திங்கள், 20 டிசம்பர், 2010

5 எஸ்பிக்கள், 5 டிஐஜி-க்களுக்கு விரைவில் பதவி உயர்வு

 தமிழக காவல் துறையில் 5 எஸ்.பிக்கள், 5 டி.ஐ.ஜிக்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
 ஐ.ஜி நிலையில் பணியாற்றி வந்த சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர். ஜாங்கிட், சிறைத்துறை ஐஜி ஜே.கே. திரிபாதி, கும்பகோணத்தில் உள்ள மாநில போக்குவரத்து கழக கண்காணிப்பு பணிக்கான ஐ.ஜியான கே. முத்துக்கருப்பன், கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கண்காணிப்புக்கான ஐ.ஜியான ஐ. ராஜா, காவல்துறை தலைமையக ஐஜி சி.கே. காந்திராஜன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக காவல் துறையில் 5 ஐஜி பதவியிடங்கள் காலியானது.
 
ஐஜி பதவி பெற காத்திருக்கும் டிஐஜிக்கள்: 
 
இவ்வாறு பதவியிடங்கள் காலியாகும்போது, பணி மூப்பு அடிப்படையில் டிஐஜிக்களாக உள்ளவர்களுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, 1992-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
 
இதன்படி தற்போது, 1993-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளில் தற்போது டிஐஜிக்களாக உள்ளவர்களுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதில், சி.பி.ஐ.யில் சென்னை மண்டல டிஐஜியாக உள்ள சு. அருணாச்சலம், மாநகர போலீஸில் மத்திய சென்னை துணை கமிஷனராக உள்ள பி. தாமரைகண்ணன் உள்ளிட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தகுதி பெறுகின்றனர். இவர்களில் அனைவருக்கும் ஐஜி பதவி உயர்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 
டிஐஜி பதவி பெற காத்திருக்கும் எஸ்பிக்கள்: இவர்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெறும் நிலையில், அடுத்து எஸ்பி நிலையில் உள்ளவர்களுக்கு டிஐஜி பதவி வழங்கப்பட வேண்டும். பொதுவாக ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் பணியில் சேரும் அதிகாரிகள் 13 ஆண்டுகள் பணியை பூர்த்தி செய்த பின்னர் டிஐஜிக்களாக பதவி உயர்வு பெற வேண்டும். இதன்படி, ஏற்கெனவே, 13 ஆண்டுகால பணியை பூர்த்தி செய்ததன் அடிப்படையில், 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளான ஏ.ஜி. பொன்மாணிக்கவேல், கே.பி. சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் டிஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
 
இதையடுத்து, 1997-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்து 13 ஆண்டு பணியை பூர்த்தி செய்யும் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர். இதில் மாநகர போலீஸில் மயிலாப்பூர் துணை கமிஷனராக உள்ள கே. பெரியய்யா, ரயில்வே போலீஸ் எஸ்பியாக உள்ள ஏஜி மெüரியா, மாநகர போலீஸில் நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனராக உள்ள கே.என். சத்தியமூர்த்தி, மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள சி. ஸ்ரீதர், சென்னையில் சிபிஐயின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி.யாக உள்ள எஸ். முருகன், புறநகர் போலீஸில் பரங்கிமலை துணை கமிஷனராக உள்ள வி. வரதராஜு, அடையார் துணை கமிஷனராக உள்ள எம்.சி. சாரங்கன் உள்ளிட்ட 14 அதிகாரிகள் தகுதி பெற்றுள்ளனர். 
 
அரசு நடவடிக்கை தொடக்கம்:
 
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு தொடர்பாக தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு தகுதி பெறும் அனைவருக்கும்  பதவி உயர்வு வழங்க வாய்ப்புகள் உள்ளன. 
 
இருந்தாலும், தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் சிலரை தவிர்த்து மற்றவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கலாம். இருப்பினும், இவர்களில் 5 எஸ்பிக்களும், 5 டிஐஜிக்களும் பதவி உயர்வு பெறுவது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பான நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்று அடுத்த சில மாதங்களில் இந்த பதவி உயர்வு வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

மின்னக்கல் மின்னல்!

 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மின்னக்கல். நெசவுத் தொழில் சார்ந்த இந்தக் கிராமத்தின் பெயரை சிற்றலை வானொலி நேயர்கள் மட்டுமல்லாது பல்வேறு வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களிடையேயும் தனது செயல்பாடுகள் மூலம் பிரபலமாக்கியுள்ளார் இ. செல்வராஜ். நெசவுத் தொழிலாளியான இவர் அப்படி என்ன செய்தார்? என்ற கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவது இயல்புதான்.
அவரே சொல்கிறார்..

""கைத்தறி நெசவுத் தொழிலாளியின் மூத்த மகனாகப் பிறந்தேன். குடும்பச்சூழல் காரணமாக பள்ளி இறுதி வரையே படிக்க முடிந்தது. அதன் பின்னர் தந்தையின் அறிவுரைப்படியும் குடும்பத்துக்கு வருவாய் ஈட்ட வேண்டிய காரணத்தாலும் விசைத்தறி தொழிலாளியாக மாறினேன்.
எனது பள்ளிப்பருவம் முதல் வீட்டிலேயே கைத்தறி நெசவு செய்து வந்த தந்தை வானொலி கேட்பதில் ஆர்வம் உடையவர். அதனால் எனக்கும் வானொலி கேட்பதில் ஆர்வம் ஏற்பட்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வெவ்வேறு வானொலி நிலையங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு வானொலி நிலையங்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் பணியை முதலில் பொழுதுபோக்காகத் தொடங்கினேன்.
அப்போது, அகில இந்திய வானொலி, சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு, வேரித்தாஸ் வானொலி ஒலிபரப்பு உள்ளிட்டவற்றின் நேயர் வட்டங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த வட்டங்களில் இருப்பவர்கள் தாங்கள் நேயர்களாக உள்ள வானொலி ஒலிபரப்பு நிறுவனத்திடம் இருந்து வரும் தகவல்களை, அந்தந்த வட்டங்களில் உள்ள மற்ற நேயர்களுக்கு செல்போன் குறுந்தகவல் சேவை மூலம் தெரிவித்து வருவதை அறிந்தேன்.
இப்படி ஒரு குறிப்பிட்ட நிலையத்தின் தகவலை மட்டும் என்றில்லாமல், வானொலி ஒலிபரப்பு குறித்த புதிய மற்றும் அரிய தகவல்களைத் திரட்டலாமே என்று தோன்றியது. இணையதள வசதி இல்லாத மின்னக்கல் கிராமத்தில் இருந்து இது எப்படிச் சாத்தியமாகும்? கணினி பயன்பாடு குறித்த எவ்வித அறிமுகமோ, பயிற்சியோ இல்லாத என்னால் எப்படி முடியும்? அதற்கு ஆங்கில அறிவு அதிகம் தேவையாயிற்றே என்பன போன்ற கேள்விகளே முதலில் எழுந்தன.
செல்போன் மூலமே இணையதளத்தைப் பயன்படுத்தும் முறையினையும் அறிந்து கொண்டேன். உள்ளூர் வானொலி முதல் உலக அளவில் உள்ள வானொலி ஒலிபரப்புகள் குறித்த அனைத்து புதிய தகவல்களையும் திரட்ட தொடங்கினேன்.
இவ்வாறு, சிற்றலை வானொலி ஒலிபரப்புகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கிய சமயத்தில் எனக்கு அறிமுகமாகியிருந்த நேயர்களின் செல்போன் எண்களுக்கு, நான் அறிந்த விவரங்களை குறுந்தகவல்களைக அனுப்பத் தொடங்கினேன்.
இத் தகவல்களைப் பெற்றவர்கள், அதன் மதிப்பை உணர்ந்து பிறருக்கும் அனுப்பத் தொடங்கினர். இவ்வாறு மூன்றாவது நபராக தகவல்களை பெற்றவர்களில் பலரும் என்னை தொடர்புக் கொள்ள முயன்றனர்.
அப்போதுதான் சிற்றலை வானொலி ஒலிபரப்பு குறித்த தகவல்களுக்கு நேயர்களிடம் உள்ள முக்கியத்துவத்தை அறிந்துகொண்டேன். இதையடுத்து, 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொருவரின் பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் செல்போன் எண்களையும் பெற்று அவற்றுக்கு, வானொலி ஒலிபரப்புகள் குறித்த விவரங்களை குறுந்தகவல்களாக அனுப்பி வருகிறேன். எனது ஆர்வத்துடன் தொடர்புடைய விஷயம் என்பதால் எவ்வித தொய்வும் இன்றி இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட நேயர்கள் நேரடியாக குறுந்தகவல்களை என்னிடம் இருந்து பெற்று வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் வானொலி ஒலிபரப்பு சார்ந்த 2,300-க்கும் மேற்பட்ட தகவல்கள் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுந்தகவல்களாக நேயர்களுக்கு கிடைக்கச் செய்திருக்கிறேன்.
சிற்றலை வானொலி ஒலிபரப்பு நிலையங்களின் புதிய நிகழ்ச்சிகள், செயின்ட் ஹெலினா, புலிகளின் குரல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிற்றலை வானொலி நிலையங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஒலிபரப்பை மேற்கொள்ளும். அது எந்த நாளில், எந்த நேரத்தில், எந்த அலைவரிசையில் இருக்கும் என்ற விவரங்களை குறுந்தகவல்களாக அனுப்பும் போது, அது நேயர்களுக்கு மிகுந்த உதவியாக அமைந்துவிடுகிறது.
இதனால் ஏற்பட்ட நன்மை என்று சொன்னால் பல வானொலி நேயர்களுக்குச் சிற்றலை நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. செயின்ட் ஹெலினா சிற்றலையில் தமிழ் ஒலிபரப்பு ஆரம்பிக்கப் போவதை முதன் முதலில் நான்தான் நேயர்களுக்குக் கண்டுபிடித்துச் சொன்னேன். இப்படி பல அரிய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிவதால் நேயர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.
இது தவிர குறிப்பிட்ட ஏதாவது ஒலிபரப்புகள் குறித்து நேயர்கள் கேட்கும் புதிய மற்றும் பழைய தகவல்களையும் வழங்கி வருகிறேன். இவ்வாறு நான் அனுப்பிய சில தகவல்கள் குறித்து அறிந்து அது தொடர்பான கூடுதல் தகவல்கள் கேட்டு அகில இந்திய வானொலி நிலையம் உள்ளிட்ட சில வானொலி நிலையத்தைச் சேர்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பயனடைந்துள்ளனர்.
குறுந்தகவல்களாக அனுப்புவதுடன் நிற்காமல், இவ்வாறு அனுப்பிய தகவல்களைத் தொகுத்து, அதற்கென செல்போன் வழி இணையதள சேவை மூலம் உருவாக்கப்பட்ட எனது வலைப்பூவிலும் (www.dgsmsnet.blogspot.com) வெளியிட்டு வருகிறேன்'' என்கிறார் செல்வராஜ்.

திங்கள், 6 டிசம்பர், 2010

சாகித்ய அகாதெமியை வெளியேற்ற தமிழக அரசு நெருக்கடி!

சென்னை தரமணியில் உள்ள அலுவலகத்தை காலி செய்யுமாறு சாகித்ய அகாதெமிக்கு தமிழக அரசு நெருக்கடி அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய மொழிகளில் கலை, பண்பாட்டு வளர்ச்சியில் இலக்கியம் சார்ந்த பணிகளை ஊக்குவிப்பது, அங்கீகரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 1952-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சி கொண்டதாக 1954-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட தெனிந்திய மொழிகளுக்கான மண்டல அலுவலகம் சென்னையில் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பிறமொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பது, தமிழில் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை பிறமொழிகளில் மொழிபெயர்க்க உதவுவது, என இந்த மையம் ஆற்றிய பணிகள் எழுத்துலகில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டது.
இன்றளவும் சாகித்ய அகாதெமி விருது என்பது இலக்கிய படைப்பாளர்கள் மத்தியில் மணிமகுடமாகவே உள்ளது.
இந்த நிலையில் தமிழ் மற்றும் பிறமொழிகளில் வெளியான சிறந்த படைப்புகள் அனைத்தையும் கொண்ட நூலகமும் அதன் ஒரு பகுதியுமே சாகித்ய அகாதெமியின் அலுவலகமாக அறியபட்டு வருகிறது. ஆய்வரங்கம், கருத்தரங்கம், அதிக புத்தகங்களுக்கான இடவசதி உள்ளிட்ட தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படாத நிலையில் 1990-ம் ஆண்டு சென்னையில் இருந்து மண்டல அலுவலகம் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தது.
இதனால் தமிழ் இலக்கியம் சார்ந்த எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் போகும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து தமிழ் எழுத்தாளர்கள் தலைமையகத்துக்கு தெரிவித்து தென்னிந்திய மண்டல அலுவலகத்தில் இருந்து ஒரு பிரிவை சென்னையில் செயல்பட ஏற்பாடு செய்தனர்.
இதற்கு தகுதியான இடம் கிடைக்காத நிலையில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் சிலர் முன்முயற்சிகள் மேற்கொண்டனர்.
சென்னை பிரிவு தொடக்கம்: இதன் பலனாக தரமணியில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கவின்கலை கல்லூரி மாணவர்களின் பழைய விடுதி வளாகத்தின் ஒருபகுதியை சாகித்திய அகாதெமிக்கு வழங்க உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகக்குழு முடிவு செய்தது. அந்த விடுதியில் 10 அறைகள் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகிய பகுதிகள் சாகித்திய அகாதெமிக்கு ஒதுக்கப்பட்டது.
இதன்படி, 2000-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த தமிழ்குடிமகன், சாகித்திய அகாதெமியின் சென்னை பிரிவு அலுவலகம் மற்றும் நூலக வளாகத்தை தரமணியில் தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட பல்வேறு படைப்பாளிகள் பங்கேற்றனர்.
அந்த கட்டடத்தில் நிலவிய பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, சாகித்திய அகாதெமியின் சென்னை பிரிவு அலுவலகத்தின் ஒரு பகுதி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
இருப்பினும், இதன் மற்ற அலுவல் பணிகளும் நூலகமும் தரமணி வளாகத்திலேயே தொடர்ந்து செயல்பட்டுவந்தது.
வெளியேற்ற அரசாணை: இந்த அலுவலக வளாகத்தை காலி செய்ய வேண்டும் என 2007-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் குறிப்பிட்ட சில துறைகள் சாகித்ய அகாதெமிக்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடிதங்கள் அனுப்பி வந்தன.
இந்த நிலையில், தரமணி வளாகத்தில் உள்ள சாகித்ய அகாதெமியின் சென்னை பிரிவை அங்கிருந்து வெளியேற்றி அந்த கட்டடத்தை காலி செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டு அரசாணையை (எண்: 45) தமிழக அரசின் உயர்கல்வித்துறை 2008 பிப்ரவரி 20-ம் தேதி பிறப்பித்தது.
இது குறித்து மறுபரிசீலனை செய்து சென்னை பிரிவு தொடர்ந்து தரமணியில் செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி சாகித்திய அகாதெமியின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து, சாகித்ய அகாதெமிக்கு 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அலுவலக வளாகத்துக்கான நிலமும், அரங்கம் அமைக்க 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிலமும் அளிக்குமாறு சாகித்ய அகாதெமியின் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் தரப்பில் இருந்து இதுவரை உறுதியான நல்ல முடிவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், சாகித்ய அகாதெமியை தரமணி வளாகத்தில் இருந்தும் வெளியேற வற்புறுத்தும் கடிதங்கள் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன.
கடைசியாக கடந்த 30-ம் தேதியும் தொழில்நுட்பக் கல்வித்துறையிடம் இருந்து இத்தகைய கடிதம் ஒன்று சாகித்ய அகாதெமிக்கு வந்துள்ளது. இதனால் சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகம் சென்னையில் இருப்பதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆலோசனைக்குழு உறுப்பினர் கருத்து: இது தொடர்பாக சாகித்ய அகாதெமியின் தமிழ் மொழிக்கான ஆலோசனைக்குழு உறுப்பினரும், எழுத்தாளருமான ராமகுருநாதன் கூறியது:
கடந்த 2000-ம் ஆண்டு தரமணியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் சென்னை பிரிவு தொடக்க விழாவில் பங்கேற்ற அப்போதைய தமிழக அமைச்சர் தமிழ்குடிமகன், நுங்கம்பாக்கத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில் சாகித்திய அகாதெமிக்கு நிலம் ஒதுக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால், அந்த உறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கையை அடுத்து வேறு வாடகை கட்டடத்தையாவது பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார். வேறு வழியே இல்லையென்றால் தமிழகத்தில் சாகித்ய அகாதெமி செயல்பட முடியாத சூழ்நிலை எழக்கூடும் என்பதையும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
செம்மொழி மாநாடு நடத்தி, செம்மொழி நூலகத்துக்காக தமிழக சட்டப் பேரவையின் பழைய வளாகத்தையே அளித்த தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழில் இலக்கிய வளர்ச்சிக்கு உதவிவரும் சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகத்தை மீண்டும் தமிழகத்தை விட்டு வெளியேற விடமாட்டார் என தமிழ் எழுத்தாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகம் மூடப்பட்டால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் குறைந்துவிடும் என்பதுகூடவா அரசு அதிகாரிகளுக்குப் புரியவில்லை.