ஞாயிறு, 31 ஜூலை, 2011

வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்

சென்னை:உளவுப்பிரிவு முன்னாள் அதிகாரி ஜாபர் சேட் போல, மேலும் சில போலீஸ் அதிகாரிகளும், அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில், வீட்டு வசதி வாரிய மனைகள் பெற்று, அதை தனியார் பில்டர்களுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்து, மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், முதல்வர் கருணாநிதியின் மெய்க்காவல் பணிக்கு, சிறப்பு பாதுகாப்புப் பிரிவு சி.ஐ.டி.,யிலிருந்து, இன்ஸ்பெக்டர்கள் பி.பாண்டியன், சி.வினோதன், சி.கணேசன் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இதில், பாண்டியன் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார்.எந்நேரமும் முதல்வருடன் இருப்பவர்கள் என்பதால், டி.ஜி.பி., வரையிலான எல்லா உயர் அதிகாரிகள் மத்தியிலும், இவர்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர்.
இவர்களுக்கு மனைகள் ஒதுக்கியது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பொது தகவல் அதிகாரி அளித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, பாண்டியனின் மனைவி மீனாவுக்கு, அரசின் விருப்புரிமையில் சமூக சேவகர் பிரிவின் கீழ், சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள, 4,438 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: 1025) ஒதுக்கப்பட்டது.

(வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்: 172) இதற்கான தொகையான, 75.28 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.இதேபோல, அதே தேதியில் இன்ஸ்பெக்டர் சி.வினோதனுக்கு, அரசின் விருப்புரிமையில், சமூக சேவகர் பிரிவின் கீழ், சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள 4,393 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: 1024) ஒதுக்கப்பட்டது. (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்: 171) இதற்கான தொகையாக, 74.52 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் சி.கணேசனுக்கு, அரசின் விருப்புரிமையில், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் பிரிவின் கீழ், சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள, 4,320 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: 1023) ஒதுக்கப்பட்டது. (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்: 170) இதற்கான தொகையாக, 74.13 லட்ச ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.

தனியாருக்கு விற்பனை: பாண்டியனின் மனைவி மீனா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த கல்யாண்குமாரின் மனைவி கே.பத்மாவை, தனது பவர் ஏஜன்டாக 2009ம் ஆண்டு ஜனவரி 19ம்தேதி நியமித்தார். இதே, கே.பத்மாவை தனது பவர் ஏஜன்டாக கணேசன் நியமித்தார். எஸ்.கவுரி என்பவரை தனது பவர் ஏஜன்டாக வினோதன் நியமித்தார்.இந்த மூன்று மனைகளையும், அந்தந்த பவர் ஏஜன்டுகளிடமிருந்து, சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த ஏ.பாலா என்பவர், 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி வாங்கியுள்ளார். இது தொடர்பான ஆவணங்கள், சென்னை கொன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு மனையும், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, தலா 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள் ளன. மொத்தம் 13,151 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று மனைகளையும் வாங்கிய தனியார் நிறுவனத்தினர், அங்கு வர்த்தக நோக்கத்தில், அடுக்கு மாடி குடியிருப்புகளைக் கட்டி வருகின்றனர்.

தவறு எங்கே?


இது தொடர்பாக, வீட்டு வசதி வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:தங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை என்பதால், மனை ஒதுக்குமாறு கோருபவர்களுக்கு, அரசின் விருப்புரிமை அடிப்படையில் மனைகள் ஒதுக்கப்படுகின்றன.இந்த மனைகளுக்கான முழுத் தொகையைச் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்றாலும், வீட்டு வசதி வாரியத்தில் ஆட்சேபம் இல்லா சான்று பெற்ற பிறகே மனைகளையும், வீடுகளையும் தனியாருக்கு விற்க முடியும்.வர்த்தக நோக்கமின்றி, மக்களுக்கு வீட்டு வசதி அளிக்க வேண்டும் என்பதற்காக, வழங்கப்படும் மனைகளை தனியார் பில்டர்களுக்கு விற்பதும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து வீடுகள் கட்டி விற்பதும், இத்திட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது தான் என்றாலும், இதைத் தடுக்க கடுமையான விதிகள் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை எப்போது?வீட்டு வசதி வாரியத்தின் மனைகளை, தனியார் பில்டருடன் சேர்ந்து, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி விற்ற, முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி ஜாபர் சேட், முன்னாள் முதல்வரின் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்து வரும் நடவடிக்கை, இவர்கள் மீதும் பாயுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அரசுக்கு தெரியுமாம்!

இது தொடர்பாக, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, 2010ம் ஆண்டு ஜூலை 27ம் தேதியிட்ட கடிதம் மூலம், எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி., அளித்த பதில் விவரம்:"எஸ்.பி.சி.ஐ.டி., கோர் செல் பிரிவில், டி.எஸ்.பி.,யாக உள்ள பாண்டியன், தன் மனைவி மீனா பெயரில், வீட்டு வசதி வாரியத்தில் இருந்து, அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் மனை பெற்றார். அதை, கூட்டு நிறுவனமாக தனியார் ஒருவருடன் சேர்ந்து, மேம்பாடு செய்ய ஒப்பந்தம் செய்தார். அந்த மனைக்கான பணத்தை, மீனாவின் சார்பில் கூட்டு நிறுவனம், வீட்டு வசதி வாரியத்துக்கு செலுத்தியது தொடர்பான விவரங்கள், துறை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டன.

இதேபோல வினோதன், கணேசன் ஆகியோரும், தங்கள் பெயரில் மனை ஒதுக்கீடு பெற்றது; அதை கூட்டு நிறுவன அடிப்படையில், இன்னொருவர் மூலம் மேம்படுத்த, ஒப்பந்தம் செய்து கொண்டது உள்ளிட்ட விவரங்களை, தங்கள் துறை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இவை அவரவர் சர்வீஸ் பதிவேட்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது' என அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-வி.கிருஷ்ணமூர்த்தி -