திங்கள், 8 மார்ச், 2010

முதல்வரின் முன்னாள் செயலர் டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம்

  முதல்வர் கருணாநிதியின் முன்னாள் செயலரும், மாநில தகவல் ஆணையருமான டி.ஆர். ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் அளித்துள்ளது தமிழக அரசு.
 
தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.ஆர். ராமசாமி. முதல்வர் கருணாநிதியின் செயலராக 3 முறை இருந்தவர்.வயது மூப்பு காரணமாக கடந்த 2008}ம் ஆண்டு ஏப்ரல் 5}ம் தேதி டி.ஆர். ராமசாமி ஓய்வு பெற்றார். பின்னர் 2008 மே 7}ம் தேதி இவர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையின் போது டி.ஆர். ராமசாமிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக சில உயர்ரக ஊசி மருந்துகளுடன் கதிரியக்க சிகிச்சையும் அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
 
இந்த சிகிச்சையில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான "ஐஆர்இஎஸ்எஸ்ஏ}250' ரக மாத்திரைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட பரிசோதனை மற்றும் மாத்திரைகள் வாங்கிய வகையில் டி.ஆர். ராமசாமிக்கு ரூ. 5.91 லட்சம் செலவாகியுள்ளது.
 
மேலும், தொடர் சிகிச்சைக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் தனது நிலை குறித்து விளக்கி, மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அளிக்குமாறு அரசிடம் டி.ஆர். ராமசாமி கோரியிருந்தார்.
 
இது தொடர்பாக பொள்ளாச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் "தாயகம்' அமைப்பைச் சேர்ந்த நா. பாஸ்கரன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரியிருந்தார்.
 
இதற்கு தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை பொது தகவல் அலுவலர் ச.ராமலிங்கம் கடந்த 2}ம் தேதி அளித்த பதில் விவரம்:
 
தகவல் ஆணையர் டி.ஆர். ராமசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.12.54 லட்சத்தை அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை (எண்: 22) பிப்ரவரி 5}ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி டி.ஆர். ராமசாமியின் மருத்துவ செலவுகளுக்காக முதல்கட்டமாக ரூ. 5.91 லட்சத்தை அளிக்கவும், மற்ற சிகிச்சைகள் முடிவடைந்தவுடன் மீதித் தொகையை அளிக்கவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசின் உயர் பதவியில், அதுவும் முதல்வரின் செயலராக பணிபுரிந்த அதிகாரி ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி வழங்குவது அரசின் சுய விருப்பத்தை பொருத்தது.எனினும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரியும்போதும், ஓய்வு பெற்ற சமயத்திலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய வசதிகளை செய்ய முறைப்படியான காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இத்தகைய சலுகைகள் மூலம் கிடைக்கும் உதவிகளுக்கு மாற்றாக, தகவல் ஆணையர் டி.ஆர்.ராமசாமியின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதி உதவியை அரசே நேரடியாக வழங்கியுள்ளது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக