சனி, 24 அக்டோபர், 2009

சிமென்ட் விலை குறைகிறது; ஒரு மூட்டை ரூ. 245

 கடந்த மாதம் முன்பு வரை ஒரு மூட்டை ரூ. 260-ஆக இருந்த சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ. 245-ஆக குறைந்துள்ளது.



தேவை குறைந்த நிலையில் உற்பத்தி அதிகரித்ததால் சிமென்ட் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.




2006-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது. இதன் காரணமாக கட்டுமானத் துறையின் வளர்ச்சியும் வெகுவாகவும் வேகமாகவும் அதிகரித்தது. இதனால், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிமென்ட் தேவையும் அபரிமிதமாக அதிகரித்தது.






ஆனால், இந்தத் தேவையை பற்றாக்குறை இன்றி பூர்த்தி செய்யும் அளவுக்கு நாட்டில் சிமென்ட் உற்பத்தி இருந்தபோதும், உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை முன்பு எப்போதும் இல்லாத வகையில் உயர்த்தினர்.



விலை உயர்வு:


இதனால், 2007-ம் ஆண்டு ஜனவரியில் ஒரு மூட்டை ரூ. 190-ஆக இருந்த சிமென்ட் விலை அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ. 200 ஆகவும் உயர்ந்தது. இது படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாதவகையில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 290-ஆக அதிகரித்தது.


இத்தகைய சூழலில் கட்டுமானத் துறையினர் உள்பட அனைத்துத் தரப்பினரின் வற்புறுத்தலை அடுத்து மத்திய அரசு இதில் தலையிட்டு வெளிநாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியது.



இதனால் கடந்த ஆண்டு மத்தியில் சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ. 240 வரை குறைந்தது.

இதே சமயத்தில் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக சிமென்ட் விலை மேலும் உயராமல் தொடர்ந்து ஒரு மூட்டை ரூ. 240- ஆகவே இருந்து வந்தது.



தேக்க நிலை: இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கட்டுமானத் துறையில் தேக்க நிலை மறைந்து புதிய குடியிருப்புத் திட்டங்களுக்கான பணிகள் தொடங்கிய நிலையில் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை மீண்டும் உயர்த்தினர். இதனால், ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 240-ல் இருந்து ரூ. 260-ஆக அதிகரித்தது.



உற்பத்தி அதிகரிப்பு: இத்தகைய சூழலில், ஆந்திரம், குஜராத் மாநிலங்களில் புதிதாக சில பெரிய சிமென்ட் ஆலைகள் தங்கள் உற்பத்தியை அண்மையில் தொடங்கின.


இது தவிர ஏற்கெனவே இருந்த சிமென்ட் ஆலைகள் தங்கள் உற்பத்தித் திறனை பல மடங்கு அதிகரித்தன. இதே வேளையில் தமிழகத்தில் உள்ள சில சிமென்ட் ஆலைகளும் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளன.



ஆலை நிர்வாகங்களின் இந்த நடவடிக்கைகளால் சந்தைக்கு வரும் சிமென்ட்டின் அளவு கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்தது. இவ்வாறு உற்பத்தி அதிகரித்த அளவுக்கு தேவை அதிகரிக்காததால், சந்தையில் சிமென்ட் விலையை குறைத்துக் கொள்ள உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர்.



ஆந்திரம், குஜராத் மாநில உற்பத்தியாளர்கள் கடந்த மாதமே இதற்கான நடவடிக்கைகளை தொடங்கினர். ஆனால், தமிழகத்தை சேர்ந்த சில நிறுவனங்கள் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இறுதியில் தவிர்க்க முடியாத சூழலில் தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்களும் சிமென்ட் விலையை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளன.



வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பது, கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்காதது, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சிமென்ட் அளவு அதிகரித்தது, உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை ஆகிய காரணங்களால் சிமென்ட் விலையை குறைக்க வேண்டிய கட்டாய சூழலால் உற்பத்தியாளர்கள் விலை குறைப்புக்கு முன்வந்துள்ளனர்.



விலை சரிவு:


இதனால், கடந்த மாதம் முன்பு ஒரு மூட்டை ரூ. 260-ஆக உயர்ந்த சிமென்ட் விலை இப்போது ரூ. 245-ஆக குறைந்துள்ளது. ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு மூட்டை விலை ரூ. 170-ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள விலை சரிவு மேலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு கட்டுமானத் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.



இப்போதைய சூழலில் அடுத்த நிதி ஆண்டு தொடக்கம் வரை சிமென்ட் விலை உயர்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அடுத்த சில மாதங்களில் சிமென்ட் விலை மேலும் குறையும் என கட்டுமானத் துறையினரும், விற்பனையாளர்களும் கருத்து தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக