வியாழன், 7 மே, 2009

ஓசையின்றி உயருகிறது சிமென்ட் விலை

கடந்த சில மாதங்களாக நிலையாக இருந்த சிமென்ட் விலை இப்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அடுத்த சில வாரங்களில் சிமென்ட் விலையை ஒரு மூட்டை ரூ. 300-ஆக அதிகரிப்பது என உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 2007 ஜனவரியில் ஒரு மூட்டை (50 கிலோ) சிமென்ட் விலை ரூ. 185-ஆக இருந்தது. இது அடுத்த 2 மாதங்களில் ரூ. 225 ஆனது.

சிமென்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. 2007 இறுதியில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 300 வரை அதிகரித்தது.

சிமென்ட் விலை உயர்வு மேலும் தொடர்ந்ததால் நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சில தனியார் கட்டுமான நிறுவனங்களும், கட்டுமான வல்லுநர் சங்கங்களும் சேர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்யத் தொடங்கின.

மத்திய அரசின் எம்.எம்.டி.சி. நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக சிமென்ட் இறக்குமதி செய்து, தேவைப்படுவோருக்குக் குறைந்த விலையில் அளிக்கத் தொடங்கியது. இந்த நிறுவனம் இறக்குமதி செய்யும் சிமென்டை தமிழ்நாடு சிமென்ட் கழகம் மூலம் வாங்கி நுகர் பொருள் வழங்கல் துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 300-ல் இருந்து ரூ. 230 வரை குறைந்தது. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 190-க்குள்ளேயே இருந்தது.

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று சிமென்ட் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு நீக்கியது.

கடந்த நவம்பரில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் பொருளாதார உறவுகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து உள்நாட்டில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை மீண்டும் உயர்த்தத் தொடங்கினர். கடந்த ஆண்டு மத்தியில் ரூ. 240-ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்டின் விலை இப்போது ரூ. 260-ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் விலை உயர்வு:

மக்களவைத் தேர்தல் பரபரப்பில், அரசியல் கட்சிகள் மூழ்கியிருக்கும் வேளையில், சிமென்ட் உற்பத்தியாளர்கள், விற்பனை முகவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிமென்ட் உற்பத்தியை இப்போதுள்ள அளவில் இருந்து 20 சதவீதம் குறைப்பது என்றும், விற்பனை விலையை படிப்படியாக ஒரு மூட்டைக்கு ரூ. 35 வரை அதிகரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 300-ஆக அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின் புதிதாக அமையும் மத்திய அரசிடம் தங்கள் துறைக்கு பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் ரூ. 260 ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்ட் விலை தற்போது ரூ. 268-ஆக அதிகரித்துள்ளது.

தேர்தலுக்குப் பின் விலை குறையுமா?

"ரூ. 90 செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 268-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, ஒரு மூட்டை சிமென்ட் விலையை ரூ. 160-க்குள் இருக்குமாறு கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் தமிழகப் பிரிவுத் தலைவர் எல். மூர்த்தி வலியுறுத்தினார்.

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பின் மத்திய, மாநில அரசுகளிடம் இது குறித்து முறையிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.