குற்ற நிகழ்வுகள் மற்றும் காவல்துறை சேவைகளில் ஏற்படும் குறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்ய சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குரல் மூலமே புகார்களை பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொலை, கொள்ளை, வழிப்பறி, மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோர் தங்கள் புகார்களை போலீஸôருக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக தங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட சில நிகழ்வுகள் தவிர்த்து பெரும்பாலான குற்ற நிகழ்வுகளில் இத்தகைய நடைமுறையிலேயே போலீஸôரின் நடவடிக்கைகள் தொடங்கும்.இவ்வாறு புகார்களை அளிக்க பொதுமக்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களையே நாட வேண்டியுள்ளது.
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளூரில் அரசியல் செல்வாக்கு மிக்கவராகவோ அல்லது செல்வாக்கு மிக்கவரின் நெருக்கமானவராகவோ இருந்தால் போலீஸôரிடம் புகார் தெரிவிப்பது என்பதே பொது மக்களுக்கு எளிதானதாக இருப்பதில்லை.
இத்தகைய சூழலில் விவரம் தெரிந்தவர்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையத்தை தாண்டி உயர் அதிகாரிகளை நேரில் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை அளிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பகுதி காவல் நிலையத்தை தொடர்புக் கொள்வதில் பிரச்னை ஏதும் இருந்தாலோ அல்லது, போலீஸôரின் சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலோ அது பற்றி காவல் துறை தலைமைக்கு தெரிவிக்க முடியாமல் போகிறது.
சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடைபெற்றால் அது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என்பது பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
இத்தகைய பிரச்னைகளை தீர்க்க சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக புகார்கள் பெறப்படுகின்றன.இருந்தாலும், குற்ற நிகழ்வுகள் மற்றும் போலீஸôரின் பணிகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து காவல் துறை தலைமையிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க முடியாத சூழல் நிலவியது.
இதற்கு தீர்வாக சென்னையில் உள்ள காவல் துறை தலைமையகமான டிஜிபி அலுவலகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு அதன் மூலம் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இதில் மேலும் ஒரு வசதியாக பொது மக்கள் தங்கள் குரலிலேயே புகார்களை பதிவு செய்ய புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள், 044-28447200- என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அதில் ஆங்கிலம், தமிழ் மொழி அறிவிப்புகளைத் தொடர்ந்து "பீப்' என்ற சப்தம் ஒலிக்கும். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் தங்கள் புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு, தானியங்கி தொலைபேசி எண்ணுக்கு வரும் புகார்கள் குரல் பதிவையே அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்படும்.இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமையகத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
மேலும், புகார் அளித்தவரின் அடையாளமும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.சில ஆண்டுகள் முன்பே திட்டமிடப்பட்டாலும் அண்மையில் தான் இந்த சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பகட்டத்திலேயே பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக