சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் எழுதிக் கொடுக்கப்படும் ஆவணங்களில் குறிப்பிட்ட மதிப்பை ஏற்று அதன்படி முத்திரைத் தீர்வை வசூலிக்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்த சுற்றறிக்கை அண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் வீட்டு மனைகள், வணிக மனைகள் உள்ளிட்டவற்றை சி.எம்.டிஏ. தனியாக உருவாக்கி விற்பனை செய்து வருகிறது.
மறைமலை நகர், மணலி புது நகர், கோயம்பேடு, சாத்தாங்காடு உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு மனைகளை உருவாக்கி உரியவர்களுக்கு சி.எம்.டி.ஏ. விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு சொத்துக்களை உருவாக்கி விற்பனை செய்யும் போது இதற்கான விற்பனையை பதிவு செய்தல் வேண்டும்.
அதற்கான நடைமுறைகளில் சொத்தின் மதிப்பை நிர்ணயிப்பதில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தன. இதன் காரணமாக சி.எம். டி.ஏ. விடம் மனைகளை வாங்கிய பலர் அதனை பதிவு செய்ய முடியாத நிலை தொடர்கிறது.
ஏராளமான மனை உரிமையாளர்களுக்கு முழுத் தொகையை செலுத்திய பிறகும் விற்பனை பத்திரத்தை பெற முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக மணலி புது நகரில் சி.எம்.டி.ஏ. உருவாக்கிய மனைகளின் விற்பனையில் அதன் மதிப்பை நிர்ணயிப்பதில் சி.எம்.டி.ஏ., வீட்டுவசதி வாரியம், பதிவுத்துறை ஆகியவற்றுக்கிடையே குழப்பம் ஏற்பட்டது.
இது தொடர்பாக மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மனைகளின் மதிப்பை மாற்றி நிர்ணயித்ததில் சி.எம்.டி.ஏ.வுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து தணிக்கைத் துறை ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இத்தகைய குழப்பங்களை தீர்க்கும் வகையில், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கும் விதமாக பதிவுத்துறை தலைவர் இரா. சிவகுமார் புதிய சுற்றறிக்கை ஒன்றை (எண்: 47/2009/பி2. நாள்: 17}11}2009) பிறப்பித்துள்ளார்.
அதன் விவரம்:
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் எழுதிக் கொடுக்கப்படும் ஆவணங்களைப் பொறுத்து அந்த குழுமம் நிர்ணயிக்கும் மதிப்பினை ஏற்று முத்திரை தீர்வை வசூலிக்கப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் ஆணையிடப்படுகிறது.
இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை பதிவுத்துறையினர் செயல்படுத்த வேண்டும். எனவே, இனி வருங்காலங்களில் சி.எம். டி.ஏ. நிர்ணயிக்கும் மதிப்பினை ஏற்று முத்திரைத் தீர்வை வசூலிக்கப்பட வேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிகாட்டி மதிப்பு என்ன ஆனது?
பதிவுத்துறை தலைவரின் இந்த சுற்றறிக்கை பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வாக அமையும் என கருதப்படுகிறது. ஆனால், இந்த சுற்றரிக்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த வழிகாட்டி மதிப்பின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனால் ஒரு பகுதியில் சி.எம்.டி.ஏ. விற்பனை செய்யும் சொத்துக்கு ஒரு மதிப்பும், அதே பகுதியில் தனியார் ஒருவர் விற்பனை செய்யும் சொத்திற்கு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலும் இருவேறு விதமாக முத்திரைத் தீர்வை வசூலிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக