நில வகைபாடு மாற்றம் குறித்த கோப்புகள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகவும், தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கம் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு சி.எம். டி.ஏ. உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரில் குறிப்பிட்ட சில மனைப்பிரிவுகள் அமைந்துள்ள நிலங்களின் வகைப்பாடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பான 6 கோப்புகளின் பிரதிகளையும், கோப்புகளை நேரில் பார்வையிட அனுமதி கோரியும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஏ. சேது, 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சி.எம்.டி.ஏ.வின் பொது தகவல் அதிகாரியிடம் மனு செய்தார்.
ஆனால், இதில் 2 கோப்புகள் மட்டுமே தங்களிடம் உள்ளதாகக் கூறி சி.எம்.டி.ஏ.வின் பொது தகவல் அதிகாரி 14-02-2008-ல் பதில் அளித்தார்.
இது குறித்து சேது, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் 5-3-2008-ல் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை மாநில தலைமை தகவல் ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அண்மையில் விசாரித்தனர்.
தகவல் ஆணையம் உத்தரவு: விசாரணைக்கு பின்னர் இது தொடர்பாக அக்டோபர் 16-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விவரம்:
""மனுதாரர் கோரியுள்ள 6 கோப்புகளில் 4 கோப்புகள் காணாமல் போனது குறித்து சி.எம்.டி.ஏ.வின் பொது தகவல் அதிகாரி தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.
இதில் ஒரு கோப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ. தரப்பில் கூறப்பட்டாலும் இது குறித்து ஆணையத்துக்கோ, மனுதாரருக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே, குறிப்பிட்ட சில கோப்புகள் காணாமல் போனது குறித்து உயரதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை மேற்கொண்டு, கோப்புகள் காணாமல் போனதற்கு பொறுப்பானவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 6 வாரங்களுக்குள் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இதற்கு சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலரும், வீட்டுவசதி மற்றும் நகரமைப்புத் துறை செயலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணாமல் போன கோப்புகளைக் கண்டுபிடித்து அதில் உள்ள தகவல்களை மனுதாரருக்கு அளிப்பதுடன், அது குறித்து ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சி.எம்.டி.ஏ.வுக்கு நோட்டீஸ்: இதே விஷயம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கில் (எண்: 20656/07) 2007-ம் ஆண்டு ஆணையம் பிறப்பித்த நோட்டீஸýக்கும் பதில் அளிக்க வேண்டும்.
மேலும், தங்கள் அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கம் குறித்த முழுமையான விளக்கத்தை சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ஆணையத்தில் தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக