இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் பெண்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் அரசும், அரசியல் கட்சிகளும் பாராமுகமாக உள்ளன.
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளோ அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. ஆனால், உண்ணாவிரதம் இருக்கும் பெண்களின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
கோரிக்கை என்ன?
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி "ஈழத் தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள்' அமைப்பு சார்பில் பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்த 20 பெண்கள் கடந்த 13-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்த முத்துக்குமாரின் கொளத்தூர் இல்லம் அருகே கடந்த 13-ம் தேதி இந்த உண்ணாவிரதம் தொடங்கியது.
மாலை 5 மணிக்கு மேல் போராட்டம் தொடர்ந்தால் கைது செய்வோம் என போலீஸôர் தெரிவித்ததால், உண்ணாவிரதப் போராட்ட இடம் மதிமுக தலைமையகமான தாயகத்துக்கு மாற்றப்பட்டது.
போர் நிறுத்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு ஆகியோர் உறுதி அளிக்காதவரை போராட்டத்தை தொடர்வது என "ஈழத்தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள்' அமைப்பினர் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவை நேரில் சந்தித்து மனு அளிக்கவும் இந்த அமைப்பினர் முயற்சித்தனர். இது குறித்து பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்ற தமிழக பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 60 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்கபாலு பதில்:
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியது: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிமுக அலுவலகத்துக்கு நான் சென்று சந்திப்பது எப்படி சாத்தியம்? எனவே, அவர்களை காங்கிரஸ் தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.
மேலும், அவர்களுக்காக எனது பிரசாரப் பணிகளை விட்டுவிட்டு சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கட்சி அலுவலகத்திலேயே காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை.
மதிமுக அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதில் இருந்தே இவர்களின் அரசியல் நோக்கம் வெளிப்படுகிறது'' என்றார் தங்கபாலு.
முன்னதாக இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாயகம் சென்றார். அப்போது அவரது பேச்சுக்கள் காங்கிரஸின் நிலையை எடுத்துரைப்பதாக இருந்ததால், உண்ணாவிரதப் பந்தலில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
உடல் நிலை பாதிப்பு:
உண்ணாவிரதப் போராட்டம் 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த ஜெயமணியின் உடல் நிலை ஞாயிற்றுக்கிழமை மோசமடைந்தது.
இதையடுத்து அவர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் 5-க்கும் மேற்பட்ட பெண்களின் உடல் நிலையும் மோசமடைந்து வருகிறது.
பொது இடத்தில்...:
போராட்டம் நடைபெறும் இடம் மதிமுக தலைமையகம் என்பதால் அரசுத் தரப்பில் இவர்களை நேரில் சந்திக்க அமைச்சர்கள் தயாராக இல்லை.
""உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோரில் சிலரை தலைமைச் செயலகத்துக்கு வருமாறு அரசுத் தரப்பில் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால், இந்த அழைப்பை நாங்கள் ஏற்கவில்லை'' என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக பெண்கள் இணைப்பு மையத்தின் மாநில தலைவர் ஷீலு தெரிவித்தார்.
""உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வரக்கூடாது என்று விரும்புவதால்தான், அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தலைமைச் செயலகத்தில் சந்திக்கத் தயாராக இருந்தும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. வீ. தங்கபாலு சத்தியமூர்த்தி பவனில் சந்திக்கத் தயாராக இருந்தும் இவர்கள் சந்திக்க மறுத்து விட்டனர்.
தனியார் இடத்துக்குள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்தால் மதிமுக பொறுப்பேற்குமா? அரசோ, காவல் துறையோ உள்ளே நுழைந்தால் அல்லது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் அதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.
அதைப் புரிந்து கொள்ளாமல் இந்தப் பெண்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க முடியாத அவஸ்தையில் இருக்கிறார்கள்'' என்று வருத்தப்படுகிறார்கள் தி.மு.க. தரப்பினர்.
"போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெண்கள் என்பதால் அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதில் நேரடியாக தலையிட்டு போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் தலைவர் நிர்மலா வலியுறுத்தினார்.
""தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது கவலைப்படப் போகிறதா? இந்தப் பெண்களுக்கு விபரீதம் ஏற்பட்டால் யாருக்கு லாபம்? இதில் எல்லாமா அரசியல் ஆதாயம் தேடுவது?'' என வருத்தப்படுகின்றனர் அந்தப் பெண்களின் உறவினர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக