புதன், 27 அக்டோபர், 2010

பத்திரப்பதிவு அலுவலகங்களில் அடிப்படை வசதிகள்: பதிவுத்துறைத் தலைவர் ஆணை

தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் இயங்கும் சார்-பதிவாளர் அலுவலகங்களை ஆய்வு செய்து அடிப்படை வசதி தொடர்பான குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும் என பதிவுத்துறை தலைவர் டி. சபிதா உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சார்பில், அனைத்து துணை பதிவுத்துறைத் தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள், அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடந்த 21-ம் தேதியிட்ட சுற்றறிக்கை விவரம்:

தமிழகம் முழுவதும் வாடகை மற்றும் அரசு கட்டடங்களில் செயல்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் கழிவறை, ஓய்வு அறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் பி. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை வழக்காகப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதிவுத்துறை தலைவருக்குக் கடந்த மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டது.

தினமணியில் செய்தி: 

மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு தொடர்பாக கடந்த 12-ம் தேதி தினமணியில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து இப்பொருள் பதிவுத்துறை தலைவரால் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

1. தமிழகம் முழுவதும் தனியார் கட்டடங்களில் இயங்கும் பதிவுத்துறை அலுவலகங்களில் பணியாளர்கள் மற்றும் பதிவு பணிக்காக வரும் பொது மக்களுக்கு கழிவறை, குடிநீர், ஓய்வு அறை, இருக்கை வசதிகள் ஆகியவற்றை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும்.

2. கழிவறைகள் நீர் வசதியுடன் அமைக்கப்பட்டு சுகாதாரத்தைப் பேணி காக்கும் வகையில் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

3. பணியாளர்களுக்கும், பதிவுப்பணிக்கு வருகை தரும் பொது மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் வசதி செய்யப்பட வேண்டும்.

4. இவ்வசதிகள் இல்லாத அலுவலகங்களில் கட்டட உரிமையாளர்களிடம் எழுத்து பூர்வமான கோரிக்கை வைத்து உரிய நடவடிக்கையை அந்தந்த அலுவலகத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதன்படி அந்தந்த கட்டட உரிமையாளர் மூலம் உரிய வசதிகள் செய்யப்படாவிடின், இத்தகைய வசதிகள் கொண்ட வேறு தனியார் கட்டடத்துக்கு அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

5. மாவட்டப் பதிவாளர் நேரில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் இன்றி சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருவது தெரிய வந்தால், அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சார்-பதிவாளருக்கு எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இதன்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதையும் அந்தந்த மாவட்டப் பதிவாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

6. தனியார் கட்டடங்களில் இயங்கும் பதிவுத்துறை அலுவலகங்கள் வேறு தனியார் கட்டடத்துக்கு மாற்றம் செய்யும்போது, கழிவறை, குடிநீர், ஓய்வு அறை ஆகிய அடிப்படை வசதிகள் கொண்ட கட்டடங்களையே தேர்வு செய்து மாற்ற வேண்டும்.

7. அரசு கட்டடங்களில் இயங்கிவரும் பதிவுத்துறை அலுவலகங்களிலும், பணியாளர்களுக்கும், அங்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கும் கழிவறை, குடிநீர், ஓய்வு அறை, இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

இந்த வசதிகள் இல்லாத அலுவலகங்களில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்தித்தர உரிய மதிப்பீட்டறிக்கைகளை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் இருந்து பெற்று முன்னுரிமைப் பட்டியல்கள் பதிவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு பெற சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள், பதிவுத்துறை துணைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் பதிவுத்துறை அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்பாக புகார்கள் எழா வண்ணம் செயல்படவும் அறிவுறுத்தப்படுகிறது என அந்த சுற்றறிக்கையில் பதிவுத்துறை தலைவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக