தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் 37 உத்தரவுகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2005}ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அமலாக்கத்துக்காக மத்திய தகவல் ஆணையமும், மாநில அளவிலான தகவல் ஆணையங்களும் அமைக்கப்பட்டன.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பொது மக்கள் எழுத்து மூலமாக கோரும் தகவல்களை சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அதிகாரி அளிக்காவிட்டால், அந்தந்தத் துறையின் தலைமை பொது தகவல் அதிகாரியிடம் முதலாவது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
இதிலும் தகவல் கிடைக்கப்பெறாதவர்கள் மாநில தகவல் ஆணையத்திலும், மத்திய தகவல் ஆணையத்திலும் 2}வது மேல்முறையீடு செய்யலாம்.இவ் வாறு பெறப்படும் 2}வது மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து பதில் அளிக்க மறுத்த பொது தகவல் அதிகாரிக்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதமும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு உரிய பதில் கிடைக்க உத்தரவிடவும் மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
தமிழகத்தில்...:
தமிழகத்தில் மாநில தகவல் ஆணையம் அமைக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் வந்தன.இதில் சுமார் 40 மனுக்களின் மீதான விசாரணையில் பதில் அளிக்க மறுத்த பொது தகவல் அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து மாநில ஆணையம் உத்தரவிட்டது.
மேலும் பல வழக்குகளில் உண்மை நிலை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும், மனுதாரர்கள் கோரிய தகவல்கள் அளிக்கவும் மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை ஒரு சில நபர்களிடம் இருந்து மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.நீதி மன்றத் தடை: சட்டப்படி பதில் அளிக்காததால் அபராதம் விதிக்கப்பட்ட பொது தகவல் அதிகாரிகளில் பெரும்பாலானோர் நீதிமன்றத்தை அணுகி ஆணையத்தின் உத்தரவுக்கு தடை ஆணை பெற்றுள்ளனர்.
இப்போதைய நிலவரப்படி மாநில தகவல் ஆணையத்தின் 37 உத்தரவுகளுக்கு, நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் இந்த தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
இவை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அமலாக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசின் சட்ட உதவி ஏன்? மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுகளை அமலாக்க மறுக்கும்போது தகவல் அதிகாரிகளில் பெரும்பாலானோர் அந்தந்தத் துறை மூலம் நீதிமன்றத்தில் மனு செய்து தடை ஆணை பெற்றுள்ளனர்.
இவர்கள் தங்கள் மனுக்களை அரசு வழக்கறிஞர்கள் மூலமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அரசின் சட்ட உதவியை பயன்படுத்தியுள்ளனர். இந்த மனுக்கள் தொடர்பான வழக்குகளில் ஆணையம் சார்பில் அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கான அரசு வழக்கறிஞரே ஆஜராகி வருகிறார்.
இதன் மூலம் மனுதாரர் (பொது தகவல் அதிகாரி) சார்பில் ஒரு அரசு வழக்கறிஞரும், எதிர் தரப்பு (ஆணையம்) சார்பில் வேறு ஒரு அரசு வழக்கறிஞரும் ஆஜராகும் சூழல் ஏற்பட்டுள்ளது.சட்டப்படி செயல்படாத பொது தகவல் அதிகாரிகளுக்கு அரசின் சட்ட உதவி அளிக்கப்படுவது தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கத்தை அரசே தடுப்பதற்கு வழிவகுக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக