தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட மனைகளில் சுமார் 5,500 வீட்டு மனைகளும், சுமார் 1,100 வீடுகளும் விற்பனைக்குக் காத்திருக்கின்றன.
பொது மக்களுக்கு நியாயமான விலையில் குடியிருப்பு வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பல்வேறு மாவட்டங்களில் வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி வருகிறது.
இவ்வாறு உருவாக்கப்படும் மனைகள் மற்றும் கட்டப்படும் வீடுகளில் திட்டம் ஒன்றில் 15 சதவீதம் அரசின் விருப்புரிமையின் கீழும், 85 சதவீதம் பொது ஏலம் மூலமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சந்தை விலையைவிடக் குறைவாக இருப்பதாலும், அரசுத்துறையிடம் வாங்குவதால் வில்லங்கம் இருக்காது என்ற நம்பிக்கையாலும் வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகளைப் பெறுவதில் மக்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியவர்கள் அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகப் புகார் கூறுகின்றனர். தவணைகள் கணக்கீட்டிலும் பத்திரங்களைப் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய புகார்கள் உள்ள போதும், வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகளை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் குறையாமல் உள்ளது.
சென்னையில் அண்ணா நகர், முகப்பேர், கே.கே. நகர், பெசன்ட் நகர் ஆகிய கோட்டங்களிலும், பிற மாவட்டங்களில் மதுரை, நெல்லை, ராமநாதபுரம், சேலம், ஈரோடு, கோவை, வேலூர், ஓசூர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய ஊர்களிலும் வீட்டுவசதி வாரியப் பிரிவுகள் செயல்படுகின்றன.
இந்தப் பிரிவுகளின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு வருகின்றன.
இதில் ஏராளமான மனைகள், வீடுகள், குடியிருப்புகள் விற்பனையாகாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
மனைகள்...
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 5,500 வீட்டு மனைகள் விற்பனைக்குக் காத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதில் 2,500 மனைகள் அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டிலும், 3 ஆயிரம் வீட்டுமனைகள் வாரியத்தின் ஒதுக்கீட்டிலும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 112.70 கோடி.
சென்னையில் அண்ணா நகர் கோட்டத்தில் 34 மனைகளும், முகப்பேர் கோட்டத்தில் 2 மனைகளும், கே.கே. நகர் கோட்டத்தில் 52 மனைகளும், பெசன்ட் நகர் கோட்டத்தில் ஒரு மனையும் உள்ளன.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரைப் பிரிவில் 1,400 வீட்டுமனைகள் விற்பனையாகாமல் உள்ளன.
வீடுகள்...
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட 1,119 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 33.70 கோடி.
அதிகபட்சமாக கோவையில் 359 வீடுகளும், சேலத்தில் 213 வீடுகளும், மதுரையில் 152 வீடுகளும் விற்பனையாகாமல் உள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 734 அடுக்குமாடி குடியிருப்புகள் உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன.
இவை அனைத்தும் அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் வருவதால் இது விஷயத்தில் அரசுதான், யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விற்பனை எப்போது?
இவ்வாறு விற்பனையாகாமல் உள்ள மனைகளை ஒதுக்க விலை நிர்ணயம் செய்து பொது ஏலம் அறிவிக்கப்பட்டு அதன் மூலம் உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நிர்வாக ரீதியாக இதற்கான பணிகள் அந்தந்த கோட்ட மற்றும் பிரிவு அலுவலகங்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளன என்று வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக