புதன், 4 நவம்பர், 2009

ஒதுக்கீடு ஆணை வழங்காமல் கிரையத் தொகை வசூல்!

  சென்னை வியாசர்பாடியில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய திட்டத்தில் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை வழங்காமல், அந்த மனைக்கான கிரையத் தொகை வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.  

மனை ஒதுக்கீடு ஆணை இல்லாதவரிடம் இருந்து கிரையத்தொகை வசூலிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக மனைகளை உருவாக்கியும், குடியிருப்புகளை கட்டியும் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்து வருகிறது.  

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு வியாசர்பாடி சிவகாமி அம்மையார் காலனி திட்டப்பகுதியில் மனை (எண்:453ஏ) 1990-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. ஆனால், இதற்கான ஒதுக்கீட்டு ஆணை இதுவரை வழங்கப்படவில்லை. 

  எனினும், இந்த மனைக்கான கிரையத்தொகை உள்ளிட்ட பல்வேறு தொகைகளை குடிசைப்பகுதி மாற்று வாரியம் வசூலித்துள்ளது.   பல முறை விண்ணப்பித்தும் இதுநாள் வரை தங்களுக்கு மனை ஒதுக்கீட்டுக்கான ஆணை வழங்கப்படவில்லை என ஏழுமலை தரப்பில் கூறப்படுகிறது. 

  இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலர் தெரிவித்த விவரங்கள்:   ஏழுமலையிடம் முன்வைப்புத் தொகையாக ரூ. 89 பெற்றுக் கொண்டு மனை (எண்: 453ஏ) ஒதுக்கப்பட்டது. இந்த மனைக்கு கிரயத்தொகை ரூ. 700 என நிர்ணயிக்கப்பட்டது. 


  இந்த மனைக்கு கிரையத் தொகை, அபிவிருத்தி கட்டணம், அபராத வட்டி உள்ளிட்ட வகைகளில் மொத்தம் ரூ. 2,664 வசூலிக்கப்பட்டது.   மனை ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏழுமலையிடம் இருந்து 25-08-1990-ல் ரூ. 75-ம் (ரசீது எண்: 161709), 1991 செப்டம்பர் 4-ம் தேதி (ரசீது எண்கள்: 165803, 165804, 145808) ரூ. 2,566-ம் வசூலிக்கப்பட்டது.  

எனினும், அதிகாரப் பூர்வ ஆவணமான ஒதுக்கீட்டு ஆணை ஏழுமலைக்கு வழங்கப்படவில்லை என குடிசைப் பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

  மனை ஒதுக்கீடு பெற்றதற்கான அனைத்து தொகைகளையும் செலுத்தி இருந்தாலும், ஒதுக்கீட்டு ஆணை இல்லாததால் மனையை பெற்றவர் அதற்கான விற்பனை பத்திரத்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

  மனை பெற்றவர் பல முறை கோரியும் குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருவதாக ஏழுமலை தரப்பில் புகார் கூறப்படுகிறது. 

குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் மனை ஒதுக்கீடு பெற்றவர்களும், அந்த மனைகளை வாங்கியவர்களும் வாரிய அதிகாரிகளிடம் இருந்து விற்பனை பத்திரங்களை எளிதில் பெற முடியாத நிலை உள்ளதாக ஏற்கெனவே பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில் மனை ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை வழங்காமல் கிரயத் தொகை வசூலிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக