வியாழன், 29 நவம்பர், 2012

மியான்மர் ஐராவதி ஆற்று மணல் தமிழகத்தில் இறக்குமதி : கட்டுமான நிறுவனங்கள் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் கடும் மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மியான்மரில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து, கட்டுமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
தமிழகத்தில், மணல் குவாரிகள் அரசுடைமை ஆக்கப்பட்டிருந்தாலும், மணல் எடுப்பதிலும், குவாரிகளை பயன்படுத்துவது தொடர்பான கோர்ட் உத்தரவுகளால், ஏராளமான குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு கன அடி மணல் விலை, 70 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த கட்டுமான பணிகளும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

கம்போடியாவில்... : இந்த அசாதாரண சூழலை சமாளிக்கும் விதமாக, சில கட்டுமான நிறுவனங்கள், கம்போடியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்கு, ஆற்றுமணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இது சாத்தியமாவது சிக்கலாகியுள்ளது.
அப்படியே, கம்போடியாவில் ஒரு கன அடி மணல், 12 ரூபாய்க்கு கிடைத்தாலும், இறக்குமதி செய்யும் போது போக்குவரத்து செலவுகளையும் சேர்த்தால், சென்னைக்கு வரும் போது, அதன் விலை, 60 ரூபாயை எட்டும் என்பதாலும், இதில் யாரும் கவனம் செலுத்தவில்லை.

மியான்மரில்... : இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மணல் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றான, மியான்மரில் இருந்து, தமிழகத்துக்கு தேவையான மணலை இறக்குமதி செய்வது குறித்து, கட்டுமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. ஆற்று மணல் ஏற்றுமதிக்கு, அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதால், இது சாத்தியமாவதில் சிக்கல் இருக்காது. மேலும், மணல் இறக்குமதிக்கு இதுவரை, கம்போடியாவை நம்பியிருந்த, சிங்கப்பூர் போன்ற நாடுகளும், தற்போது மியான்மர் பக்கம் திரும்பியுள்ளன.
கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, அதிகரித்து வரும் மணல் தேவையை கருத்தில் கொண்டு, மியான்மரில் இருந்து ஆற்று மணல் இறக்குமதி செய்ய, சென்னையை சேர்ந்த, ஒரு தனியார் நிறுவனம் முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலே, இதற்கு காரணமாக கூறப்பட்டது.

ஆலோசனை : இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத பிரபல கட்டுமான நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு, தீர்வு காணும் வகையில், மியான்மரில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்நாட்டில் ஐராவதி நதி படுகையில் இருந்து, அதிக அளவில் மணல் கிடைப்பதால், ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அங்குள்ள பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்கள், தமிழகத்துக்கு மணல் அனுப்ப தயாராக உள்ளன. ஒரு கப்பலில், 15 ஆயிரம் டன் முதல், 20 ஆயிரம் டன் வரை கொண்டு வரமுடியும். அதுவும், மியான்மரில் இருந்து, நான்கு நாட்களில் ஒரு கப்பல், சென்னைக்கு வர முடியும் என்பதால், இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன. இதனால், கப்பல் போக்குவரத்து செலவும் அதிகமாக இருக்காது.

உரிமம் வேண்டும் : ஆனால், நம் நாட்டை பொறுத்தவரை, இறக்குமதி செய்யும் பொருள்கள் பட்டியலில் மணல் இல்லை. எனவே, தட்டுப்பாட்டை காரணம் காட்டி, மணல் இறக்குமதி செய்ய வேண்டுமானால், இதற்கு மத்திய நிதித் துறையிடமிருந்து, எஸ்.ஐ.எல்., எனப்படும் சிறப்பு இறக்குமதி உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இப்பணிகள் முடிந்துவிட்டால் மணல் இறக்குமதி சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக