லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சிபிஐ பதிவு செய்த 127 வழக்குகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் உள்ளிட்ட 38 அதிகாரிகள் மீதான வழக்குகளும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக சென்னை துறைமுகத்தில் சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் வி.வி. சாய்ராம் பாபு 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணி புரிந்து வருகிறார்.
சென்னையில் உள்ள சிபிஐ ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலனாய்வு முடிவடைந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தற்போது தடைபட்டுள்ளது. 1988-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு சட்டப்படி மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் முன்னர், அந்த குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் சிபிஐ அனுமதி பெற வேண்டும். இதன்படி சாய்ராம் பாபு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூன் 9-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி:
இதேபோல, சென்னை மண்டல பாஸ்போர்ட் துறை அதிகாரியாக இருந்த சுமதி ரவிச்சந்திரன் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக 2009 ஏப்ரல் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது அஞ்சல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர் மீதான வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவரது நியமன அதிகாரம் கொண்ட வெளியுறவுத்துறை உயரதிகாரியின் அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த மே 10-ம் தேதி கடிதம் அனுப்பினர்.
இந்தக் கடிதத்தின் மீது ஆய்வு செய்து உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சுமதி ரவிச்சந்திரன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தடைபட்டுள்ளது.
இதனால் வழக்கு அடுத்த நிலைக்குச் செல்லாமல் புலனாய்வு முடிந்த நிலையிலேயே முடங்கியுள்ளது.
குடிபெயர்வோர் பாதுகாவல்
அதிகாரி:
வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்வோருக்கு உரிய அனுமதி அளிப்பதற்காக சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவல் அலுவலகத்தின் அதிகாரியாக இருந்த சேகர், அதே அலுவலகத்தைச் சேர்ந்த அஸ்வினி குமார், லூர்து ஜெயசீலன் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கிலும் புலனாய்வு முடிந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களின் நியமன அதிகாரம் கொண்ட உயரதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கடிதம் அனுப்பினர்.
இதற்கும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் இந்த வழக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையிலேயே முடங்கியுள்ளது.
127 வழக்குகள் முடக்கம்:
இந்த மூன்று வழக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 343 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதில் தமிழகத்தை சேர்ந்த 38 மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் முடங்கியுள்ளது. இது தொடர்பான அனைத்து வழக்கு விவரங்களையும் சிபிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தீர்வு எப்போது?
மத்திய அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி வரும் கடிதங்கள் நீண்ட காலமாக அனுமதி அளிக்கப்படாமல் வைக்கப்படுவதால் சிபிஐ தொடரும் லஞ்ச ஊழல் வழக்குகளின் நிலை கேள்விக்குறியாகிறது. இத்தகைய கடிதங்களுக்கு 3 மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் இத்தகைய போக்கு காரணமாக, சிபிஐ அதிகாரிகளின் பணிகள் மறைமுகமாக முடக்கப்படுவதாக கருதப்பட வேண்டியுள்ளது என லஞ்ச ஊழலுக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக