திங்கள், 29 நவம்பர், 2010

832 எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல்

தமிழக காவல் துறையில் புதிதாக தேர்வு நடத்தி 832 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான முறையான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் விரைவில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.
தமிழக காவல் துறையில் பட்டதாரி இளைஞர்கள் சேர்வதற்கான முதல்கட்ட நேரடி வாய்ப்பாக உதவி ஆய்வாளர் பதவி அமைந்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலமே இதற்கு தேர்வு நடத்தப்படுகிறது.
பள்ளி படிப்பை முடித்து இரண்டாம் நிலை காவலர்களாக சேர்பவர்களும், பட்டப்படிப்பு முடித்து உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வுபெறுகின்றனர். அதனால், பட்டதாரி இளைஞர்கள் மட்டுமல்லாது காவல் துறையில் சேர்ந்த பின்னர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மத்தியிலும் உதவி ஆய்வாளர் பணிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் தமிழக காவல் துறையில் 767 ஆண்கள், 328 பெண்கள் என மொத்தம் 1,095 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்டது.
ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் எழுத்துத்தேர்வும், ஆகஸ்ட் 17-ம் தேதி உடல் தகுதித்திறன் தேர்வு உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குற்ற ஆவண காப்பக வளாகத்தில் கடந்த மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதனையடுத்து, விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, போலீஸ் விசாரணைக்குப் பின் தேர்வானவர்களின் இறுதிப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
அடுத்தத் தேர்வு எப்போது? இந்த நிலையில், போலீஸ் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அடுத்த தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு பட்டதாரி இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே காவல் துறையில் ஆயிரத்துக்கும் அதிகமான உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, 832 உதவி ஆய்வாளர் பணியிடங்களை 2010-2011 ஆண்டில் நிரப்ப காவல் துறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுப் பிரிவில் 717 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், தொழில்நுட்பப் பிரிவில் 115  உதவி ஆய்வாளர் பணியிடங்களும் இதில் அடங்கும். இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஏற்கெனவே காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக உள்ளவர்களில் தகுதியுடையோருக்கு ஒதுக்கப்படும்.
கொள்கை அளவிலான அரசின் ஒப்புதலை அடுத்து நிர்வாக ரீதியான அனுமதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்துக்கு வரவேண்டியுள்ளது.
இந்த அனுமதி வந்தவுடன் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆணையர்கள் பற்றாக்குறையால் முடங்கும் தகவல் ஆணையம்

தகவல் ஆணையர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். 
 அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் அமலாக்கத்துக்காக மாநில அளவிலான தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. 2006-ல் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டது.
 ஓய்வுபெற்ற அரசு அதிகாரி எஸ். ராமகிருஷ்ணன் தலைமைத் தகவல் ஆணையராகவும், ஜி. ராமகிருஷ்ணன், ரத்தினசாமி ஆகியோர் தகவல் ஆணையர்களாகவும் 28-01-2006-ல் நியமிக்கப்பட்டனர்.  இதன்பின்னர், மேல்முறையீட்டு மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், முதல்வரின் முன்னாள் செயலாளர் டி.ஆர். ராமசாமி, பெருமாள்சாமி, சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் 7-5-2008-ல் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர்.
 தகவல்பெறும் உரிமைச் சட்டப்படி மாநிலத் தகவல் ஆணையத்தில் தேவைக்கு ஏற்ப 10 ஆணையர்கள் வரை நியமித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும், தமிழ்நாடு மாநிலத்தகவல் ஆணையத்தில் 7 பேர் அளவுக்கே தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், மனுதாரர்கள் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில், தகவல் ஆணையர் ரத்தினசாமி 12-05-2009-ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து ஒரு பதவியிடம் காலியாக இருந்தது.  தலைமைத் தகவல் ஆணையராக இருந்த எஸ். ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.
அவரைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி செப்டம்பர் 1-ம் தேதி தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.  இதையடுத்து மற்றொரு தகவல் ஆணையரான ஜி. ராமகிருஷ்ணன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி ஒய்வு பெற்றார். இந்த நிலையில் தகவல் ஆணையர் டி.ஆர். ராமசாமி அக்டோபர் 30-ம் தேதி காலமானார்.  இப்போது தகவல் ஆணையத்தில் 3 தகவல் ஆணையர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளன.

 தலைமைத் தகவல் ஆணையராக இருந்த எஸ். ராமகிருஷ்ணன் நிர்வாகப் பணிக்கு இடையில், புதன்கிழமை தோறும் மனுக்களை விசாரித்து உத்தரவுகளை வழங்கிவந்தார். ஆனால், அவரைத் தொடர்ந்து அப்பதவிக்கு வந்த கே.எஸ்.ஸ்ரீபதி பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியான பணிகளை மட்டுமே ஆய்வு செய்து வருவதால், எஞ்சியுள்ள 3 தகவல் ஆணையர்களே அனைத்து மனுக்களையும் விசாரித்து உத்தரவுகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  தகவல் ஆணையர்கள் பெருமாள்சாமி, சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன் ஆகிய 3 பேர் மட்டுமே இப்போது மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து உத்தரவுகள் வழங்கி வருகின்றனர்.

 ஆனால், இதே சமயத்தில் முன்பு இருந்ததைவிட மேல்முறையீட்டு மனுக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த 3 ஆணையர்களுக்கும் பணிச்சுமை வெகுவாக அதிகரித்துள்ளது.  இதன்காரணமாக, தகவல் ஆணையர்களால் மேல் முறையீட்டுக்காக வரும் மனுக்கள் மீது முழுமையாக விசாரணை நடத்தி குறிப்பிடத்தக்க வகையில் உத்தரவுகள் வழங்குவது இயலாத ஒன்றாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு மனு மீதான விசாரணையும் ஓரிரு நிமிடங்களிலேயே முடிக்கப்பட்டு மேலெழுந்தவாரியாக தொடர்புடைய துறையினருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.  இதனால், தொடர்புடைய பொதுத் தகவல் அதிகாரி மீதான மனுதாரரின் குற்றச்சாட்டு என்ன என்பதை தகவல் ஆணையர்கள் முழுமையாகக் கேட்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் ஆணையத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அவசரகதியில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் பல ஒன்றுக்கொன்று முரண்பட்டும் இருப்பதால் மனுதாரர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

சிற்றலை நேயர்களின் சங்கமம்!

சிற்றலை நேயர்களின் சங்கமம்!

வானொலி கேட்பது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, வாழ்க்கையில் அது ஒரு முக்கிய அம்சமாகிப்போனது.  துல்லியமான டிஜிட்டல் ஒலிபரப்பு, இணையதளம் மூலமான ஒலிபரப்பு, செயற்கைக்கோள் மூலமான ஒலிபரப்பு, பண்பலை வானொலி, சிற்றலை வானொலிகளுடன் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளும் சேர்ந்து அறுசுவை விருந்து வைக்கின்றன.  இது குறித்து சர்வதேச வானொலி பத்திரிகை ஆசிரியர் ஜெயசக்திவேலிடம் பேசினோம்...
""வானொலி ஒலிபரப்பில் மத்திய அலை, பண்பலை ஆகியவை மூலம் அதிக தொலைவுள்ள பகுதிகளுக்கு ஒலிபரப்பு செய்ய முடியாது. ஆனால் சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் குறைந்த செலவில் அதிக தொலைவுக்கு ஒலிபரப்பு செய்ய முடியும்.
சிற்றலை வானொலி ஒலிபரப்பின் அடிப்படையில் ஹாம் ரேடியோ எனப்படும் அமெச்சூர் வானொலி ஒலிப்பரப்பு முறை உருவாகி உலகம் முழுவதும் பிரபலமானது.
அதனாலேயே, அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்கள் சிற்றலை வானொலி நேயர்களாக மாறுவதும், சிற்றலை நேயர்கள் அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்களாக மாறுவதும் வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது.
மத்திய அலை, பண்பலை ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள மக்களுக்கு தகவல்களை தெரிவிக்க சிற்றலை ஒலிபரப்பு அவசியம் என்பதால் எல்லா நாடுகளிலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இத்தகைய ஒலிபரப்புகளை கேட்பவர்கள் அந்த நிகழ்ச்சி மற்றும் அது ஒலிபரப்பான அலைவரிசை, நேரம் உள்ளிட்ட விவரங்களை அந்த நிலையத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்தால் அந்த விவரங்களைச் சரிபார்த்து, அதற்கான அடையாள அட்டை (க்யு.எஸ்.எல்.) சம்பந்தப்பட்ட வானொலி நிலையத்தில் இருந்து நேயருக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு, பல்வேறு ஒலிபரப்புகளை கேட்டு, அதற்கான அடையாள அட்டைகளைச் சேகரிப்பது அஞ்சல் தலை சேகரிப்பு போல மிகவும் பிரசித்தமானது.
இத்தகைய சிற்றலை நேயர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் சிற்றலை வானொலி நேயர் மன்றம் தொடங்கப்பட்டது. இதில் தற்போதைய நிலையில் நியுசிலாந்தில் உள்ள நேயர் மன்றம் மிகவும் பழமையானது. அதனை அடுத்து ஜப்பான் போன்ற நாடுகளில் செயல்படும் நேயர் மன்றங்கள் வருகின்றன.
இந்த நேயர் மன்றங்கள் சார்பில் சர்வதேச அளவிலும், அவ்வப்போது சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களும் நேயர்களின் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றன.
இதில் பென்சில்வேனியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சிற்றலை நேயர்கள் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். உலகில் அதிக எண்ணிக்கையில் சிற்றலை நேயர்கள் பங்கேற்ற கூட்டம் என இது சிறப்பு பெற்றது.
இதுவரை வெளிநாடுகளிலேயே இத்தகைய கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்தியாவில் உள்ள சிற்றலை நேயர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாமலேயே இருந்துவந்தது.
தற்போது இப்படிப்பட்ட நேயர்கள் ஒரே இடத்தில் சங்கமித்த அரிய நிகழ்வு அண்மையில் பொள்ளாச்சியின் புளியம்பட்டியில் நடந்தது. அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர் சங்கங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியில்  60-க்கும் மேற்பட்டோர் சிற்றலை நேயர்கள் எனப் பதிவு செய்து, கூட்டத்தில் பங்கேற்றனர்.  இவர்களைத் தவிர அமெச்சூர் ஒலிபரப்பில் ஈடுபட்டுள்ள 400-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜப்பான், வியட்நாம், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த சிற்றலை நேயர் மன்ற நிர்வாகிகளும் இதில் பங்கேற்றது சிறப்பாக அமைந்திருந்தது.
அரிதானது எனக் கருதப்படும் தொலைதூரத்தில் உள்ள சிறிய சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற கியு.எஸ்.எல். அட்டைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது'' என்றார்.
""சிற்றலை வானொலி கேட்பது என்பது, வெறும் பொழுதுபோக்கு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, முதலில் பல்வேறு மொழிகளை அடையாளம் காண உதவும் ஒரு பெரிய கருவியாக அமைந்துள்ளது. அதற்கு பிறகு, வெவ்வேறு நாடுகளின் கலாசாரம், பண்பாடு மற்றும் தற்போதைய நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் ஊடகமாக அமைந்துள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட வானொலி நேயர் மன்றங்கள் மூலம் சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் எங்களிடம் பிரபலமானது. ஜப்பானியர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பழக்கம் ஊக்கமளித்தது என்றால் அது மிகையல்ல.
ஆனால், புதிய தலைமுறையினரிடம் போதிய ஊக்கமின்மை காரணமாக சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் மெல்ல மெல்ல நலிந்து வருவது எங்களைப் போன்றவர்களுக்கு வருத்தம் அளிப்பதாக அமைந்துள்ளது'' என ஜப்பானில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வந்திருந்த ஜப்பான் சிற்றலை வானொலி நேயர் மன்றத்தின் நிர்வாகக் குழு
உறுப்பினர் தோஷிமிச்சி ஹோடாகே கூறினார்.
தமிழகத்தில் 40 வயதை கடந்தவர்களில் சுமார் 50 லட்சம் பேர் சிற்றலை வானொலி நேயர்களாக உள்ளனர்.
""ஜெயின்ட் ஹெலினா, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, வாய்ஸ் ஆப் துருக்கி, ரேடியோ ருமேனியா உள்ளிட்ட பல நிலையங்களின் ஒலிபரப்புகள் தமிழக சிற்றலை நேயர்களிடம் பிரபலமானதாக உள்ளன. இருப்பினும், புதிய தலைமுறை அமெச்சூர் ஒலிபரப்பாளர்கள் பலரிடம் சிற்றலை வானொலி ஒலிபரப்பு இன்னமும் பிரபலமாகாத ஒன்றாக மாறிவருகிறது. இத்தகைய கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமே சிற்றலை ஒலிபரப்புகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை அடுத்த தலைமுறையினருக்குப் புரியவைக்க முடியும்'' என்றார் ஜெய சக்திவேல்.


செவ்வாய், 9 நவம்பர், 2010

காவலர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் குறைபாடு: 6 வாரங்களுக்குள் அறிக்கை தர மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள காவலர் குடியிருப்புகளில் காணப்படும் அடிப்படை வசதி குறைபாடுகளை 6 வாரங்களுக்குள் சரி செய்து, அதுகுறித்து தெரிவிக்குமாறு காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 தமிழக காவல்துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு பிரிவுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான காவலர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
 இவர்களுக்கான குடியிருப்பு மற்றும் காவல்துறை சார்ந்த கட்டுமான திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 இந்தக் கழகம் மூலம் இதுவரை 26,385 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கழகம் தொடங்கப்படுவதற்கு முன்னர் வீட்டுவசதி வாரியம் மூலம் கட்டப்பட்டதுடன் சேர்த்து மொத்தம் 45,847 குடியிருப்புகள் கட்டப்பட்டு காவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 மொத்தம் உள்ள காவலர்களில் இதுவரை 43.75 சதவீதம் பேருக்கான குடியிருப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 3,953 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 3.77 சதவீத காவலர்களின் குடியிருப்புத் தேவை பூர்த்தி செய்யப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
 இவ்வாறு கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடுபெறும் காவலர்களின் மாத ஊதியத்தில் இருந்து குடியிருப்புக்கான வாடகை என குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
 இந்த குடியிருப்புகளில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் பொறுப்பாகும். ஆனால், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள காவலர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என காவலர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சில குடியிருப்புகளில் இந்தக் குறைபாடு காரணமாக பெரும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.
 இது தொடர்பாக எந்தக் காவலராவது புகார் தெரிவித்தால், புகாரை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அந்தக் காவலர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 இந்தக் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளைப் பராமரிக்கும் பணிகளுக்காக காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் ஆண்டு திட்டத்தில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இருப்பினும், உரிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இந்த நிதி என்ன ஆகிறது என்பது புதிராக உள்ளது.
 சில இடங்களில் காவலர் குடும்பத்தினரே தங்கள் செலவில் அடிப்படை வசதிகளை சரி செய்துகொள்கின்றனர். இது எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை என்கின்றனர் காவலர் குடியிருப்புவாசிகள்.
 மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு:
 அரசு மற்றும் காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் இந்த அணுகுமுறை காவலர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்றும், இது விஷயத்தில் உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு பஞ்சமி நில மீட்புப் படையின் மாநிலத் தலைவர் பி. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
 மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு:
 இந்த மனு, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.எஸ். வெங்கடாசலமூர்த்தி முன்னிலையில் வழக்காக பதிவு (எண்: 8672-2010-சிபி) செய்யப்பட்டு கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
 விசாரணைக்கு பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
 காவலர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்பான இந்த மனு டிஜிபி அலுவலகத்தில் உள்ள நிர்வாகப்பிரிவு ஏடிஜிபிக்கு அனுப்பப்படுகிறது. இது குறித்து விசாரித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுóக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் மனித உரிமைகள் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


By வி.கிருஷ்ணமூர்த்தி