திங்கள், 22 பிப்ரவரி, 2010

குரல் மூலமே புகார்களை பதிவு செய்யலாம்: டிஜிபி அலுவலகத்தில் புதிய வசதி


  குற்ற நிகழ்வுகள் மற்றும் காவல்துறை சேவைகளில் ஏற்படும் குறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்ய சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குரல் மூலமே புகார்களை பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
கொலை, கொள்ளை, வழிப்பறி, மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோர் தங்கள் புகார்களை போலீஸôருக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக தங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.
 
குறிப்பிட்ட சில நிகழ்வுகள் தவிர்த்து பெரும்பாலான குற்ற நிகழ்வுகளில் இத்தகைய நடைமுறையிலேயே போலீஸôரின் நடவடிக்கைகள் தொடங்கும்.இவ்வாறு புகார்களை அளிக்க பொதுமக்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களையே நாட வேண்டியுள்ளது. 
 
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளூரில் அரசியல் செல்வாக்கு மிக்கவராகவோ அல்லது செல்வாக்கு மிக்கவரின் நெருக்கமானவராகவோ இருந்தால் போலீஸôரிடம் புகார் தெரிவிப்பது என்பதே பொது மக்களுக்கு எளிதானதாக இருப்பதில்லை.
 
இத்தகைய சூழலில் விவரம் தெரிந்தவர்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையத்தை தாண்டி உயர் அதிகாரிகளை நேரில் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை அளிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
 
குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பகுதி காவல் நிலையத்தை தொடர்புக் கொள்வதில் பிரச்னை ஏதும் இருந்தாலோ அல்லது, போலீஸôரின் சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலோ அது பற்றி காவல் துறை தலைமைக்கு தெரிவிக்க முடியாமல் போகிறது.
 
சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடைபெற்றால் அது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என்பது பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
 
இத்தகைய பிரச்னைகளை தீர்க்க சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக புகார்கள் பெறப்படுகின்றன.இருந்தாலும், குற்ற நிகழ்வுகள் மற்றும் போலீஸôரின் பணிகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து காவல் துறை தலைமையிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க முடியாத சூழல் நிலவியது.
 
இதற்கு தீர்வாக சென்னையில் உள்ள காவல் துறை தலைமையகமான டிஜிபி அலுவலகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு அதன் மூலம் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இதில் மேலும் ஒரு வசதியாக பொது மக்கள் தங்கள் குரலிலேயே புகார்களை பதிவு செய்ய புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள், 044-28447200- என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அதில் ஆங்கிலம், தமிழ் மொழி அறிவிப்புகளைத் தொடர்ந்து "பீப்' என்ற சப்தம் ஒலிக்கும். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் தங்கள் புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.
 
இவ்வாறு, தானியங்கி தொலைபேசி எண்ணுக்கு வரும் புகார்கள் குரல் பதிவையே அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்படும்.இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமையகத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். 
 
 
மேலும், புகார் அளித்தவரின் அடையாளமும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.சில ஆண்டுகள் முன்பே திட்டமிடப்பட்டாலும் அண்மையில் தான் இந்த சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பகட்டத்திலேயே பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்!



  கவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களில் தங்கள் துறை சாராத கேள்விகள் இருந்தால்,​​ அவற்றை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல்,​​ மனுதாரருக்கே சில பொது தகவல் அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாகப் புகார் எழுந்துள்ளது.
 
இவ்வாறு திருப்பி அனுப்புவது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மீறுவதாகும்.​ எனவே,​​ இத்தகைய அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
 
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள்,​​ நீர் வரத்துக் கால்வாய்கள்,​​ சாலைகள்,​​ பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும்,​​ அவற்றை அகற்ற பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள்,​​ அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிக்க தகவல்களை அளிக்குமாறு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பி.கல்யாணசுந்தரம் என்பவர் வருவாய் துறையிடம் கோரி இருந்தார்.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் விண்ணப்பித்து தகவல்களை பெறலாம்.இதன்படி,​​ வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர் என்பதற்கான அரசின் சான்றிதழின் நகலுடன் கல்யாணசுந்தரம் தனது மனுவை வருவாய்த் துறைக்கு கடந்த மாதம் 4}ம் தேதி அனுப்பினார்.
 
வருவாய் துறை பதில்:​​ 
 
இது தொடர்பாக வருவாய்த் துறையின் சார்பு செயலரும் பொது தகவல் அதிகாரியுமான முஹமத் இலியாஸ் பாஷா,​​ ஜனவரி 27-ம் தேதி மனுதாரருக்கு கடிதம் ​(எண்:​ 1008/நி.மு.​ 6 ​(2)10}1) ஒன்றை அனுப்பினார்.
 
அதில்,​​ "தங்கள் மனுவில்,​​ தகவல்களை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது.இருப்பினும் அதற்கான ரூ.​ 10-க்கான கட்டண வில்லை ஒட்டப்படவில்லை.​ எனவே,​​ தங்கள் மனு அசலாக தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.​
 
மேலும்,​​ ஏரி,​​ குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால்,​​ இது குறித்து பொதுப் பணித் துறையினை அணுகுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்' என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சட்டம் சொல்வது என்ன?​ 
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6 ​(3 ​(2))-ன் படி,​​ தகவல் கோரி வரும் மனுக்களில் உள்ள கேள்விகள் வேறு ஒரு அதிகார அமைப்பின் செயற்பணிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக இருந்தால்,​​ சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்கு ​(துறைக்கு)​ மாற்றம் செய்து,​​ அது குறித்து விண்ணப்பதாரருக்கு தெரிவித்தல் வேண்டும்.
 
சட்டத்தில் இப்படி இருக்க,​​ தங்கள் துறைக்கு சாராத கேள்விகள் அடங்கிய மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல் வருவாய்த் துறையினர் ​ விண்ணப்பதாரருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
மேலும், ​​ வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட்ட சலுகையான கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்பதையும் ஏற்க மறுத்துள்ளனர்.
 
வருவாய்த் துறை மட்டுமல்ல,​​ ஆதிதிராவிடர் நலத் துறை,​​ பணியாளர் நலத் துறை,​​ சென்னை மாநகராட்சி ​ உள்ளிட்ட துறைகளின் பொது தகவல் அதிகாரிகளும் இதேபோல மனுக்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் இத்தகைய பொது தகவல் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு விண்ணப்பதாரர்களும்,​​ சமூக ஆர்வலர்களும் ​ வலியுறுத்தியுள்ளனர்.

சனி, 6 பிப்ரவரி, 2010

கொடைக்கானல் வனப்பகுதியில் நக்ஸலைட் ஊடுருவல்?​​: மர்ம நபர்களால் மலைக்கிராமங்களில் பதற்றம்



   கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் மலைக்கிராமங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றித் திரிவதாக அங்குள்ள கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை அதிரடிப்படை போலீஸôர் தீவிரப்படுத்தியுள்ளனர்."மர்ம நபர்கள் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்' என்று போலீஸ் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் பின்தங்கிய மற்றும் எல்லையோர கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பது உறுதியானது.​ இத்தகைய இயக்கங்களை ஒடுக்கும் வகையில் போலீஸôர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 
போலீஸôரின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் கொடைக்கானலை அடுத்துள்ள பழனி மேல்மலைப் பகுதிகள்,​​ ​ காடுகளில் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊடுருவினர்.இது குறித்த ரகசிய தகவலின்பேரில் அதிரடிப்படை போலீஸôர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நவீன் பிரசாந்த் கொல்லப்பட்டார்.​ 
 
இதையடுத்து கொடைக்கானல் மற்றும் பழனி மலைப் பகுதிகள்,​​ அதையொட்டியுள்ள காடுகள்,​​ மலைக் கிராமங்களில் அதிரடிப்படை போலீஸôர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
 
மர்ம நபர்கள்...:​​ 
 
இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூக்கால்,​​ மன்னவனூர்,​​ கவுஞ்சி,​​ பூண்டி,​​ போளூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் சந்தேகத்திற்குரிய வகையில் மர்ம நபர்கள் நடமாடுவதாக அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் இந்த நபர்கள் இரவு நேரங்களில் தனியாக வரும் கிராம வாசிகளிடம் வழிப்பறி செய்வதாகவும் அவர்கள் கூறினர்.பணம், ​​ துணிகள்,​​ மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் மிரட்டி வாங்கிக் கொள்வதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவித்தனர்.​ 
 
மன்னவனூர் கிராமத்தில் கைகாட்டி என்னுமிடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனியாகச் சென்ற கிராமவாசி ஒருவரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ய முயற்சித்ததாக மன்னவனூர் கிராம மக்கள் போலீஸôரிடம் புகார் தெரிவித்தனர்.
 
கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் பனிப் பொழிவு காரணமாக இரவு நேரங்களில் போலீஸôர் கிராமங்களில் இருப்பதில்லை.​ இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.​ 
 
மேலும்,​​ இந்த கிராமங்களுக்கு வரும் வெளியாட்களும்,​​ அவர்களது வாகனங்களும் எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் 24 மணி நேரமும் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.இதையடுத்து மன்னவனூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை அதிரடிப்படை போலீஸôர் தீவிரப்படுத்தியுள்ளனர்.​
 
இந்த கிராமங்களுக்கு செல்லும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக போலீஸôர் தெரிவித்தனர்.
 
நக்ஸலைட்களா?​​
 
"கிராம மக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் பார்த்தால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் மர்ம நபர்கள் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்' என அதிரடிப்படை போலீஸôருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
30 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைத் தொடங்கி தீவிரமாக நடத்தி வந்த முதல் தலைமுறை தலைவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு விட்டனர்.ஆனால், ​​ அவர்களைப் பின்பற்றி வந்த இரண்டாம் தலைமுறையினர் பலர் இப்போதும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.​ 
 
அவர்களது வழிகாட்டுதலில் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட அவ்வப்போது முயற்சித்து வருவதாக போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.​ 
 
இதனையடுத்து,​​ கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை முழுவீச்சில் முடுக்கிவிடுவது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.