வெள்ளி, 30 டிசம்பர், 2011

திருமழிசை துணை நகரம்: நிலம் தந்தால் வீட்டுமனை, அரசு வேலை

சென்னையை அடுத்த திருமழிசையில் துணை நகரம் திட்டத்துக்கு நில உரிமையாளர்களிடம் எதிர்ப்பை குறைக்கும் வகையில்; நிலம் தருபவர்களுக்கு வீட்டுமனை, அரசு வேலை அளிக்க, வீட்டு வசதி வாரியம் நான்கு அம்ச திட்டத்தை உருவாக்கி, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது.

திருமழிசை அருகே வீட்டு வசதி வாரியம் மூலம் 311.05 ஏக்கரில், 2,160 கோடி ரூபாயில் துணை நகரம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அங்குள்ள செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். தற்போது, உத்தேசிக்கப்பட்டுள்ள 311 ஏக்கர் நிலத்தில், 30 சதவீத நிலங்கள் மட்டுமே வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மீதி நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நில உரிமையாளர்கள், இந்த தொகையை வாங்காமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், திட்டத்தை நிறைவேற்ற, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்துடன் இணைந்து வீட்டு வசதி வாரியம் கோரியுள்ளது.

டெண்டரிலும் தாமதம்: கடந்த நவம்பர் 6ம் தேதி வெளியிடப்பட்ட இந்த டெண்டர், டிசம்பர் 15ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்டபடி 15ம் தேதி டெண்டர் திறக்கப்படவில்லை. இதையடுத்து, டெண்டர் திறப்பு ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிலப் பிரச்னை காரணமாக குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் இதற்கான டெண்டரில் பங்கேற்க நிறுவனங்கள் தயக்கம் தெரிவித்திருப்பதே தேதி மாற்றத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

புதிய திட்டம்: எனவே, நிலப் பிரச்னையைத் தீர்க்க புதிய திட்டத்தை, வீட்டு வசதித் துறை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். இதன்படி, புதிதாக உருவாக்கப்படும் துணை நகரத்தில் நிலம் தருபவர்களுக்கு அவரவரிடம் பெறப்படும் நிலத்தின் அளவுக்கு ஏற்ப 2,400 சதுர அடி, 1,200 சதுர அடி, 800 சதுர அடி ஆகிய அளவுகளில் வீட்டுமனைகள் வழங்கப்படும். மேலும் நிலம் வழங்குவோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவரவர் கல்வித்தகுதி அடிப்படையில் வீட்டு வசதி வாரியத்தில் பணி நியமனம் வழங்கப்படும். ""அரசின் ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து இத்திட்டம் குறித்து செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,'' என பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

யாருக்கு எவ்வளவு மனை? திருமழிசை துணை நகரம் திட்டத்துக்காக வீட்டு வசதித்துறை உருவாக்கியுள்ள நான்கு அம்ச திட்டத்தின் விவரம்
*மூன்று முதல் ஐந்து ஏக்கர் வரை நிலம் தருபவர்களுக்கு 2,400 சதுர அடி மனை.
* ஒன்று முதல் 2.99 ஏக்கர் வரை நிலம் தருபவர்களுக்கு 1,200 சதுர அடி மனை.
* 10,890 சதுர அடி (25 சென்ட்) முதல் 43,124 சதுர அடி (99சென்ட்) வரை நிலம் தருபவர்களுக்கு 800 சதுர அடி மனை.
* இந்த நிலங்களுக்கு அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படாது.

புதன், 19 அக்டோபர், 2011

வணிக மனையில் பங்களா கட்டும் தி.மு.க., நிர்வாகி : சி.எம்.டி.ஏ., மாநகராட்சி மவுனம் கலையுமா?

சென்னை பெசன்ட் நகர், கோஸ்டல் தெருவில், வீட்டுவசதி வாரிய வணிக மனையில், எவ்வித அனுமதியுமின்றி தி.மு.க., நிர்வாகி ஒருவர், ஆடம்பர பங்களா கட்டி வருகிறார். இவ்விஷயத்தில், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடியிருப்புகளுக்காக, வீட்டு மனைகளையும், வணிக பயன்பாட்டுக்காக, வணிக மனைகளையும் உருவாக்கி, ஒதுக்கீடு மூலம் விற்பனை செய்து வருகிறது. இதில், குடியிருப்பு மனைகளை வணிக ரீதியாகவும், வணிக மனைகளை, வீடு கட்டுவதற்கும் பயன்படுத்துவது, வாரியத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது. சிலர், வேண்டுமென்றே இவ்விதிகளை மீறி செயல்படுவதையும், முறைகேடுகளில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்திலும், அதற்கு முன், 1996 - 2001லும், வீட்டு வசதி வாரியத்தில், பல்வேறு முறைகேடுகளில் தி.மு.க.,வினர் ஈடுபட்டது தொடர்பான விவரங்கள், ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இதில், சென்னை பெசன்ட் நகர், கலாஷேத்திரா காலனி, கோஸ்டல் தெருவில், வணிக பயன்பாட்டுக்கான மனையை, தி.மு.க., அமைப்புச் செயலர், பெ.வீ.கல்யாணசுந்தரம், வீடு கட்டுவதற்காக பயன்படுத்துவதாக புகார் வந்தது.

ஆவணங்கள் விவரம்: இதுகுறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விசாரித்ததில், வீட்டுவசதி வாரிய, பெசன்ட் நகர் கோட்ட பொது தகவல் அதிகாரி அளித்த ஆவணங்களில் உள்ள விவரங்கள்:
சென்னை பெசன்ட் நகர் விரிவாக்கப் பகுதியில், வணிக மனை எண்: 53, பெ.வீ. கல்யாணசுந்தரம் என்பவருக்கு, சமூக சேவகர் என்ற அடிப்படையில், தவணை முறை திட்டத்தின் கீழ், அரசு விருப்புரிமையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அரசாணையை (எண்: 288), வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 2000ம் ஆண்டு, ஜூலை 13ல் வெளியிட்டது. இதன்படி, எண் 53ல் உள்ள ஒரு கிரவுண்ட், 2,241 சதுரடி பரப்பளவுள்ள வணிக மனை, 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், கல்யாணசுந்தரத்துக்கு அளிக்கப்பட்டது. (இவ்விலை எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பது புதிர்) இதுதொடர்பான ஒதுக்கீட்டு ஆணை, அதே ஆண்டு, அக்டோபர் 30ம் தேதி, வீட்டுவசதி வாரியத்தால் வெளியிடப்பட்டது. இதில், 6 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை முதலிலும், மீதித் தொகையை தவணை முறையிலும் செலுத்தும்படி, கல்யாணசுந்தரம் அறிவுறுத்தப்பட்டார்.
இந்த மனை ஒதுக்கீடு பெறுவதற்கான விண்ணப்பத்தில், தன் ஆண்டு வருமானம், 96 ஆயிரத்து 560 ரூபாய் என கணக்கு காட்டியுள்ள கல்யாணசுந்தரம், மனைக்கான தவணை தொகையாக, மாதம் 38 ஆயிரத்து 810 ரூபாய் வீதம், பத்தாண்டுகளில் செலுத்த ஒப்புக் கொண்டார். ஆனால், 2008, ஆகஸ்ட் மாதத்திலேயே, மொத்தத் தொகையையும் அவர் செலுத்திவிட்டார்.

கட்டுமானப் பணி துவக்கம்: இந்நிலையில், அந்த நிலத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன், குடியிருப்பு வகையில், ஆடம்பர பங்களா கட்டும் பணியை கல்யாணசுந்தரம் துவக்கியிருக்கிறார். வணிக பயன்பாட்டுக்கான நிலத்தில், விதிகளுக்கு மாறாக வீடு கட்டப்பட்டு வருவது, அப்பகுதி மக்கள் மத்தியிலும், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுவசதி வாரியத்தின் நிலை என்ன? : பெயர் குறிப்பிட விரும்பாத, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர், இதுகுறித்து கூறியதாவது: வணிக பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட மனைகளை, வணிக ரீதியான கட்டடங்கள் கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக தேவை அங்கு இல்லை எனக் கூறி, அதை குடியிருப்புக்காக பயன்படுத்துவதானால், அதற்காக, சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்து, நிலம் உபயோக மாற்றம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு வகை மாற்றம் செய்ய அவர் விண்ணப்பித்தால், அதற்கு, வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் தடையின்மை சான்று கேட்டு பெறப்படும். அதன் பிறகே, அங்கு குடியிருப்பு கட்டுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு, திட்ட அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த குறிப்பிட்ட மனையை, உபயோக மாற்றம் செய்வது தொடர்பாக, தடையின்மை சான்றிதழ் எதுவும் இதுவரை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

சி.எம்.டி.ஏ., நிலை: "வீட்டுவசதி வாரியத்தின், பெசன்ட் நகர் விரிவாக்கத் திட்டத்தில், 53ம் எண் கொண்ட வணிக மனையை, உபயோக மாற்றம் செய்வது தொடர்பாகவோ, அதில், வீடு கட்டும் எந்த திட்டத்துக்கும், இதுவரை உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. அனுமதி எதுவும் பெறாமல், அங்கு கட்டுமானப் பணி நடப்பது குறித்து, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெயர் குறிப்பிட விரும்பாத, சி.எம்.டி.ஏ.,வின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மவுனம் கலையுமா? : சாதாரண பொது மக்கள், தங்கள் வீடுகளில் கூடுதலாக ஒரு சிறிய அறையோ அல்லது வேறு சிறிய மாற்றமோ செய்தால், எப்படியோ அதுகுறித்து தகவல் அறிந்து, அந்த பகுதியின் கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர், உடனடியாக அந்த வீட்டின் முன் ஆஜராகிவிடுவர். அந்த வீட்டின் உரிமையாளரின், "கவனிப்பு' அடிப்படையில், இவர்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
ஆனால், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி உயரதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ள பகுதியில், எந்த விதிகளையும் பின்பற்றாமல், ஒரு கட்டடம் கட்டப்படுகிறது. இதைத் தடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள், மவுனமாக இருப்பது ஏனோ?

சமூக சேவகர்? : எதன் அடிப்படையில், சமூக சேவகர் என்ற பிரிவில், கல்யாணசுந்தரத்துக்கு மனை ஒதுக்கப்பட்டது என்பது குறித்து, வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள ஆவணங்களின் விவரம்: சென்னை கே.கே.நகர் 9வது டொர் சிவிக் எக்ஸ்னோரா, "சமூக சேவகர்' என, அவருக்கு சான்று அளித்துள்ளது. அதில், "எக்ஸ்னோராவின் உறுப்பினராக, 1991ம் ஆண்டு முதல் இருந்துவரும் கல்யாணசுந்தரம், பல்வேறு சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். மரம் நடுதல், போலியோ விழிப்புணர்வு, சிறார் கல்வி, உயர் கல்வி வழிகாட்டியாகவும், இப்பகுதி மக்களுக்கு சட்ட உதவியும் அளித்து வருகிறார்' என, சான்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "கடந்த பத்தாண்டுகளாக, கல்யாணசுந்தரத்தை தெரியும். தனிப்பட்ட முறையில் அவர், நல்ல நடத்தை கொண்டவர்' என, தி.மு.க.,வைச் சேர்ந்த, அப்போதைய வட சென்னை எம்.பி.குப்புசாமி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, அந்த ஆவணங்களில் உள்ளன.

ஞாயிறு, 31 ஜூலை, 2011

வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்

சென்னை:உளவுப்பிரிவு முன்னாள் அதிகாரி ஜாபர் சேட் போல, மேலும் சில போலீஸ் அதிகாரிகளும், அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில், வீட்டு வசதி வாரிய மனைகள் பெற்று, அதை தனியார் பில்டர்களுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்து, மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், முதல்வர் கருணாநிதியின் மெய்க்காவல் பணிக்கு, சிறப்பு பாதுகாப்புப் பிரிவு சி.ஐ.டி.,யிலிருந்து, இன்ஸ்பெக்டர்கள் பி.பாண்டியன், சி.வினோதன், சி.கணேசன் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இதில், பாண்டியன் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார்.எந்நேரமும் முதல்வருடன் இருப்பவர்கள் என்பதால், டி.ஜி.பி., வரையிலான எல்லா உயர் அதிகாரிகள் மத்தியிலும், இவர்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர்.
இவர்களுக்கு மனைகள் ஒதுக்கியது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பொது தகவல் அதிகாரி அளித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, பாண்டியனின் மனைவி மீனாவுக்கு, அரசின் விருப்புரிமையில் சமூக சேவகர் பிரிவின் கீழ், சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள, 4,438 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: 1025) ஒதுக்கப்பட்டது.

(வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்: 172) இதற்கான தொகையான, 75.28 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.இதேபோல, அதே தேதியில் இன்ஸ்பெக்டர் சி.வினோதனுக்கு, அரசின் விருப்புரிமையில், சமூக சேவகர் பிரிவின் கீழ், சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள 4,393 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: 1024) ஒதுக்கப்பட்டது. (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்: 171) இதற்கான தொகையாக, 74.52 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் சி.கணேசனுக்கு, அரசின் விருப்புரிமையில், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் பிரிவின் கீழ், சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள, 4,320 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: 1023) ஒதுக்கப்பட்டது. (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்: 170) இதற்கான தொகையாக, 74.13 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.

தனியாருக்கு விற்பனை: பாண்டியனின் மனைவி மீனா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த கல்யாண்குமாரின் மனைவி கே.பத்மாவை, தனது பவர் ஏஜன்டாக 2009ம் ஆண்டு ஜனவரி 19ம்தேதி நியமித்தார். இதே, கே.பத்மாவை தனது பவர் ஏஜன்டாக கணேசன் நியமித்தார். எஸ்.கவுரி என்பவரை தனது பவர் ஏஜன்டாக வினோதன் நியமித்தார்.இந்த மூன்று மனைகளையும், அந்தந்த பவர் ஏஜன்டுகளிடமிருந்து, சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த ஏ.பாலா என்பவர், 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி வாங்கியுள்ளார். இது தொடர்பான ஆவணங்கள், சென்னை கொன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு மனையும், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, தலா 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள் ளன. மொத்தம் 13,151 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று மனைகளையும் வாங்கிய தனியார் நிறுவனத்தினர், அங்கு வர்த்தக நோக்கத்தில், அடுக்கு மாடி குடியிருப்புகளைக் கட்டி வருகின்றனர்.

தவறு எங்கே?


இது தொடர்பாக, வீட்டு வசதி வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:தங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை என்பதால், மனை ஒதுக்குமாறு கோருபவர்களுக்கு, அரசின் விருப்புரிமை அடிப்படையில் மனைகள் ஒதுக்கப்படுகின்றன.இந்த மனைகளுக்கான முழுத் தொகையைச் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்றாலும், வீட்டு வசதி வாரியத்தில் ஆட்சேபம் இல்லா சான்று பெற்ற பிறகே மனைகளையும், வீடுகளையும் தனியாருக்கு விற்க முடியும்.வர்த்தக நோக்கமின்றி, மக்களுக்கு வீட்டு வசதி அளிக்க வேண்டும் என்பதற்காக, வழங்கப்படும் மனைகளை தனியார் பில்டர்களுக்கு விற்பதும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து வீடுகள் கட்டி விற்பதும், இத்திட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது தான் என்றாலும், இதைத் தடுக்க கடுமையான விதிகள் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை எப்போது?வீட்டு வசதி வாரியத்தின் மனைகளை, தனியார் பில்டருடன் சேர்ந்து, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி விற்ற, முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி ஜாபர் சேட், முன்னாள் முதல்வரின் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்து வரும் நடவடிக்கை, இவர்கள் மீதும் பாயுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அரசுக்கு தெரியுமாம்!

இது தொடர்பாக, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, 2010ம் ஆண்டு ஜூலை 27ம் தேதியிட்ட கடிதம் மூலம், எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி., அளித்த பதில் விவரம்:"எஸ்.பி.சி.ஐ.டி., கோர் செல் பிரிவில், டி.எஸ்.பி.,யாக உள்ள பாண்டியன், தன் மனைவி மீனா பெயரில், வீட்டு வசதி வாரியத்தில் இருந்து, அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் மனை பெற்றார். அதை, கூட்டு நிறுவனமாக தனியார் ஒருவருடன் சேர்ந்து, மேம்பாடு செய்ய ஒப்பந்தம் செய்தார். அந்த மனைக்கான பணத்தை, மீனாவின் சார்பில் கூட்டு நிறுவனம், வீட்டு வசதி வாரியத்துக்கு செலுத்தியது தொடர்பான விவரங்கள், துறை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டன.

இதேபோல வினோதன், கணேசன் ஆகியோரும், தங்கள் பெயரில் மனை ஒதுக்கீடு பெற்றது; அதை கூட்டு நிறுவன அடிப்படையில், இன்னொருவர் மூலம் மேம்படுத்த, ஒப்பந்தம் செய்து கொண்டது உள்ளிட்ட விவரங்களை, தங்கள் துறை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இவை அவரவர் சர்வீஸ் பதிவேட்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது' என அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-வி.கிருஷ்ணமூர்த்தி -

சனி, 12 மார்ச், 2011

எஸ்எம்எஸ் மூலம் வேட்பாளர் பின்னணியை அறியலாம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் பொது மக்கள் பெற தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள், சொத்து விவரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில், தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஜனநாயக மாற்றங்களுக்கான சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.

இதன்படி, 2006 -ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 77 பேர் மீது மொத்தம் 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. 

இதில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் விவரம்: திமுக: 39, பாமக: 15, காங்கிரஸ்: 9, அதிமுக: 8, மதிமுக: 2, இந்திய கம்யூனிஸ்ட்: 2.2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான மார்ச் 30-ம் தேதியில் இருந்தே வாக்காளர்கள், தங்கள் பகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஙஹ்ய்ங்ற்ஹ தங்கள் பகுதி அஞ்சல் பின் கோடு எண் (உதாரணமாக தியாகராய நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாக இருந்தால் 600017) எனக் குறிப்பிட்டு 56070 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். 

இவ்வாறு அனுப்பினால், அந்தத் தொகுதி வேட்பாளர்களின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் விவரம், அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவரவர் செல்போன்களுக்கே அனுப்பப்படும்.

என ""ஜனநாயக மாற்றங்களுக்கான சங்க'' நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.

புதன், 2 பிப்ரவரி, 2011

நிதி நகரம் திட்டத்தால் சதுப்புநில பறவைகளுக்கு ஆபத்து


  சென்னை மேடவாக்கம்- பெரும்பாக்கம் சாலையில் நிதி நகரம் அமைக்கும் அரசின் திட்டத்தால் அங்குள்ள சதுப்பு நிலத்தை சார்ந்துள்ள அரியவகை பறவைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த நிலத்தை தொழில்துறையிடம் இருந்து மீட்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
சென்னை மேடவாக்கம்- பெரும்பாக்கம் சாலையில் சர்வதேச தரத்திலான நிதி நகரம் அமைக்கப்படும் என 2009-2010 நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.உலக வங்கி உட்பட பல சர்வதேச நிதி அமைப்புகள், சென்னையில் இருந்து நிதிச் சேவையை மேற்கொண்டு வருகின்றன. மேலும், வர்த்தக வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள், பரஸ்பர நிதி, காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை சென்னையில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
 
சென்னையில் பல்வேறு இடங்களில் வாடகை, நீண்டகால குத்தகை அடிப்படையில் நிலம் பெற்று இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்த நிறுவனங்களின் அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் சர்வதேச தரத்திலான நிதி நகரம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், நிதி நிர்வாகம் சார்ந்த பயிற்சி, ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் அலுவலகங்களும் இந்த நகரத்தில் இடம்பெறும்.
 
சில மாதங்கள் முன்னர் இதற்கான அரசாணை தொழில்துறை மூலம் வெளியிடப்பட்டது. 187 ஏக்கர் நிலத்தில் முதல் கட்டமாக 25 ஏக்கர் நிலத்தில் நிதி நிர்வாகம் சார்ந்த ஊடக அலுவலக வளாகமும், கேளிக்கை பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், முழுமையான திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்துக்காக மேடவாக்கம்- பெரும்பாக்கம் சாலையில் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் கிராமங்களில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் இந்த நிலங்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக இருந்தாலும், தன்மை அடிப்படையில் இந்த நிலம் சதுப்பு நிலமாக அமைந்துள்ளது. 
 
வனத்துறை நடவடிக்கை: 
 
 பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை வசம் இருந்த 300 ஹெக்டேர் நிலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலம் இப்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலத்தை முழுமையான பறவைகள் சரணாலயமாக மாற்றும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 இதையடுத்து நிதி நகரம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த நிலம் முழுமையான சதுப்பு நிலத்துக்கான தன்மையுடன் இருப்பதாகவும், ஏராளமான அரியவகை பறவைகள் வந்து செல்வதும் வனத்துறையினர் ஆய்வில் தெரியவந்தது என பள்ளிக்கரணை பகுதிக்கான வனச்சரகர் ராமதாஸ் தெரிவித்தார். இதனால் இப்பகுதியை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.
 
உயரதிகாரிகள் ஆய்வு:
 
 இதையடுத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களை வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் வெ. இறையன்பு தலைமையிலான உயரதிகாரிகள் அண்மையில் நேரில் ஆய்வு செய்தனர்.நேச்சர் டிரஸ்ட், வனத்துறையின் களப்பணியாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றது.அப்போது, நிதி நகரம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தை தொழில் துறையிடம் இருந்து மீளப்பெற்று வனத்துறை வசம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி நிலத்தை மீட்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உயரதிகாரிகள் உறுதி கூறினர்.இதன்மூலம் அரியவகை பறவைகளின் வாழ்வாதாரமாக உள்ள இந்த நிலம் பாதுகாக்கப்படும் என இயற்கை ஆர்வலர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
அரிய வகை பறவைகள்:
 
சதுப்பு நிலத்துக்கான அனைத்து அம்சங்களுடன் அமைந்துள்ள இந்த நிலத்தில் ஏராளமான அரியவகை பறவையினங்கள் வந்து செல்வதும், குறிப்பிட்ட சில பறவையினங்கள் இங்கேயே இனப்பெருக்கம் செய்வதும் இப்போது தெரியவந்துள்ளது.குறிப்பாக நீள வால் இலைக்கோழி வகையைச் சேர்ந்த 60 ஜோடி பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.ஐரோப்பாவில் இருந்து வரும் செங்கால் நாரை வகையைச் சேர்ந்த பறவைகள் இங்கு வருவது நேரடி ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.செந்நீல கொக்கு, சாம்பல் கொக்கு, மஞ்சள் குருகு, இராக்கொக்கு, ஜொலிக்கும் அரிவாள் மூக்கன், புள்ளி அலகு கூழைக்கடா, நீலத்தாழைக்கோழி, நாமக்கோழி, நத்தை குத்தி நாரை உள்பட 24 வகையான நீர்ப்பறவைகள் இங்கு வந்து செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது என நேச்சர் டிரஸ்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.
 
பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்பு நில பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்திலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
 
ஏராளமான பறவைகள் வந்து செல்லும் இந்த இடத்தை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் சேர்த்து ஒரே நிலையில் பராமரிப்பதால் பறவைகளுக்கு வாழ்விடம் கிடைப்பதுடன் இங்கு மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கலாம் என்றும் அந்த அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.

5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாத 67 உள்ளாட்சிகள்

  தமிழகத்தில் 8 பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் உள்பட 67 உள்ளாட்சி பதவிகளுக்கு யாரும் போட்டியிடாததால் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை.ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த பகுதிகளில் மற்ற பிரிவினரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இருந்ததால், அவர்களின் ஆதிக்கம் காரணமாக ஆதிதிராவிடர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டது. அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் தர்மசங்கடம் ஏற்படும் அளவுக்கு இந்த பிரச்னை உருவெடுத்தது. 2006-ம் ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றபோது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு ஆதிதிராவிடர்கள் தங்களுக்கான பதவியிடங்களுக்கு போட்டியிட்டனர். தேர்தலில் வெற்றியும் பெற்றனர்.இவ்வாறு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நவம்பர் மாதம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சமத்துவப் பெருவிழா என்ற பெயரில் அரசு சார்பில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது.இந்த விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிகள் இனி தமிழகத்தில் உருவாகாது என உறுதிப்பட தெரிவித்தார்.மேலும், இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, சமத்துவப் பெரியார் என்ற பட்டமும் அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார்.இதன் பின்னர் இப்போது மீண்டும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 67 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
 
8 பஞ்சாயத்து தலைவர் பதவிகள்: 
 
இந்த நிலையில், அப்போது, 4 பஞ்சாயத்துகளில் மட்டும் இருந்த நிலை தற்போது 8 பஞ்சாயத்துகளில் நிலவுவது தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டம் டி.பாலூர் ஒன்றியத்தில் நடுவாளூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் கொளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே புலிப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியத்தில் புதூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் பேரயாம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ராமாபுரம், வேலூர் மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் செய்யாத்துவண்ணம், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் கடுகுபட்டு ஆகிய பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் 2006-ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை.இதில் 4 இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும், 4 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை.
 
52 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகள்: 
 
இதேபோல 52 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெறாத பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் விவரம்:அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பஞ்சாயத்துகளில் உள்ள 52 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.இதிலும் பெரும்பாலான இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவையாகவே உள்ளன. உள்ளூர் பிரச்னை காரணமாக பொது பிரிவினருக்கான சில வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
 
மேல்விஷாரம்: 
 
வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சியில் 3 வார்டுகளில் யாரும் போட்டியிடாததால், 2006-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறவில்லை. தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் வரதராஜன்பட்டி, கோவை சிறுமுகை, வீரபாண்டி, கன்னியாகுமரி பள்ளபள்ளம் ஆகிய பேரூராட்சிகளில் தலா 1 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெறவில்லை.
 
காரணம் என்ன? 
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலேயே உள்ளாட்சி அமைப்புகள் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், பொது பிரிவினர் என ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களுக்கும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு காரணமாக இத்தகைய சிக்கல் எழுவதாக கூறப்படுகிறது.உதாரணமாக, ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கையைவிட மற்ற பிரிவினரின் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதி தவறான கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்படுவது போன்ற நிர்வாக முரண்பாடுகளே இந்தப் பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது.இவ்வாறு தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளதால், இந்த பகுதிகளில் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உறுதிச் செய்யப்படாமல் உள்ளது. இதன்காரணமாக இப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, உண்மை நிலையை ஆராய்ந்து இந்த பகுதிகளில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கை.

புதன், 12 ஜனவரி, 2011

தமிழக காவல் துறையில் மகளிர் கமாண்டோ படை கலைப்பு

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட மகளிர் கமாண்டோ படை கலைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  தமிழக காவல் துறையில் மகளிர் காவலர்களுக்கென தனிப்பிரிவு 1979-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்போதைய நிலையில், தமிழ்நாட்டில் 10,130 பெண் காவலர்கள் அனைத்து காவல்துறைப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 196 மகளிர் காவல் நிலையங்கள் பெண் காவலர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக காவல்துறையிலேயே அதிக அளவில் பெண் காவலர்கள் பணிபுரிகின்றனர்.  காவல்துறை பணியில் மகளிருக்கு உள்ள ஆர்வத்தை அடுத்து ஆண்டு தோறும் காவல்துறையில் பல்வேறு நிலை ஆள்சேர்ப்பில் கணிசமான இடம் மகளிருக்கு ஒதுக்கப்படுகிறது. 

