அதிரடிப்படை (கமாண்டோபடை):
உயர் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில முக்கிய பணிகளில் பயன்படுத்துவதற்காக 1997-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் கமாண்டோ படையும், கமாண்டோ படை பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டன. கமாண்டோ படையினருக்கு நவீன ஆயுதங்களைக் கையாளுவதற்கும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்தும் உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மறைந்து நின்று துப்பாக்கி சுடுதல், வனப்பகுதியில் தங்கியிருத்தல், ஆயுதங்களைக் கையாளுதல், நாசவேலைகளுக்கு எதிரான செயல்பாடுகள் ஆகிய முக்கிய பணிகளைக் கையாளும் திறமைகளை வளர்த்துக்கொள்ள இப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதர துறைகளான சிறைத்துறையினர், மத்திய ஆயுதத் துறையினர், இதர மாநிலங்களின் காவல்துறையினர் ஆகியோருக்கும் இப் பள்ளி சிறப்புப் பயிற்சி அளிக்கிறது. மகளிர் கமாண்டோபடை: தொடக்கம் முதலே கமாண்டோ படையில் பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆண் காவலர்களே சேர்க்கப்பட்டனர். 2001-ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதையடுத்து, காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிர் காவல் பிரிவு கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து கமாண்டோ படையிலும் பெண்களை சேர்க்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து 2003 ஜனவரி முதல் மகளிர் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சிகளின் நிறைவாக கன்னியாகுமரியில் இருந்து, இவர்களில் ஒரு பிரிவினர் நடை பயணமாக வந்து மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் நிறைவாக 2003 ஜூன் 2-ம் தேதி மருதம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டிலேயே முதலாவது மகளிர் கமாண்டோ படை 151 பேருடன் தொடங்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நிகழ்ச்சியில் பங்கேற்று முதலாவது மகளிர் கமாண்டோ படை தொடங்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது:
தமிழகத்தில் மகளிர் கமாண்டோ பிரிவு தொடங்கப்பட்டதை அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தங்களது மாநில காவல்படையில் மகளிர் கமாண்டோ படையை தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டன. இதற்கு தமிழக கமாண்டோ படை மற்ற மாநிலங்களை தமிழகத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.
மகளிர் கமாண்டோ படை கலைப்பு:
2003-ம் ஆண்டு 151 பேருடன் தொடங்கப்பட்ட மகளிர் கமாண்டோ படையின் மகளிரின் எண்ணிக்கை 2006-ம் ஆண்டு வரை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கமாண்டோ பயிற்சி பள்ளியில், புதிதாக தேர்வு செய்யப்படும் காவலர்களின் மகளிரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு வந்தது.
கடைசியாக 120 பேருடன் இருந்த மகளிர் கமாண்டோ படைக்கு கடந்த சில மாதங்களாக புதிய நபர்கள் தேர்வு செய்யப்படுவது அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து கமாண்டோ படை ஐஜி-யை தொடர்புக் கொண்டு கேட்டபோது இது குறித்த அனைத்து நடவடிக்கைகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து கருத்து கூற முடியாது என்றார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐஜி-யின் பரிந்துரையை ஏற்று மகளிர் கமாண்டோ படையை கலைப்பதற்கான உத்தரவை டிஜிபி லத்திகாசரண் பிறப்பித்துள்ளதாக காவல்துறை தலைமையக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமை பெற்ற லத்திகாசரண், நாட்டின் முதலாவது மகளிர் கமாண்டோ படையை கலைத்திருப்பது பெண் காவலர்களுக்கு வருத்தமான செய்தியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக