வியாழன், 4 மார்ச், 2010

சிமென்ட் விலை: மூட்டைக்கு ரூ.25 உயர்வு?

  மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி வரி உயர்வை அடுத்து சில்லறை விற்பனையில் சிமென்ட்டின் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.25 வரை அதிகரிக்க உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த விலை உயர்வை இறுதி செய்வது குறித்து முடிவெடுப்பதற்காக உற்பத்தியாளர்களின் ரகசிய கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் 2006 முதல் சிமென்ட் விலையை முறையான காரணங்கள் எதுவும் இன்றி உற்பத்தியாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.÷அரசின் நடவடிக்கையை அடுத்து தவிர்க்க முடியாத நிலையில் சிமென்ட் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த சில மாதங்களுக்குள் விலை உயருவது தொடர்கதையாகிவிட்டது.
 
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூட்டை ரூ.260 ஆக உயர்ந்த சிமென்ட் விலை அக்டோபரில் ரூ.245 ஆக குறைந்தது. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் சிமென்ட் அளவு படிப்படியாக அதிகரித்தது. 
 
இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த டிசம்பரில் சில்லறை விற்பனையில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.200 ஆக குறைந்தது.இருப்பினும் இந்த விலை குறைப்பு குறுகிய காலமே நீடித்தது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து சிமென்ட் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வார நிலவரப்படி ஒரு மூட்டை சிமென்ட் ரூ.240 வரை விற்கப்பட்டது.
 
 
உற்பத்தி வரி உயர்வு: 
 
கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சிமென்ட் உள்ளிட்ட பொருள்கள் மீதான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு மூட்டை விலை ரூ.8 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், ஒரு மூட்டை விலையை ரூ.25 வரை உயர்த்த தமிழகத்தில் உள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.÷டீசல் விலை உயர்வு, மூலப்பொருள்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்த விலை உயர்வை உற்பத்தியாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
 
விலை உயர்வு சாத்தியமா? 
 
உற்பத்தியாளர்கள் அறிவிக்கும் விலை உயர்வு அமலாவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக விற்பனையாளர்களும், கட்டுமானத் துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
மேலும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் குறைந்த விலையில் சிமென்ட் கிடைப்பதால் மொத்தமாக கொள்முதல் செய்வோர் தமிழக உற்பத்தியாளர்களை தவிர்த்து வெளிமாநிலங்களில் வாங்க முன்வந்துள்ளனர்.
 
மேலும், இப்போது எல்லா நிறுவனங்களின் உற்பத்தியும் வெகுவாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் சிமென்ட் விற்பனை அதிகரிக்கவில்லை.இதனால், உற்பத்தியாளர்கள் முன்பு போல் தங்கள் விருப்பப்படி சிமென்ட் விலையை உயர்த்துவது அவ்வளவு எளிதானதல்ல என கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 கருத்து: