அதிகாலை நேரம். அடர்ந்த வனத்தின் நடுவில், தற்காப்பு ஏற்பாடு எதுவும்
இன்றி, 30 அடி தொலைவில் புலியை நேருக்கு நேர் சந்தித்தால், உங்கள் மனநிலை
என்னவாக இருக்கும்? இத்தகைய சூழலில் எப்படிப்பட்டவருக்கும் இதயத்
துடிப்பும், ரத்த அழுத்தமும் அதிகரிக்காமல் இருக்காது...
இது போன்ற சந்திப்புக்காக, காட்டு மாடுகளின் வாழ்க்கை முறையை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 'நேச்சர் டிரஸ்ட்' அமைப்பினரின் புலிகளை தேடும் பயணம் சமீபத்தில் நடந்தது.
அவர்களுடன் சென்று நாம் சந்தித்த சில திகில் அனுபவங்கள்...:
சந்தனக்கடத்தல் வீரப்பனால் பிரபலமான சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து பயணம் துவங்கியது. சத்தியமங்கலத்தில் இருந்து, 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்தால், ஆசனூர் வனச்சரகம். அங்கிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூரு சாலை சந்திப்பு, குண்டல்பேட் வழியாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை அடையும் போது அந்தி சாயத் துவங்கியது.
யானை, புனுகுப் பூனை:
அங்கிருந்து வனத்துறை வாகன உதவியுடன், புலிகளை தேடி புறப்பட்டோம். லேசான ஈரப்பதத்துடன் கூடிய இதமான காற்று புறச்சூழலை குளுமையாக்கினாலும், எந்த பக்கம் இருந்து எந்த விலங்கு வரப்போகிறதோ என்ற திகில் அகச்சூழலை கவ்வி இருந்தது. திகிலை மேலும் அதிகப்படுத்தும் வகையில், அடுத்த சில நிமிடங்களில் யானைகள் ஜோடி, ஜோடியாக காட்சி அளித்தன. நடுநடுவே புள்ளி மான்கள் கூட்டத்தையும் காண முடிந்தது. இருள் சூழ்ந்துவிட்டதால் வனத்துறை வாகன பயணம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இரவு தங்கும் இடத்துக்கு செல்ல புறப்பட்டோம். பந்திப்பூரில் இருந்து முதுமலை செல்லும் சாலையில் இரு வெவ்வேறு இடங்களில், நன்கு வளர்ந்த மலைப்பாம்பு சாலையை கடப்பதற்காக, எங்கள் வழியில் குறுக்கிட்டது. அதையும் கடந்து தங்குமிடத்துக்கு வந்தாலும், ஆர்வம் தணியாதவர்களாக, மசினகுடியில் இருந்து மாயார் நோக்கி புறப்பட்டோம். 10 கி.மீ., தூரம் கொண்ட இந்த பாதை, முதுமலை புலிகள் காப்பகத்தின் மிக முக்கிய பகுதி. எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளிக்காமல், இரண்டு இடங்களில் யானைகள், புனுகுப் பூனை என, முக்கியமான விலங்குகளை இருட்டுக்கு நடுவில் சந்திக்க முடிந்தது. இந்த சந்தோஷத்தில் சில மணிநேர உறக்கத்தை முடித்து, அடுத்த நாள் அதிகாலையிலேயே பந்திப்பூருக்கு புறப்பட்டோம். அங்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறந்தவெளி ஜீப்பில், காப்பகத்தின் உட்புறப் பகுதிகளுக்கு பயணத்தை துவக்கினோம். இருபது நிமிடங்களில் ஜீப்பின் மிதமான வேகம் படிப்படியாக குறையத் துவங்கியது. என்னவென்று பார்த்தால், அந்த பாதையில், 100 மீ., தொலையில் ஒரு மரத்தடியில் புலி நின்று கொண்டிருந்தது. நாங்கள் இருக்கும் ஜீப் மெல்ல, புலி நிற்கும் இடம் நோக்கி சென்றது. இப்போது, 30 அடிக்கும் குறைவான தொலைவில் எந்த பதற்றமும் இல்லாமல் புலி நின்றிருக்க, நாங்களோ புகைப்படம் எடுப்பதா, பார்த்து ரசிப்பதா, அதன் செயல்பாட்டை கவனிப்பதா என, திகைத்து நின்றோம்.
4 பேர் பலி:
எங்களை பார்த்து விட்ட புலி, அதை வெளிக்காட்டாமல், தன் இயல்பான போக்கிலேயே இருந்தது. இருப்பினும், 10 நிமிடங்கள் அங்கு நடப்பதை கவனித்ததில், புலி குறித்து படித்திருந்த பல விஷயங்கள் உறுதியானது. எங்கள் முன் நிற்பது நன்கு வளர்ந்த ஆண் புலி என்பது அதன் செயல்பாடுகளில் இருந்து தெளிவானது. தனிமை விரும்பிகளாக ஒவ்வொரு புலியும், 20 ச.கி.மீ., அளவுக்கு தனி வாழிடமாக வைத்திருக்கும். இந்த எல்லைக்குள் அதன் விருப்பம் இல்லாமல் வேறு புலி வந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கும். இதற்காக, தான் செல்லும் வழியில் தனது இருப்பை உறுதி செய்யும் விதமாக, மரங்கள், தரைகளில் சிறுநீர் கழித்தோ, எச்சத்தை விட்டோ ஒரு அடையாளத்தை குறித்துவிட்டு செல்லும். இந்த வகையில் நாங்கள் இப்போது பார்த்த புலியும், தன் இருப்பை உறுதி செய்வதற்காக அங்கிருந்த மரத்தில் அடையாள குறியீடுகளை ஏற்படுத்திவிட்டு மெல்ல அருகில் இருந்த புதருக்குள் சென்றது. இந்த பகுதியில் தான் கடந்த ஆறு மாதத்தில் நான்கு பேர் புலியால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர் என்ற தகவல், திகிலை மேலும் அதிகரிப்பதாக இருந்தது. அங்கிருந்து புறப்பட்டு வனத்தின் உள்நோக்கி சென்றோம். 10 கி.மீ., தூரம் சென்ற நிலையில், நாங்கள் செல்லும் பாதையில் தெரிந்த கால் தடங்கள் சிறுத்தையுடையதாக இருக்கலாம் என்று தெரியவர, தொடர்ந்து அதே பாதையில் முன்னோக்கி பயணித்தோம்.
சிறுத்தை விட்ட 'லுக்':
அடுத்த, 10 நிமிடங்களில், வாகனத்தின் வேகம் மீண்டும் குறைந்தது. எங்களுக்கு வலது பக்கம் தரை மட்டத்தில் இரண்டு அடிக்கும் குறைவான உயர பாறையில் சிறுத்தை ஒன்று கம்பீரமாக அமர்ந்திருந்தது. புலியை பார்த்த அரை மணி நேரத்தில் சிறுத்தையை பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக ஆனது. நாங்கள் சிறுத்தையை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற திகிலுடன் நிமிடங்கள் நகர்ந்தன. ஆனால் சிறுத்தையோ, 'இது என் கட்டுப் பாட்டில் உள்ள பகுதி' என்ற பெருமிதத்துடன் இயல்பாக இருந்தது. ஏழு நிமிடங்கள் கடந்த நிலையில், பாறையில் இருந்து எழுந்து, அருகில் இருந்த புதருக்குள் செல்ல துவங்கியது. அப்போதும், தலையை மட்டும் திருப்பி எங்களை ஒரு 'லுக்' விட்டு சென்றது. அதிகாலையில் துவங்கிய பயணத்தில் புலி, சிறுத்தை, யானைகள் ஆகியவற்றை பார்த்து விட்ட மகிழ்ச்சியில், முதுமலைக்கு அடுத்த பயணத்தை துவக்கினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக