சனி, 27 ஜூன், 2009

ஊதிய உயர்வு நிறுத்திவைப்பு: மாநில தேர்தல் ஆணைய ஊழியர்கள் புகார்

சென்னை, ஜூன் 26: தமிழக அரசின் உத்தரவுப்படி 6-வது ஊதியக்குழு பரிந்துரையின் ஊதிய உயர்வு வழங்குவது தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

6-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி 2009 ஜூன் 1-ம் தேதி முதல் என்ற புதிய விகிதத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துறைத் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, அனைத்துத் துறைகளிலும் பணிகள் தொடங்கி உள்ளன.


இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இங்குள்ள ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு விகிதங்கள் குறித்த பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் அண்மையில் தொடங்கின.

நிறுத்தி வைப்பு:

ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன், ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகள் அமலாக்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இங்குள்ள ஊழியர்களுக்கு ஜூன் மாதத்துக்கான ஊதியம் பழையபடியே குறிப்பிடப்பட்டு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஊதிய உயர்வு அமலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளை ஜூலை மாதம் மேற்கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அனைத்துத் துறை ஊழியர்களும் ஜூன் மாத ஊதியத்திலிருந்தே புதிய விகிதத்தில் ஊதியம் பெறும் நிலையில் நாங்கள் மட்டும் பழையபடியே ஊதியம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

தணிக்கை இல்லை:

அரசின் அனைத்துத் துறையின் நிர்வாக செலவு கணக்குகளும் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும் நிலையில் மாநிலத் தேர்தல் ஆணைய நிர்வாக செலவு கணக்குகள் மட்டும் தணிக்கை செய்யப்படாமல் உள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் ஆணைய புதிய கட்டட திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், "மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதுடன் நின்றுவிடாமல் அரசு ஊழியர்களின் பிரச்னைகளையும் தீர்க்கும் அரசாக இந்த அரசு உள்ளது' என குறிப்பிட்டார்.


ஆனால், எங்களது பிரச்னைகள் மட்டும் தீர்க்கப்படாமல் உள்ளது என்கின்றனர் தேர்தல் ஆணைய ஊழியர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக