வெள்ளி, 19 மார்ச், 2010

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத 17 கவுன்சிலர்கள்

  சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் 17 வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை.
 
கடந்த 4 நிதி ஆண்டுகளில் வார்டு  மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியில் சராசரியாக 67 சதவீதம் மட்டுமே செலவிடப்படுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.
 
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மாநகராட்சி அதிகாரிகள் இத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டு ஆண்டுதோறும் இதற்காக குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
 
மாநகராட்சியின் பல்வேறு துறைகள் மூலம் சுகாதாரம், பள்ளிக் கல்வி, சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குறிப்பிட்ட பகுதிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பகுதி வார்டு உறுப்பினர்கள் நேரடியாக நிதி ஒதுக்கி திட்டங்களைச் செயல்படுத்த இந்த மேம்பாட்டு நிதி அளிக்கப்படுகிறது.
 
இதற்கான வழிகாட்டி நெறி முறைகள் வகுக்கப்பட்டு மன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கடந்த 2005}06, 2006}07, 2007}08, 2008}09 ஆகிய நிதி ஆண்டுகளில் வார்டு மேம்பாட்டுக்காக உறுப்பினர்களுக்கு ஒதுப்பட்ட நிதி, அதில் செலவழிக்கப்பட்ட தொகை, செலவழிக்கப்படாத தொகை குறித்த விவரங்களை போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவ், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரியிருந்தார். 
 
மாநகராட்சி பதில்: 
 
இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிதி ஆலோசகர் மற்றும் பொதுத் தகவல் அதிகாரி அளித்துள்ள பதில் விவரம்:
 
மன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்துக்காக, 2005}06 நிதி ஆண்டில் ரூ. 1,085 லட்சம் ஒதுக்கப்பட்டதில் ரூ. 967.8 லட்சம் (89.2 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2006}07 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 5.31 கோடி (48.97 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2007}08 நிதி ஆண்டில், ரூ. 10.85 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ. 7.60 கோடி (70.07 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2008}09 நிதி ஆண்டில், ரூ. 23.25 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 14.76 கோடி (63.5 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. 2009}2010 நிதி ஆண்டில் ரூ. 38.75 கோடி ஒதுக்கப்பட்டதில் டிசம்பர் மாதம் வரை ரூ. 9.74 கோடி (25.14 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது.5 நிதி ஆண்டுகளில் மொத்தம் ரூ. 94.55 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 47.09 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆண்டு சராசரியாக 67 சதவீத நிதி மட்டுமே செலவிடபட்டுள்ளது.
 
 மேயர்: 
 
இதேபோல மேயருக்கான சிறப்பு மேம்பாட்டு நிதிக்காக 2005}06 முதல் 2009}2010 வரையிலான 5 நிதி ஆண்டுகளில் ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 44.99 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
 
ஒரு பைசா கூட பயன்படுத்தாதவர்கள்: 
 
சென்னை மாநகராட்சியில் உள்ள 10 மண்டலங்களில் 1, 4, 6, 7, 8 ஆகிய மண்டலங்களில் 2005}06 முதல் 2008}09 நிதி ஆண்டு வரை வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை.
 
 
இதேபோல, நடப்பு நிதி ஆண்டில் 97, 98, 99, 100, 101, 102, 103, 106, 108, 111, 113, 114, 116, 117, 118, 121, 128 ஆகிய வார்டுகளில் கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தங்களது பதிலில் குறிப்பிட்டுள்ளனர்.
 
 
இதுவரை வார்டு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 25 லட்சமாக இருந்த மேம்பாட்டு நிதி, வரும் நிதி ஆண்டில் இருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக