தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில் மாநில தகவல் ஆணையம் 2006}ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ராமகிருஷ்ணனை தலைமை தகவல் ஆணையராகவும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜி. ராமகிருஷ்ணன், ஆர். ரத்தினசாமி ஆகியோரை தகவல் ஆணையர்களாகவும் நியமித்து தமிழக அரசு 12-1-2006-ல் அரசாணை வெளியிட்டது.
இதன் பின்னர், டி.ஆர். ராமசாமி, ஆர். பெருமாள்சாமி, டி. ஸ்ரீநிவாசன், பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் ஆகியோரை தகவல் ஆணையர்களாக நியமித்து 7-5-2008-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பதவிக்காலம்: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நிர்வாக விதிகளின்படி தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் அவர்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது அவர்களின் 65 வயது வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி, வயது மூப்பு காரணமாக தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து இப்போது தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், ஜி. ராமகிருஷ்ணன் அக்டோபர் மாதத்திலும் ஓய்வு பெறுகின்றனர்.
இதனால், 3 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்ப வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தகுதி என்ன?
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 15 (5)-ன்படி சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இதழியல், வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை தகவல் ஆணையர்களாக நியமிக்கலாம்.
தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் அரசால் நியமிக்கப்பட்ட 7 ஆணையர்களில் 6 பேர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஒருவர் கல்லூரி பேராசிரியர்.பணியில் உள்ள அரசு அதிகாரிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி சரியாக செயல்பட வில்லை என்ற மேல்முறையீட்டு மனுக்களே தகவல் ஆணையத்துக்கு வருகிறது.
இத்தகைய மனுக்களை விசாரிப்பவர்கள் முன்னாள் அதிகாரிகளாக இருக்கும் நிலையில் அவர்களின் விசாரணை மக்களுக்கு எத்தகைய திருப்தியை தரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதனால், மாநிலத் தகவல் ஆணையத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் திருப்தியின்மையே நிலவுகிறது.
வெளிப்படையான நியமனம்:
எனவே, அடுத்த சில மாதங்களில் 3 தகவல் ஆணையர்களை நியமிக்கும் போது, அதற்கான நடவடிக்கைகளை அரசு வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
நாளேடுகளில் விளம்பரம் செய்து, சட்டத்தில் குறிப்பிட்டுள்ள துறைகளை சேர்ந்தவர்களில் தகுதி வாய்ந்த நபர்களை அரசு சாரா அமைப்புகள் மூலம் ஆய்வு செய்து, அதில் இருந்து உரிய நபர்களை தேர்ந்தெடுத்து தகவல் ஆணையர்களாக நியமிக்கலாம் என பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக, பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த வி. மாதவ், அஜீத் மேனன், அருண் கோபாலன், அரவிந்த் கெஜ்ரிவால், எம். விஜயபாஸ்கர், பத்திரிகையாளர் நித்யானந்த் ஜெயராமன், வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், வி. கிருஷ்ணகாந்த், பேராசிரியர் வி. வசந்திதேவி, விஜயானந்த் உள்ளிட்ட 16 பேர் கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஆகியோருக்கு இது தொடர்பான மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக