தமிழகக் காவல் துறையில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆகிய பிரிவுகளுக்கு பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சியை கல்வித் தகுதியாகக் கொண்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள் காவலர்களாக பணியாற்றிக் கொண்டு அஞ்சல் வழியில் பட்டப்படிப்பை முடித்தால் அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்று உயர் பதவிகளுக்கு விரைந்து செல்ல முடியும்.
பணியிலிருக்கும் காவலர்கள் தங்கள் துறை மேலதிகாரிகளின் சான்றுடன் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட சில சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
காவல் துறையில் சாதனை படைப்பதை தங்கள் வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ள ஏராளமான இளைஞர்கள் முதலில் காவலர்களாக இத்துறையில் கால் பதித்துவிட்டு அதன் பின்னர் பட்டப்படிப்பு முடித்து உயர் பதவிகளுக்கு வருவது வழக்கமான ஒரு நடைமுறையாகும்.
இப்போதைய நிலையில் இவ்வாறு காவல் பணியில் சேரும் ஆயிரம் பேரில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மேற்படிப்பில் சேர விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது தமிழகக் காவல் துறையில் சுமார் 6 ஆயிரம் பேர் ஆயுதப்படை, சிறப்புப் போலீஸ் படையில் உள்ளனர்.
இதில் சென்னையில் மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவலர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியாக பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.
இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் முதலில் மாநகரப் போலீஸில் உள்ள நிர்வாகப் பிரிவில் இருந்து ஆட்சேபணையில்லா சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழும், துறை சார்ந்த பணியை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அனுமதி மற்றும் ஆட்சேபணையில்லா சான்றிதழ் பெற சில மாதங்களுக்கு முன்னர் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மாநகரப் போலீஸ் நிர்வாகப் பிரிவில் விண்ணப்பித்தனர். இந்த மனுக்கள் மீது நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் இதுவரை எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்து வருவதாக காவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களது உயர் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு தங்களது பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என அந்தக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக