வெள்ளி, 19 மார்ச், 2010

தகவல் அளிக்க கட்டணம் வசூலிப்பதில் குழப்பம்


  கவல் கோரும் மனுதாரர்களுக்கு ஆவணங்களின் நகல்களை அளிக்க கட்டணம் வசூலிப்பதில் அரசு அதிகாரிகளிடம் குழப்பம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிந்க்கின்றனர்.
 
2005ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள, "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்'படி அரசின் நிர்வாக நடைமுறை குறித்த தகவல்களை மக்கள் மனுச் செய்து எழுத்துப்பூர்வமாக பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இவ்வாறு தகவல்களைப் பெற மாநில அரசுத் துறை அலுவலகமானால் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லையை ஒட்டி அனுப்ப வேண்டும். மத்திய அரசுத்துறைகளில் தகவல் கோரும்போது, ரூ.10-க்கான வங்கி வரைவோலை அல்லது அஞ்சல் ஆணையை இணைத்து அனுப்ப வேண்டும்.மனுதாரர் கோரும் தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களின் நகல்களை ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் பெற்றுக் கொண்டு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இவ்வாறு மனுச் செய்யும்போதும், நகல்களைப் பெறும்போதும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு, கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த விலக்கு வரம்பில் வரத் தகுதி இல்லாத மற்ற அனைவரும் உரிய கட்டணங்களை அவசியம் செலுத்தியாக வேண்டும்.இவ்வாறு தகவல்கள் தொடர்பான ஆவணங்களின் நகல்களைப் பெற செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து, தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
 
தகவல் கோரும் மனுவுடன் ரூ. 10 மதிப்பிலான நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும். தகவல் தொடர்புக்கான நகல்களைப் பெற ஒரு பக்கத்துக்கு ரூ. 2 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்தக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 0075 அல்லது, 00800 உள்ளிட்ட சில குறிப்பிட்ட கணக்குகளில் செலுத்தி அதற்கான ஒப்புகைச் சீட்டை உரிய பொதுத் தகவல் அதிகாரியிடம் செலுத்தி நகல்களைப் பெறலாம்.
 
நகல்களுக்கான கட்டணங்களை ரொக்கமாகவோ, அஞ்சல் பணவிடை மூலமாகவோ செலுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தமிழக அரசின் பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள பொது தகவல் அதிகாரிகளிடம் இது குறித்த முழுமையான விவரங்கள் இன்னமும் சென்றடையாத நிலை உள்ளது.
 
குறிப்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை தொடர்பான சில ஆவண நகல்களை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரவி கோரியிருந்தாராம்.குறிப்பிட்ட ஒரு சலானைப் பயன்படுத்தி பாரத ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டும் என அங்குள்ள பொதுத் தகவல் அதிகாரி தெரிவித்தாராம்.
 
ஆனால், முன்னாள் ராணுவத்தினர் நல வாரிய அலுவலகத்தில் வங்கி வரைவோலை, அல்லது வங்கி காசோலை, அஞ்சல் பணவிடை மூலம் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என மனுதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் அவர்களது அலுவலகத்திலேயே கட்டணத்தை ரொக்கமாகவோ, அல்லது காசோலை மூலமாகவும் பெற்றுக் கொள்கின்றனர்.
 
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகங்களில் தகவல் தொடர்பான ஆவணங்களை அளிப்பதற்கான கட்டணங்களை காசோலை மூலமாகவே பெற்றுக் கொள்கின்றனர்.கட்டணங்களைப் பெறுவதற்கு அரசு தெளிவாக ஒரு நடைமுறையை அறிவித்துள்ள நிலையிலும், ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் வெவ்வேறு விதங்களில் கட்டணங்கள் பெறப்படுகின்றன. இது மனுதாரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 
 
அரசின் அறிவுறுத்தல்கள் அனைத்து நிலைகளுக்கும் முழுமையாகச் சென்றடையாததே இந்தக் குழப்பத்துக்குக் காரணம் எனத் தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
 
இவ்வாறு வெவ்வேறு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் மனுதாரர்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனைத் தடுத்து அனைத்து அலுவலகங்களிலும் ஒரே சீரான நடைமுறை அமலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக