வியாழன், 22 ஜூலை, 2010

தனியார் குடியிருப்புகளாகும் அரசு ஒதுக்கீட்டு மனைகள்!

அரசின் விருப்ப உரிமை பிரிவின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளை பெற்ற சிலர், தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

  

அரசு ஒதுக்கீட்டின் வீட்டு மனை பெற காத்திருப்போர் மற்றும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மத்தியில் இந்த மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதிய மனைப் பிரிவுகளையும், குடியிருப்புகளையும் உருவாக்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. 

 இவ்வாறு உருவாக்கப்பட்ட மனைகள், குடியிருப்புகளில் 85 சதவீதத்தை வீட்டுவசதி வாரியம், குறைந்த வருவாய் பிரிவு, உயர் வருவாய் பிரிவு, அரசு ஊழியர்கள், பொது போட்டி, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் என வெவ்வேறு பிரிவுகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்கிறது.  எஞ்சிய 15 சதவீத மனைகள், குடியிருப்புகள் அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். 

 இவ்வாறு அரசின் விருப்ப உரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிகளை மீறி பலர் வீடு, மனை ஒதுக்கீடு பெறுவதாக புகார்கள் கூறப்படுகின்றன. இந்த புகார்கள் மீது எப்போதாவது விசாரணையும் நடத்தப்படுவது உண்டு.

 இந்த புகார்கள் ஒரு புறம் இருந்தாலும், இவ்வாறு மனைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களுக்கு சென்னையில் சொந்த வீடு இல்லை எனக்கூறி விண்ணப்பித்ததன் அடிப்படையில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பர்வீன் ஜாபருக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில் திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் அரசின் விருப்ப உரிமை பிரிவின் கீழ் 540-வது மனை 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

 4,756 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை ரூ. 1.26 கோடி மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பர்வீன் ஜாபர் தரப்பில் இருந்து 2 தவணைகளில் இதற்கான தொகை வீட்டு வசதி வாரியத்திடம் செலுத்தப்பட்டு விற்பனை பத்திரமும் பெறப்பட்டுவிட்டது.

இதேபோல, தங்களுக்கும் சென்னையில் வசிக்க சொந்தமாக வீடு இல்லை என்று கோரியதன் அடிப்படையில் அரசின் விருப்ப உரிமை பிரிவின்கீழ், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த இரா. துர்கா சங்கர் என்பவருக்கு, வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில் திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் 538-வது மனை 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 4,668 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை ரூ. 1.12 கோடி மதிப்பில் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதற்கான தொகையை இவரும் உடனடியாக முழுமையாக செலுத்தி விற்பனை பத்திரத்தையும் பெற்றுவிட்டார். 

 இவ்வாறு ஒரே இடத்தில் அடுத்தடுத்து உள்ள மனைகளை அரசின் விருப்ப உரிமையின் கீழ் ஒதுக்கீடு பெற்ற பர்வீன் ஜாபர், துர்கா சங்கர் ஆகியோர் பிரபல தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரை பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு கூட்டாக புதிய குடியிருப்பு ஒன்றை அந்த நிலத்தில் கட்டியுள்ளனர்.

 2 மனைகளையும் ஒன்றாக சேர்த்து மொத்தம் 9,424 சதுர அடியில், 12 வீடுகளை கொண்ட 4 மாடி குடியிருப்பை 2009-ம் ஆண்டு தொடங்கி சில மாதங்களுக்கு முன்னர் கட்டி முடித்தனர். தற்போது இதில் அனைத்து வீடுகளையும் அவர்கள் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

 ஒரு சதுர அடி ரூ. 8 ஆயிரம் என்ற அடிப்படையில் இந்த குடியிருப்புகள் முற்றிலுமாக வர்த்தக நோக்கத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

என்ன தவறு? 

இவர்களை போல பல்வேறு பகுதிகளிலும் ஏதாவது காரணம் கூறி அரசிடம் இருந்து வீட்டு மனைக்கான ஒதுக்கீடு பெற்ற பலரும் இதுபோல தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து வர்த்தக நோக்கத்தில் புதிய குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.


 மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. இருப்பினும், உள்ளார்ந்து பார்க்கும் போது, அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீடு என்பது சொந்தமாக வீடு இல்லை என்று கோருபவர்களின் வீட்டு வசதித் தேவையைப் பூர்த்தி செய்யவே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 

 ஆனால், இவ்வாறு அரசிடம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஒதுக்கீடு பெற்றவர்கள் தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து வர்த்தக நோக்கத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம் என அரசு ஒதுக்கீட்டின் வீடு, மனை பெற விண்ணப்பித்து காத்திருப்போர் கேள்வி எழுப்புகின்றனர். 

வீட்டுவசதி வாரியத்தின் நிலை என்ன?  

ஒதுக்கீடு பெற்றவர்கள் அதற்கான முழுத் தொகையையும் செலுத்தி விற்பனை பத்திரத்தை பெற்றுவிட்டால், அந்த மனை அவர்களுக்கு சொந்தமாகி விடுகிறது. அதன் பின்னர் அதில் அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் தலையிட முடியாது என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக