வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆணையர்கள் பற்றாக்குறையால் முடங்கும் தகவல் ஆணையம்

தகவல் ஆணையர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். 
 அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் அமலாக்கத்துக்காக மாநில அளவிலான தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. 2006-ல் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டது.
 ஓய்வுபெற்ற அரசு அதிகாரி எஸ். ராமகிருஷ்ணன் தலைமைத் தகவல் ஆணையராகவும், ஜி. ராமகிருஷ்ணன், ரத்தினசாமி ஆகியோர் தகவல் ஆணையர்களாகவும் 28-01-2006-ல் நியமிக்கப்பட்டனர்.  இதன்பின்னர், மேல்முறையீட்டு மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், முதல்வரின் முன்னாள் செயலாளர் டி.ஆர். ராமசாமி, பெருமாள்சாமி, சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் 7-5-2008-ல் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர்.
 தகவல்பெறும் உரிமைச் சட்டப்படி மாநிலத் தகவல் ஆணையத்தில் தேவைக்கு ஏற்ப 10 ஆணையர்கள் வரை நியமித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும், தமிழ்நாடு மாநிலத்தகவல் ஆணையத்தில் 7 பேர் அளவுக்கே தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், மனுதாரர்கள் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில், தகவல் ஆணையர் ரத்தினசாமி 12-05-2009-ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து ஒரு பதவியிடம் காலியாக இருந்தது.  தலைமைத் தகவல் ஆணையராக இருந்த எஸ். ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.
அவரைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி செப்டம்பர் 1-ம் தேதி தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.  இதையடுத்து மற்றொரு தகவல் ஆணையரான ஜி. ராமகிருஷ்ணன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி ஒய்வு பெற்றார். இந்த நிலையில் தகவல் ஆணையர் டி.ஆர். ராமசாமி அக்டோபர் 30-ம் தேதி காலமானார்.  இப்போது தகவல் ஆணையத்தில் 3 தகவல் ஆணையர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளன.

 தலைமைத் தகவல் ஆணையராக இருந்த எஸ். ராமகிருஷ்ணன் நிர்வாகப் பணிக்கு இடையில், புதன்கிழமை தோறும் மனுக்களை விசாரித்து உத்தரவுகளை வழங்கிவந்தார். ஆனால், அவரைத் தொடர்ந்து அப்பதவிக்கு வந்த கே.எஸ்.ஸ்ரீபதி பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியான பணிகளை மட்டுமே ஆய்வு செய்து வருவதால், எஞ்சியுள்ள 3 தகவல் ஆணையர்களே அனைத்து மனுக்களையும் விசாரித்து உத்தரவுகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  தகவல் ஆணையர்கள் பெருமாள்சாமி, சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன் ஆகிய 3 பேர் மட்டுமே இப்போது மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து உத்தரவுகள் வழங்கி வருகின்றனர்.

 ஆனால், இதே சமயத்தில் முன்பு இருந்ததைவிட மேல்முறையீட்டு மனுக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த 3 ஆணையர்களுக்கும் பணிச்சுமை வெகுவாக அதிகரித்துள்ளது.  இதன்காரணமாக, தகவல் ஆணையர்களால் மேல் முறையீட்டுக்காக வரும் மனுக்கள் மீது முழுமையாக விசாரணை நடத்தி குறிப்பிடத்தக்க வகையில் உத்தரவுகள் வழங்குவது இயலாத ஒன்றாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு மனு மீதான விசாரணையும் ஓரிரு நிமிடங்களிலேயே முடிக்கப்பட்டு மேலெழுந்தவாரியாக தொடர்புடைய துறையினருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.  இதனால், தொடர்புடைய பொதுத் தகவல் அதிகாரி மீதான மனுதாரரின் குற்றச்சாட்டு என்ன என்பதை தகவல் ஆணையர்கள் முழுமையாகக் கேட்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் ஆணையத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அவசரகதியில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் பல ஒன்றுக்கொன்று முரண்பட்டும் இருப்பதால் மனுதாரர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக