வியாழன், 12 பிப்ரவரி, 2009

குப்பைத் தொட்டியில் ஏன் இந்த முரண்பாடு?

சென்னை, பிப். 9: சென்னை பல்லாவரம் நகராட்சியில் தலா ரூ.69 விலையில் 16 ஆயிரம் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியில் இதேபோல வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளின் விலையை விட இது பல மடங்கு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளுக்கு சேர்த்து வேங்கடமங்கலத்தில் குப்பைகளைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் ரூ.44.21 கோடி மதிப்பீட்டில் இத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு பல்லாவரம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியான நிறுவனங்களை தேர்வுச் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை கோரும் நட வடிக்கைகளை பல்லாவரம் நகராட்சி மேற்கொண்டது.

இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படும் 26 வார்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 16 ஆயிரம் குடும்பங்களுக்கு குப்பைத் தொட்டிகளை வழங்க நகராட்சி முடிவு செய்தது.

இதற்காக, ஒவ்வொன்றும் 10 லிட்டர் கொள்ளளவுள்ள 16 ஆயிரம் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

இதில் "கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' ரூ.77-க்கும், "சின்டெக்ஸ் நிறுவனம்' ரூ.80-க்கும் குப்பைத் தொட்டிகளை வழங்க முன் வந்தன"கே.எம்.எஸ். டிரேடர்ஸ் நிறுவனம்' குறிப் பிட்டுள்ள ரூ.77 மற்ற நிறுவனங்களின் விலை யைவிட குறைவாக இருந்தாலும், இது தங்களது மதிப்பீட்டுத் தொகையைவிட அதிகமாக இருப்பதாக 2008 டிசம்பர் 23-ல் நடைபெற்ற நகராட்சி மன்றக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப் பட்டது.

எனவே, அந்த நிறுவனம் மதிப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப விலையை குறைத்துக் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஒப்பந்த நிறுவனத்திடம் பேரம்:

நகராட்சி நிர்வாகம் மூலம் இது குறித்து நகராட்சி பொறியாளர் மேற்குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்இதையடுத்து, அந்த நிறுவனம் தலா ரூ.69 விலையில் குப்பைத் தொட்டிகளை வழங்க முன்வந்தது.

இதற்கு 2009 ஜனவரி 27-ல் நகராட்சிக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டதுஇதே நிறுவனத்திடம், இதே விலைக்கு தங்கள் நகராட்சிப் பகுதிகளுக்கு தேவைப்படும் எண்ணிக்கையில் குப்பைத் தொட்டிகளை வாங்குவது குறித்து ஆலந்தூர், தாம்பரம் நகராட்சிகள் தனித்தனியாக முடிவு செய்துக் கொள்ளலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில்...:

சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வீட்டில் இருந்து சேகரிப்பதற்காக குடிசைப்பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகள் தலா ரூ.12-க்கு மத்திய அரசின் "சிப்பெட்' நிறுவனத்திடமி ருந்து வாங்கப்பட்டுள்ளது.

அங்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு, அதில் மற்ற நிறுவனங்கள் தெரிவித்த விலைகள் ஆய்வு செய்யப்பட்டு, மிகக் குறைவான விலை சிப் பெட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனத்திடம் இருந்து குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

முரண்பாடு:

8 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டி ரூ.12-க்கு கிடைக்கும் போது, வெறும் 2 லிட்டர் கூடுதலாக அதாவது 10 லிட்டர் கொள்ளளவுள்ள குப்பைத் தொட்டிகளை ரூ.69 விலைக்கு பல்லாவரம் நகராட்சி வாங்க முடிவு செய்துள்ளது.

குப்பைத் தொட்டியின் அளவில் 8 லிட்டருக்கும், 10 லிட்டருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், அதற்கான விலையில் ஏன் இந்த வித்தியாசம் என்பதே மக்களிடம் தற்போது எழுந்துள்ள கேள்வி.

நகராட்சி பதில்:

கொள்ளளவு அதிகம் என்பது மட்டுமல்ல, நாங்கள் வாங்கும் குறைந்த எண்ணிக்கையும் இந்த அதிக விலைக்கு காரணம் என்று நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், இது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை விசாரித்து மக்களின் வரி பணம் வீணாகாமல் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக