திங்கள், 14 ஜூன், 2010

ஒரு வழக்கில் இரு வேறு உத்தரவு; தகவல் ஆணையத்தில் குழப்பம்

தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல் முறையீட்டு வழக்கில் 2 தகவல் ஆணையர்கள், இரு வெவ்வேறு வித உத்தரவை பிறப்பித்துள்ளனர். தகவல் ஆணையர்களின் இத்தகைய நடவடிக்கையால் தகவல் கோருபவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.







தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசின் விருப்புரிமை பிரிவின் கீழ் காவல் துறை, நீதித்துறையைச் சார்ந்த குறிப்பிட்ட சில முக்கிய நபர்கள் வீடுகளை பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களுக்கு ஆளான நபர்கள் இவ்வாறு புதிய சொத்துகள் வாங்கியது தொடர்பாக அந்தந்த துறை தலைமைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்பது விதி.






இந்த விதிப்படி அதிகாரிகள் தங்களது புதிய சொத்துகள் குறித்து தகவல் தெரிவித்தார்களா என்ற விவரங்களை அளிக்குமாறு, சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை தலைமை அலுவலகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆகியவற்றுக்கு மனு செய்திருந்தார்.






ஆனால், இந்த மனுக்களை பெற்ற அந்தந்தத் துறைகளின் பொது தகவல் அதிகாரிகள் உரிய பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து, இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.






இந்த மனுக்களில் டிஜிபி அலுவலகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகியவை தொடர்பான மனுக்களை தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன் விசாரித்தார்.






மனுதாரர் கோரும் தகவல்களை அவருக்கு அளித்துவிட்டு, அது குறித்து ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என டிஜிபி அலுவலக பொது தகவல் அதிகாரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தனித்தனியாக உத்தரவிட்டார்.






இதேபோல, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறுமற்றொரு மனுவை விசாரித்த தகவல் ஆணையர் ஜி. ராமகிருஷ்ணன், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உயர் நீதிமன்ற பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.






இந்த 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சட்டப்படி 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறையினர் மனுதாரருக்கு உரிய தகவல்களை அளித்திருக்க வேண்டும். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட 3 துறைகளின் பொது தகவல் அதிகாரிகளும் மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.






இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்தார்.






இந்த 3 மேல் முறையீட்டு மனுக்களையும் தகவல் ஆணையர் ஆர். பெருமாள்சாமி அண்மையில் விசாரித்தார். இதில் உயர் நீதிமன்றம், டிஜிபி அலுவலகம் தொடர்பான மனுக்களை தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அவர் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த அவர், பொது தகவல் அதிகாரிகளின் பணிச்சுமை குறித்து அறிந்து கொள்ளுமாறு மனுதாரருக்கு அறிவுரை கூறியுள்ளார்.






இதே வழக்கில், தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர்ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்தும், அவற்றை நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் எந்தக் கருத்தையும் தனது உத்தரவில் தகவல் ஆணையர் பெருமாள்சாமி குறிப்பிடவில்லை.






எனவே, இவரது உத்தரவு காரணமாக முந்தைய உத்தரவுகளின் அமலாக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரே வழக்கில் முந்தைய உத்தரவுக்கு மாறாக மற்றொரு தகவல் ஆணையர் புதிய உத்தரவு பிறப்பிப்பது தகவல் ஆணையத்தின் பணிகள் குறித்த குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக