தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் இயங்கும் சார்-பதிவாளர் அலுவலகங்களை ஆய்வு செய்து அடிப்படை வசதி தொடர்பான குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும் என பதிவுத்துறை தலைவர் டி. சபிதா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சார்பில், அனைத்து துணை பதிவுத்துறைத் தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள், அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடந்த 21-ம் தேதியிட்ட சுற்றறிக்கை விவரம்:
தமிழகம் முழுவதும் வாடகை மற்றும் அரசு கட்டடங்களில் செயல்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் கழிவறை, ஓய்வு அறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் பி. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை வழக்காகப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதிவுத்துறை தலைவருக்குக் கடந்த மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டது.
தினமணியில் செய்தி:
மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு தொடர்பாக கடந்த 12-ம் தேதி தினமணியில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து இப்பொருள் பதிவுத்துறை தலைவரால் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
1. தமிழகம் முழுவதும் தனியார் கட்டடங்களில் இயங்கும் பதிவுத்துறை அலுவலகங்களில் பணியாளர்கள் மற்றும் பதிவு பணிக்காக வரும் பொது மக்களுக்கு கழிவறை, குடிநீர், ஓய்வு அறை, இருக்கை வசதிகள் ஆகியவற்றை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும்.
2. கழிவறைகள் நீர் வசதியுடன் அமைக்கப்பட்டு சுகாதாரத்தைப் பேணி காக்கும் வகையில் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.
3. பணியாளர்களுக்கும், பதிவுப்பணிக்கு வருகை தரும் பொது மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் வசதி செய்யப்பட வேண்டும்.
4. இவ்வசதிகள் இல்லாத அலுவலகங்களில் கட்டட உரிமையாளர்களிடம் எழுத்து பூர்வமான கோரிக்கை வைத்து உரிய நடவடிக்கையை அந்தந்த அலுவலகத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதன்படி அந்தந்த கட்டட உரிமையாளர் மூலம் உரிய வசதிகள் செய்யப்படாவிடின், இத்தகைய வசதிகள் கொண்ட வேறு தனியார் கட்டடத்துக்கு அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
5. மாவட்டப் பதிவாளர் நேரில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் இன்றி சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருவது தெரிய வந்தால், அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சார்-பதிவாளருக்கு எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இதன்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதையும் அந்தந்த மாவட்டப் பதிவாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
6. தனியார் கட்டடங்களில் இயங்கும் பதிவுத்துறை அலுவலகங்கள் வேறு தனியார் கட்டடத்துக்கு மாற்றம் செய்யும்போது, கழிவறை, குடிநீர், ஓய்வு அறை ஆகிய அடிப்படை வசதிகள் கொண்ட கட்டடங்களையே தேர்வு செய்து மாற்ற வேண்டும்.
7. அரசு கட்டடங்களில் இயங்கிவரும் பதிவுத்துறை அலுவலகங்களிலும், பணியாளர்களுக்கும், அங்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கும் கழிவறை, குடிநீர், ஓய்வு அறை, இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
இந்த வசதிகள் இல்லாத அலுவலகங்களில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்தித்தர உரிய மதிப்பீட்டறிக்கைகளை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் இருந்து பெற்று முன்னுரிமைப் பட்டியல்கள் பதிவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு பெற சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள், பதிவுத்துறை துணைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் பதிவுத்துறை அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்பாக புகார்கள் எழா வண்ணம் செயல்படவும் அறிவுறுத்தப்படுகிறது என அந்த சுற்றறிக்கையில் பதிவுத்துறை தலைவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
புதன், 27 அக்டோபர், 2010
வெள்ளி, 15 அக்டோபர், 2010
போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்கும் பிரிவுக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு: தமிழக அரசு உத்தரவு
தமிழக காவல் துறை தலைமையகத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்கும் ரகசிய மற்றும் நம்பகப் பிரிவுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ÷அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது மற்றும் லஞ்ச ஊழலை ஒழிக்க உதவும் வகையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ÷பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட பல பிரச்னைகளுக்கு, இந்த சட்டத்தின் உதவியுடன் மக்கள் பெற்ற தகவல்களால் தீர்வு ஏற்பட்டது. ÷இந்த சட்டத்தின் 24 (2) வது பிரிவின்படி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களும், 8 (1) (எச்) பிரிவின்படி விசாரணையில் குற்ற வழக்குகளின் முக்கிய தகவல்களையும் பாதுகாக்க சட்டத்தில் விலக்கு தரப்பட்டுள்ளது. ÷நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் சுதந்திரத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்த விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ÷இதன்படி, தமிழக காவல் துறையில் உளவு மற்றும் தேச பாதுகாப்புடன் தொடர்புடைய சில முக்கிய பிரிவுகளுக்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுவிட்டன. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு: தமிழகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து 2008 ஆகஸ்டில் தமிழக அரசு உத்தரவிட்டது. ÷அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை பொது மக்கள் தெரிந்துக் கொள்வதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த விலக்கு அளிக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது. ÷இருப்பினும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணை விவரங்களை தெரிந்துக் கொள்வதைத் தடுக்கவே இந்த விலக்கு அளிக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. ÷இருப்பினும், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வந்த அனைத்து மனுக்களையும் இந்த விலக்கு ஆணையை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத் துறை திருப்பி அனுப்பி வருகிறது. ÷இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதில், ஒரு குறிப்பிட்ட மனு தொடர்பாக வந்த மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் விசாரித்தது. ÷கடந்த ஆண்டு இந்த மனுவை விசாரித்த தமிழக தலைமை தகவல் ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன், விலக்கு ஆணை இருந்தாலும் மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மீண்டும் விலக்கு ஆணை: இந்த நிலையில் தமிழக காவல் துறையில் காவலர் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை உள்ள அனைத்து அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிப்பது, மேலும், துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகள் டிஜிபி அலுவலகத்தில் உள்ள ரகசிய மற்றும் நம்பகப் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ÷அண்மைக்காலமாக தமிழக காவல் துறையில் குறிப்பாக ஐஜி, ஏடிஜிபி நிலையில் உள்ள சில அதிகாரிகள் மீது புகார்கள் வந்துள்ளன. ÷இந்தப் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காவல் துறை பதிலளிக்க வேண்டும். அரசாணை வெளியீடு: இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த டிஜிபி அலுவலகத்தின் ரகசிய மற்றும் நம்பகப் பிரிவுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுடன் இதற்கான அரசாணை (உள்துறை எண்: 854) கடந்த 1-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது என உள்துறை முதன்மை செயலாளர் கே.ஞானதேசிகன் தெரிவித்தார். ÷கடந்த ஏப்ரல் 8-ம் தேதியிட்ட டிஜிபியின் கடிதத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 24(4)-ன் படி இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வலர்கள் அதிர்ச்சி: ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரிவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். ÷தகவல் பெறும் உரிமை சட்டத்தை முடக்கும் இத்தகைய நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்றும் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
திங்கள், 4 அக்டோபர், 2010
ஏடிஜிபி இல்லாத தமிழக உளவுப் பிரிவு!
தமிழக காவல் துறையில் உளவுப் பிரிவுக்கான ஏடிஜிபி பதவி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. தமிழக காவல் துறையில் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை என்ற உளவுப் பிரிவு மிக முக்கியமானது. இடதுசாரி தீவிரவாதிகள், குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), இலங்கை தமிழ் ஈழப் போராளிகள், நக்சல் ஆகியோர் குறித்த தகவல்களைச் சேகரிப்பதுடன், அத்தகையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணிகளை "க்யூ' பிரிவு மேற்கொண்டு வருகிறது. கடலோரப் பகுதிகளில், கடத்தல் சம்பவங்களுக்கு எதிராகவும் இப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத அடிப்படைவாதம், பயங்கரவாத அமைப்புகள், மதரீதியான பிரசார மையங்கள், தடை செய்யப்பட்ட வகுப்புவாத அமைப்புகள், அடிப்படைவாத அமைப்புகள் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக சிறப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (எஸ்பிசிஐடி) உளவு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு: முதல்வர் உள்ளிட்ட மிக முக்கிய நபர்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்கள், மத்திய, மாநில அரசுகளில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக தொடங்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையும் உளவுப் பிரிவின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.அதிகாரிகள் விவரம்: இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் இப் பிரிவு ஒரு ஏடிஜிபி, 2 ஐஜி, 1 டிஐஜி, 5 காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமையிடத்திலும், மாவட்டங்களில் கீழ் நிலை அதிகாரிகள் தலைமையிலும் செயல்பட்டு வருவதாக தமிழக அரசின் காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக காவல் துறையில் உளவுப் பிரிவு இப்போது, ஜாபர் சேட், சங்கர் ஜிவால் ஆகிய 2 ஐஜிக்கள் தலைமையிலேயே செயல்பட்டு வருகிறது. இதில் எஸ்பிசிஐடி, பாதுகாப்புப் பிரிவு சிஐடி, பொதுவான உளவு பணிகளை மேற்கொள்ளும் பிரிவுகள் 1986-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட் தலைமையில் செயல்பட்டு வருகிறது. க்யூ பிரிவு, சிறப்புப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை உள்ளிட்டவை 1990-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவால் தலைமையிலும் செயல்படுவதாக காவல் துறையின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், விழுப்புரம் அருகே ரயில்பாதையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது தொடர்பான வழக்கு க்யூ பிரிவு போலீஸôரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இத்தகைய சமயங்களில் வழக்கு விசாரணை குறித்து ஏடிஜிபி நிலையிலான அதிகாரி மட்டும் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்க முடியும். ஆனால், இப்பிரிவில் ஏடிஜிபி இல்லாததால் உளவு பிரிவில் இருக்கும் அதிகாரிகளில் மூத்த அதிகாரி என்ற அடிப்படையில் ஜாபர் சேட் செய்தியாளர்களை சந்தித்தார். ஏடிஜிபி பதவி காலியாக இருப்பதால் முக்கியமான பல்வேறு சமயங்களில் யார் முடிவெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு முதல்... 2006-ம் ஆண்டு முதல் ஏடிஜிபி சேகர் உளவுப் பிரிவின் ஏடிஜிபியாக பதவி வகித்து வந்தார். 2008-ம் ஆண்டு மே மாதம் அவர் சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த அந்த பதவிக்கு ஏடிஜிபி அனூப் ஜெய்ஸ்வால் 2008-ம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 2009-ல் அனூப் ஜெய்ஸ்வால் உளவுப் பிரிவில் இருந்து மாற்றப்பட்டார். இதையடுத்து அந்த பதவி காலியாகவே இருந்து வருகிறது. அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறும் உளவுப் பிரிவில் பணிகளை ஒருங்கிணைத்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் அதிகாரம் உள்ள பதவி காலியாக வைக்கப்பட்டிருப்பதை வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழகத்தில் சட்ட மேலவை, மற்றும் பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற வேண்டியிருப்பது, பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு உளவுப் பிரிவு ஏடிஜிபி பதவியை அரசு விரைவில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)