அதிரடிப்படை (கமாண்டோபடை): 

உயர் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில முக்கிய பணிகளில் பயன்படுத்துவதற்காக 1997-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் கமாண்டோ படையும், கமாண்டோ படை பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டன.  கமாண்டோ படையினருக்கு நவீன ஆயுதங்களைக் கையாளுவதற்கும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்தும் உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மறைந்து நின்று துப்பாக்கி சுடுதல், வனப்பகுதியில் தங்கியிருத்தல், ஆயுதங்களைக் கையாளுதல், நாசவேலைகளுக்கு எதிரான செயல்பாடுகள் ஆகிய முக்கிய பணிகளைக் கையாளும் திறமைகளை வளர்த்துக்கொள்ள இப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதர துறைகளான சிறைத்துறையினர், மத்திய ஆயுதத் துறையினர், இதர மாநிலங்களின் காவல்துறையினர் ஆகியோருக்கும் இப் பள்ளி சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.  மகளிர் கமாண்டோபடை: தொடக்கம் முதலே கமாண்டோ படையில் பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆண் காவலர்களே சேர்க்கப்பட்டனர். 2001-ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதையடுத்து, காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.  இதன் விளைவாக அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிர் காவல் பிரிவு கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து கமாண்டோ படையிலும் பெண்களை சேர்க்க திட்டமிடப்பட்டது.  இதையடுத்து 2003 ஜனவரி முதல் மகளிர் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.  இந்த பயிற்சிகளின் நிறைவாக கன்னியாகுமரியில் இருந்து, இவர்களில் ஒரு பிரிவினர் நடை பயணமாக வந்து மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.  இதன் நிறைவாக 2003 ஜூன் 2-ம் தேதி மருதம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டிலேயே முதலாவது மகளிர் கமாண்டோ படை 151 பேருடன் தொடங்கப்பட்டது.  அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நிகழ்ச்சியில் பங்கேற்று முதலாவது மகளிர் கமாண்டோ படை தொடங்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

 பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது:

தமிழகத்தில் மகளிர் கமாண்டோ பிரிவு தொடங்கப்பட்டதை அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தங்களது மாநில காவல்படையில் மகளிர் கமாண்டோ படையை தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டன. இதற்கு தமிழக கமாண்டோ படை மற்ற மாநிலங்களை தமிழகத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.

 மகளிர் கமாண்டோ படை கலைப்பு:

2003-ம் ஆண்டு 151 பேருடன் தொடங்கப்பட்ட மகளிர் கமாண்டோ படையின் மகளிரின் எண்ணிக்கை 2006-ம் ஆண்டு வரை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.  இந்த நிலையில், 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கமாண்டோ பயிற்சி பள்ளியில், புதிதாக தேர்வு செய்யப்படும் காவலர்களின் மகளிரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு வந்தது. 

 கடைசியாக 120 பேருடன் இருந்த மகளிர் கமாண்டோ படைக்கு கடந்த சில மாதங்களாக புதிய நபர்கள் தேர்வு செய்யப்படுவது அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.  இது குறித்து கமாண்டோ படை ஐஜி-யை தொடர்புக் கொண்டு கேட்டபோது இது குறித்த அனைத்து நடவடிக்கைகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து கருத்து கூற முடியாது என்றார்.

 இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐஜி-யின் பரிந்துரையை ஏற்று மகளிர் கமாண்டோ படையை கலைப்பதற்கான உத்தரவை டிஜிபி லத்திகாசரண் பிறப்பித்துள்ளதாக காவல்துறை தலைமையக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமை பெற்ற லத்திகாசரண், நாட்டின் முதலாவது மகளிர் கமாண்டோ படையை கலைத்திருப்பது பெண் காவலர்களுக்கு வருத்தமான செய்தியாக உள்ளது.