செவ்வாய், 5 மே, 2015

வண்ணம் மாறிய வலசை பறவைகளுக்கு வழியனுப்பு விழா! : நீர்நிலைகள் குறித்த ஆய்வில் புதிய தகவல்


வலசை வரும் பறவைகள் உடலில், இனப்பெருக்க காலத்தில் ஏற்படும் வண்ண மாற்றங்கள் மூலம், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் சூழலியல், பறவை இனங்களின் உணவு தேவையை, நல்ல முறையில் பூர்த்தி செய்வது, தெரியவந்துள்ளது.
பனிப்பொழிவால், பூமியின் வட கோளத்தில் வசிக்கும் பறவைகள், உணவு, இதமான தட்பவெப்பம் தேடி, தெற்கு நோக்கி இடம் பெயரும். மங்கோலியா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தெற்கு நோக்கி வலசை வரும் பறவைகளில், குறிப்பிட்ட சில இனங்கள், இந்தியாவுக்கு
வருகின்றன. ஆண்டு தோறும், தென்மேற்கு பருவமழை முடியும்போது, இந்தியா வரும் அந்த பறவைகள், வடகிழக்கு பருவமழை முடியும்போது, தமிழகத்துக்கு வரும்.
தமிழகத்தில்...
இவ்வாறு தமிழகத்துக்கு வரும் அவை, நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் தங்கும். குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, பள்ளிக்கரணை, நாகை மாவட்டம் கோடியக்கரை, நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் வரையிலான பல்வேறு நீர்நிலைகளில் அதிக எண்ணிக்கையில், அவை தங்குகின்றன. இதை பயன்படுத்தி, வலசை வரும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பில், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. நீர் நிலைகளிலும், அவற்றை ஒட்டிய பகுதிகளிலும் ஏற்படும் மாற்றங்களால், கடந்த சில ஆண்டுகளாக பறவைகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக, ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில், எண்ணிக்கை அடிப்படையிலேயே பல்வேறு அமைப்புகளும் கணக்கெடுப்பு நடத்தும் நேரத்தில், 'நேச்சர் டிரஸ்ட்' உள்ளிட்ட சில அமைப்புகள், வலசை காலத்தில் அந்த பறவைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களும், அதற்கு இங்குள்ள சூழல் எந்த
அளவுக்கு சாதமாக உள்ளது என்பது குறித்தும், ஆய்வு செய்துள்ளன.
இனப்பெருக்கம்
வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை குறைந்தாலும், தற்போதைய சூழல், பறவை களுக்கு எந்த அளவுக்கு
உதவிகரமாக உள்ளது என்று பார்ப்பதற்காகவே, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பொதுவாக, வலசை காலத்தில் கிடைக்கும் உணவுகள் தான், பறவைகளை உடல் அளவில் இனப்பெருக்கத்திற்கு தயார்படுத்துகின்றன. அதற்கு, வலசை காலத்தில் அவற்றுக்கு நல்ல உணவு கிடைக்க வேண்டியது அவசியம். எனவே, வலசை காலத்தில் தமிழக நீர் நிலைகளில் இப்பறவைகளுக்கு எத்தகைய உணவு கிடைக்கிறது என்பதை பொறுத்தே, பறவை இனங்களின் இனப்பெருக்கம் அமையும். அதன் வாயிலாகவே, உலகில் அந்த பறவைகள் எண்ணிக்கை
தீர்மானிக்கப்படும். வலசை காலத்தில், கிடைக்கும் உணவுகள் அடிப்படையில், அவற்றின் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும். அதனால், அவற்றின் தோற்றத்தில் பொலிவு ஏற்படும்.
வண்ணங்கள் மாற்றம்
அந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக, ஒரு பறவை இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிட்டது என்பதை, எதிர்பாலினத்துக்கு தெரிவிக்கும் வகையில், அவற்றின் இறக்கை வண்ணங்கள் மாறும்.
இதுகுறித்து, 'நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
* சென்னையில் பழவேற்காடு, பள்ளிக்கரணை, கோவளம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பெரும்பாலான பறவைகள் இனப்பெருக்கத்திற்கு உடல் அளவில் நல்ல முறையில் தயாராகி இருப்பது, வண்ண மாற்றங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பூ நாரைகள், தட்டைவாயன், நீல சிறகு வாத்து, ஊசிவால் வாத்து, கிளுவை, வளை மூக்கு மண் கொத்தி, பொன்னிற உப்பு கொத்தி, சாம்பல் நிற உப்பு கொத்தி, சிறு கொசு உள்ளான், கரண்டிவாயன் போன்ற பறவைகளின் உடலின் வண்ணங்கள் மாறியுள்ளது, புகைப்படங்கள் மூலம், உறுதி செய்யப்பட்டுள்ளன.
* அதில், பூ நாரைகளுக்கு இறக்கை பகுதியில் இளஞ்சிவப்பு அடர்த்தி அதிகமாகும். உப்பு கொத்தி பறவைகளுக்கு கழுத்து பகுதியில், கறுப்பு வண்ணம் அடர்த்தி அதிகரிக்கும். இதுபோன்று, ஒவ்வொரு பறவையின் உடலிலும் வண்ணங்கள் மாறும்.
பாதுகாப்போம்!
* பருவநிலை மாற்றம், நகர் மயமாதல், வேட்டை போன்ற காரணங்களால், பறவைகள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தமிழகம் வரும் பறவைகளுக்கு, நல்ல நிலையில் உணவு கிடைக்கிறது என்பது, இந்த ஆய்வு வாயிலாக தெரியவந்துள்ளது.
* இங்குள்ள நீர்நிலைகளை, நல்ல முறையில் பராமரித்து பாதுகாத்தால், வலசை பறவைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். உயிர் சூழலில் இவற்றின் எண்ணிக்கை சமநிலை பராமரிக்கப்படும். இந்த பின்னணியில், வலசை பறவைகள் தினம், மே, 9, 10ம் தேதிகளில், வழியனுப்பு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
(மே, 9, 10 - வலசை பறவைகள் வழியனுப்பு தினம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக