திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 1.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றத்திலும் அளிக்கப்பட்ட உறுதி மீறப்படுவதாக கூறப்படும் புகார்கள் தொடர்பான செய்தி "தினமணி'யில் கடந்த 19-ம் தேதி வெளியானது.
இதன் எதிரொலியாக பிரச்னைக்குரிய நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சம்பந்தப்பட்ட திட்டப் பகுதியை மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்,
கமிஷனர் பொறுப்பு வகிக்கும் ஆஷிஸ் சாட்டர்ஜி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஓசோன் குழுமத்தின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக தூண்கள் அமைப்பதற்காக இங்கு எந்திரங்கள் மூலம் துளையிடுவதால் தங்கள் கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்படுவதாக இதற்கு பின்பக்கத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
எனவே, இவ்வாறு அதிர்வுகள் ஏற்படாத வகையில் வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த பரிசீலிக்குமாறு ஓசோன் குழும பொறியாளர்களை மேயர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.
100 அடி சாலையை (ஜவஹர்லால் நேரு சாலை) பாடிக்குப்பம் பகுதியுடன் இணைக்கும் வகையில் விடப்பட்டுள்ள 12 மீட்டர் அகல சாலைக்கான நிலத்தை மேயர் பார்வையிட்டார்.
அதன் பின்னர் இந்த திட்டப்பகுதியில் காலியாக விட வேண்டிய 4 ஏக்கர் நிலம் தனியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை மேயர் ஆய்வு செய்தார்.
கோயில் நிலம்:
ஓசோன் குழுமத்தின் திட்டப்பகுதியின் நடுவில் அமைந்துள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சர்வே எண்: 230/2}ல் உள்ள 1.36 ஏக்கர் நிலத்தை மேயர் ஆய்வு செய்தார். இந்த நிலத்தை 12 மீட்டர் சாலையுடன் இணைக்கும் வகையில் 7.2 மீட்டர் அகல சாலைக்கு நிலம் விடப்படாமல் இருந்தது குறித்து ஓசோன் குழும பிரதிநிதிகளிடம் மேயர் விளக்கம் கேட்டார்.
இந்த நிலத்துடன் இணைப்பு சாலைக்கு விட வேண்டிய நிலத்தையும் சேர்த்து உடனடியாக முள்கம்பி வேலி அமைப்பதாக ஓசோன் குழும பிரதிநிதிகள் உறுதி அளித்தனர்.
தாற்காலிக அலுவலகம்: இதன் பின் சர்வே எண் 227/3}ல் அமைந்துள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 41 சென்ட் நிலத்தையும் மேயர் ஆய்வு செய்தார்.
அந்த நிலத்தில் ஓசோன் குழுமத்தின் "மெட்ரோசோன்' பிரிவு தாற்காலிக அலுவலகத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது குறித்து அதிகாரிகளிடமும், அந்த நிறுவன பிரதிநிதிகளிடமும் மேயர் விசாரித்தார்.
""2007}ம் ஆண்டு இந்த அலுவலகம் கட்டப்பட்டதால், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 2008}ல் உச்ச நீதிமன்றம் "எப்படி இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும்' என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுவது ஆகாது'' என ஓசோன் குழும பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.
ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கும் போது இந்த நிலம் எப்படி இருந்தது என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அப்படி தெரிவிக்கப்பட்ட விவரங்களில் தாற்காலிக அலுவலகம் இருப்பது உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்த ஆவணங்களை உடனடியாக சமர்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள தாற்காலிக அலுவலகத்தை அகற்றிவிட்டு நிலத்தைச் சுற்றி முள்கம்பி வேலி போட வேண்டும் என மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக