சென்னை கோயம்பேடு சந்திப்பில் ஓசோன் குழுமத்தின் குடியிருப்பு திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.எம்.டி.ஏ. உறுப்பினர், செயலர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்திப்பில் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ்-பாட்டரீஸ் நிறுவனத்திடம் இருந்து 42 ஏக்கர் நிலத்தை ஓசோன் நிறுவனம் வாங்கி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை உருவாக்கியது.
இந்த 42 ஏக்கர் நிலத்தில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 1.77 ஏக்கர் நிலமும் சேர்த்து விற்கப்பட்டதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கோயில் நிலத்தை ஓசோன் குழுமத்தினர் தங்களது கட்டுமான திட்டத்துக்கு பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ள ஓசோன் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பான சர்ச்சை குறித்து தினமணியில் 2009 ஜூலை 14, 2010 ஏப்ரல் 19 ஆகிய தேதிகளில் செய்தி வெளியானது.
இரண்டுமுறையும் இதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பிரச்னை எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த சி.எம்.டி.ஏ. தலைவரும் செய்தித் துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி, ஓசோன் நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டதில் எவ்வித
விதிமீறலும் நடைபெறவில்லை என்றும், திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்தார்.
4.76 ஏக்கர் நிலம் அபகரிப்பு விவகாரம்: இந்த திட்டப் பகுதியில் அடங்கியுள்ள சர்வே எண்: 2307ஏ-ல் 3 ஏக்கர், சர்வே எண்: 2291ஏ-ல் 1.76 ஏக்கர் என மொத்தம் 4.76 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
இங்குள்ள மொத்த நிலத்துக்கும் 1914-ம் ஆண்டில் அமாவாசை, ஆளவட்டான் ஆகிய இருவரும் பூர்வீக உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இவர்களிடம் இருந்து வெவ்வேறு பெயர்களுக்கு நிலத்தின் உரிமை மாறியது.
அதன் பின்னர் இதன் ஒரு பகுதி நிலம் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தின் இப்போதைய உரிமையாளர்களின் முந்தைய தலைமுறையினர் வசம் வந்தது.
இதே சமயத்தில் இவர்களுக்கு போக மீதியுள்ள நிலத்தில் (சர்வே எண்: 2307ஏ-ல் 3 ஏக்கர், சர்வே எண்: 2291ஏ-ல் 1.76 ஏக்கர்) 4.76 ஏக்கர் நிலம் பூர்வீக உரிமையாளர்களான அமாவாசை, ஆளவட்டான் ஆகியோரின் வாரிசுகள் 21 பேருக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் அனைவரும் நிலத்தின் உரிமையை தங்களது உறவினரான இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கருக்கு அளித்தனர். உடல் நல பாதிப்பு காரணமாக அவர் இறந்ததை அடுத்து, அவரது மகன் பார்த்தி பாஸ்கர் (எ) பாலகிருஷ்ணனுக்கு நிலத்தின் உரிமை 1996-ல் அளிக்கப்பட்டது.
இந்தப் பொது அதிகார ஆவணத்தைப் பயன்படுத்தி நிலத்துக்குப் பட்டா பெறுவதற்காக சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறை இயக்குநரை 1996-ல் பார்த்தி பாஸ்கர் அணுகினார். பிறகு இயக்குநரின் அறிவுறுத்தலின்படி கோயம்பேடு பகுதிகளுக்கான உதவி செட்டில்மென்ட் அதிகாரியை பார்த்தி பாஸ்கர் அணுகினார்.
ஆனால், தாமதம் மற்றும் வாரிசுகளின் அடையாளம் குறித்து எழுந்த கேள்விகள் அடிப்படையில் பட்டா வழங்க அவர் மறுத்துவிட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த செட்டில்மென்ட் அதிகாரியும் பட்டா வழங்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து பார்த்தி பாஸ்கர் தரப்பினர் சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறை இயக்குநரிடமே முறையிட்டனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இயக்குநர், மனுதாரர் பார்த்தி பாஸ்கர், ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் என இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்டறிந்த பின்னர், பட்டா வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள எழும்பூர்- நுங்கம்பாக்கம் வட்டாட்சியருக்கு 1999 ஜூலை 5-ம் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை சீராய்வு செய்யுமாறு நில நிர்வாக ஆணையரிடம் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தினர் மனுச் செய்தனர். இந்த மனுவின் அடிப்படையில் சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநரின் உத்தரவில் சில நுணுக்கமான காரணங்களைச் சீராய்வு செய்ய 2001 மே 14-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, பார்த்தி பாஸ்கர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு (எண்: 12613/2001) தொடர்ந்தனர். இந்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட நிலத்தில் எவ்வித கட்டுமான திட்டத்துக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து பார்த்தி பாஸ்கர் தரப்பில் 2002-ம் ஆண்டிலும், 2007-ம் ஆண்டிலும் சி.எம்.டி.ஏ.வுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேபத்தை கருத்தில் கொள்ளாமல் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தில் கட்டுமான திட்டம் மேற்கொள்ள ஓசோன் குழுமத்துக்கு 2009-ல் அனுமதி அளிக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார்: இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அது குறித்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பார்த்தி பாஸ்கர் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 10-6-2009-ல் புகார் அளிக்கப்பட்டது.
இதனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததை அடுத்து, இது தொடர்பாக பார்த்தி பாஸ்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சி.டி. செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ. சரவணன் ஆகியோர் ஆஜராகினர்.
தீர்ப்பு விவரம்: இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சி.டி. செல்வம் கடந்த மாதம் 27-ம் தேதி இறுதிகட்ட விசாரணைகளை முடித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
ஓசோன் குழுமத்துக்கு திட்ட அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ள வேண்டும். திட்ட அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடுகள் புகார் குறித்து இந்த விசாரணையில் தெரிய வரும் தகவல்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி சி.டி. செல்வம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக