடன் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இந்த இடிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பகலில் இடிக்கும் பணிகளும், அதனால் ஏற்படும் கட்டட கழிவுகளை வெளியேற்றும் பணிகள் இரவு நேரத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. முழுவதும் இடித்து முடிக்க 20 முதல் 30 நாள்கள் வரை ஆகலாம்,'' என்றனர்.
மற்ற நிறுவனங்களும்...: இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறும்போது, ""பிரபல வணிக நிறுவனம் ஒன்று மூன்று தளங்கள் வரை கட்டிய கட்டடத்தை தானே இடிப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, மற்ற நிறுவனங்களும் தங்கள் கட்டடங்களை தாங்களே இடித்து விதிகளுக்குட்பட்ட வகையில் புதிதாக கட்டிக் கொள்ள முன்வர வேண்டும்,'' என்றனர்.