கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் மலைக்கிராமங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றித் திரிவதாக அங்குள்ள கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை அதிரடிப்படை போலீஸôர் தீவிரப்படுத்தியுள்ளனர்."மர்ம நபர்கள் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்' என்று போலீஸ் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பின்தங்கிய மற்றும் எல்லையோர கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பது உறுதியானது. இத்தகைய இயக்கங்களை ஒடுக்கும் வகையில் போலீஸôர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
போலீஸôரின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் கொடைக்கானலை அடுத்துள்ள பழனி மேல்மலைப் பகுதிகள், காடுகளில் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊடுருவினர்.இது குறித்த ரகசிய தகவலின்பேரில் அதிரடிப்படை போலீஸôர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நவீன் பிரசாந்த் கொல்லப்பட்டார்.
இதையடுத்து கொடைக்கானல் மற்றும் பழனி மலைப் பகுதிகள், அதையொட்டியுள்ள காடுகள், மலைக் கிராமங்களில் அதிரடிப்படை போலீஸôர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
மர்ம நபர்கள்...:
இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூக்கால், மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, போளூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் சந்தேகத்திற்குரிய வகையில் மர்ம நபர்கள் நடமாடுவதாக அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் இந்த நபர்கள் இரவு நேரங்களில் தனியாக வரும் கிராம வாசிகளிடம் வழிப்பறி செய்வதாகவும் அவர்கள் கூறினர்.பணம், துணிகள், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் மிரட்டி வாங்கிக் கொள்வதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவித்தனர்.
மன்னவனூர் கிராமத்தில் கைகாட்டி என்னுமிடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனியாகச் சென்ற கிராமவாசி ஒருவரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ய முயற்சித்ததாக மன்னவனூர் கிராம மக்கள் போலீஸôரிடம் புகார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் பனிப் பொழிவு காரணமாக இரவு நேரங்களில் போலீஸôர் கிராமங்களில் இருப்பதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த கிராமங்களுக்கு வரும் வெளியாட்களும், அவர்களது வாகனங்களும் எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் 24 மணி நேரமும் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.இதையடுத்து மன்னவனூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை அதிரடிப்படை போலீஸôர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த கிராமங்களுக்கு செல்லும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக போலீஸôர் தெரிவித்தனர்.
நக்ஸலைட்களா?
"கிராம மக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் பார்த்தால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் மர்ம நபர்கள் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்' என அதிரடிப்படை போலீஸôருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் நக்ஸலைட் இயக்கத்தைத் தொடங்கி தீவிரமாக நடத்தி வந்த முதல் தலைமுறை தலைவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு விட்டனர்.ஆனால், அவர்களைப் பின்பற்றி வந்த இரண்டாம் தலைமுறையினர் பலர் இப்போதும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
அவர்களது வழிகாட்டுதலில் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட அவ்வப்போது முயற்சித்து வருவதாக போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை முழுவீச்சில் முடுக்கிவிடுவது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக