ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

மாநகராட்சி வழங்கும்குப்பைத் தொட்டிகள் தரமற்றவை!

சென்னை, பிப்.12: சென்னையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக வீடுகளுக்கு வழங்கப்படும் குப்பைத் தொட்டிகள் தரமானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து அளிக்கும் பணிகளுக்காக குடிசைப்பகுதி வீடுகளுக்கு தலா 2 வீதம் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் குப்பைத் தொட்டிகள் டிசம்பர் 26-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு குப்பைத் தொட்டி ரூ11.80 விலையில் மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத் திடம் இருந்து இதற்காக ரூ. 51 லட்சம் செலவில் 4.31 லட்சம் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

பல்லாவரத்தில்...:

ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை பல்லாவரம் நகராட்சி செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பல்லாவரம் நகராட்சியில் 26 வார்டுகளில் உள்ள 16 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க ஒவ்வொன்றும் ரூ.69 விலையில் 16 ஆயிரம் குப்பைத் தொட்டிகளை வாங்க பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் வழங்கப்படும் குப்பைத் தொட்டிகள் விலைக்கும் பல்லாவரத்தில் வழங்கப்பட உள்ள குப்பைத் தொட்டிகளின் விலைக்கும் ரூ.50 க்கு மேல் வேறுபாடு இருப்பது குறித்து "தினமணியில்' கடந்த 10-ம் தேதி செய்தி வெளியானது.

நகராட்சி பதில்:

இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பல்லாவரம் நகராட்சித் தலைவர் இ. கருணாநிதி அளித்துள்ள விளக்க அறிக்கை விவரம்:

பல்லாவரம் நகராட்சி மூலம் வாங்கி வழங்கப்படவுள்ள குப்பைத் தொட்டிகள் நீண்டநாள் உழைக்கக் கூடிய, அதிக தாங்கும் திறனும், கலப்பில்லாத தூய் மையான பாலித்திலின் மூலப்பொருள் மூலம் அடிக்கடி கழுவிப் பயன்படுத்தும் வகையில் மூடியுடன் கூடிய தலா 600 கிராம் எடையுள்ள பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் தயாரிக்கப்படும் தரமுள்ள தனியார் நிறுவனமான சின்டெக்ஸ் தயாரிக்கும் குப்பைத் தொட்டிகள் ஆகும். இதன் விலை தலா ரூ.69.

சென்னையில்...:

சென்னை மாநகராட்சி வாங்கிய குப்பைத் தொட்டிகள் கிண்டியில் இயங்கிவரும் மத்திய அரசின் சிப்பெட் நிறுவனத்தின் மூலம் மறு சுழற்சி செய்யப்பட்ட சாதாரண பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட 8 லிட்டர் கொள்ளளவும் 225 கிராம் எடையும் கொண்ட குப்பைத் தொட்டிகள்.

இதன் விலை தலா ரூ.11.80எனவே, பல்லாவரம் நகராட்சி வழங்கவுள்ள குப் பைத் தொட்டிகளை சென்னை மாநகராட்சி வழங்கும் குப்பைத் தொட்டிகளுடன் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல என இ. கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

பல்லாவரம் நகராட்சித் தலைவரின் இந்த விளக்க அறிக்கை அடிப்படையில், சென்னை மாநகராட்சி வழங்கிய குப்பைத் தொட்டிகள் தரம் குறைந்தவையா என்ற கேள்வி அடுத்து எழுகிறது.

அது மட்டுமல்ல, ஒரு நகராட்சியே, மத்திய அரசு நிறுவனத்தின் தயாரிப்பு தரமானது அல்ல என்று கூறி தனியார் நிறுவனத்திடம் குப்பைத் தொட்டிகளை வாங்குவது எந்த வகையில் லாபம் என்ற கேள்வியும் எழுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக