செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்!



  கவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களில் தங்கள் துறை சாராத கேள்விகள் இருந்தால்,​​ அவற்றை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல்,​​ மனுதாரருக்கே சில பொது தகவல் அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாகப் புகார் எழுந்துள்ளது.
 
இவ்வாறு திருப்பி அனுப்புவது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மீறுவதாகும்.​ எனவே,​​ இத்தகைய அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
 
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள்,​​ நீர் வரத்துக் கால்வாய்கள்,​​ சாலைகள்,​​ பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும்,​​ அவற்றை அகற்ற பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள்,​​ அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிக்க தகவல்களை அளிக்குமாறு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பி.கல்யாணசுந்தரம் என்பவர் வருவாய் துறையிடம் கோரி இருந்தார்.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் விண்ணப்பித்து தகவல்களை பெறலாம்.இதன்படி,​​ வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர் என்பதற்கான அரசின் சான்றிதழின் நகலுடன் கல்யாணசுந்தரம் தனது மனுவை வருவாய்த் துறைக்கு கடந்த மாதம் 4}ம் தேதி அனுப்பினார்.
 
வருவாய் துறை பதில்:​​ 
 
இது தொடர்பாக வருவாய்த் துறையின் சார்பு செயலரும் பொது தகவல் அதிகாரியுமான முஹமத் இலியாஸ் பாஷா,​​ ஜனவரி 27-ம் தேதி மனுதாரருக்கு கடிதம் ​(எண்:​ 1008/நி.மு.​ 6 ​(2)10}1) ஒன்றை அனுப்பினார்.
 
அதில்,​​ "தங்கள் மனுவில்,​​ தகவல்களை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது.இருப்பினும் அதற்கான ரூ.​ 10-க்கான கட்டண வில்லை ஒட்டப்படவில்லை.​ எனவே,​​ தங்கள் மனு அசலாக தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.​
 
மேலும்,​​ ஏரி,​​ குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால்,​​ இது குறித்து பொதுப் பணித் துறையினை அணுகுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்' என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சட்டம் சொல்வது என்ன?​ 
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6 ​(3 ​(2))-ன் படி,​​ தகவல் கோரி வரும் மனுக்களில் உள்ள கேள்விகள் வேறு ஒரு அதிகார அமைப்பின் செயற்பணிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக இருந்தால்,​​ சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்கு ​(துறைக்கு)​ மாற்றம் செய்து,​​ அது குறித்து விண்ணப்பதாரருக்கு தெரிவித்தல் வேண்டும்.
 
சட்டத்தில் இப்படி இருக்க,​​ தங்கள் துறைக்கு சாராத கேள்விகள் அடங்கிய மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல் வருவாய்த் துறையினர் ​ விண்ணப்பதாரருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
மேலும், ​​ வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட்ட சலுகையான கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்பதையும் ஏற்க மறுத்துள்ளனர்.
 
வருவாய்த் துறை மட்டுமல்ல,​​ ஆதிதிராவிடர் நலத் துறை,​​ பணியாளர் நலத் துறை,​​ சென்னை மாநகராட்சி ​ உள்ளிட்ட துறைகளின் பொது தகவல் அதிகாரிகளும் இதேபோல மனுக்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் இத்தகைய பொது தகவல் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு விண்ணப்பதாரர்களும்,​​ சமூக ஆர்வலர்களும் ​ வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக