வியாழன், 22 ஏப்ரல், 2010

முடங்கியுள்ள வீட்டுவசதி வாரிய இணையதளம்

 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முடங்கியுள்ளது.







தமிழகத்தில் அனைத்து விதமான வருவாய்ப் பிரிவினரின் குடியிருப்புத் தேவைகளை நியாயமான விலையில் பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடங்கப்பட்டது.






இந்த வாரியம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், நிலங்களை கையகப்படுத்தி மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி குலுக்கல் மூலம் உரிய நபர்களுக்கு ஒதுக்கி வருகிறது.






இத்தகைய பணிகளில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.






இதற்காக தகவல் தேவைப்படும் அனைவரும் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களை நேரடியாக அணுகுவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும், இவ்வாறு அணுகும் பொதுமக்களுக்கு உரிய தகவல்களை உடனடியாக அளிப்பதில் அதிகாரிகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறப்படுகிறது.






இணையதளம் தொடக்கம்: இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டது.






தொடக்கத்தில் வீட்டுவசதி வாரியத்தின் அடிப்படைத் தகவல்களை மட்டும் உள்ளடக்கியதாக இந்த இணையதளம் இருந்தது.






பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து, இந்த இணையதளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டது. இதில், வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட- ஒதுக்கீடு செய்யப்படாத மனைப் பிரிவுகள், குடியிருப்புகள், வீடுகள் குறித்த முழுமையான விவரங்கள் இடம் பெற்றிருந்தன.






மேலும், மனைப் பிரிவுகள், குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வாரியத்துக்கு செலுத்திய- செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்த விவரங்களையும் அவரவர் இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்த இணையதளம் அமைந்திருந்தது.






வீட்டுவசதி வாரியத்தின் புதிய திட்டங்கள், குலுக்கல் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களுடன், வீட்டுவசதி வாரியத்துக்கு கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் தொடர்பான விவரங்களையும் இணையதளம் மூலம் அறிய முடிந்தது. www.tnhb.gov.in என்ற முகவரியில் இயங்கி வந்த இணையதளம் கடந்த 6 மாதங்களாக முடங்கியுள்ளது.






இதனால், வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு விவரங்களை பெறுவதற்கு மக்கள் அந்தந்த பிரிவு அலுவலகங்களையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏராளமானோர் தகவல்களுக்காக அலுவலர்களை தொடர்பு கொள்வதால் அவர்களிடமும் சலிப்பு ஏற்படுகிறது.






இது தேவையற்ற அலைச்சலையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளது என ஒதுக்கீட்டுதாரர்களும், ஒதுக்கீடு பெற முனைவோரும் புகார் தெரிவித்தனர்.






தீர்வு எப்போது? இணையதளத்தை மேலும் புதுப்பொலிவாக்க வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கடந்த ஆண்டு திட்டமிட்டனர்.






இதற்கான பணி அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவர்கள் பணி முடிந்தவுடன் விரைவில் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக