சென்னை மேடவாக்கம்- பெரும்பாக்கம் சாலையில் நிதி நகரம் அமைக்கும் அரசின் திட்டத்தால் அங்குள்ள சதுப்பு நிலத்தை சார்ந்துள்ள அரியவகை பறவைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த நிலத்தை தொழில்துறையிடம் இருந்து மீட்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை மேடவாக்கம்- பெரும்பாக்கம் சாலையில் சர்வதேச தரத்திலான நிதி நகரம் அமைக்கப்படும் என 2009-2010 நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.உலக வங்கி உட்பட பல சர்வதேச நிதி அமைப்புகள், சென்னையில் இருந்து நிதிச் சேவையை மேற்கொண்டு வருகின்றன. மேலும், வர்த்தக வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள், பரஸ்பர நிதி, காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை சென்னையில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
சென்னையில் பல்வேறு இடங்களில் வாடகை, நீண்டகால குத்தகை அடிப்படையில் நிலம் பெற்று இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்த நிறுவனங்களின் அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் சர்வதேச தரத்திலான நிதி நகரம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், நிதி நிர்வாகம் சார்ந்த பயிற்சி, ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் அலுவலகங்களும் இந்த நகரத்தில் இடம்பெறும்.
சில மாதங்கள் முன்னர் இதற்கான அரசாணை தொழில்துறை மூலம் வெளியிடப்பட்டது. 187 ஏக்கர் நிலத்தில் முதல் கட்டமாக 25 ஏக்கர் நிலத்தில் நிதி நிர்வாகம் சார்ந்த ஊடக அலுவலக வளாகமும், கேளிக்கை பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், முழுமையான திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக மேடவாக்கம்- பெரும்பாக்கம் சாலையில் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் கிராமங்களில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் இந்த நிலங்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக இருந்தாலும், தன்மை அடிப்படையில் இந்த நிலம் சதுப்பு நிலமாக அமைந்துள்ளது.
வனத்துறை நடவடிக்கை:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை வசம் இருந்த 300 ஹெக்டேர் நிலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலம் இப்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலத்தை முழுமையான பறவைகள் சரணாலயமாக மாற்றும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து நிதி நகரம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த நிலம் முழுமையான சதுப்பு நிலத்துக்கான தன்மையுடன் இருப்பதாகவும், ஏராளமான அரியவகை பறவைகள் வந்து செல்வதும் வனத்துறையினர் ஆய்வில் தெரியவந்தது என பள்ளிக்கரணை பகுதிக்கான வனச்சரகர் ராமதாஸ் தெரிவித்தார். இதனால் இப்பகுதியை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.
உயரதிகாரிகள் ஆய்வு:
இதையடுத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களை வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் வெ. இறையன்பு தலைமையிலான உயரதிகாரிகள் அண்மையில் நேரில் ஆய்வு செய்தனர்.நேச்சர் டிரஸ்ட், வனத்துறையின் களப்பணியாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றது.அப்போது, நிதி நகரம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தை தொழில் துறையிடம் இருந்து மீளப்பெற்று வனத்துறை வசம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி நிலத்தை மீட்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உயரதிகாரிகள் உறுதி கூறினர்.இதன்மூலம் அரியவகை பறவைகளின் வாழ்வாதாரமாக உள்ள இந்த நிலம் பாதுகாக்கப்படும் என இயற்கை ஆர்வலர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அரிய வகை பறவைகள்:
சதுப்பு நிலத்துக்கான அனைத்து அம்சங்களுடன் அமைந்துள்ள இந்த நிலத்தில் ஏராளமான அரியவகை பறவையினங்கள் வந்து செல்வதும், குறிப்பிட்ட சில பறவையினங்கள் இங்கேயே இனப்பெருக்கம் செய்வதும் இப்போது தெரியவந்துள்ளது.குறிப்பாக நீள வால் இலைக்கோழி வகையைச் சேர்ந்த 60 ஜோடி பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.ஐரோப்பாவில் இருந்து வரும் செங்கால் நாரை வகையைச் சேர்ந்த பறவைகள் இங்கு வருவது நேரடி ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.செந்நீல கொக்கு, சாம்பல் கொக்கு, மஞ்சள் குருகு, இராக்கொக்கு, ஜொலிக்கும் அரிவாள் மூக்கன், புள்ளி அலகு கூழைக்கடா, நீலத்தாழைக்கோழி, நாமக்கோழி, நத்தை குத்தி நாரை உள்பட 24 வகையான நீர்ப்பறவைகள் இங்கு வந்து செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது என நேச்சர் டிரஸ்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.
பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்பு நில பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்திலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
ஏராளமான பறவைகள் வந்து செல்லும் இந்த இடத்தை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் சேர்த்து ஒரே நிலையில் பராமரிப்பதால் பறவைகளுக்கு வாழ்விடம் கிடைப்பதுடன் இங்கு மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கலாம் என்றும் அந்த அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.