சனி, 25 செப்டம்பர், 2010

ஓசோன் குழும விவகாரம்: சி.எம்.டி.ஏ. மீதான புகாரை விசாரிக்க உத்தரவு!

சென்னை கோயம்பேடு சந்திப்பில் ஓசோன் குழுமத்தின் குடியிருப்பு திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.எம்.டி.ஏ. உறுப்பினர், செயலர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்திப்பில் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ்-பாட்டரீஸ் நிறுவனத்திடம் இருந்து 42 ஏக்கர் நிலத்தை ஓசோன் நிறுவனம் வாங்கி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை உருவாக்கியது.
இந்த 42 ஏக்கர் நிலத்தில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 1.77 ஏக்கர் நிலமும் சேர்த்து விற்கப்பட்டதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கோயில் நிலத்தை ஓசோன் குழுமத்தினர் தங்களது கட்டுமான திட்டத்துக்கு பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
  வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ள ஓசோன் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பான சர்ச்சை குறித்து தினமணியில் 2009 ஜூலை 14, 2010 ஏப்ரல் 19 ஆகிய தேதிகளில் செய்தி வெளியானது.
இரண்டுமுறையும் இதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பிரச்னை எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த சி.எம்.டி.ஏ. தலைவரும் செய்தித் துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி, ஓசோன் நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டதில் எவ்வித
விதிமீறலும் நடைபெறவில்லை என்றும், திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்தார்.
4.76 ஏக்கர் நிலம் அபகரிப்பு விவகாரம்: இந்த திட்டப் பகுதியில் அடங்கியுள்ள சர்வே எண்: 2307ஏ-ல் 3 ஏக்கர், சர்வே எண்: 2291ஏ-ல் 1.76 ஏக்கர் என மொத்தம் 4.76 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
இங்குள்ள மொத்த நிலத்துக்கும் 1914-ம் ஆண்டில் அமாவாசை, ஆளவட்டான் ஆகிய இருவரும் பூர்வீக உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இவர்களிடம் இருந்து வெவ்வேறு பெயர்களுக்கு நிலத்தின் உரிமை மாறியது.
அதன் பின்னர் இதன் ஒரு பகுதி நிலம் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தின் இப்போதைய உரிமையாளர்களின் முந்தைய தலைமுறையினர் வசம் வந்தது.
இதே சமயத்தில் இவர்களுக்கு போக மீதியுள்ள நிலத்தில் (சர்வே எண்: 2307ஏ-ல் 3 ஏக்கர், சர்வே எண்: 2291ஏ-ல் 1.76 ஏக்கர்) 4.76 ஏக்கர் நிலம் பூர்வீக உரிமையாளர்களான அமாவாசை, ஆளவட்டான் ஆகியோரின் வாரிசுகள் 21 பேருக்குச் சொந்தமாக இருந்தது.  இவர்கள் அனைவரும் நிலத்தின் உரிமையை தங்களது உறவினரான இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கருக்கு அளித்தனர். உடல் நல பாதிப்பு காரணமாக அவர் இறந்ததை அடுத்து, அவரது மகன் பார்த்தி பாஸ்கர் (எ) பாலகிருஷ்ணனுக்கு நிலத்தின் உரிமை 1996-ல் அளிக்கப்பட்டது.
இந்தப் பொது அதிகார ஆவணத்தைப் பயன்படுத்தி நிலத்துக்குப் பட்டா பெறுவதற்காக சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறை இயக்குநரை 1996-ல் பார்த்தி பாஸ்கர் அணுகினார். பிறகு இயக்குநரின் அறிவுறுத்தலின்படி கோயம்பேடு பகுதிகளுக்கான உதவி செட்டில்மென்ட் அதிகாரியை பார்த்தி பாஸ்கர் அணுகினார்.
ஆனால், தாமதம் மற்றும் வாரிசுகளின் அடையாளம் குறித்து எழுந்த கேள்விகள் அடிப்படையில் பட்டா வழங்க அவர் மறுத்துவிட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த செட்டில்மென்ட் அதிகாரியும் பட்டா வழங்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து பார்த்தி பாஸ்கர் தரப்பினர் சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறை இயக்குநரிடமே முறையிட்டனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இயக்குநர், மனுதாரர் பார்த்தி பாஸ்கர், ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் என இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்டறிந்த பின்னர், பட்டா வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள எழும்பூர்- நுங்கம்பாக்கம் வட்டாட்சியருக்கு 1999 ஜூலை 5-ம் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை சீராய்வு செய்யுமாறு நில நிர்வாக ஆணையரிடம் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தினர் மனுச் செய்தனர். இந்த மனுவின் அடிப்படையில் சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநரின் உத்தரவில் சில நுணுக்கமான காரணங்களைச் சீராய்வு செய்ய 2001 மே 14-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, பார்த்தி பாஸ்கர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு (எண்: 12613/2001) தொடர்ந்தனர். இந்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட நிலத்தில் எவ்வித கட்டுமான திட்டத்துக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து பார்த்தி பாஸ்கர் தரப்பில் 2002-ம் ஆண்டிலும், 2007-ம் ஆண்டிலும் சி.எம்.டி.ஏ.வுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேபத்தை கருத்தில் கொள்ளாமல் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தில் கட்டுமான திட்டம் மேற்கொள்ள ஓசோன் குழுமத்துக்கு 2009-ல் அனுமதி அளிக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார்: இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அது குறித்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பார்த்தி பாஸ்கர் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 10-6-2009-ல் புகார் அளிக்கப்பட்டது.
இதனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததை அடுத்து, இது தொடர்பாக பார்த்தி பாஸ்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சி.டி. செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ. சரவணன் ஆகியோர் ஆஜராகினர்.
தீர்ப்பு விவரம்: இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சி.டி. செல்வம் கடந்த மாதம் 27-ம் தேதி இறுதிகட்ட விசாரணைகளை முடித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
  ஓசோன் குழுமத்துக்கு திட்ட அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ள வேண்டும். திட்ட அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடுகள் புகார் குறித்து இந்த விசாரணையில் தெரிய வரும் தகவல்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி சி.டி. செல்வம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 22 செப்டம்பர், 2010

மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் சிபிஐ தொடர்ந்த வழக்குகள் முடக்கம்

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சிபிஐ பதிவு செய்த 127 வழக்குகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




இதில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் உள்ளிட்ட 38 அதிகாரிகள் மீதான வழக்குகளும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.



லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக சென்னை துறைமுகத்தில் சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் வி.வி. சாய்ராம் பாபு 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.



பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணி புரிந்து வருகிறார்.



சென்னையில் உள்ள சிபிஐ ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலனாய்வு முடிவடைந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தற்போது தடைபட்டுள்ளது. 1988-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு சட்டப்படி மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் முன்னர், அந்த குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் சிபிஐ அனுமதி பெற வேண்டும். இதன்படி சாய்ராம் பாபு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூன் 9-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.



மண்டல பாஸ்போர்ட் அதிகாரி:



இதேபோல, சென்னை மண்டல பாஸ்போர்ட் துறை அதிகாரியாக இருந்த சுமதி ரவிச்சந்திரன் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக 2009 ஏப்ரல் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது அஞ்சல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



இவர் மீதான வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவரது நியமன அதிகாரம் கொண்ட வெளியுறவுத்துறை உயரதிகாரியின் அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த மே 10-ம் தேதி கடிதம் அனுப்பினர்.



இந்தக் கடிதத்தின் மீது ஆய்வு செய்து உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சுமதி ரவிச்சந்திரன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தடைபட்டுள்ளது.



இதனால் வழக்கு அடுத்த நிலைக்குச் செல்லாமல் புலனாய்வு முடிந்த நிலையிலேயே முடங்கியுள்ளது.



குடிபெயர்வோர் பாதுகாவல்



அதிகாரி:



வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்வோருக்கு உரிய அனுமதி அளிப்பதற்காக சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவல் அலுவலகத்தின் அதிகாரியாக இருந்த சேகர், அதே அலுவலகத்தைச் சேர்ந்த அஸ்வினி குமார், லூர்து ஜெயசீலன் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.



இவர்கள் மீதான வழக்கிலும் புலனாய்வு முடிந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களின் நியமன அதிகாரம் கொண்ட உயரதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கடிதம் அனுப்பினர்.



இதற்கும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் இந்த வழக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையிலேயே முடங்கியுள்ளது.



127 வழக்குகள் முடக்கம்:



இந்த மூன்று வழக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 343 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதில் தமிழகத்தை சேர்ந்த 38 மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் முடங்கியுள்ளது. இது தொடர்பான அனைத்து வழக்கு விவரங்களையும் சிபிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.



தீர்வு எப்போது?



மத்திய அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி வரும் கடிதங்கள் நீண்ட காலமாக அனுமதி அளிக்கப்படாமல் வைக்கப்படுவதால் சிபிஐ தொடரும் லஞ்ச ஊழல் வழக்குகளின் நிலை கேள்விக்குறியாகிறது. இத்தகைய கடிதங்களுக்கு 3 மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் இத்தகைய போக்கு காரணமாக, சிபிஐ அதிகாரிகளின் பணிகள் மறைமுகமாக முடக்கப்படுவதாக கருதப்பட வேண்டியுள்ளது என லஞ்ச ஊழலுக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ஏடிஜிபி பதவி உயர்வு தாற்காலிகமாக ஒத்திவைப்பு?

தமிழக காவல் துறையில் ஐஜி நிலையில் உள்ள 2 மூத்த அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வழங்குவது தொடர்பான நடைமுறைகள் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காவல் துறையில் ஏஎஸ்பிக்களாக பணியைத் தொடங்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்படியாக எஸ்.பி., டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என பதவி உயர்வு பெறுகின்றனர். 

தமிழக காவல் துறையில் 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியில் சேர்ந்தவர்களில் லத்திகா சரண், பாலச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஆண்டு டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றனர். 

இதில் வயது மூப்பு காரணமாக பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து, 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாகச் சேர்ந்து பொருளாதார குற்றப் பிரிவில் ஏடிஜிபியாக இருந்த திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இவர் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திலகவதி பதவி உயர்வு பெற்றதை அடுத்து ஒரு ஏடிஜிபி பதவியிடம் காலியானது. இந்த நிலையில் 1978-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஏடிஜிபி அமித் வர்மா மாரடைப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

2 பேருக்கு ஏடிஜிபி வாய்ப்பு:

இதையடுத்து காலியாக உள்ள ஏடிஜிபி பதவியிடங்களின் எண்ணிக்கை 2 -ஆக அதிகரித்தது. காவல் துறை நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் தற்போது ஐஜிக்களாக உள்ளவர்களில் பதவி மற்றும் வயது மூப்பு அடிப்படையில் 2 அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.


டிஜிபி பதவியில் இருந்த ஒருவர் ஓய்வு பெற்றவுடன் ஏடிஜிபி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் நிலையில் இருந்த திலகவதிக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இதேபோல, 2 ஏடிஜிபி பதவியிடங்கள் காலியானதை அடுத்து ஐஜி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் 2 இடங்களில் உள்ளவர்களுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.

இதன்படி, 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்களான புறநகர் போலீஸ் கமிஷனராக உள்ள எஸ்.ஆர். ஜாங்கிட், சிறைத்துறை தலைவராக உள்ள ஜே.கே. திரிபாதி ஆகியோருக்கு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், இதற்கான வரிசைப்பட்டியல் அடங்கிய கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனைக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், பதவி உயர்வு விவகாரத்தில் எவ்வித இறுதி முடிவையும் எடுக்காமல் இருந்தது.

இந்த நிலையில் பதவி மூப்பு அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவர்களை மட்டும் உடனடியாக ஏடிஜிபிக்களாக ஆக்குவதைவிட, மேலும் சிலரைச் சேர்த்து 4 அல்லது 5 பேருக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வழங்குவது குறித்து அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பரிசீலிக்க குழு அமைப்பு:

இவ்வாறு கூடுதல் நபர்களுக்கு ஏடிஜிபி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றால் அதற்காக உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த குழுவின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களில் துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத, பெரிய அளவில் ஊழல் புகாருக்கு ஆளாகாத அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இவ்வாறு குழு அமைக்கப்படும் நிலையில், 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்கள் எஸ்.ஆர். ஜாங்கிட், ஜே.கே. திரிபாதி, டாக்டர் சி.கே. காந்திராஜன், 1986-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்களில் தற்போது உளவுத்துறை ஐஜியாக உள்ள ஜாபர்சேட், சஞ்சீவ்குமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என காவல்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நிர்வாக நடைமுறைகளின்படி இவ்வாறு குழு அமைக்கும் நடவடிக்கைகள் ஜனவரியில் தான் மேற்கொள்ளப்படும் என்பதால் தற்போது காலியாக உள்ள 2 ஏடிஜிபி பதவிகளுக்காக ஐஜிக்களுக்கு பதவி உயர்வு ஜனவரியில்தான் அறிவிக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

3 ஆண்டுகளாக இடமாற்றம் செய்யப்படாதவர்கள்... 

மேலும், அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் இருக்கும் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

இதன்படி இடமாற்றம் செய்யப்பட வேண்டிய அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளும் ஜனவரியில் மேற்கொள்ளப்படும். எனவே முக்கிய அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் அளிப்பது ஒரே சமயத்தில் மேற்கொள்ளலாம் என அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சென்னை மாநகராட்சி: சொத்துக் கணக்கு தாக்கல் செய்யாத 29 கவுன்சிலர்கள்

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 155 கவுன்சிலர்களில் 29 பேர் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

அரசு ஊழியர்களைப் போன்று மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களது சொத்து விவரங்களை ஆண்டுதோறும் உரிய அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும்.


பொது நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் மலிந்துவிடாமல் இருக்க இத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதற்கான தேர்தலில் போட்டியிடும் போது இது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன்பின்னர் ஆண்டு தோறும் தத்தமது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடும் போது மட்டுமே சொத்து விவரங்களை தாக்கல் செய்வதாகவும், அதன் பின்னர் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை என்றும் புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களாகப் பதவி வகிப்பவர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை பட்டாளத்தைச் சேர்ந்த பி. கல்யாணசுந்தரம் தகவல்களை கோரியிருந்தார்.

அதற்கு மாநகராட்சி அளித்த பதில்: இதற்கு, பதில் அளித்து மாநகராட்சியின் மன்றத்துறை பொதுத் தகவல் அலுவலர் அண்மையில் அளித்த  விவரம்:

சென்னை மாநகராட்சியில் மன்ற உறுப்பினர்களாக 155 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பதவியில் உள்ள காலத்தில் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை இவர்கள் அளிக்க வேண்டும்.

ஆனால், இவர்களில் மேயர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் சத்தியபாமா, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி உள்பட 126 பேர் மட்டுமே தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

29 பேர் தாக்கல் செய்யவில்லை:  சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 29 கவுன்சிலர்களின் வார்டு விவரம்:

பேசின்பாலம் மண்டலத்தில் 15, 18, 28 ஆகிய வார்டுகள். புளியந்தோப்பு மண்டலத்தில் 33, 34, 38, 44 ஆகிய வார்டுகள். கீழ்ப்பாக்கம் மண்டலத்தில் 66, 67, 74, 76 ஆகிய வார்டுகள். ஐஸ்ஹவுஸ் மண்டலத்தில் 81, 82, 83, 84, 85, 87, 90, 93, 96 ஆகிய வார்டுகள். நுங்கம்பாக்கம் மண்டலத்தில் 97, 105, 108 ஆகிய வார்டுகள்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 115, 125 ஆகிய வார்டுகள். சைதாப்பேட்டை மண்டலத்தில் 132, 135, 141 ஆகிய வார்டுகள். அடையார் மண்டலத்தில் 147-வது வார்டு ஆகியவற்றின் கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

இது தொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாக மாநகராட்சி மன்றத்துறையின் பொதுத் தகவல் அலுவலர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

அடிதடி தொடர்பாக 5 வழக்குகள் நிலுவை:

சென்னை மாநகராட்சியில் 2006-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மன்றக் கூட்டங்களில் அடிதடி தகராறுகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

இருப்பினும், 2001 முதல் 2006-ம் ஆண்டு மாநகராட்சி மன்றத்தில் பிரதான கட்சிகள் கணிசமான பலத்துடன் இருந்தன. இதன்காரணமாக, மன்றக் கூட்டங்களில் பல்வேறு தகராறுகள் ஏற்பட்டன.

இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது, மாநகராட்சி சொத்துக்கு சேதம் விளைவித்தது தொடர்பான நிகழ்வுகளின் போது மாநகராட்சி சார்பில் பெரியமேடு போலீஸில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் மீது புகார் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 2002-ம் ஆண்டில் குற்றப் பதிவேட்டு எண்கள்: 136002, 136202 ஆகிய வழக்குகளும், 2004-ம் ஆண்டில் குற்றப் பதிவேடு எண்கள்: 43904, 44004 ஆகிய வழக்குகளும், 2006-ம் ஆண்டு குற்றப் பதிவேடு எண்: 51706 ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவற்றில் சில வழக்குகளில் திமுக கவுன்சிலர்களும், சில வழக்குகளில் அதிமுக கவுன்சிலர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என மாநகராட்சி மன்றத்துறை பொதுத் தகவல் அலுவலர் தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: சென்னை புறநகரில் 19 இடங்களில் புதிய கட்டடங்கள் கட்ட தடை

பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி சென்னை புறநகரில் 19 இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளின் அருகில் 100 மீட்டர் சுற்றளவு வரை புதிய கட்டடங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க 1904-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1932-ம் ஆண்டு திருத்தப்பட்டது. 

ஆனால், அதன் பின் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவில்லை. நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகள் 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. 

ஆனால், விதிகளை மீறுவோர் மீதான சட்ட நடவடிக்கை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனை அமலாக்கும் அதிகாரத்தை யாருக்கு அளிப்பது என்பதிலும் குழப்பங்கள் நிலவின. 

இவ்வாறு கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்படாததால், நகர்புறப்பகுதிகளில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு அருகில் புதிய பெரிய கட்டடங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு பழமையான நினைவு சின்னங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான புதிய சட்டத்தை சில மாதங்கள் முன்னர் நிறைவேற்றியது. 

இதன்படி பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.

இதற்கு அப்பால் உள்ள 200 மீட்டர் தொலைவுக்கு புதிய கட்டடங்கள் கட்ட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் தடையின்மை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 

இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு நினைவுச்சின்னம் உள்ள பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இதில் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த பட்டியல் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை சி.எம்.டி.ஏ. தனது எல்லைக்குள் உள்ள அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது.
 
சென்னையில்...

  சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வெல்லெஸ்லி இல்லம், கிளைவ் இல்லம் உள்ளிட்ட 13 இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜார்ஜ் டவுன் பகுதியில் சட்டக் கல்லூரி வளாகத்தில் டேவிட் ஏல் மற்றும் ஜோசப் ஹிம்னர்ஸ் ஆகியோரது நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதி, தண்டையார்பேட்டையில் உள்ள பழைய டவுன் ஹால் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
சென்னை புறநகரில்...

 சென்னை புறநகரில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எருமையூரில் 32.68 ஏக்கர், குன்னத்தூர் கிராமத்தில் 22.9 ஏக்கர் மலை பகுதி, நந்தம்பாக்கம் கிராமத்தில் 0.91 ஏக்கர், சிக்காரயாபுரம் கிராமத்தில் 24.9 ஏக்கர், சிறுகளத்தூர் கிராமத்தில் 56.93 ஏக்கர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய தாம்பரம் தாலுகாவில், ஐயஞ்சேரி கிராமத்தில் 60 ஏக்கர், கடப்பேரி கிராமத்தில் 184.84 ஏக்கர், கிளாம்பாக்கம் கிராமத்தில் 46.95 ஏக்கர், நன்மங்கலம் கிராமத்தில் 8 ஏக்கர், நெடுங்குன்றம் கிராமத்தில் 48.40 ஏக்கர், ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 73.50 ஏக்கர் பகுதிகளில் பழமையான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
பல்லாவரத்தில்...

 பல்லாவரத்தில் பழைய பல்லாவரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சர்வே எண் 63-ல் 21.77 ஏக்கர், சர்வே எண் 56-ல் 36.15 ஏக்கர், திரிசூலம் பகுதியில் 51.25 ஏக்கர், பெரும்பாக்கம் கிராமத்தில் 157.67 ஏக்கர், பெருங்களத்தூர் கிராமத்தில் 206.77 ஏக்கர், செம்பாக்கம் கிராமத்தில் 164.47 ஏக்கர், மேடவாக்கம் அருகில் உள்ள சிட்டாலபாக்கத்தில் 20.63 ஏக்கர், பரங்கிமலை பகுதியில் 14.93 ஏக்கர், திருநீர்மலை கிராமத்தில் 58.75 ஏக்கர், வண்டலூரில் 3.31 ஏக்கர் இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தவிர மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், மணிமங்கலத்தில் உள்ள பழமையான கோயில் அமைந்துள்ள இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தலைமைத் தகவல் ஆணையர் நியமனம்: வழிமுறை மாறுமா?

தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்து சர்ச்சைகள் எழுவது தொடர்கதையாகி வருகிறது. நியமனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சேபணை மற்றும் மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பு என்ன என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் புதிய வழிமுறைகள் வகுக்கப்படாததே சர்ச்சைகள் எழுவதற்குக் காரணம் என தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


புதிய தலைமைத் தகவல் ஆணையர் யார் என்பது குறித்து அரசிடமிருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை காலை பதவியேற்றார்.

தொடரும் சர்ச்சைகள்...

தலைமைத் தகவல் ஆணையர் நியமனத்தில் சர்ச்சை ஏற்படுவது புதிதல்ல. இதற்கு முன்னர் தலைமைத் தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக உள்ள வஜாகத் ஹபிபுல்லாவை காஷ்மீர் மாநிலத் தலைமை தகவல் ஆணையராக நியமிக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

அப்போது புதிய தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்து முடிவு செய்ய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மூத்த மத்திய அமைச்சர் ஒருவரைக் கொண்ட குழு கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்றபின், தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை என்று கூறினார் அத்வானி.

இதனால் எவ்வித முடிவையும் எடுக்காமல் கூட்டத்தை ஒத்திவைத்தார் பிரதமர். பின்னர் வஜாஹத் ஹபிபுல்லா மாற்றம் கைவிடப்பட்டதை அடுத்து இதற்கான முயற்சிகள் முடிவுக்கு வந்தன.

ஆந்திரத்தில்...

ஆந்திர மாநிலத்தில் புதிய தலைமைத் தகவல் ஆணையரை தேர்வு செய்ய முதல்வர் ரோசையா தலைமையில் ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.

புதிய தலைமைத் தகவல் ஆணையரை அரசு தரப்பில் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு சடங்கு போல கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறி அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வெளியேறினார். ஆனாலும், அரசு அறிவித்த நபரே அங்கு தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார்.

தமிழகத்தில்...

இதனைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா பங்கேற்காத நிலையில் கே.எஸ். ஸ்ரீபதி புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைகள் எழுவது ஏன்?

முதல்வர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவின் மூலமாகவே நியமனம் செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், இந்தக் குழுவில் முதல்வரும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சரும் ஒரே நிலைப்பாட்டை எடுப்பதில் எவ்விதச் சிக்கலும் எழுவதில்லை.

ஆனால், இந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் நிலையில், மூன்றில் 2 பேர் (முதல்வர், அமைச்சர்) ஏற்றுக் கொண்டதால் பெரும்பான்மை கருத்து என்று கூறி நியமனம் நடைபெறுகிறது. அரசின் பொதுவான நடைமுறையின் அடிப்படையில் இந்த அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. இதுவே சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது என தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய அணுகுமுறை ஏற்கத்தக்கதா, இல்லையா என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 15-வது பிரிவில் தெளிவான விளக்கம் இல்லை என்பதால் மத்திய அரசு இது தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு திருத்தங்கள் செய்யாத நிலையில், நியமனம் தொடர்பான குழுவில் எதிர்கட்சித் தலைவரின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். அரசின் முடிவே நடைமுறைக்கு வரும். இது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அமலாக்கத்தையே நாளடைவில் சிதைத்துவிடும் என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.