சனி, 17 ஜனவரி, 2009

யார் சொல்வது சரி?

சென்னை, ஜன. 15: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், லஞ்ச ஊழலை ஒழிக்கவும் ""தகவல் பெறும் உரிமைச் சட்டம்'' 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

அரசின் நிர்வாக நடைமுறையை மக்கள் தெரிந்து கொள்வதைத் தடுத்த இரும்புத்திரையை விலக்கும் வகையில் இந்தச் சட்டம் அமைந்திருந்தது.

தகவல்பெறும் உரிமைச் சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி உளவு மற்றும் தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய துறைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும்.

இவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் துறைகளிலும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படுவதற்கு இந்த விலக்கு பொருந்தாது.

உளவு, தேசப் பாதுகாப்பு தொடர்பானவை மற்றும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 8 (1) (எச்) பிரிவின் கீழ் ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் 24 (4) பிரிவின் படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியத் துறைகளுக்கு முதலில் விலக்கு அளித்தது.

தொடர்ந்து, இந்தப் பிரிவைப் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பில்லாத லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கு விலக்கு அளித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விலக்கு அளித்து அரசாணை:

இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை (எண்: 158) கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் நடைபெற்ற சில முறைகேடுகள் குறித்தும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினரும் கேட்க முயற்சித்ததால் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாகப் புகார் எழுந்தது.


தேசப் பாதுகாப்பு தொடர்பான உளவுப் பணிகளில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான சி.பி.ஐ. உள்பட பெரும்பாலான மாநிலங்களில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் கூட இத்தகைய விலக்கு அளிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக "தினமணி'யில் கடந்த செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் செய்திகள் வெளியாயின.

முதல்வர் பதில்:

இதையடுத்து, இந்த செய்திகளை மறுக்கும் விதமாக, கேள்வி-பதில் அறிக்கை மூலம் பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, ""விசாரணையில் இருக்கும் வழக்குகளின் விவரங்களை அதில் தொடர்புடையவர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றால் அது விசாரணையை பாதிக்கும் என்பதால் அந்த குறிப்பிட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிப்பதாக ஆகாது. மேலும், இது குறித்து சில விஷமிகள் பொய்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்'' என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.

முதல்வர் கூறியபடி எந்த வழக்கு தொடர்பாகவும் இல்லாமல், லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசு வாகனம் (டி.என்.-22-ஜி-5000) பயன்படுத்தப்படும் விதம் குறித்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கப்பட்டது.

தகவல் அளிக்க மறுப்பு:

ஆனால், அரசாணை எண்: 158-ன் படி லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, மேற்கூறிய கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பொதுத் தகவல் அதிகாரியாக தன்னை குறிப்பிட்டுக் கொண்டுள்ள மத்திய சரக கண்காணிப்பாளர், ஜனவரி 6-ம் தேதியிட்ட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


தகவல் பெறும் உரிமைச் சட்டமே தங்களுக்குப் பொருந்தாது என்று கூறுவதற்கு அந்தத் துறைக்கு தகவல் பெறும் சட்டப்படியான பொதுத் தகவல் அதிகாரியாக ஒருவர் இருப்பது ஏன்?


மேலும், வழக்குகளின் விசாரணை நிலவரம் குறித்த தகவல்களின் ரகசியத் தன்மையை பாதுகாக்கவே அரசாணை எண்: 158 பிறப்பிக்கப்பட்டதாக முதல்வர் கூறுகிறார்.

ஆனால், அந்தத் துறைக்கே இந்தச் சட்டம் பொருந்தாது என அதன் பொதுத் தகவல் அதிகாரி தெரிவிக்கிறார். இதில் யார் சொல்வது சரி என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக