புதன், 28 ஜனவரி, 2009

அகதிகள் முகாமில் இந்தியர்!

சென்னை பூந்தமல்லியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் இந்தியக் குடிமகனான மகேந்திரன் (எ) கண்ணன் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் வட்டாம்வலசை கிராமத்தைச் சேர்ந்த சேதுவும் அவரது மனைவியும் 70-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இலங்கை சென்றனர். அங்கு அவர்களுக்கு கண்ணன் பிறந்தார்.


1984-ம் ஆண்டு ராணுவத் தாக்குதலில் மன்னார் அருகில் இவர்கள் குடும்பம் தங்கி இருந்த பேசாலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேது தனது மகன் கண்ணன் மற்றும் மனைவியுடன் அகதிகளுடன் தமிழகம் வந்தார்.


அகதிகளுடன் வந்ததால் இவர்களைப் போலீஸôர் மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். பின்னர் சிவகாசி முகாமுக்கு மாற்றினர்.


தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து சொந்த ஊரான வட்டாம்வலசைக்குச் சென்றார் கண்ணன். அங்கு காளீஸ்வரியுடன் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகள் சரோஜினி (13), மகன்கள் சுதாகர் (9), சுரேஷ் (8) உள்ளனர்.


கூலி வேலை செய்து வந்த கண்ணன் பற்றி 7-3-2007-ல் விசாரித்த ராமநாதபுரம் "கியூ' பிரிவு போலீஸôர், 9-3-2007-ல் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்று அலுவலகத்திலேயே 5 நாள்கள் தங்க வைத்து பின்னர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதையறிந்த இவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி விடுவித்தனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த கண்ணனை வழிமறித்த "கியூ' பிரிவு போலீஸôர் வலுகட்டாயமாக ஒரு வேனில் ஏற்றி செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அடைத்தனர். பின்னர் டிசம்பர் மாதம் பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமுக்கு மாற்றினர்.


தன்னை விடுவிவிக்க வேண்டும், "கியூ' பிரிவு போலீஸôரின் தவறான தகவல்கள் அடிப்படையில் வெளிநாட்டவர் என தன்னைத் தவறாகக் குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்ணன் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக