புதன், 28 ஜனவரி, 2009

அகதிகள் முகாமில் இந்தியர்!

சென்னை பூந்தமல்லியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் இந்தியக் குடிமகனான மகேந்திரன் (எ) கண்ணன் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் வட்டாம்வலசை கிராமத்தைச் சேர்ந்த சேதுவும் அவரது மனைவியும் 70-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இலங்கை சென்றனர். அங்கு அவர்களுக்கு கண்ணன் பிறந்தார்.


1984-ம் ஆண்டு ராணுவத் தாக்குதலில் மன்னார் அருகில் இவர்கள் குடும்பம் தங்கி இருந்த பேசாலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேது தனது மகன் கண்ணன் மற்றும் மனைவியுடன் அகதிகளுடன் தமிழகம் வந்தார்.


அகதிகளுடன் வந்ததால் இவர்களைப் போலீஸôர் மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். பின்னர் சிவகாசி முகாமுக்கு மாற்றினர்.


தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து சொந்த ஊரான வட்டாம்வலசைக்குச் சென்றார் கண்ணன். அங்கு காளீஸ்வரியுடன் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகள் சரோஜினி (13), மகன்கள் சுதாகர் (9), சுரேஷ் (8) உள்ளனர்.


கூலி வேலை செய்து வந்த கண்ணன் பற்றி 7-3-2007-ல் விசாரித்த ராமநாதபுரம் "கியூ' பிரிவு போலீஸôர், 9-3-2007-ல் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்று அலுவலகத்திலேயே 5 நாள்கள் தங்க வைத்து பின்னர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதையறிந்த இவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி விடுவித்தனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த கண்ணனை வழிமறித்த "கியூ' பிரிவு போலீஸôர் வலுகட்டாயமாக ஒரு வேனில் ஏற்றி செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அடைத்தனர். பின்னர் டிசம்பர் மாதம் பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமுக்கு மாற்றினர்.


தன்னை விடுவிவிக்க வேண்டும், "கியூ' பிரிவு போலீஸôரின் தவறான தகவல்கள் அடிப்படையில் வெளிநாட்டவர் என தன்னைத் தவறாகக் குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்ணன் கோரியுள்ளார்.

சனி, 17 ஜனவரி, 2009

யார் சொல்வது சரி?

சென்னை, ஜன. 15: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், லஞ்ச ஊழலை ஒழிக்கவும் ""தகவல் பெறும் உரிமைச் சட்டம்'' 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

அரசின் நிர்வாக நடைமுறையை மக்கள் தெரிந்து கொள்வதைத் தடுத்த இரும்புத்திரையை விலக்கும் வகையில் இந்தச் சட்டம் அமைந்திருந்தது.

தகவல்பெறும் உரிமைச் சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி உளவு மற்றும் தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய துறைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும்.

இவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் துறைகளிலும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படுவதற்கு இந்த விலக்கு பொருந்தாது.

உளவு, தேசப் பாதுகாப்பு தொடர்பானவை மற்றும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 8 (1) (எச்) பிரிவின் கீழ் ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் 24 (4) பிரிவின் படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியத் துறைகளுக்கு முதலில் விலக்கு அளித்தது.

தொடர்ந்து, இந்தப் பிரிவைப் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பில்லாத லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு விலக்கு அளித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விலக்கு அளித்து அரசாணை:

இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை (எண்: 158) கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் நடைபெற்ற சில முறைகேடுகள் குறித்தும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினரும் கேட்க முயற்சித்ததால் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாகப் புகார் எழுந்தது.


தேசப் பாதுகாப்பு தொடர்பான உளவுப் பணிகளில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான சி.பி.ஐ. உள்பட பெரும்பாலான மாநிலங்களில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் கூட இத்தகைய விலக்கு அளிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக "தினமணி'யில் கடந்த செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் செய்திகள் வெளியாயின.

முதல்வர் பதில்:

இதையடுத்து, இந்த செய்திகளை மறுக்கும் விதமாக, கேள்வி-பதில் அறிக்கை மூலம் பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, ""விசாரணையில் இருக்கும் வழக்குகளின் விவரங்களை அதில் தொடர்புடையவர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றால் அது விசாரணையை பாதிக்கும் என்பதால் அந்த குறிப்பிட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிப்பதாக ஆகாது. மேலும், இது குறித்து சில விஷமிகள் பொய்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்'' என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.

முதல்வர் கூறியபடி எந்த வழக்கு தொடர்பாகவும் இல்லாமல், லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசு வாகனம் (டி.என்.-22-ஜி-5000) பயன்படுத்தப்படும் விதம் குறித்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கப்பட்டது.

தகவல் அளிக்க மறுப்பு:

ஆனால், அரசாணை எண்: 158-ன் படி லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, மேற்கூறிய கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பொதுத் தகவல் அதிகாரியாக தன்னை குறிப்பிட்டுக் கொண்டுள்ள மத்திய சரக கண்காணிப்பாளர், ஜனவரி 6-ம் தேதியிட்ட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


தகவல் பெறும் உரிமைச் சட்டமே தங்களுக்குப் பொருந்தாது என்று கூறுவதற்கு அந்தத் துறைக்கு தகவல் பெறும் சட்டப்படியான பொதுத் தகவல் அதிகாரியாக ஒருவர் இருப்பது ஏன்?


மேலும், வழக்குகளின் விசாரணை நிலவரம் குறித்த தகவல்களின் ரகசியத் தன்மையை பாதுகாக்கவே அரசாணை எண்: 158 பிறப்பிக்கப்பட்டதாக முதல்வர் கூறுகிறார்.

ஆனால், அந்தத் துறைக்கே இந்தச் சட்டம் பொருந்தாது என அதன் பொதுத் தகவல் அதிகாரி தெரிவிக்கிறார். இதில் யார் சொல்வது சரி என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

புதன், 14 ஜனவரி, 2009

நியமனத்தில் முறைகேடு!

சென்னை, ஜன. 11: தமிழ்நாடு அரசுப்பணியா ளர் தேர்வாணையம் மூலம் 4 டி.எஸ்.பி.க்கள் உள்பட 10 உயர் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

24 துணை ஆட்சியர்கள், 20 டி.எஸ்.பி.க்கள், 10 வணிக வரி அதிகாரிகள், 33 கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் என 91 பதவிகளுக்கான, காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்ப தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 27-12-2000-ல் வெளியிட்டது.

நேர்முகத் தேர்வு:

இதன்படி நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் இருந்து 182 பேர் நான்கு ஆண்டுக ளுக்கு பின்னர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

2004 ஜூன் மாதம் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில், தகுதி அடிப்ப டையில் அந்தந்த பதவிகளுக்கு 91 பேர் தேர்வு செய்யப்பட்டனர்மேலும் 30 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர மற்ற அனைவ ரும் "தேர்வு பெறாதவர்கள்'' என அறிவிக்கப்பட்டனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 25-8-2004-ல் வெளியிடப்பட்டது. இருப்பினும், இவர்களுக்கு 4 ஆண்டு தாமதத்துக்கு பிறகு 15-4-2008-ல் தேர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.

"தேர்வு பெற்றவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள் ளவர்கள் தவிர மற்ற அனைவரும் தேர்வு பெறாதவர்கள் என அறி விக்கப்படுகிறது. மேலும் இவ்வாறு தேர்வு பெறாதவர்களுடன் தேர்வாணையம் எவ்வித கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளாது' என தேர்வாணயம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டது.

முரண்பாடு:

ஆனால், இதற்கு மாறாக, தேர்வானவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறாத எஸ்.பி. முத்தமிழ்ச்செல்வி (509612), நடுகாட்டுராஜா (509882), கே. ஸ்டா லின் (517019), கே. சண்முகம் (515870) ஆகியோர் டி.எஸ்.பி. பதவிகளுக்கும், ஜி.பி. அருளரசு (574748), வி. துரைசாமி (537475), எஸ். மருது பாண்டியன் (548127), பி.எம். முருகேசன் (509658) , எம். ராஜா (512039) ஆகியோர் கூட்டுறவுச் சங் கங்களின் துணைப் பதிவாளர் பதவிக்கும், என்ஸ்ரீநிவாசன் (540819) வணிக வரி அலுவலர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி தேர்வாணைகளை (எண்: 719/ஓ.எஸ்.டி.-சி1.2000) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 15-4- 2008-ல் வெளியிட்டது.

அவரவர்களுக்குக் கடிதங்களையும் தேர்வாணையம் அனுப்பியது.

தவறு என்ன?

தமிழ்நாடு அரசின் விதிகளின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகள் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதவிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்யும்போது, மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பேரை தகுதி அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கலாம்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அந்தப்பதவிகளில் சேர விரும்பவில்லை என்று எழுத்து பூர்வமாக தெரிவித்தால் அந்தப் பதவிகளுக்கு தனியாகத் தேர்வு நடத்தாமல் அடுத்த நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபருக்கே அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

விதிகள் இப்படி இருக்க, பணியாளர் தேர்வாணையமோ காத்திருப்போர் பட் டியலில் உள்ள தகுதிவாய்ந்த நபர்களைப் புறக்கணித்துவிட்டு தேர்வு பெறாதவர்கள் என அறி விக்கப்பட்டவர்களில் சிலருக்கு தேர்வாணைகளை அளித்திருப் பது புதிராக உள்ளது.

சில ஆண்டுகள் சேவைக்கு பின்னர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ள இந்தப் பணியிடங்களுக் கான தேர்வில் தேர்வாணையம் இப்படி நடந்து கொண்டுள்ளது ஆணையத்தில் பெறும் முறை கேடு நடந்துள்ளதைக் காட்டுவ தாக ""காத்திருப்போர் பட்டியலில்'' உள்ளவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

விசாரணை தேவை:

இவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இல்லாத நபர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் ஆணையத்தின் முழு கூட்டம் நடத்தப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அரசின் ஒப்புதலுடன் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

ஆனால், மேற்கூறிய 10 பேருக்கும் தேர்வாணைகள் அனுப்பியதில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதால் அது விஷயத்தில் தேர் வாணைய உறுப்பினர்கள் சிலரே அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

பதில் இல்லை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் காசிவிஸ்வநாதன் வெளியூர் பயணத்தில் இருப்பதால், இது குறித்துத் தேர்வாணையம் தரப்பில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.