புதன், 21 ஏப்ரல், 2010

மீறப்படும் அரசின் உறுதிமொழி

  சென்னை கோயம்பேடு சந்திப்பில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலத்தை பாதுகாப்பதில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் சி.எம்.டி.ஏ. விதித்த நிபந்தனைகள் தனியார் கட்டுமான நிறுவனத்தால் மீறப்படுவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதி மொழி மீறப்படுவதாக கூறப்படுகிறது.
 
கோயம்பேடு சந்திப்பில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3.03 ஏக்கரை உள்ளடக்கிய 42 ஏக்கர் நிலம் ஓசோன் குழுமத்துக்கு ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரீஸ் நிறுவனத்தால் விற்கப்பட்டது. 
 
இந்த நிலத்தில் பிரமாண்ட குடியிருப்புத் திட்டத்தை மேற்கொள்ள ஓசோன் குழுமம் முடிவு செய்தது. இதற்கான திட்ட அனுமதி கோரும் மனுவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2003-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ. மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 
அப்போது இந்த பிரச்னையில் அனுமதி அளிக்க மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸýம், திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலையிட்டதன் பேரில் ஓசோன் குழுமத்தின் திட்ட அனுமதி விண்ணப்பத்துக்கு ஒப்புதல் தருவது நிறுத்தி வைக்கப்பட்டது. 
 
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
 
ஆனால், சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர்த்து மற்ற நிலங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் 2009-ல் அதே விண்ணப்பத்துக்கு சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதி வழங்கியது.
 
சி.எம்.டி.ஏ.வின் நிலைப்பாடு கோயில் நிலத்தை மீட்கும் இந்து சமய அறநிலையத்துறையின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விரிவான செய்தி தினமணியில் கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி வெளியானது.
 
இதன் எதிரொலியாக, ஓசோன் குழுமத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மன்றத்துக்கு தெரிவிக்காமல் முடிவெடுóத்ததற்காக 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
 
சட்டப்பேரவையில்  
 
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஜூலை 16-ம் தேதி கொண்டுவரப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதத்துக்கு செய்தித் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைவருமான பரிதி இளம்வழுதி பதில் அளித்தார். 
 
திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் 3.03 ஏக்கர் நிலத்தில் 1.26 ஏக்கர் நிலம் ஏற்கெனவே மத்திய அரசின் பொதுப்பணித்துறையால் வாங்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கை 2008 நவம்பர் 7-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்படி நிலம் எப்படி இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 
 
இதன் அடிப்படையில் 1.77 ஏக்கர் நிலத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஓசோன் குழுமத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பரிதி இளம்வழுதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
 
மாநகராட்சியில்
 
 ஜூலை 22-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பான விவாதத்துக்கு மேயர் மா. சுப்பிரமணியன் ""திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது என உரிமைக் கோரப்படும் 3.03 ஏக்கர் நிலத்தில் ஓசோன் குழுமத்தின் திட்டப் பகுதியில் அமைந்துள்ள 1.77 ஏக்கர் நிலத்திற்கு வழியாக 7.2 மீட்டர் அகலபாதை குறிப்பிட்டு அந்த நிலத்திலும் எந்தவிதமான கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைக்குட்பட்டு அதற்கான உறுதி மொழிபத்திரம் பெறப்பட்டபிறகே கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
 
ஓசோன் விளக்கம் 
 
இந்த விவகாரத்தில் பிரச்னைக்குரிய நிலத்தில், எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறாது. அந்த நிலம் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் படி தனியாக வைக்கப்படும். மேலும், அதற்கு செல்லும் வகையில் சாலைக்கான நிலமும் விடப்பட்டுள்ளது என ஓசோன் குழுமம் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
போலீஸில் புகார் 
 
ஓசோன் குழுமத்தின் திட்டத்துக்காக அங்கு தூண்கள் அமைப்பதற்காக எந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் காரணமாக திட்டப் பகுதிக்கு பின்பக்கத்தில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிர்வுகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
 
இங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மத்தியில், இந்த அதிர்வுகள் காரணமாக தங்கள் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் சார்பில் திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. 
 
ஆனால், இந்த புகார் மீது இதுவரை போலீஸôர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஓசோன் குழும திட்டப் பகுதிக்கு பின்புறம் உள்ள பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
மீறப்படும் உறுதி மொழி 
 
அடுத்த சில மாதங்களில், நிறுத்திவைக்கப்பட்ட கட்டட அனுமதியை மீண்டும் பெற்று கட்டுமானப் பணிகளை திட்ட அனுமதியில் எவ்வித திருத்தமும் செய்யாமல் ஓசோன் குழுமம் தொடங்கியது. 
 
இதில் பிரச்னைக்குரிய 1.77 ஏக்கர் நிலம் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தனித்து வைக்கப்படாமல் திட்டப் பகுதியுடன் சேர்த்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
பேரவையில் அமைச்சர் பரிதி இளம்வழுதி அளித்த உறுதிக்கு மாறாக, பிரச்னைக்குரிய நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருள்களை வைக்கும் கொட்டகைகள், ஊழியர்கள் தங்கும் கொட்டகைகள் ஆகியவற்றை ஓசோன் குழுமம் அமைத்துள்ளது.
 
மேலும், அந்த நிலத்துக்கு செல்வதற்காக  7.2 மீட்டர் அகலபாதைக்கான நிலம் இதுவரை தனியாக ஒதுக்கப்படவோ, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவோ இல்லை எனவும் தெரியவந்துள்ளது. பிரச்னைக்குரிய நிலத்தை தனியாக வைத்து பராமரிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மீண்டும் தட்டிக்கழித்துள்ளனர். 
 
மேலும், அந்த நிலத்துக்குள் சென்று ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைத்துறையினர் உள்ளிட்ட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது ஒரு தரப்பினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் இருப்பதும், பிரச்னைக்குரிய நிலத்தை ஓசோன் குழுமம் தனது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதும் முரண்பாடாக அமைந்துள்ளது. 
 
பிரச்னைக்குரிய நிலத்தை அது தொடர்பான வழக்கின் எதிர்தரப்பினரின் கட்டுப்பாட்டில் விட்டுவைப்பது எந்த விதத்தில் நியாயமானதாகும்? மேலும், இதில் மனுதாரர் தரப்பான அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த நிலத்தை பாதுகாத்து வைக்க வேண்டிய இதர துறைகள் எதிர்தரப்புக்கு சாதகமாக செயல்படுவது ஏன்? 
 
கோயில் நிலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையிலும், மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் அளிக்கப்பட்ட உறுதி என்ன ஆனது என்பதே இந்து சமய அறநிலையத் துறையினரிடம் இப்போது எழுந்துள்ள கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக